மனப்பிழைகள் பத்து
-ஜெமோ
சீசனல் என்ற வணிகம் சம்பந்தமான ஆங்கிலப்பத்திரிகையை யாரோ கொச்சி விமானநிலையத்தில் விட்டுச்சென்றிருந்தார்கள். அதில் வந்த ஒரு கட்டுரையை ஆர்வமில்லாமல் வாசிக்க மெதுவாக சுவாரசியம் ஏற்பட்டது. பொதுவாக நான் ’உன்னால்முடியும்தம்பி’ வகைகளை வாசிப்பதில்லை. இந்தக்கட்டுரை அப்போது கொஞ்சநேரம் என்னைப்பற்றி யோசிக்கவைத்தது.
அன்றாட வாழ்க்கையில்நாம்செய்யும் பத்து மனப்பிழைகளை சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர் கட்டுரையில் எங்கும் ஆசிரியர் பெயரே இல்லை.
1.சூதாட்ட புத்தி Gamplers falacy
தற்செயல்களைப்பொறுத்தவரை இதுவரை நடந்தவற்றுக்கு ஒரு ஒழுங்கு இருக்கிறது, ஆகவே இனிமேல் இப்படி நிகழும் என்று ஊகித்துக்கொள்வது. பகடை பன்னிரண்டில் நான்குமுறை பூஜ்யம் விழுந்திருக்கிறது ஆகவே இனிமேலும் பூஜ்யம்தான் விழும் அல்லது இனிமேல் பூஜ்யமே விழாது என்று எண்ணிக்கொள்வதுபோன்றது. இதுவரை என்ன வாய்ப்புகள் இருந்தனவோ அதே வாய்ப்புகள்தான் இனிமேலும் இருக்கின்றன, இதுவரை நிகழ்ந்தது இனிமேல் நிகழ்வதை மாற்றாது என்பதே உண்மை
2 எதிர்வினைமனநிலை Reactivity
கவனிக்கப்படுகிறோம் என்று தெரியும்போது வேறுவகையில் நடந்துகொள்வது. பலசமயம் சிறப்பாகவும் பண்பாகவும்தான் நடந்துகொள்வோம். ஆனால் எப்போதும் அப்படி அல்ல. பெரும்பாலும் சம்பந்தப்பட்டவரின் உண்மையான இயல்புக்குப் பதிலாக அவர் காட்டவிரும்பும் இயல்புகள் வெளிப்படும்.
3 சாதாரண விஷயங்களை உள்ளர்த்தபடுத்திக்கொள்ளுதல் Pareidolia
சாதாரணமாக நிகழும் நிகழ்ச்சிகளுக்கு, அல்லது காட்சிகளுக்கு உள்ளுணர்ச்சி சார்ந்து ஏதேனும் அர்த்தங்களை கற்பித்துக்கொள்ளுதல். வீட்டை விட்டுக் கிளம்பும்போது கால்தடுக்கியது கெட்ட சகுனம் என்பதில் இருந்து காகம் Go go! என்றுதான் கூவுகிறது என எண்ணிக்கொள்வது வரை பல விஷயங்கள்.
4 தன்செயல்களை தானே முன்னூகம்செய்து நிகழ்த்திக்கொள்ளுதல் Self fulfilling prophecy
இந்தவிஷயம் சரியாக வரும் அல்லது வராது என முன்னரே எண்ணிக்கொள்ளுதல். அப்படி எண்ணிக்கொள்வதனாலேயே பெரும்பாலும் அதை நம்மையறியாமலேயே நாம் நிகழ்த்திக்கொள்ள ஆரம்பிப்போம். ஒருவருடனான உறவு சரியாக வராது என ஏனோ என்ணுவோம், அந்த எண்ணம் அப்படியே நம் செயல்களில் தெரியும். உறவு முறிந்துவிடும்.
5 தெரிந்தசிலவற்றை வைத்து தெரியாதவற்றை நிரப்பிக்கொள்ளுதல் Halo effect
ஒரு விஷயத்தைப்பற்றி அல்லது ஓர் ஆளுமையைப்பற்றி சிலவற்றை தெரிந்துகொண்டு அவற்றை ஒரு வார்ப்பாக ஆக்கிக்கொண்டு தெரியாதவற்றை ஊகித்தல். ஊகத்தைக்கொண்டு எல்லா இடங்களையும் நிரப்பிக்கொள்ளுதல். ’அன்னிக்கு அவன் அப்டி சொன்னப்பவே நினைச்சேன் அவன் வேற மாதிரி ஆளுன்னு’ என்பது போன்ற ஊகங்கள்.
6 மந்தை மனநிலை Herd mentality
எல்லாரும் செய்கிறார்கள் என்று ஒன்றை செய்வது. பலரில் ஒருவராக இருப்பதன் பாதுகாப்பை நாடுவது. மோஸ்தருக்கு ஏற்ப உடை மாறுவது முதல் அரசியல்சரிநிலைகள் வரை
7 நம்மிடம் சொல்லப்படுவதற்கு அல்லது எதிர்பார்க்கப்படுவதற்கு எதிராகச் செய்தல் Reactance
நாம் என்ன செய்வோம் என பிறர் நினைக்கிறார்களோ அதற்கு எதிராகச் செயல்படுவது நமக்கு ஒரு தன்னம்பிக்கையை ரகசியக் குதூகலத்தை அளிக்கிறது. பெரும்பாலும் நம்மை தனித்துக்காட்டுவதற்காக இபப்டிச் செய்கிறோம். . பிறரை அதன் மூலம் வெல்வதாக எண்ணிக்கொள்கிறோம். ஆனால் நம் ஆளுமையை இவ்வாறு பிறர் இட்டுச்செல்ல இடம் கொடுக்கிறோம்
8 இன்றைய சிறிய லாபங்களை நாளைய பெரியலாபங்களுக்கு மேலாக நினைத்தல் Hyperbolic discounting
காத்திருக்க பொறுமையில்லாமல் இருப்பது பெரும்பாலும் பொதுமக்களின் இயல்பு. நாளை கிடைக்கும் பெரிய ஒன்றுக்காக காத்திருப்பதைவிட இன்றே ஏதாவது கிடைத்தால் பெற்றுக்கொண்டு செல்வதையே மனம் இயல்பாக நாடுகிறது. நாளை மீதான அவநம்பிக்கை, தன் மீதான அவநம்பிக்கை. காரணம் பொதுவாக நிச்சயமின்மையிலேயே வாழக்கூடிய மனநிலைதான். பொறுமைக்கு அடிப்படையாக இருப்பது நம்பிக்கைதான்
9 தெரிந்தவற்றிலேயே தங்கிவிட விரும்புதல் Escalation of commitment
ஏற்கனவே பழகிப்போன ஒன்றை, அல்லது ஏற்கனவே செய்துகொண்டிருக்கும் ஒன்றை, அல்லது தானே ஆரம்பித்த ஒன்றை அது தவரென தெரிந்தபின்னரும் பிடிவாதமாகச் செய்வது சாமானியர்களின் முக்கியமான மனப்பிழை. நாமே ஆரம்பித்த செயலாகையால் அதை நியாயப்படுத்திக்கொள்வோம். புதியவற்றை செய்ய தயங்கி பழையவற்றை மீண்டும் மீண்டும் சாதகமாக புரிந்துகொள்வோம்
10 நம்பிக்கையை சார்ந்திருத்தல் Placebo effect
மருத்துவர்கள் வெறும் தூயநீரை ஊசியாகப்போட்டு நோய்களை குணப்படுத்துவது போல பலசமயம் நம்முடைய உறுதியான நம்பிக்கை சிறிய பலன்களை அளிக்கும். கடவுள்நம்பிக்கை அத்தகையது. ஆனால் அதைநம்பி இருந்தால் உண்மையான பெரிய சிக்கல்களில் நாம் உடைந்து போக நேரிடும்.
கட்டுரையை வாசித்தபின் விமானத்தில் திருவனந்தபுரம் வரை யோசித்துக்கொண்டிருந்தேன். இந்த பத்தையும் ஒரேவரியாகச் சுருக்கலாம். உள்ளுணர்வை தவிர்த்துவிட்டு தர்க்கபுத்தியை தீட்டிக்கொள்ளுதல். ஒரு நல்ல வியாபாரிக்கும், நிர்வாகிக்கும் இது அவசியத்தேவை. ஆனால் இந்த பத்தையும் ஒரு கலைஞன், ஒரு சிந்தனையாளன் வெட்டிவிட்டான் என்றால் அவனை வழிநடத்த ஆழ்மனமே இல்லாமலாகும். ’மின்னல்கள்’ வராமலாகும். அவன் பொதுப்புத்தி சார்ந்து மட்டுமே பேசவேண்டியிருக்கும்
ஆக, இந்தபத்துக்கும் எதிராக இருந்து மோசமான வணிகராக மோசமான நிர்வாகியாக நீடிப்பதே எழுத்தாளனுக்கு அழகு. ஆகா, என்ன ஒரு நிம்மதி. அப்படியே தூங்கிவிட்டேன்
No comments:
Post a Comment