Tuesday, 29 May 2018

மணிகண்டபிரபு

இறுதி தேர்வு நாள்

உலக வரைபடத்தில் ஐரோப்பாவை     ஆப்பிரிக்காவில் குறித்தவன் ஐரோப்பாவிலும் ஐரோப்பாவில் சரியாக குறித்த ஒருவன் கிராமத்திலும் வாழ்கிறான் என ஒரு கவிதை வாசித்திருக்கிறேன்.

இன்றைய நாளில் தேர்வு முடிந்த மாணவ-மாணவிகளுக்கு இருக்கும் சந்தோசம்.,இருபத்து ஒன்பதாம் தேதியே சம்பளம் வாங்கிய சந்தோசத்துக்கு ஈடானது.படித்ததை மறந்துவிடலாம்,புத்தகத்தை வீசிவிடலாம்,இனி ஒரு மாசம் எழுதப்படிக்க தேவையில்லை, வாத்தியாருக்கு வணக்கம் வைக்க தேவையில்லை,இதுவரை சேர்த்துவைத்த அலுப்புகள் அனைத்தையும் கொட்டிவிடும்நாள்.
அத்தனை இன்பங்களையும் அனுபவிக்க கிடைக்கும் நிழைவுச்சீட்டே தேர்வின் இறுதிநாள்.

தேர்வு செதுக்கிய நாட்கள்

அப்போதெல்லாம் முதல் இருவகுப்புக்கு பரிட்சை கிடையாது.மூனாப்பில இருந்துதான் பரிட்சை.எல்லாப் பரிட்சைக்கும் கோடுபோட்ட பேப்பர்.கணக்குக்கு மட்டும் பால் பேப்பர்.இதை டீச்சர் தான் கொடுப்பாங்க.முதல் பக்கத்துகு பதிலா மூணாவது பக்கம் எழுதின பல  பேர் இருக்காங்க.அந்த பேப்பரை அழுக்காகாம பாத்துக்கிட்டது பரிட்சை சொல்லிதந்த ஆதிபாடம்.

அஞ்சாவது முடிச்சி ஆறாவது போண பிறகு முதல் பருவத்தேர்வு வந்தது.
டைம் டேபிளை ஜாமின்ரி பாக்சின் மேல் மூடியில் ஒட்டிவைப்பது.திறக்கும்போதெல்லாம் பார்ப்பது போல
பரிட்சை என்றால் என்ன என்பது அப்போதுதான் கொஞ்சம் வெளங்க ஆரம்பிச்சுது.நான் முதலில் எழுதின தமிழ் பரிட்சையில் கொஸ்டின் பேப்பரை அப்பிடியே எழுதி வச்சேன்.அதாவது காலம் 2மணி,மதிப்பெண் 50 ணு..அதை பாத்து எழுதுன பத்தாவது நிமிசத்திலிருந்து சும்மாவே உக்காந்து வேடிக்கை பார்ப்பது.குறைஞ்சது இருபது கொட்டாவியாவது வரும்

தேர்வு அறையில் கத்துக்கிட்ட முக்கியமான விசயம் வேடிக்கை பார்ப்பது..டீச்சரின் ஹேர்ஸ்டைல்,வாட்ச்,எத்தனை பேர் தலைக்கு குளிச்சிருக்காங்க,ஜாமின்ட்ரி பாக்சை கீழ போடுவது,ஒரு சிறுசத்தம் கேட்டாலும் திரும்பி பார்ப்பது, தாவர செல்,விலங்கு செல் வரைய 'டொக்கு டொக்குனு'" நெல்லு குத்துவது..
அப்ப யாராவது பிட்டு அடிச்சி மாட்டிகிட்டானா செம என்டர்டெயின்மெண்டா இருக்கும். மாட்டிக்கிட்டவன் கெஞ்சுவான்,காலில் விழுவான்.நமக்கு சிரிப்பா இருக்கும்.இதில் என்ன விஷேசம்னா அவன் கொண்டுவந்த பிட்டு பரிட்சைக்கே வந்திருக்காது.

செருப்பில ஓ காட் பியூட்டிஃபுல், சாலிடரி ரீபர் மெமரி போயம் எழுதினது,டெஸ்க்கில கணித சூத்திரம்,

பபில் கம் மெல்லுவது,எண்ணெய் வைக்காத தலை, சூப்பர்வைசரை எப்போதும் முறைத்தபடியே இருப்பது,
என்னவோ பதில் மறந்து போன மாதிரி வாயைச் சப்பி உச் கொட்டுவது, இதுக்கும் மேல விட்டத்தை பாத்து வாயில் முணகுவது (ஆழ்மனதில் இருக்கும் பதிலை அகப்பை எடுத்து கிண்டி எடுப்பது போல) ஆனா பாருங்க கடைசி வரை நினைவுக்கு வராது.அதுக்கு மேல் கேள்வியும் கீழ இருக்கிற பதிலும் நினைவுக்கு வரும் அது வராது

