Thursday, 26 June 2025

ஜெயமோகன்



சிறுகதை என்பது அடிப்படையில் ’சொல்லாதே  காட்டு’ என்னும் முதல் விதியைக்கொண்டது. கதையைச் சுருக்கமாக சொல்ல ஆரம்பிப்பதுதான் நாம் அனைவருமே எழுத ஆரம்பிக்கும்போது செய்வது. ஆசிரியனே ஒரு நிகழ்வை வாசகனிடம் சொல்வது போல நாம் ஆரம்பத்தில் எழுதுவோம். அன்றாட வாழ்வில் மிக அவசியமானவற்றை மட்டுமே சொல்கிறோம். அந்த சுருக்கம் இலக்கியத்திற்கு எதிரானது. இலக்கியமென்பது விரித்துச்செல்லும் கலைதான். Detail தான் கலை. Art is in details  என்று சொல்லப்பட்டபோது God is in details என்று Gustave Flaubert அதற்கு பதில் சொன்னார் என்பார்கள்.

“ராமசாமி காலையில் வீட்டைவிட்டு கிளம்பியபோது எதிரே குப்புசாமி வந்தார். குப்புசாமியிடம் அவர் நான் இன்றைக்கு பெண் பார்க்கபோகிறேன் என்றார்’ என்ற வகையில் ஒரு கதையை ஆரம்பிப்பதுதான் சுருக்கமாகச் சொல்வது. அதில் வாசகனுக்கு ’தெரிந்துகொள்ளும்’ அனுபவம் தான் கிடைக்கிறது. அது இலக்கிய அனுபவம் ஆவதில்லை. இலக்கிய அனுபவம் என்பது மொழியினூடாக ‘வாழும்’ அனுபவம்தான். அப்படிக் கிடைக்கவேண்டும் என்றால் அது காட்சி வடிவமாகவேண்டும்.

’வீட்டைவிட்டு கிளம்பும்போது தன் சட்டை சரியாக சலவை செய்யப்பட்டிருக்கிறதா, மடிப்பு கலையாமல் இருக்கிறதா என்று ராமசாமிக்கு சந்தேகமாக இருந்தது. புதிய வெள்ளைநிறச் சட்டைதான். ஆனால் பெட்டியில் கொஞ்சநாள் இருந்தது. திரும்பி இன்னொரு தடவை போய் கண்ணாடியில் பார்க்கலாமா என்று யோசித்தான். ஆனால் அப்போதே ராகு காலம் கடந்துவிட்டிருந்தது. பெண் பார்க்கப்போகும்போது இத்தகைய நம்பிக்கைகளை கடக்கவே முடிவதில்லை. அவை நம்பிக்கையற்றவர்களுக்கு கூட ஒரு சின்ன எச்சரிக்கையாக கூடவே வந்துகொண்டிருக்கின்றன’

என்று ஆரம்பித்தால் அதை வாசிக்கும் வாசகன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, அந்தத் தருணத்தை கண்களில் விரித்துக்கொண்டு, உடன் வரத்தொடங்குவான். இதுதான் வேறுபாடு.

-ஜெயமோகன்

No comments:

Post a Comment