#Reading_Marathon2026
#26RM009
Book No:16/150+
Pages:-152
நெருப்பில் வளர்பவை
-பா.திருச்செந்தாழை
படைப்பு மனநிலை உச்சத்தில் இருக்கும் போது.. கதை ஓட்டத்திற்கு வந்து விழுகின்ற வார்த்தைகள் யாவுமெந் கருத்துசெறிவுடனும், அழகியலுடனும் சொற்கள் துடுப்பு போல கதைகளை முன்னோக்கி நகர்த்தும்.அப்படித்தான் திருச்செந்தாழையின் கதைகளில் ஒவ்வொரு சொற்களும் மின்னும்.
யதார்த்த உண்மைகளை,வாழ்வியல் சிக்கல்களுடன் தரும் போது நல்லதொரு வாசிப்பு அனுபவமாகிறது.
பொதுவாக காக்கை ஒளிவீசும் பொருட்களை விரும்பி எடுத்துச் செல்லும் அல்லது மதிப்பில்லாத பொருளை மதிப்புள்ள பொருளை எண்ணும்.காக்கைப் பொன் கதையில் வரும் மையக் கதாபாத்திரமான மஞ்சுவும் இதுபோலத்தான்..சற்குணத்தின் அன்பை அறிய முற்படுகிறாள் என்பதை பல நுட்ப வரிக்ளால் நெய்திருப்பார். /வீடு முழுக்க மதிய நேரத்தின் இருள் இறங்கியிருந்தது/
/அறிவுரைகள் பதற்றத்தின் நீர்ச்சுழிப்பில் கலந்து மறைந்தன/
உரசிக்கிழித்த தீக்குச்சியின் பெரும்பிழம்பொன்று மெல்ல மெல்ல ஒரு துளியாகி வடிகின்ற வெளிச்சமும் கதவிடுக்கில் விழுந்தது எனும் சிறுகதைக்கான சரியானபாதை இறக்கத்தில் இறங்கும் விமானம் போல் மஞ்சுவை போல் நாமும் ஆயாச மடைகிறோம்.
வாழ்ந்து கெட்ட குடும்பங்களின் வீழ்ச்சியை கதையில் சொல்லி முடியாது. அப்படித்தான் சகுந்தலா-தினகரனின் குடும்ப வீழ்ச்சியால் பத்து வயதான சிவபாலனின் உழைப்பை காலம் வட்டியாக கேட்டிருக்கிறது."கரனை கரனையான அவனது புஷ்டிக் கட்டுகள் மீது சணல் சாக்குகளின் பிசிறுகள் இன்னமும் அப்பிக்கிடப்பதை பார்த்தால்.. வாசிக்கும் நமக்கும் தாய் போல்ச் இதயம் கனப்பதை கட்டுப்படுத்த முடியாது.தன் எழுத்துக்களின் வழியே அகத்தை தொட்டிருப்பார்.
கட்டி வச்சதோட வேலை முடிஞ்சிருச்சு..என்னையும் அக்காவையும் வளர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு அம்மாவுக்கு. எப்போதும் நெருப்புடனேயே வாழப் பழகியவள்.ஓடிப்போன கணவனை நினைக்காது..வைராக்கியத்துடன் குடும்பத்தை நடத்துகிறாள். பெரியவனாகி திருமணம் முடித்து சுரண்டல் லாட்டரியால் ஜெயிலுக்கு போய் திரும்பும் மகனின் பார்வையில் கதை நகர்கிறது. வெளிச்சத்திற்கு தான் ஆயிரம் உபகரணங்கள் தேவை இருளுக்கு? எனும் வரியில் தங்கள் வாழ்வு குறித்த சுய புராணம் சொல்கிறார்.
குளிர்ச்சியான கற்களும் வெளிச்சத்தை அனுமதிக்காத இருளும் நிரம்பியிருந்த வீட்டினுள் தன்னுடைய நண்பன் சுதாகரன் சட்டகத்திற்குள் சிரித்துக் கொண்டிருந்தான். துக்கம் விசாரிக்கப் போன சுதன் வெளிச்சம் நீங்க்கிவிட்ட வீட்டையும் அம்மாவையும் பார்த்தான். நிராதரவான சூழலில் ஏதெனும் ஆறுதல் மொழி கூறுபவர்கள் தெய்வத்தின் தூதுவர்கள். நிராதரவாய் விட்டுச் செல்லாமல் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். எங்கேயும் செல்லமுடியாத தடுப்பு வேலியாக இருக்கும் இருளை விரட்டும் வெளிச்சம் போல் வந்தவனைப் பற்றி தாயின் அகம் பற்றிய கதை இது.
ஒரு அரசு ஊழியரின் மனநிலையும் அவரை நாடி வரும் அப்பாவி மக்களின் நாடியையும் பிடித்துப் பார்ப்பது போல மனநிலையை ஒரு பருக்கை பதமாக உணர்த்துகிறது.
/அத்தனை பேர்களது அசமந்தத்தின் நடுவே பற்றி எரிகின்ற காகிதம் போல ஒரு மனிதன் அலைவதை நான் எனக்குள் மிக நெருக்கமான ஞாபகப்படுத்தலாக உணர்ந்தேன். என்னை அறியாமல் அவரை நோக்கி, "இப்படி உட்காருங்க" என்றேன்.
அவரது பதற்றத்தைத் தணிக்கும் விதமான எவ்வித உத்தரவையும் வழங்குவதற்கான அதிகாரம் எனக்குக் கிடையாது. ஆனால் குறைந்தபட்சமாக அந்த அவதியோடு கைகோர்க்கத் துடித்தெழுந்த
ஒன்று உள்ளுக்குள் இருந்தது. அவர் என்னை அதே வினோதமான கண்களோடு பார்த்தார். அவரால் அவரது சுத்தல்களால் ஒருபோதும் உள்நுழைய முடியாத பிரம்மாண்ட கட்டிடத்தின் ஒரு சிறிய ஜன்னல் திறப்பைப் போல எனது குரலை அவர் உணர்ந்திருக்க வேண்டும்./
ஒரு நல்ல காட்சிக்கு பொருத்தமான வசனம் என்பது மிகவும் முக்கியமாகும். ஏனென்றால் அந்த காட்சியின் தன்மையை அந்த வசனங்கள் தான் பிரதிபலிக்கும். ஒரு சில வார்த்தைகள் அந்த கதைகளின் ஒட்டுமொத்த கருவையும் ஒரு சொற்களில் சொல்ல வைக்க முடியும். ஆனால் அந்த சொற்களை தேடுதலில் தான் அந்த எழுத்தாளனின் முயற்சி உள்ளது. அந்த வகையில்
/நீரில் விழுந்து விட்ட எண்ணெய் துளியை போல கலக்கவும் முடியாமல் விலகவும் இயலாமல் நின்று கொண்டிருந்த அவனது அவஸ்தையும், பதை பதைப்புமான முகத்தை பார்த்தபடி/ என்று ஒரு வரி ஒரு பிடி வெளிச்சம் கதையில் வருகிறது. இதை சாதாரணமாக படித்தால் கூட ஒரு இலக்கிய தரமாக இருக்கிறது. கதையோடு ஒன்றி வரும் போது அந்த கதாபாத்திரத்தின் தன்மையை இன்னும் மெருகூட்டுகிறது.
காலி செய்யப்பட்ட வீட்டினுள் அல்லது புதிதாக கட்டிய வீட்டினுள் நுழைந்து உள்ளீர்களா? எந்த பொருளும் இல்லாமல் இருக்கும் பேரமைதி வீட்டில் இருக்கும். அந்த அமைதியை நான் பலமுறை ரசித்துள்ளேன் நான் ரசித்ததை அப்படியே கேமராவில் பதிவு செய்வது போல சொற்களில் கொம்பு கதையில் வடித்துள்ளார்...
/கிழவன் வீட்டைத் திறந்தான். பொருட்களை எல்லாம் எடுத்துவிட்ட பிறகு வெற்று அறைகளில் நிறையும் ஆயாசத்திற்கும் மௌனத்திற்கும் வேறொரு வாழ்க்கை இருப்பது போலக் கிழவனுக்குப் படும். சாதாரண மனிதர்களால் வாழ முடியாத ஒரு வாழ்க்கை. இந்த வெறுமைக்குள்ளும் அமைதிக்குள்ளும் மிக மிக மெதுவாக நகர்கின்ற காலத்திற்குள்ளும் பேசிக்கொள்ளத் தேவையற்று சிலைகளைப் போல வாழ்கின்ற ஒரு வாழ்க்கை. பொருட்கள்தான் எவ்வளவு அசிங்கத்தைச் சேர்த்து விடுகின்றன இந்த வாழ்வின் மீது. கிழவன் ஒரு குழந்தையைப் போல் அந்த வீட்டின் தூசி படிந்த அமைதி மீது மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தான். எப்போதாவது இப்படி இடிபடப்போகின்ற வீட்டில் தனியே இருக்கக் கிடைக்கும் வாய்ப்பு வந்தால் கிழவன் தவறவிட மாட்டான். அப்படியான வீட்டில் இருந்தபடி குடிக்கின்ற பீடித்துண்டுகளுக்குள் உச்சமான போதை நிரம்பி விடும்/
நல்ல ஒரு அழகியல் நிகழ்வை இந்த கதைகளில் சொல்லியிருப்பார்.
திருவிழாவின் இரைச்சல் சத்தங்கள் இப்போதும் தொலைவாக எங்கோ காற்றில் துணி வீழ்வதைப் போல கசிந்து கொண்டிருந்தன. எனும் நிறைசூலி கதையின் துவக்க வரி நல்ல ஒரு கவித்துவ உணர்வைத் தருகிறது.
ஒரு தருணத்தை, சுவாரஸ்யமான கவித்துவ சொற்களில் காட்சிப்படுத்துவதென்பது மிகவும் சவாலானது.கதை முடிவுகளைக் காட்டிலும் கதையின் போக்கில் கவனித்து செல்வது மலை ரயிலில் போன்ற மெல்லிய உணர்வை தருகிறது.ஒரு படைப்பு படைப்பாளன் என்ன நோக்கத்தில் எழுதுகிறானோ அந்நோக்கத்தை வாசிப்பாளனையும் அடைய வைக்கிறார். "நாற்பதாண்டு கால பணிக்காலத்தில் கடிகாரத்தோடு போட்டியிட்டு கொண்டு வேலை செய்யும் முத்தையாவுக்கு தனக்கு வயதாவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.முடிக்கி டை அடிப்பது போல காலத்தை நகர விடாமல் பின்னோக்கி இழுக்கப் பார்க்கிறார். தனக்கு வயதாவதை விட நிறுவனத்திற்காக உழைக்க மேலும் மெனக்கெடுக்கிறார். இந்த உளவியல் போராட்டம் தான் நெகிழும் சித்திரம் கதை.நான்கு பக்கங்களே உள்ள கதையில் அந்த நபரை பற்றி முழுமையாக உணர வைத்திருப்பார்.
நெருப்பில் வளர்பவை என்றால் துன்பங்களிலும் போராட்டங்களிலும் உருவாகும் மனித உறுதியையும் வாழ்க்கை உண்மையையும் குறிக்கிறது.இக்கதைகள் ஒவ்வொன்றும் சொற்களால் நெய்யப்பட்ட அழகிய ஆடையாகும். அதனை வாசித்து முடிக்கும் போது புத்தாடை அணிந்த இன்பத்தை மனம் சுரக்கிறது.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment