Monday, 15 June 2026

ஒளவையார்


வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான் 
தேன்சிலம்பி யாவருக்கும் செய்யரிதால் - யாம்பெரிதும் 
வல்லோமே என்று வலிமைசொல்ல வேண்டாம்காண் 
எல்லோர்க்கும் ஒவ்வொன்(று) எளிது.

"தூக்கணாங் குருவியின் கூட்டைப்போல மற்றொரு பறவையால் செய்ய இயலாது. அரக்குப்பூச்சி செய்வது போல் செய்ய வேறொரு பூச்சியால் முடியாது. கறையான் புற்றெடுப்பது போல் இன்னோர் உயிரியால் புற்றெடுக்க ஒண்ணாது. தேனீக்கள் கூடமைப்பது போலவும், சிலந்திப் பூச்சிகள் வலை பின்னுவது போலவும் செய்வது என்பது எவ்வுயிருக்கும் அரிதான காரியம்.

 இவையெல்லாம் அவ்வவற்றிக்குரிய தனிப்பண்புகள்; தனித் திறமைகள். இவ்வாறே மனிதர்களும் தனித்தனி இயல்புகளுடன் பிறக்கிறார்கள். எல்லோருக்கும் ஏதாவது ஒரு காரியம் எளிதாகவே இருக்கும். மற்றவர்களிடம் பொதுவாகக் காண முடியாத சிறப் பறிவை, தனித்திறமையைப் பெற்றிருக்கவே செய்வார்கள். இது பிறவி இயல்பு. இதில் ஆச்சர்யப்படுவதற்கோ ஆஹா ஓஹோ என்று கொண்டாடுவதற்கோ எதுவுமில்லை. ஆதலால், யாரும் தன்னை ஒரு குறிப்பிட்ட காரியத்தில் வல்லவன் உயர்த்திப் பேசிக் கொள்ள வேண்டியதில்லை."

-ஒளவையார்

No comments:

Post a Comment