கணக்கு பரிட்சையில் அந்த ஜாமின்ட்ரி சரியா செய்வது,மாட்டிக்காம கொலை செய்வதற்கு சமம்.டிகிரி எடுத்து புள்ளி வச்சு, கவராயத்தின் உதவியுடன் வெட்டினேன்னு எழுதுற வரைக்கும் த்ரில் அனுபவம்.ஏன்னா அது தான் சோறு போடுற தெய்வம்.பத்து மார்க்.கணக்கெல்லாம் என்ன ஃபார்முலானு தெரியாது.ஒன்பதாம் வகுப்பு கணகு பரிட்சையின் கடைசி பக்கத்துல அன்புள்ள சாருக்கு, நான் பரிட்சைக்கு படிக்கலை.தயவுசெய்து பாஸ் போடுங்கனு எழுதினதை பாத்திட்டு ஸ்டாவ் ரூமுக்கு கூட்டிட்டு போய் வெளுத்துக்கட்டினார்.

பரிட்சை வந்தா வரும் முதல் அறிகுறி P.T பீரியட் கட் ஆகும்.அது ஒரு ரண வலி.M.I exam அன்னிக்கு மதியம்னு நினைச்சிட்டு காலையில் நானும் நண்பன் தச்சியும் தங்கமணி ரங்கமணி படம் பார்த்துட்டு பரிட்சைக்கு போகல.சரி மாத்து விழுந்துச்சு.

அப்புறம் பரிட்சை பேப்பரை கட்ட நூல் தரமாட்டாங்க.அரிசி மூட்டையில் பிரிச்ச டொயின்,சிமெண்ட் சாக்கு நூல், பரோட்டா சால்னா கட்டுன நூலை பத்திரப்படுத்தி பரிட்சைக்கு வச்சிக்கிறது.அதையும் கடன் கேட்க அங்க ஆளிருக்கும்.அந்த நூலை பரிட்சை முடியுற வரை பாக்கெட்ல இருக்கானு தொட்டுப் பாத்துக்கனும்.

பொதுத்தேர்வு எனும் அரக்கன்

பத்தாவது பப்ளிக் பரிட்சை.இதுல மார்க் குறைஞ்சா பனியன் கம்பெனியில பிசிறு வெட்டத்தான் போகனும் னு கடந்த ஒரு வருசமா வர்றவன் போறவனெல்லாம் சொல்வான்.அன்னிக்கு தான் எங்க ஆண்கள் பள்ளிக்கூடத்துக்கு பெண்கள் வரும் நாட்கள்."இந்தப் பாதங்கள் மண் மீது நடக்கவேண்டியவை அல்ல,மார்பிள் தரையின் மீதுனு கவிதையெல்லாம் சொல்வோம்.தண்ணி குடிக்கும்போது அடுத்து நிற்பது பெண்களென்றால் செம டீசண்டா தண்ணி குடிப்போம்.அப்பதான் கர்சீப் யூஸ் பண்ணுவோம், ஆறுதடவையாவது தலை சீவியிருப்போம்.திருநீறு,சந்தனம்,குங்குமம் சரியான கலவையில் இருக்கும்.

ஒவ்வொரு கடைசி பரிட்சையின் போது கொஸ்டின் பேப்பரை கிழிச்சு வீசுவாங்க.பனிரெண்டாவது தேர்வு முடிந்து ரோஜாக்கூட்டம் போனது மறக்க முடியாது.

மனசு பரிட்சை எழுதும்போது அமைதியாய் இருந்துட்டு,ரிசல்ட் வரும்போது இன்னும் நல்லா படிச்சிருக்காலாம்னு மாபெரும் ஞானத்தை தேர்வு தருது.அந்த ஞானம் பிணத்தின்  வாடை சுமந்தவை.அந்த வாடை பின்னாளில் மதிப்பெண் குறித்து பேசும்பொதெல்லாம் நினைவுக்கு வரும்.

தேர்வு குறித்த அச்சம் காலந்தோறும் மரபு வழியாய் கடந்து வருபவை.புதூமைப்பித்தனின் சிறுகதையில் கூட தேர்வு அறையை போர்க்களம் போல உருவகித்து இன்று போய் நாளை வா எனச் சொன்னது.நானும் புறமுத்கிட்டு ஓடினேன் என முடித்திருப்பார்.

அந்த நேரத்துக்கு மட்டும் அவசியம் தேவைப்படுகிறது குதூகலம்.மற்றபடி தேர்வு அறை இன்னமும் புறமுதுகிட்டு ஓடச் செய்துகொண்டுதான் இருக்கிறது

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment