இன்று எழுத்தாளர் இராயகிரி சங்கரின் பதிவு ஒன்றை படித்த பிறகு எனக்குத் தோன்றியது.
பொதுவாக இலக்கியத்துக்கு வெளியில் உள்ளவர்களால் என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி . 'நீங்கள் ஒரு எழுத்தாளர். எப்படி இப்படி ஒரு தவறான முடிவை எடுத்தீர்கள்? லௌகீக வாழ்க்கையில், உறவில், நட்பில் இவ்வளவு முட்டாள்தனமாக இருந்தீர்கள்? ஏமாற்றப்பட்டீர்கள்?'
சார்லஸ் போத்தலரின் L'albatross என்ற கவிதை எனக்கு நினைவுக்கு வருகிறது. அது சமூகத்தில் கவிஞனின் இருப்பைப் பற்றி பேசுகிறது. பொதுவாக இது கலைஞர்கள் எல்லோரையும் பற்றி பேசுவதாக எடுத்துக் கொள்ளலாம். கவிஞர்களுக்கு இன்னும் பொருந்தக்கூடியது.
இராயகிரி சங்கரின் பதிவுகளில் தொடர்ந்து ஒரு கலைஞன் பொதுச் சமூகத்தில் தடுமாறுவதை, தடுக்கி விழுவதை எழுதி வருகிறார்.
Albatross என்பது பிரமாண்டமான ஒரு கடல் பறவை. கப்பல் பிரயாணத்தில் உடன் வருவது. பல நேரங்களில் மாலுமிகள் அதைப் பிடித்து விடுவதுண்டு. மிக கம்பீரமாக வானத்தில் பறக்கும் அந்த பறவை ஒரு முறை பிடிபட்டு விட்டால் மிகப் பரிதாபகரமான ஒன்றாகவும் மாறிவிடும். மாலுமிகள் அதை சங்கிலியில் பிணைத்து ஒரு விளையாட்டுப் பொம்மை போல் மாற்றி விடுவார்கள்.
சார்லஸ் போத்தலரின் கவிதை, கவிஞர்கள் இந்த உலகில் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று சொல்கிறது. அவர்கள் மிகப்பெரிய சிறகுகளையும் மிகப்பெரிய இலக்குகளையும் மிகப்பெரிய விஷயங்களின் மீது கவனத்தையும் கொண்டவர்கள். ஆனால் அவர்கள் ஒருமுறை தரையில் இழுக்கப்பட்டு விடடால் மிகப் பரிதாபகாரமான பொருட்களாக மாறி விடுவார்கள். தந்திரமான மனிதர்கள் அவர்களை 'கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப்பாவை 'போல, சர்க்கஸ் மிருகங்கள் போலாக்கி விடுவார்கள்.
போத்தலேரின் கவிதை இவ்வாறு முடிகிறது.
கவிஞன் மேகங்களின் இளவரசன் போன்றவன்.
புயல்களிடையே புழங்குகிறவன்.
வேடர்களின் வில்லைப் பார்த்து நகைப்பவன்.
ஆனால்
தரை மீது விழுந்து விட்டால்
அவனைக் கேலி செய்பவர்கள் நடுவே
அவனுடைய பிரம்மாண்டமான சிறகுகளே
நடக்கத் தடையாய் மாறி
தடுக்கித் தடுக்கி விழுகிற பரிதாபமானவன்.
No comments:
Post a Comment