#Reading_Marathon2026
#26RM009
Book No:19/150+
Pages:-170
பூமர்
-செளம்யா
அரட்டை கேர்ள் எனும் சௌமியா அவர்களின் நான்காவது புத்தகம் இது. தொடர்ந்து அவரின் எழுத்துக்களை வாசித்து வருகிறேன். உண்மைக்கும் எதார்த்தத்திற்கும் மிக நெருக்கமாக இருக்கும். ஒரு சம்பவத்தை சொல்லும்போது கூர்மையான சில சொற்களை வைத்து நம்மை வீழ்த்தி விடுவார், அவரின் வார்த்தைகளுக்கு பின்னால் நம் மனதையும் செல்ல விட்டு அவர் சொல்வதை எல்லாம் நாம் ஆமோதிக்கும்படி எண்ண வைப்பார். இந்த கதைகளும் அப்படித்தான்.
"நீ சம்பாதிக்க ஆரம்பிச்சா இதைவிட நல்லதா வாங்கிட மாட்டியா"என்று தான் ஆரம்பிக்கிறது.. சொந்த வீட்டை விற்கும் அப்பாவின் வார்த்தை. இந்த ஒரு புள்ளியில் இருந்து துவங்கும் கதை இறுதியில் நாம் எதிர்பாராத விதத்திலும், மனம் ஏற்றுக்கொள்ளும் விதத்திலும் கதை முடிகிறது. ஆனால் மணலில் கல்லை ஒளித்து வைப்பது போல சொற்களில் தேடித் தேடி அந்த முடிவை நாம் எடுக்க வேண்டும் என்பது சுவாரசியமானது. /வேறு மார்க்கமற்ற கையறு நிலையில் இன்னும் நிகழாத அல்லது நிகழவே வாய்ப்பறற வசந்தமான ஒரு எதிர்காலத்தை கனவு கண்டு சமாதானம் கொள்வது ஒரு ஆறுதல்/ என்பது உளவியல் உண்மையே.
/எதனால் அப்படி முடிவெடுத்தாளோ தெரியாது. ஆனால் செயலில் இறங்கிய பின் ஒரு முறையேனும் மீள முயற்சித்திருப்பாள். அது கண்டதிருந்து கையாளாகாமல் இந்த அறை அவஸ்தை பட்டு இருக்கும்/ என்பதை படிக்கும் போது மனம் சற்று அசைபோடுகிறது அந்த காட்சியை.
நான்கு மாடி கட்டடத்தில் நின்றிருந்தால் முதலில் தோன்றுவது கீழே விழுந்தால் என்ன ஆகும் எனும் எதிர்மறை சிந்தனை தான். அப்படி வரும்போதே நம்மையறியாமல் கையின்பிடி இறுகுவதை காணலாம். சாவு குறித்த செய்தி கேட்பதை விட கண் முன் பார்ப்பது துயரமானது. மனம் அவர்களை நினைத்து நம்மை ஒப்பீடு செய்யும் யதெச்சையாக. இறையன்புவின் நாவல் ஒன்று சாகாவரம். நண்பனுடைய இறப்பை பொறுக்கமாட்டாது மனம் ஏற்படுத்தும்.அடுக்கடுக்கான கேள்விகள்தான் அந்நாவல். இத்தொகுப்பில் உள்ள இக்கதையும் சிறுவனின் பார்வையில் சாவை நோக்கிய சிந்தனையை கிளறுவதாக அமைகிறது." கடன் வாங்கித்திரும்பத் தராம செத்துப்போறவங்க அடுத்த பிறவியில் மாடாய் பொறப்பாங்கனு வரி வரும்..நான் நினைச்சிக்கிட்டேன் அடுத்த ஜென்மத்தில மனுசங்களை விட மாடுகளின் எண்ணிக்கை அதிகம் இருக்கும்னு
இக்கால ஜென்சி தலைமுறையின் கதைக்களம் தான் பூமர்.'உள்ளங்கை' கதை அவரின் தளத்தில் வந்தவுடனே படித்தேன். அக்கா தம்பி உறவின் மேன்மையை துருத்தலின்றி மிக இயல்பாய் பாசப்பிணைப்பை நவீனகாலத்தில் இருக்கும் அன்புடன் சொல்லியிருப்பார்.அக்கா கொடுக்கும் கட்டப்பைக்குள் ஷங்கர் பார்வையை நுழைக்கும் போது படிக்கும் நம்மையும் பையில் என்ன வைத்திருப்பார் என்று சொற்களில் துலாவ வைத்திருப்பார்.
தீராக்காதல் கதையும் ஏற்கனவே வாசித்திருந்தது தான். நடுத்தர வர்க்கத்து பெண்மணி எல்.ஐ சி ஏஜெண்டாக இருப்பாள். அங்கு வரும் மேலதிகாரி மீது வரும் ஈர்ப்பை கதை முழுவதும் நாசூக்காய் சுவாரஸ்யம் குறையாமல் சொல்லியிருப்பார்.
பெண்களின் கைகளுக்கு ஒரு மாயவித்தை இருக்கிறது என 'அலங்கோலம்' கதையில் ஒரு வரி வரும்..அதுபோல சொல்லும் இக்கதையில் ஏதேனும் ஒரு மந்திர வரிகள் அல்லது படித்தவுடன் அடடே என எண்ண வைக்கும். காட்சிகளையும் தன் சொற்சித்திரத்தால் வண்ண மயமாக்கிவிடுவார். கணவன் மனைவி அந்நியோன்யத்தை அழகிய வரிகளால் விரசமின்றி பதிவு செய்திருப்பார். இதற்கு நேர்மாறாக சந்தேகப்படும் கணவனையும் சகித்துக் கொள்ளும் மனைவையைப் பற்றியும் ஐயுறவு கதை அழகியல்.கதையின் இறுதியில் மகள் தனக்கு நேரும் ஒரு நிகழ்வின் போதுதான் அம்மா இத்தனை நாட்கள் சொல்லும் சொற்களில் உயிர் உள்ளதை அறியும் இடம் நச்
"கோடுகளுக்குள் இருக்கும்வரை பிரச்சனை இல்லைதான். ஆனால் கோடுகள் ஒவ்வொரு முறையும் புதிய வட்டத்தைப் போட்டுக் கொண்டே வந்தன. ஒவ்வொரு புதிய வட்டமும் முந்தையதை விட ஒரு சுற்று குறுகி இருந்தது. அந்த குறுகலுக்குள் அடைபட்டு மூச்சு முட்டும் நிலைக்குத் தான் தள்ளப்படுவதை உணரச் சில மாதங்களாகின ரம்யாவுக்கு என ரம்யாவின் மனநிலையை அழகாக ஒப்பிட்டு காட்டியிருப்பார்.
இத்தொகுப்பில் எனக்கு பிடித்த கதையாக மனக்குடல் கதை என சொல்லலாம். விவாகரத்தான இருவரும் மேட்ரிமோனி வழியாக பேசி சந்தித்து மறுமணத்துக்கு தயாராகின்றனர். எல்லாம் பொருந்தி வரும்போது ஒரே ஒரு செயல் நாயகனிடன் மனதில் உள்ளதை சொல்லும். அதன்பின் என்ன ஆனது என்பது தான் கதை.
பிற்போக்குத்தனங்களை ஒரு பெண் எதிர்கொள்ளும் சூழலில் ஒரு பெண் என்ன முடிவெடுக்கிறாள் என்பது கதையின் இறுதியாக அமைகிறது.
/சந்திப்பது என்பது இருவர் பார்த்துக் கொள்வது மட்டுமல்ல, பரஸ்பர நம்பிக்கையை சம்பாதிப்பது/
" காலம் எல்லாவற்றையும் ஆற்றித் தேற்றுகிறது.எந்த உயிரும் வாழ்நாள் முழுக்கத் தனித்திருப்பதில்லை. யாரோ ஒரு ஜீவன் யாருக்காகவோ துணை நிற்பது காலத்தின் விதி எனும் வரி அருமை. கதையோட்டத்திற்கு பொருந்துகிறது.
இறுதியில் வந்து அம்மாவின் திட்டுக்குத் தயாராகியபடி அலைபேசியை அழுத்தினாள் என்பது அழகியல்.
மருத்துவமனை கேண்டினில் ரோஷன் தேநீர் அருந்திக் கொண்டிருந்தான். இந்த மனித மனம்தான் எத்தனை விசித்திரமானது! நெஞ்சம் முழுக்கத் துக்கம் நிரம்பிய ஒருவனால் நா ருசிக்கத் தேநீர் அருந்த முடிகிறது. போதை நாடி புகை பிடிக்க முடிகிறது. உடல் எப்போதுமே மனதுக்கு ஓர் அடி முன்னால்தான் ஓடிக்கொண்டிருக்கிறது . ருசி, பசி...
பரிதவிப்பில் என கதை துவங்குகிறது.
சாலை விபத்தில் அடிபட்டு படுத்திருக்கும்.உயிருக்கு உயிரான மனைவியை நினைத்து மருகும் கணவன் ரோஷனின் மனநிலையைத்தான் சொல்லியிருப்பார்.மகள் மீது அதீத அக்கறையுள்ள தாயின் பிரச்சினை குறித்த காரணத்தை அழகாக சொல்லியிருப்பார்.
செளம்யாவின் கதைக்களம் யாவும் அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் சிக்கல்களை, சமூக அவலங்களை மிக யதார்த்த நடையில் படைத்தது சிறப்பு.அதனையே கதாபாத்திரங்களுக்கும் இடையேயான உரையாடலாக அமைந்தது நன்று.யதார்த்த உலகில் அல்லது போட்டி உலகில் தனி மனித உணர்வும் பார்வையும் சமூகத்தின் குரூர கணங்களை எதிர்கொள்ள முடியாத இயலாமையும் கதைகள் வெளிப்படுத்துகின்றன.வெறுமனே பெண்ணியம் பேசாமல் அடுக்கடுக்கான காரணங்களை சொல்லாமல், பிரசங்கம் போல் முழங்காமல், ஒவ்வொரு ஆண்களையும் உணர வைக்கிறார்.இதுவே படைப்பின் பெரும்பலம்.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment