#Reading_Marathon2026
#26RM009
Book No:21/150+
Pages:-160
மஹாபிடாரி
-யுகபாரதி
யுகபாரதியின் எழுத்துகள் அவரைப்போலவே எளிமையானவை. அவருடைய முந்தைய புத்தகங்கள் யாவும் சிறியவையாக இருக்கும். நான் எடுத்தவுடனே பிரித்துப் பார்ப்பது யாருக்கு சமர்ப்பணம் செய்துள்ளார் என்பதைத்தான்.ஏனெனில் அவர் சமர்ப்பிப்பது எல்லாமே வித்தியாசமாய் இருக்கும். உதாரணத்திற்கு
"பெட்டகமாய் மதிக்கப் பெற்று
பின்னாளில்
பொட்டலம் மடிக்கக் கிழிபட்ட
புத்தகங்களுக்கு"
பஞ்சாரம் கவிதைத்தொகுப்பை இப்படியாக அர்ப்பணித்திருப்பார்
இந்தப் புத்தகம் "நிலவூறித் ததும்பும் விழிகளுக்கு என கவித்துவமாய் சொல்லியிருப்பார்.
எழுதுவோர் அனைவரின் முதல் முயற்சி கவிதைதான். ஆனால் அந்த கவிதைவடிவத்திற்கும் ஆழமான சொற்களையும் அர்த்தங்களையும் இட்டு நிரப்பும் போது கவிஞராகிறார்கள்.கவிதை வடிவத்தில் வெறும் அலங்காரச் சொற்களை மட்டும் எழுதிக் கொண்டிருக்கிறவர்கள் இன்னும் கவிஞராக முயற்சிக்கிறார்கள் என கருதலாம்.அந்த வகையில் யுகபார்தி அவர்கள் அக்மார்க் கவிஞர்தான். இதில் 108, காதல் கவிதைகள் குமுதத்தில் வாசித்து இருந்தாலும் ஒரு சேர படிக்கும் போது மகிழ்ச்சிதான்.
பூக்காரம்மா கொடுக்கும் பூவினைப்பற்றி ஏற்கனவே எழுதியிருந்தாலும் இந்த புத்தகத்தில் ஒரு கவிதை " ஒரு விரற்கடைக் கூடுதலாக/நீட்டித்து நறுக்கினாளே/ அந்தக் கனகாம்பரத்தில்/ அறிந்து
கொள்ளலாம் என் காதலின் நீளத்தை/ கவிதை அழகியல்.
ஒருமுறையேனும் உன் கண்களை சந்தித்திருந்தால் மறுபடியும் புத்தன் திரும்பிதிருப்பான் அரண்மனைக்கே என்னும் வரிகள் காதலின் வலிமை ஒரு ஞானியையே திசைமாற்றி இருக்கும் என்கிறார்.
இரண்டுத் தெரு
தள்ளி நடந்தால்
உன் வீடு வந்துவிடும்
இடைப்பட்ட தூரத்தில்
எத்தனை மரங்களோ அத்தனையிலும் என் காதல் அமர்ந்திருக்கிறது
பகலில் காக்கையாக
இரவில் ஆந்தையாக
கடைசி இருவரி எள்ளல்
பேருந்தில் கேட்கும் பாடல்களுக்கு ஆசை அதிகம். அப்படித்தான் இளையராஜா பாடலை அவள் முனுமுனுக்கும் போது அறிய முடியது உன் காதலும் உபரி வெட்கத்தையும்.
இதில் உபரி வெட்கம் கவனிக்க வேண்டிய வார்த்தை.இயல்பாய் இருக்கும் வெட்கத்தை அவர்களே வைத்துக் கொள்வார்கள். உபரியைத் தான் ஏற்றுமதி செய்கின்றனர் என அர்த்தம் தெரிகிறது.
காதலி அனுப்பும் குட்மார்னிங் செய்தியை கவித்துவத்துடன் சொல்லி அதன் இறுதியில்..
" சும்மா இருந்தாலும்/வரக்கூடிய சூரியன்கள்/எழுப்பாமல் விடுவதில்லை/காதலை என்கிறார்.
அதேபோல் அசந்து தூங்கும் காதலியை " எழுப்பிவிடக்கூடாதென்னும் எச்சரிக்கையில்/கனவிலும் தும்மாதிருக்கிறது/ என் காதல் என்கிறார்.
#ரசித்தவை
"*உன்னிடம் கேட்க யோசித்த கேள்விகளில் இதுவும் ஒன்று,
அற்புத விளக்கென்றுதானே கதையில் சொல்லப்படுகிறது பிறகேன் அதிலிருந்து
தெய்வம் வராமல்
பூதம் வருகிறது?"
*ஆடுகோழி பலியிடுமிடத்தில் அண்ணன்மார்கள் முன்னிருக்க ஒருவருக்கும் தெரியாமல்
நீ சிரித்த சிரிப்பில்
தொங்கிவிட்டது என் தலை விபரீதங்களைத் தொடங்கவே விசேஷங்கள்
*வெகுண்டெழுந்து நீ
வீதியுலா வருகையில்
உன் விபூதி தட்டில்
இடுவதற்கே வைத்திருக்கிறேன்
என் காதலை
*உனக்கொரு கோவிலோ
மாளிகையோ கட்டுமளவிற்கு
வசதியில்லை.
எங்கெங்கோ கிடக்கும்
சுள்ளிகளைப் பொறுக்கி
கூடமைக்கும் குருவியாகவும் வாய்ப்பில்லை.
அதையும் இதையும்
கட்டுவதால் ஆகப்போவது
ஒன்றும் இல்லையென
உன்னையே
இறுக்கி கட்டிக் கொள்ள
எழுந்தோடி வருகிறது
என் காதல்..
யுகபாரதி கவிதையில் மட்டுமல்ல உரைநடையிலும் வல்லவர் என்பது அவரின் அழகிய முன்னுரை உதாரணம் அதில்
காதல் கவிதைகளில் தென்படும் மற்றொரு மகிமை அது, எழுதியவனை முன்னிலைப் படுத்துவதில்லை. எங்கே அக்கவிதை தொடங்கியதோ அங்கிருந்து விலகி வேறு வேறு திக்கிற்குச் சென்றுவிடும். ஓர் ஆண் எத்தகைய அன்புடன் வெளிப்பட்டாலும், அதை ஒரு பெண் ஏற்கும் பட்சத்தில்தான் காதலாக மாறுகிறது. 'தெய்வம் கல்லிலா / ஒரு தோகையின் சொல்லிலா ' என்று 'வான் நிலா நிலா அல்ல' பாடலில் கண்ணதாசன் கேள்வி எழுப்புவார்.
புத்த்கத்தில் உள்ள எல்லா கவிதைகளும் ஒரு பக்கத்தில் முடியும் எளிய கவிதைகள்.அன்றாடம் பயன்படுத்தும் இணைய மொழியில் இணைத்து எழுதியுள்ளார். ஒவ்வொரு கவிதையின் இறுதியிலும் ஏதேனும் ஒரு காதல் முடிச்சை ஒளித்து வைத்துள்ளார்.
தொடந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment