#கற்கை_நன்றே_119
மனம் எப்போது திறக்கும்?
எண்ணங்களின் கூச்சல் அடங்கியதும்!
-கழுகார்
'ஆறறிவதுவே அவற்றொடு மனனே' என்கிறார் தொல்காப்பியர். பொதுவாக நாம் நினைப்பது போல் ஆறாம் அறிவு பகுத்தறிவல்ல; மனமே என்கிறார். பாலி மொழியில் மனிஷ் என்பது மனம். மனுஷன் என்றால் மனத்தால் வாழ்பவன். பரிணாம வளர்ச்சியில் முந்திய மனமே மனிதனின் ஆதாரம். மனம் செய்யும் மாயம் குறித்து தமிழருவி மணியன் அற்புதமான விளக்கத்தைத் தருகிறார்..
ஆசை,சங்கல்பம், சந்தேகம் ஆகியவற்றால் ஆனது மனம். ஐம்புலன்களும் தரும் தகவலின் அடிப்படையில்..மனம் அவற்றை ஆராய்ந்து, அதன் தன்மையை அறிந்து கொள்கிறது.
மனம் நான்கு வேலைகளில் ஈடுபடும்போது நான்கு பெயர்களில் அழைக்கப்படுகிறது. தூரத்தில் வருபவர் யார் என்று நிச்சயிக்க முடியாத குழப்ப நிலையில் அதைக் காண்பது மனம். கண்டதும், கேட்டதும், உணர்ந்ததும் அனுபவப் பதிவுகளாகச் சேமிக்கப்படும் நிலை சித்தம். சித்தத்தில் சேமிக்கப்பட்டதின் சாதக பாதகங்களை அலசி ஆராய்வது புத்தி. 'நான்' என்ற உணர்வு நிலையில் எழுவது அகங்காரம்.
'எதிலும் நிலையாக நிற்காமல், அங்குமிங்கும் அலைபாய்வது மனம். எதையும் நிச்சயமாக முடிவு செய்வது புத்தி. விழிப்படைந்த புத்தியுடன் செயற்படுபவனின் புலன்கள் தேரோட்டிக்கு அடங்கிய குதிரைகள் போல் வசப்படும். அவனே வாழ்க்கைப் பயணத்தை வெற்றி கரமாக நிறைவு செய்கிறான்' என்கிறது தைத்திரீய உபநிஷதம்.
பகவத்கீதையில் கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடைபெறும் உரையாடலில் மனம் குறித்து ஆராயப்படுகிறது. கிருஷ்ணா! மனம் காற்றைப் போல அடக்குவது கடினம் என்றவுடன் கிருஷ்ணன்..அர்ஜூனா மனம் அடக்குவதற்கு அரியது.எனினும் பயிற்சியாலும்,வைராக்கியத்தாலும் அதை அடையலாம் என்கிறார்.
எண்ணங்களின் தொகுப்பே மனம் என்கிறது பெளத்தம். அதை களைந்துவிட்டால், அக்கணமே மனம் உதிர்ந்துவிடும் என்கிறது. ஆசையே துன்பத்திற்கான காரணம் புத்தர் சொன்னதாக படித்திருப்போம். ஆனால் பாலி மொழியில் உபயோகித்த வார்த்தையாகிய 'தன்ஹா' என்ற பதத்துக்கு அர்த்தம் ஆசை அல்ல, பேராசை என்று பொருள்.
சிலர் ஆசைப்படுவதால் ஒரு விஷயத்தை வென்றுவிடலாம் என்று எண்ணுவது தவறு.வருகின்ற உறக்கத்தினால் ஒருவன் தூக்கத்தை வெல்ல முடியாது. விறகினால் நெருப்பினைத் திருப்தி செய்ய முடியாது.அழகிய பொருளை பார்க்கும்போது மனம் மலர்ச்சி அடைகிறது. அதன் மீதுள்ள விருப்பம் ஈர்க்கிறது. பின் அது கிடைக்காத போது அலைக்கழிக்கிறது.
ஒரு ஜென் துறவியிடம், 'நம் மனதில் தோன்றும் தீய எண்ணங்களை எப்படி மாற்றுவது ?' என்று சீடர்கள் கேட்டனர்.
ஜென்துறவி ஒரு மண்பானையைக் கொண்டு வரும்படி கூறினார். பானை கொண்டு வரப்பட்டது. 'இதில் என்ன இருக்கிறது?' என்று கேட்டார் துறவி. 'ஒன்றுமே இல்லை என்றனர் பலர்.
ஒருவன் மட்டும் 'இதில் காற்று நிரம்பியுள்ளது' என்றான்.
'இந்தப் பானைக்குள் இருக்கும் காற்றை யாராவது வெளியே எடுக்க முடியுமா?' என்றார் துறவி.
'என்னால் முடியும்' என்றான் காற்று நிரம்பியிருப்பதாகச் சொன்னவன்.
தண்ணீரைக் கொண்டு வந்து அவன் பானை முழுதும் நிரப்பினான். துறவி கூறினார்.. நம் மனம் இந்த பானையைப் போன்றதுதான். பானைக்குள் இருக்கும் காற்று மனம். தீய எண்ணம் போல அது கண்ணுக்கு தெரியாது. நேர்மறையான எண்ணமான நீர் நிரம்பியதும் காற்று வெளியேறியது போல..தீய எண்ணங்களை இப்படித்தான் வெளியேற்ற முடியும் என்றார்.
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment