Monday, 7 October 2024

அம்பேத்கர்


புதிய அறிவுகளைப் பெறுவதன் மூலம்தான் சமூக முன்னேற்றப் பாதையில் ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்க முடியும் என்றாலும், அந்த அறிவைப் பெறுவதற்கு ஆராய்ந்து உண்மை காணும் ஆர்வம் முதலில் ஏற்படவேண்டும். 

இந்த ஆர்வம் வரவேண்டுமானால் ஐயம் எழுப்பும் மனப்பான்மை ஏற்படவேண்டும். ஏனென்றால், ஐயம் இல்லை என்றால் ஆய்வு நடக்காது: ஆய்வு இல்லையென்றால் அறிவு வளராது. ஏனென்றால், அறிவு என்பது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மிடம் வந்து சேருகின்ற பொருள் அல்ல; தேடித் தேடித்தான் அதை அடைய முடியும். பெரும் முயற்சியும், அதன் காரணமாகப் பெரும் தியாகமும் செய்வதன் விளைவாகத் தான் அறிவு கிட்டுகிறது.

ஆனால் தாங்கள் ஏற்கெனவே முழுமையாகத் திருப்தி யடைந்திருக்கும் விஷயங்களுக்காக மனிதர்கள் அத்தகைய உழைப்பையும் தியாகத்தையும் மேற்கொள்வார்கள் என்று எண்ணுவது தவறாகும். இருளை உணராதவர்கள் ஒளியைத் தேட மாட்டார்கள். எந்த ஒரு விஷயத்திலேனும் நாம் நிச்சயமான கருத்தை அடைந்துவிட்டால் அதைப் பற்றி மேலும் ஆய்வு செய்யமாட்டோம்; ஏனென்றால் அது பயனற்றது மட்டுமின்றி ஒரு வேளை ஆபத்தானதாகவும் இருக்கலாம்.

 ஐயம் குறுக்கிட்டால் தான் ஆய்வு தொடங்கும். எனவே ஐயப்படும் செயல் தான் எல்லா முன்னேற்றங்களையும் தோற்றுவிக்கிறது, அல்லது முன்னேற்றத்துக்கு முதல் படியாக அமைகிறது எனக் காண்கிறோம்.”

-அம்பேத்கர்

No comments:

Post a Comment