Thursday, 4 June 2026

ஜீயொ டாமின்


நாம் பிறக்கும் முன்பே இந்த ஓட்டப் பந்தையத்தின் விதிகள் எழுதப்பட்டு விட்டன. பால்வாடி பிள்ளைகள் தொடங்கி, ரேப்பிடோ டிரைவர், இன்ஸ்டா இன்புளூயன்சர், ஐடி ஊழியர், அம்பானி, அதானி, எலான் மஸ்ட், டிரம்ப், நான், நீங்கள் என எல்லோரும் இந்த பந்தையத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம். 

இதில் பலருக்கு மூச்சிரைக்க ஓட வேண்டியிருக்கிறது; சிலருக்கு ஒய்யார நடைபோடும் அனுகூலம் இருக்கிறது. 

இந்த பந்தையத்தில் வெற்றி பெற்றால் வாழ்வு சிறக்கும் என்று நாம் ஒவ்வொருவரும் நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம். என்றாலும், பந்தையத்தின் விதிகள் எப்போதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச்சிலர் மட்டுமே வெற்றிபெறுமாறு கச்சிதமாய் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. 

தோற்கும் தொண்ணூற்றொன்பது விழுக்காட்டினரைவிட வெற்றி பெறும் ஒரு விழுக்காட்டினரின் கதையாடலே இங்கு பேசுபொருளாகிறது. ஆகவே, வெற்றி பெறும் அந்த மிகச்சிலரைக் குறித்த சித்திரமே பந்தையத்தில் ஈடுபட்டிருக்கும் எண்ணூற்று ஐம்பதுகோடிபேரையும் வேகமாய் ஓடச்செய்கிறது. 

பெரும்பான்மையினர் எவ்வளவு வேகமாக ஓடுகிறார்களோ அவ்வளவு வேகமாக வெற்றி பெற்றோரிடம் செல்வம் திரள்கிறது. 

ஓட்டத்தின் போக்கில் இந்தப் பெருந்திரள் கூட்டமானது பல்வேறு இயற்கை வளங்களை மதிப்புக்கூட்டி, வெற்றி பெற்றோர் நுக்வதற்கான பண்டமாக்குகிறது. இயற்கையைச் சுரண்டி விற்பனைப் பொருளாக்குவதே இந்த ஆட்டத்தின் மையம். எவ்வளவு விற்பனை அதிகரிக்கிறதோ அவ்வளவு அதிக வளர்ச்சி என்று சொல்லப்படுகிறது. இந்த மதிப்புக் கூட்டல் இயற்கை வளச் சுரண்டலாகவும், கார்பன் உமிழ்வாகவும், சூழல் மாசுபாடாகவும், கையாள முடியாத குப்பைகளாகவும் பெருகுகிறது. 

நூறாண்டுகளுக்கும் மேலாய் வெளியேறிய கார்பன் மைதானத்திலிருந்து திரண்டு எழும்பி வானத்தின் மூடிய வாசல்களைத் திறந்துவிட்டு சூரியனின் நெருப்பை மழையாய் மக்கட் திரள்மீது பொழியச் செய்திருக்கிறது. காற்று மாசுபாடும் நீர் மாசுபாடும் கொள்ளை நோய்போல ஓடுவோரைக் கொத்துக்கொத்தாய் கொன்றொழித்துக் கொண்டிருக்கிறது. 

ஓட்டப்பந்தையம் ஆறாம் முற்றொழிப்பில்தான் (6th mass extinction) முடியக்கூடும் என்பது உறுதியாகியிருக்கிறது. என்றாலும், போட்டி வளமான எதிர்காலத்தைத் தருமென்ற கதையாடலும் நம்பிக்கையும் இன்னும் உயிர்ப்போடும் அசுர பலத்தோடும் இருக்கிறது.

கொஞ்சம் நிதானமாய் யோசித்தால் நமக்கு வேண்டியது இந்த ஓட்டம் அல்ல என்பதையும் இது நமக்கு நிறவாழ்வைத் தர முடியாது என்பதையும் உணர முடியும்; இன்னும் கொஞ்சம் ஆழமாய் அவதானித்தால், நம் எதிரி கார்பன் டை ஆக்சைடு அல்ல; நம் நோய்க்கு மருந்து சோலார் பேனலும், மியாவாக்கிக் காடும் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள முடியும்!

ஆனால், இதை எப்படி எல்லோரும் அறியச் செய்வது? எப்படி இந்த முடிவுறா பந்தையத்தின் விதிகளை மாற்றி எழுதுவது?

இந்த கேள்விகளுக்கான பதிலிலேயே நம் வாழ்வும் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது.

ஜூன் 5 – உலக சுற்றுச்சூழல் நாள்

No comments:

Post a Comment