#கற்கை_நன்றே_117
முடிந்தது என
நின்ற இடத்திலிருந்து
நிமிர்ந்து பார்த்தால்
எல்லையற்று விரிகிறது
வானம்
-நர்சிம்
சிறுவயதில் சூரியன், கோள்களை பற்றி படிக்கும் போதெல்லாம்.. ஒரு கயிறு எடுத்துச் சென்று பூமியை கட்டிவிட்டால் சூரியன் சுத்தாமல் இருக்குமே.. நமக்கு மட்டும் பகலாய் இருக்குமே அல்லது நமக்கு மட்டும் இரவாய் இருக்குமே என்று நினைத்திருப்பேன். அவ்வாறு இருந்தால் பள்ளிக்கே செல்ல வேண்டி இருக்காது என எண்ணிய கால உண்டு.ஆனால் பதின் பருவத்தில் இதெல்லாம் சாத்தியமில்லாதது என அறிய முடிந்தது.சூரியனுக்கு நவீன ஜெட் விமானத்தில் சாம்பலாகாமல் சென்றால் 19 வருசத்தில் போய்ட்லாம்னு படித்தபோது வியப்பாய் இருந்தது.கோள்கள் உள்ளிட்ட வானியல் நிகழ்வுகளை எப்போது படித்தாலும் பார்த்தாலும் பிரம்மிப்புதான்
கோள்களை பற்றி வாண்டுமாமா எழுதியது சுவாரஸ்யமானது. குழந்தைகளுக்கானது..ஆனாலும் குழந்தை மனம் கொண்ட பெரியவர்களுக்கானதும் கூட.
கிரேக்க கடவுளர்களின் தூதுவன் ஹெர்மஸ், ரோமானியர்களுக்கு ஹெர்குலஸ். நமக்கு மெர்க்குரி- புதன். மெர்க்குரி பற்றி மிலான் நகரைச் சேர்ந்த ஸியாபாரெல்லி 1881-89ல் அதன் இயக்கத்தை குறிப்பிட்டவர். சூரியனிலிருந்து 36 மில்லியன் மைல் தூரத்தில் உள்ளது. சிறிய கிரகம். மெர்க்குரியைப்போல் 18 மடங்கு பெரியது பூமி. பகலில் ஈயத்தையும் உருக வைக்கும் 400டிகிரியும் இரவில் சந்திரனைவிட அதிகம்.மைனஸ் 200 டிகிரி. பூமியில் 59 நாட்கள் என்பது மெர்க்குரியில் ஒரு நாள்.ஒரு ஆண்டு 88 நாட்கள். சூரியன் மெதுவாகத்தான் புதனில் தோன்றுவான்.ஒரு மாதத்தில் ஒரு சூர்யோதயமும் ஒரு அஸ்தமனமும் நிகழ்கிறது.
வெள்ளியை ரோமானியர்கள் வீனஸ் என்று அழைத்தார்கள்.. இரு கைகளையும் இழந்த ஒப்பற்ற அழகியின் சிலை வீனஸ். நாம் சுக்கிரன் என்று அழைக்கிறோம். கிரேக்கர்கள் காலையில் தோன்றும் நட்சத்திரத்தை ஹெஸ்பரஸ் என்றும், மாலையில் காணும் நட்சத்திரத்திற்கு பாஸ்பரஸ் என்றும் பெயரிட்டு அழைத்தனர். கணித மேதை பித்தாகரஸ் இரு நட்சத்திரங்களும் வேறல்ல ஒன்றுதான் என்பதை கண்டு அறிவித்தார்.கிரகங்களில் மிகவும் பிரகாசமுடையது இதுதான். ஜூபிடர் கிரகத்தை விட ஆறு மடங்கு ஒளி உடையது. இத்தகைய ஒளி இருப்பதால்தான் இதனை ஆராய்வதற்கு கடினமாகவும் உள்ளது.
யுத்த காலத்துக்கு உரிய தேவதை மார்ஸ். ரோமானியர்களின் இதிகாசப்படி ரோமுலஸ் ரேமஸ் இருவரும் தான் ரோம் நகரை ஸ்தாபித்தவர்கள் .இவர்களின் தகப்பனார் தான் மார்ஸ். ஆண்டின் மூன்றாவது மாதமான மார்ச் இவருடைய நினைவாகத்தான் வைக்கப்பட்டது. பலவகையில் பூமியை போல உள்ள கிரகம் தான் மார்ஸ்.செவ்வாயும் ஒரு நாள் என்பது 24 மணிக்கும் கொஞ்சம் அதிகம் தான். ஆனால் ஒரு வருடத்திற்கு 687 நாட்கள் ஆகின்றன. செவ்வாயில் காற்று உண்டு ஆனாலும் அதிக கரியமில வாயு உள்ளதால் நம்மால் சுவாசிக்க முடியாது என்கின்றனர்.
எவரெஸ்டை போல் மூன்று மடங்கு உயரம் கொண்ட ஒலிம்பஸ் என்ற மலை அங்கு உள்ளது.
