Thursday, 3 May 2018

சொல்வனம்

மிச்சப் பாடல்

விரையும் பேருந்தின்
ஸ்பீக்கரில் வழிந்துகொண்டிருந்தது
எழுபது எண்பதுகளின்
மெலடிப் பாடல்கள்.

நாற்பதைக் கடந்த பெரும்பாலானோர்
நாகரிகம் கருதி
தலையசைத்துக்கொண்டும்
தாளமிசைத்தவாறும் ரசித்துக்கொண்டும் வர
சன்னக்குரலில் பாடகருடனே
சிலர் பாடியபடியும் வந்தனர்.

இடையிடையே
அவரவர் மனக்கண்ணின் முன்னே
இசையமைத்த ராசாவும்
வாயசைத்த
ஹீரோக்களும் ஹீரோயின்களும்
பாடிய பாலுவும் யேசுதாஸும்
ஜானகியும் சித்ராவும்
வந்து வந்து போகத் தவறவில்லை.

வியர்வை நசநசத்த கோடையை
மறந்து பயணிக்கவைத்த பாடல்கள்
ஒரு பிரேக் டவுனில் நிறுத்தப்பட
கீழிறங்கி மௌனித்து நின்றிருந்தவர்களுக்குள்
மிச்சப் பாடல் அச்சப்பட்டு
ஒளிந்துகொண்டதைப் பார்க்கவே
பரிதாபமாக இருந்தது.

- பாப்பனப்பட்டு வ.முருகன்

# தற்கொலையாகும் திட்டுகள்...

எத்தனை முறை திட்டிவைத்தாலும்
உதிரும் முடிகளை எடுத்து குப்பையில்
போடுவதில்லை தங்கை
என் திட்டுகளைப்போலவே
அம்முடிகள் கற்றையாகத் திரண்டு
உருண்டு ஒரு மூலையில்
இறந்துவிட்ட கரப்பான்பூச்சியின்
சிதறிய உடல்
கத்தரிக்கப்பட்ட துணியிலிருந்து
விழுந்த ஓரச் சிதைவு
காய்ந்துபோன சருகுகள்
மற்றும்
மிட்டாய் சுற்றியிருந்த
கண்ணாடி உறையோடு
சுருளச் சுருளக் கிடக்கின்றது
கொஞ்சம் பலமாகக் காற்றடித்தாலும்
மூலையில் ஒரு முழத்துக்குக்
கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும்
கொச்சைக் கயிற்றைக் கவ்வித்
தொங்குவதைத் தவிரவும் வேறு வழியில்லை
எடுத்துப் போடுவதற்கு.

- க.சி.அம்பிகாவர்ஷினி

#நீர்ப்பிடிப்பு நிலம்

நகரமென எழுந்துகொண்டிருக்கிறது
முன்பொரு நாளின் நீர்ப்பிடிப்பு நிலம்
புதிய வீட்டை  சிரத்தையோடு வடிவமைத்துக்கொண்டிருக்கும்
பொறியாளனின் நனவில்
எழுந்து சரிகிறது அவனது கனவு வீடு
சாந்து சுமக்கும் சித்தாள் பெண்
முதல் சாமத்தில் அரங்கேறிய இரண்டாம் கலவியை நினைந்து தானே நகைக்கிறாள்
கட்டடக் காவலாளி இரவில் ‘தேன்கிண்ணம்’ கேட்கும்பொருட்டு பகலில் பண்டுவம் பார்க்கிறான் பண்பலைப் பெட்டியை
வேறிடம்  கிட்டாத இளஞ்சோடிகள்
பூசப்படாத வீட்டுக்குள் காதலிக்கச் செல்கிறார்கள்
தூக்கச்சடவில் கிடாயை நோக்கிக் கம்பெறிகிறான்
தூரத்தில் ஆடுமேய்ப்பவன் 
திருஷ்டியாய் நிற்கும் ஒற்றைப் பனையில் தொங்குகிறது தூரதேசம் போய்விட்ட தூக்கணாங்குருவியின் வீடு
சூரிய தீபம் சோர்கிற பொழுதில்
மகிழுந்துகளில் வந்திறங்கி
குத்துக்கற்களின் குறுக்கும்மறுக்குமாய் நின்று
நீளம் அகலம்  பட்டா சிட்டா
அடங்கலென நீட்டிமுழக்குவார்கள்
யானைகட்டிப் போரடித்த மூதாதையரின்
திணை திரிந்த வழித்தோன்றல்கள்.

- ஸ்ரீதர்பாரதி

No comments:

Post a Comment