1964
ஓரகன் பல்கலைகழகத்தின் ஓட்டபந்தய வீரர் பில் நைட் (Phil Knight) ஒரு போட்டிக்கு ஜப்பான் சென்றார். அப்போது ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் விலை மிக அதிகம். ஜப்பானில் சும்மா சாலையில் விற்ற ஷூக்களை வாங்கி அணிந்து கொண்டு ஓடினார். மிக விலை கூடுதலான அடிடாஸ் ஷூக்களுக்கு சமமாக அதன் செயல்திறன் இருந்தது
கல்லூரிக்கு வந்து சும்மா வேடிக்கையாக இதை கல்லூரி பத்திரிக்கையில் எழுதினார். உடனடியாக பல்கலைகழக கோச் போவெர்மேன் (Bill Bowerman) அவரை தேடி வந்தார். இருவரும் ஜப்பானில் இருந்து மலிவு விலையில் ஓட்டபந்தய ஷூக்களை வாங்கி ஓரகன் பல்கலைகழகத்தில் விற்கலாம் என பேசினார்கள். அதேபோல ஷூக்களை வாங்கி வந்து, தனது கார் டிக்கியில் ஏற்றிச்சென்று விற்றார்கள்
பல்கலைக்கழக பத்திரிக்கையில் எழுதியதால நல்ல விளம்பரம் கிடைத்தது. மற்ற பல்கலைகழகங்களுக்கும் கொண்டு சென்று விற்க, விலை உயர்ந்த ஷூக்களுக்கு பதில் இந்த ஷூக்கள் நல்லா இருக்கே என சொல்லி மாணவ்ர்கள் வாங்கினார்கள்.
ஷூவின் ஜப்பானிய பிராண்டு பெயர் ஓனிடுசுகா டைகர். உச்சரிக்க கடினமாக இருக்க, வெற்றி என்பதற்கான கிரேக்க தேவதை நைக்கியின் பெயரை சூட்டினார்கள். பிராண்டு மார்க் வேண்டும் என சொல்லி பல்கலைகழகத்தின் கிராபிக் டிசைன் துறை மாணவி கரோலின் என்பவரை அழைக்க அவர் $35 வாங்கிக்கொண்டு உலகபுகழ் பெற்ற அந்த டிக் மார்க் சின்னத்தை வரைந்து கொடுத்தார்
இருவருக்கும் அது அவ்வளவாக பிடிக்கவில்லை. ஆனால் $35 கொடுத்தால் காக்கா குரல் வராம உன்னிகிருஷ்ணன் குரலா வரும் என சமாதானபடுத்திக்கொண்டு வணிகத்தை தொடர்ந்தார்கள். இங்கே ஷூக்கள் சக்கை போடு போடுவதை அறிந்த ஜப்பானிய கம்பனி விலையை உயர்த்தி கேட்க ஆரம்பிக்க "இது சரிவராது" என சொல்லி என்ன செய்யலாம் என யோசித்தார்கள்.
கோச் போவெர்மேன் "நாமே ஷூக்களை உற்பத்தி செய்யலாம். அடிப்பாகத்துக்கு மட்டும் புதுமையாக எதோ செய்வோம்" என சொன்னார். இருவரும் காலை உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். அங்கே வாபில் மேக்கர் (Waffle Maker) ஒன்று இருந்தது. அதில் மாவை ஊற்றி வாபில் சுடுவதை பார்த்த கோச் "இதே மாதிரி இதில் ரப்பரை ஊற்றி ஷூவின் அடிப்பாகத்தை தயாரித்தால் என்ன?" என்றார்
அவ்ளோதான்..வாபில் அடிப்பாகம் (Waffle Nike) பிறந்தது. 1984 வரை தட்டுதடுமாறி சென்றுகொண்டிருந்த கம்பனிக்கு திருப்புமுனை ஆனது புதுமுக பாஸ்கட்பால் வீரர் மைக்கேல் ஜோர்டனை ஒப்பந்தம் செய்தபின்னர் தான். அவர் வரலாற்று புகழ்பெற்ற கோட் ஆக, அவர் அணிந்த நைக்கி ஷூக்களும் உலகபுகழ் பெற்றன.
#பிசினஸ்_பிஸ்தாக்கள் உக்கு திரும்பின பக்கம் எல்லாம் ஐடியாதான். பார்ப்பதெல்லாம் வணிக நோக்கில் தான்
~ நியாண்டர் செல்வன்
No comments:
Post a Comment