ரோமானியர்களின் நம்பிக்கையில் கடவுளுக்கெல்லாம் கடவுள் ஜூபிடர் ஆவார். கிரகங்களிலேயே மிகப்பெரியது. இந்தியர்களாகிய நாம் இந்த கிரகத்தை குரு என்று அழைக்கிறோம். பூமியைப் போல் 1300 பூமிகளை தன்னகத்தை அடக்கிக் கொள்ளக்கூடியது. ஜூபிடரில் ஒரு நாள் என்பது பத்து மணி நேரம்தான். சூரியனை சுற்றி வருவதற்கு 12 ஆண்டுகள் ஆகின்றன. ஜூப்பிட்டருக்கு 12 சந்திரன்கள் உள்ளன.பூமியை போலவே ஜூபிடரின் மையமும் உஷ்ணம் நிரம்பியது. அந்த கிரகத்தை சூழ்ந்துள்ள விஷ வாயுக்களும் மிகப்பெரிய பரப்பும் அதிகமான ஈர்ப்பு விசையும் அந்த கிரகத்தில் மனிதன் இறங்கினால் கூட அதில் இருந்து மறுபடியும் திரும்பி வர முடியாது என்று கூறுகின்றனர்.
விதைத்தல் அறுவடை செய்தல் ஆகிய தொழிலோடு தொடர்புடைய இன்னொரு கடவுள் க்ரோனஸ்(காலம்). ரோமானியர்கள் இவரை சாட்டன் என்று அழைத்தார்கள். லத்தீன் மொழியில் சாட்டன் என்றால் விதைக்க என்று பொருள். மற்ற கிரகங்களை விட அழகானது சனிக்கோளாகும். வானத்தின் ரத்தினம் என்றும் இதற்குப் பெயர் உண்டு. சனி கிரகத்தில் ஒரு நாள் என்பது 10 மணி நேரம். சனி கிரகத்தில் 400 பூமிகளை அடைக்கலாம். சூரியனிலிருந்து வெகு தரம் இருப்பதால் குளிரான நிலை இங்கு காணப்படும்.
கிரேக்க கடவுளர்களுக்குள்ளேயே பழமையான வரும் வானுலகத்து தெய்வங்களுக்கு மூத்தவரும் யுரேனஸ்தான். பல பெயர்களை பரிசீலித்து முடிவில் ஜெர்மனியை சேர்ந்த போடே என்பவர் தான் இக்கிரகத்துக்கு யுரேனஸ் என்று பெயரிட்டார். சாதாரண கண்களாலேய காண முடியும் .இந்த கிரகம் டெலஸ்கோப் மூலம் காணும் போது கடல் பச்சை தட்டை போல தோற்றமளிக்கும்.
டிட்டானியர்களை தோல்வியுறச் செய்ய தேவதேவனான ஜூபிட்டருக்கு உதவியதால் கடல் அரசனாக முடிசூடப்பட்டவர் நெப்டியூன். ரோமானியர்களின் கடல் தேவதையின் பெயர் இது. இந்த கிரகத்தை கண்டுபிடித்ததற்கு காலதாமதம் ஆனதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். தொலைதூரத்தில் உள்ள இந்த கிரகம் சூரியனை சுற்றிவர 168 ஆண்டுகள் ஆகின்றன ஒரு நாள் என்பது 15 மணி 48 நிமிஷங்கள் ஆகின்றன. சுமாராக ஒரு நாள் என்பது 16 மணி நேரம். சூரியனிலிருந்து தொலைதூரத்தில் உள்ளதால் குளிர் அதிகம் இருக்கும்.
இறந்தவர்களின் இருப்பிடமான பாதாள லோகத்துக்கு அதிபர் ப்ளூட்டோ. ஆனால் தற்போது சூரியனை சுற்றி வராததால் சூரிய குடும்பத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கிரகங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு தொலைதூரத்தில் உள்ள பொருட்களை அருகில் காணும் படியான கருவியை உருவாக்கியவர் கலீலியோ." எந்த ஒரு விஞ்ஞான தத்துவத்தையும் அது உண்மை என்று நிரூபனமான பிறகு தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று மாணவர்களுக்கு போதித்தவர் தான் கலிலியோ.டச்சு தேசத்தை சார்ந்த கண்ணாடி வியாபாரியான ஒருவர் தம் கடைக்கு மூக்கு கண்ணாடி வில்லைகளை கையாளும்போது குழி வில்லையின் மீது குவிவில்லையை வைத்து பார்த்ததில் தூரத்தில் உள்ள பொருட்கள் மிக அருகே வருவதாக குறிப்பிட்டு இருந்தார்.
இந்த செய்தி தான் கலிலியோவுக்கு பெரிய உந்துதலை தந்தது. டெலஸ்கோப்பை உருவாக்கினார். புதுமையான கருத்துக்கள் மக்களிடம் அச்சமூட்டியதால் அவரை சிறையில் அடைத்தனர். அவருடைய மிகச்சிறந்த புத்தகமான தி லாஸ் ஆஃப் மோஷன் உருவானது இக்காலகட்டத்தில் தான். ஒன்பது ஆண்டுகள் சிறைவாசத்துக்கு பிறகு புத்தகப் பிரதியை மட்டும் கையில் வைத்துக்கொண்டு உயிரிழந்தார்.
"உண்மை என்பது கண்டுபிடிப்பு அன்று,மறுகண்டுபிடிப்பு.!
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment