#Reading_Marathon2026
#26RM009
Book No:18/150+
Pages:-376
கருந்துளை
-கரன் கார்க்கி
இந்த ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவற்கு வந்திருந்த அனைவரின் கைகளிலுமிருந்த புத்தகம் தான் கரன்கார்க்கி எழுதிய கருந்துளை நாவல். அடிப்படையில் தத்துவம் குறித்த வாசிப்பு மிகவும் பிடிக்கும். அறிவார்ந்த உரையாடல் இருக்கும் என்பதால் விரும்பி வாசித்தேன். அதே போல் தத்துவ விளக்கம் நாவல் முழுக்க எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.
கல்லூரியில் தத்துவவியல் பயிலும்.மாணவர்களான சமரனும், சுகுவும் நண்பர்கள்.தத்துவத்தில் நாட்டமுள்ள மாணவன் சமரன் அனைவரிடமும் பழகாதவன். ஆனால் தத்துவ படிப்பில், அறிந்துகொளவதில், வாசிப்பில் ஆர்வமுள்ளவன். உடன் பயிலும் வெண்பாவை காதலித்தாலும் நியாயமற்ற சில செயல்கள் செய்ததால் குற்ற உணர்வு ஏற்பட்டு தற்கொலை குறித்த எண்ணங்கள் அவனிடம் அடிக்கடி ஏற்படும். அப்போதெல்லாம் சுகுதான் அவனை தேற்றுவான்.தத்துவ ஆசிரியராக வரும் முரளி சார் மீது அள்வற்ற அன்பு வைத்துள்ளான்.அவரிடம் வகுப்பில் தத்துவத்தில் உரையாடல் செய்வான்.
பொதுவாக தத்துவம் என்பது கேள்விகள் கேட்பது, அறிவியல் என்பது அந்தக் கேள்விகளுக்கு விடைகளைத் தருவது. எல்லாவற்றையும் வரையறை செய்து கொண்டு கேள்வி கேட்பது, காரண காரியத்துடன் விளக்குவது தான் அறிவின் முதற்படி என்கிறார்கள் தத்துவ அறிஞர்கள்.
அமெரிக்க நண்பரான சாக்கிய மோகன் என்பவருடன் தத்துவம் குறித்து உரையாட சமரன் அழைக்கப்படுகிறான்.தத்துவம்.
குறித்த உரையாடல் இப்பகுதியிலிருந்து துவங்குகிறது.
எல்லா இந்தியத் தத்துவங்களும் சுயம்பாக ஒன்றாக உருவாகவில்லை.உதாரணத்திற்கு ஈர்ப்பு விசை கண்டறிந்த நியூட்டன் ஈர்ப்பு விசைக்கான காரணத்தை கண்டறியவில்லை. ஐன்ஸ்டீன் கண்டறிந்ததாக விளக்குகிறார். இந்தியாவில் ஆத்திகப் பள்ளிகள் இருந்தது போல வேதங்களை ஏற்காதவர்களுக்கான நாத்திகப் பள்ளிகளும் இருந்தது என்றும் சாருவாகத் தத்துவம் நாத்திக பள்ளியை சேர்ந்தது எனக்கூறுவதும்,அதை விளக்கியிருப்பதும் சுவாரஸ்யம்.
இந்தியத்தத்துவங்கள் துறவறத்தை வலியுறுத்துவது போல மறுபிறப்பை ஏற்கின்றனவா? தத்துவங்கள் மீது புனிதப்பூச்சு உள்ளனவா? மதங்கள் ஏன் தத்துவங்கள் தருவித்துக் கொண்டன?போன்றவற்றிற்கு கருத்தாழமிக்க தொடர்பை கூறுகிறது.மனித வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடும் ஒரு தத்துவப் பயணம் என்று கூறலாம்
கதைக்காக சட்டென்று சமரனை - சராசரி காதலனாக - காதல் வசனங்கள் பேசும் கதாபாத்திரமாகக் காட்டாமல் காதல் தருணங்களிலும் அவன் தீவிரத்தன்மையோடே இருக்கிறான். ஆனாலும் அவனுக்குள்ளும் எட்டிப்பார்க்கும் காதலையும் அவ்வப்போது எழுதியும் இருக்கிறார் நாவலாசிரியர். ‘ஒரே விழியில் ஆயிரம் முறை மூழ்கலாம்’ வரி அதற்கோர் உதாரணம்.
சமரன்-வெண்பா காதல் அத்தியாயமும் இறுக்கமாய் இல்லாமல் இயல்பாய் சொல்லப்பட்டிருக்கிறது.பேராசிரியர் முரளியின் பின்னணி குறித்து விளக்கப்பட்டுள்ளது.தத்துவ பிடிப்புடன் ஆசிரியர்களுக்கே உரிய நிலையில் உள்ளார். சக பேராசிரியரான ஜடாயுவுடன் வேறுபட்டவர் என்பதை வகுப்பு மாணவர்களின் பார்வையில் விளக்கியிருப்பார்."கண்ணுக்கு தெரியாமலிருக்கும் ஒரு பொருள் எந்த விதத்திலும் வெளிப்படாதிருக்கும் என்றால் அது இருக்கிறதென்பது உண்மையல்ல" எனும் புத்தரின் வாசகம் பொருத்தமான இடத்தில் வருகிறது.
/ஒட்டு மொத்த உயிரினங்களும் ஒன்றிலிருந்து இன்னொன்றெனப் பரிணமித்ததுதான். அந்த விதத்துல குரங்குல பல வெரைட்டி இருக்கு. எல்லாமே மரத்திலிருக்குற பழங்களைக் காலி பண்ணிட்டு அடுத்த மரத்துக்குத் தாவிடும். ஆனால், மரத்திலிருக்குற பழம் காலியான பிறகு நிலத்தில் உணவைத் தேடுன குரங்குக்கும் மனிதனுக்குமான பொதுவான மூதாதையிலிருந்து மனித இனம் தோன்றியது. அப்படியான ஒன்றான நியாண்டர்தால் மனிதனையும் குரங்கு வகையென்றே நாம் நினைத்திருந்தோம்/ எனும் பகுதியும் பின்னர் வரும் விளக்கமும் மூதாதையர் குறித்த புரிதலை விரிவாக்குகிறது.
நாவலின் எதிர்பாராத திருப்பமாக சுகுவிற்கு ஒன்று நிகழ்கிறது. அது சமரனை பாதிக்கிறது. தத்துவ விசாரணை செய்கிறான்.சமரனின் அம்மா கதாபாத்திரமும் அவளின் அடுத்த கட்ட நகர்வையும் சமரன் தீர்மானிக்கிறான்.நாவலின் ஒன்பதாவது அத்தியாயம் சினிமாபார்க்கும் உணர்வை காட்சிவடிவில் விறுவிறுப்புடன் சொல்லப்பட்டுள்ளது.அதனைத்
தொடர்ந்து வெண்பனியில் வரும் நினைவுகள் நாவலை தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.
சமகால அரசியல் நிகழ்வுகள், சங்க கால.காட்சிகள், குதிரை குறித்த வரலாறு, பயணிகளின் கனிவான கவனத்துக்கு, ராபர்ட் சிஷோம்-நம் பெருமாள் உரையாடல்,டாக்டர்-மகாத்மா உரையாடல் என
நாவலின் கடைசி அத்தியாயங்கள் அதிக ஆழமுள்ள கருத்துக்களுடன் வெளிப்பட்டுள்ளன
அதிகாரத்துக்கு எதிராகப் பேசினால் அது கருணையின்றி தங்களுக்கு எதிரான தத்துவத்தை கொன்றுவிடுவார்கள் என்று நிதர்சன உண்மைகளை வரலாற்று ஆதாரத்திலிருந்து தெரிவிக்கிறார்கள்..ஒருமரண போராட்டத்தில் இறுதியில். இறப்பவரின் மனநிலையில் என்னவெல்லாம் தோன்றுமோ அத்தனையும் விவரிக்கப்பட்டுள்ளது.
தத்துவ தரிசனமாக கடைசி மூன்று அத்தியாயங்கள் உள்ளன
#ரசித்தவை
*எதேச்சையான ஒன்று மற்றொன்றால் பயனுக்குள்ளாகிறது. பயன்பாட்டிலிருக்கும் ஒன்று மற்றொன்றால் பலப்படுகிறது. இப்படியாக வலிமையானது தப்பிப் பிழைக்கிறது - ஹெராக்லிடஸ்
*உண்மையென்பது பாதையற்ற நிலம் மட்டுமே, உண்மைக்கான பாதையை நான் போட முடியாது.
ஒளியை நோக்கிப் போவதாக நினைத்து இருளுக்குள்ளே நுழைந்து ஏமாறுவீர்கள்.
*தத்துவங்கள் மதங்களுடன் தொடர்புடையதாக மட்டுமே என்று நம்பப் பழகிவிட்டோம்
*மரபு, விதிகளின்படி வாழ்வதுவீண். நமக்கான வாழ்வை நாமே தேர்ந்தெடுக்க வேண்டும்-சார்த்தர்
*டுபாக்கூர்-இரண்டு மொழி தெரிந்தவர் என்று பொருள் அன்றைய நாளில் ஆங்கிலேயருக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் பலவித தில்லுமுல்லுகளை செய்து பணம்.சம்பாதித்தவர்கள் என்பதால் துபாஷி என்ற சொல் வசைபாடும் சொல்லாக டுபாக்கூர் என மருவியது
நாவலுக்குரிய பொருத்தப்பாட்டுடன் உணர்வு ரீதியாக கடத்தாமல், தத்துவார்த்த ரீதியாக, பல்வேறு விஷயங்களை உள்ளடக்கி நல்லதொரு வாசிப்பு அனுபவமாக அமைந்தது
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment