Wednesday 31 July 2024

இம்மாதிரியேதான் ஒவ்வொரு நாளும் செல்கிறது.தயிரைக் கடையும்போது, பாத்திரத்தின் உள்பக்கம் படரும் வெண்ணெய்த் திரள்கள்.தன்னுடன் அதனதன் அடையாளமான துக்கங்களையும்,சந்தோசங்களையும், சந்தோசத்தில் துக்கத்தையும், துக்கத்தில் இன்பத்தையும் சேர்த்துக்கொண்டு,இம்மாதிரி பல நாட்கள் சேர்ந்துதான் வாரம்,மாதம், வருடம் ஆகையில் நாளுக்கும் வருடத்திற்கும் என்ன பிரமாத வித்தியாசம்-லா.ச.ரா

நம்முடைய உணர்ச்சிகளுடன் ஒரு கதையை வலுக்கட்டாயமாகப் புனைந்து இணைக்காத வரை அவை தொண்ணூறு நொடிகளுக்குமேல் நீடிப்பதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எடுத்துக்காட்டுக்கு, நீங்கள் தனிமையாக உணர்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். இந்தத் தனிமையுணர்ச்சி நீங்கள் எதிர்பார்க்காத வகையில் வெகு சீக்கிரத்தில் கடந்துவிடும். ஆனால், ‘என்னை யாரும் விரும்புவதில்லை, நானொரு செல்லாக்காசு, இனிமேலும் என்னை யாரும் நேசிக்கப் போவதில்லை, வாழ்நாள் முழுக்கத் தனிமையில் வாழ நான் சபிக்கப்பட்டுள்ளேன்’ என்று இதனுடன் ஒரு கதையைப் பிணைக்கிறீர்கள் எனில், உங்களது எண்ணங்களை உணர்ச்சி மீது சுமத்துகிறீர்கள் எனில், அந்தத் துயரமும் வாதையும் பல்லாண்டுகளுக்குத் தொடர்ந்து தேவையற்ற அழுத்தத்துக்கு ஆட்பட நேரிடும். இத்தகைய பாரத்தைச் சுமக்கவேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை. கடும் இக்கட்டான சூழல்களிலும் உங்களது மனம் அமைதியையும் அரவணைப்பையும் நிச்சலனத்தையும் உணர முடியும். அதற்கு உங்களது உணர்ச்சிகளுக்குச் சாட்சியாக விலகிநின்று வேடிக்கை பார்க்கும் மனப்பக்குவத்தை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். உணர்ச்சியைச் சுற்றி ஒரு கதையைப் பின்னுவதைத் தவிர்க்கவேண்டும். - லிசா ரேங்கின்.

Tuesday 30 July 2024

ஜியோ டாமின்


கடல்நீரோட்டங்கள் பற்றி பள்ளியில் படித்திருப்போம். கடலின் மிகப்பெரும் நீரோட்டங்களில் ஒன்று AMOC எனப்படும் Atlantic Meridional Overturning Circulation. கடலில் பாயும் பெரும் நதி போன்ற இது கடலின் ஊட்டச்சத்துக்களைக் கடத்துவதிலும் வெப்பநிலையை சீர்செய்வதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. 

பெரும்பாலான கடலுயிர்களின் வலசையும் ஏராளமான நாடுகளின் பருவங்களும்கூட இந்த கடல் நீரோட்டத்தைச் சார்ந்தே இருக்கின்றது. 

உயரும் புவியின் வெப்பநிலையால் காற்றின் வேகம் உலக அளவில் குறைவதுபோலவே கடல்நீரோட்டங்களும் வேகமிழந்து சிதைந்து வருவதாக காலநிலை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

இந்தியாவின் பருவநிலையை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் AMOC நீரோட்டமானது Tipping point எனப்படும் மீளா நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அவர்கள் அவதானிக்கின்றனர். மீளா நிலை எனப்படுவது மீட்க முடியாத / எப்போதும் சரிசெய்ய முடியாத நொறுங்கிய நிலை என்பது குறிப்பிடத்தக்கது. 

பெரும் நீர்ப்பரப்பில் மிதக்கும் சிறிய நிலத்துண்டின் விளிம்பில் ஒட்டிக்கொண்டிருக்கும் நாமோ, இன்னும் இப்படியே வாழ்ந்துவிட முடியுமென்று நம்பிக்கொண்டிருக்கிறோம்.

நாம் பார்க்கும் வெள்ளங்களும், நிலச்சரிவுகளும் வெறும் தொடக்கம் மட்டுமே!

-ஜியோ டாமின்

Monday 29 July 2024

minimeens


அட்லாண்டிக் கடலின் மேலே 30000 அடி உயரத்தில் 800 கிமீ வேகத்தில் பயணிகளை சுமந்து செல்லும் அந்த ஏர்பஸ் விமானம் பறந்து கொண்டிருந்த போது, அந்த யூரோ ஃபைட்டர் ஜெட் வகையைச் சேர்ந்த அந்த ஜெட் விமானம் அதனருகே தோன்றியது.

ஜெட் விமானத்தின் விமானி வேகத்தைக் குறைத்து, ஏர்பஸ்ஸுடன் சேர்ந்து பறக்க, பயணிகள் விமானத்தின் விமானி அவரிடம் வயர்லெஸ்ஸில், "வெல்கம்..." என்றார். 

இளைஞரான ஜெட் விமானியும் வயர்லெஸ்ஸில், "அங்கிள்... எப்படி இந்த மாதிரி பேசஞ்சர் ஃப்ளைட்லாம் ஓட்டறீங்க.? ரொம்ப போரடிக்கற வேலையாச்சே இது. இதே என் ஃப்ளைட்டா இருந்தா என்ன எல்லாம் செய்யலாம் பாருங்க..  .!" என்றபடி தனது ஜெட் பிளேனை அப்படியே ஒரு உருட்டு உருட்டி, செங்குத்தாக விர்ரென்று மேலே விண் வரை சென்று, பிறகு ஒரு கல்லடி பட்ட பறவை போல கரகரவென்று கடல் மட்டம் வரை விழுந்து, மீண்டும் சுற்றிச் சுழன்றபடியே பழைய இடத்துக்கு வந்தவர்... இப்போது பழைய இடத்தில் மிதந்தபடி, "இது எப்படி இருக்கு.?" எனக் கேட்டார்.

புன்னகைத்த ஏர்பஸ் விமானி, "உண்மையிலேயே மிகவும் சுவாரசியமாக இருந்தது, ஆனால் இதைப் பாருங்கள்!" என்றபடி விமானத்தை மெல்ல முன்னே நகர்த்தினார்.

ஜெட் விமானி இப்போது அந்த பயணிகள் விமானத்தை கவனித்தார். ஆனால் அடுத்த 15 நிமிடங்கள் எதுவுமே வித்தியாசமாய் தெரியவில்லை. ஏர்பஸ் ஒரே வேகத்தில், ஒரே திசையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், ஒரே மாதிரித்தான் பறந்து கொண்டு இருந்தது. சரியாய் 20 நிமிடங்கள் கழித்து வயர்லெஸ்ஸில் வந்த அந்த ஏர்பஸ் விமானி, "சரி, இது எப்படி இருந்தது.?"

குழப்பமடைந்த ஜெட் விமானி இப்போது இவரிடம், "இப்போது என்ன நடந்துவிட்டது.? என்ன செய்தீர்கள் என்றே தெரியவில்லையே.?" என்றார்.

ஏர்பஸ் விமானி சிரித்துக்கொண்டே சொன்னார், "இந்தப் 15 நிமிடத்தில் நான் எழுந்து, என் கால் கைகளை நீட்டி சோம்பல் முறித்து, ஒரு நடை விமானத்தின் பின்னால் போய் ஒரு பர்கரும் காபியும் சாப்பிட்டுவிட்டு, டாய்லெட் போய் வந்து அமர்ந்திருக்கிறேன். இது உன்னால் செய்யமுடியுமா.?" என்று சிரித்தார்.

நிஜம்தான். நீங்கள் இளமையாக இருக்கும்போது, இளமையும் வேகமும் நன்றாக இருக்கும்.  ஆனால் நீங்கள் வயதாகி, புத்திசாலியாகும் போதுதான், நிதானமும் அமைதியும் மிக முக்கியம் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்கிறீர்கள்.

ஆமாம் நண்பர்களே.. வயது அதிகரிக்கத் துவங்கும்போது இளையவர்களுடன் போட்டி போடாதீர்கள். வேகத்தைக் குறைத்து பயணத்தை அனுபவிக்க ஆரம்பியுங்கள். நிஜம்தான் வேகத்தைக் காட்டிலும் முக்கியம் விவேகம்.

- மொழியாக்கம் 
#MinimeensStories

பொய் சொல்ல ஏழு விதி இருக்கு : 1. சின்ன விஷயங்களுக்குப் பொய் சொல்லக்கூடாது. 2. குறிக்கோள் ரொம்ப முக்கியமானதா இருக்கனும். 3. எவரும் எதிர்பாராத சமயத்துல பொய் சொல்லனும். 4. அந்தப் பொய் வெற்றி அடைய வாய்ப்புகளை ஆராய்ஞ்சு பார்த்து கவனாமாப் பொய் சொல்லனும். 5. நீங்க சொல்ற பொய் கேக்கறவாளுக்கு ஏதாவது ஒரு விதத்துல திருப்தி அல்லது பலன் தராத இருக்கனும். 6. நம்பும்படியாப் பொய் சொல்லனும். 7. சரியான காரணத்துக்குப் பொய் சொல்லனும். -சுஜாதா

"உண்மைக்கு பல்வேறு வடிவங்கள் உள்ளன. நாம் உண்மையையும் ஒரு டெம்ப்ளேட்டாக ஆக்கிவிட்டோம். அந்த டெம்ப்ளேட்டுக்குள் செட் ஆனால்தான் உண்மை என நம்புவோம். உண்மையையே உண்மை என நம்ப வைக்க கொஞ்சம் பொய்யையும் அலங்காரத்தையும் கலந்து சொல்லவேண்டியுள்ளது".-அராத்து

Sunday 28 July 2024

நேர்மையான உரையாடலில் இரு தரப்புகளும் மாற்றங்களுக்கு உட்படதயாராகவே இருப்பார்கள்-திக் நாட் ஹான்

மினிமீன்ஸ்


பெர்லின் நகரப் பூங்கா ஒன்றில் தனது பொம்மையை தொலைத்து விட்டு அழுது கொண்டிருந்த போதுதான் அவரைப் பார்த்தாள் அந்தச் சிறுமி.

20 வயது இருக்கலாம் அவருக்கு. "ஏன் அழுகிறாய்.?" என்று கேட்டுத் தெரிந்தவர், மற்றவர்களைப் போல தாண்டிச் செல்லாமல், "வா.. அந்த பொம்மையைத் தேடலாம்.!" என்று சிறுமியையும் கூட்டிக் கொண்டு தேடினார். தேடுவதற்குள் இருட்டிப் போய்விடவே, "நாளை வருகிறேன். நாளையும் நாம் இருவரும் சேர்ந்து தேடலாம்.!" என்று தேற்றி அந்தச் சிறுமியை அனுப்பி வைத்தார்.

அடுத்த நாள் திரும்பி வந்தபோது,  அவர் பொம்மை எழுதியதாகக் கூறப்படும் ஒரு கடிதத்தை அந்தப் பெண்ணிடம் கொடுத்ததுடன் அவரே அதை வாசித்தும் காட்டினார். அந்தக் கடிதத்தில், "தயவுசெய்து அழாதே... நான் உலகைச் சுற்றிப் பார்க்க ஒரு பயணம் செல்கிறேன். சீக்கிரம் திரும்பி வந்துவிடுவேன். அதுவரை எனது சாகசங்களைப் பற்றி உனக்கு தினசரி எழுதுகிறேன்" என்று அந்த பொம்மை எழுதியிருந்தது.

அடுத்த நாளில் இருந்து அவர் தினசரி பொம்மையின் இருந்து வந்த  கடிதங்களைக் கொண்டு வந்து அவளுக்கு வாசித்துக் காட்ட ஆரம்பித்தார். ஒவ்வொன்றும் தொலைதூர நாடுகளின் கதைகள் மற்றும் பொம்மையின் அற்புதமான சாகசங்களால் நிரம்பியிருக்க... சிறுமி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள்.  

இறுதியில், "எனது பயணங்கள் முடிந்தன. நாளை திரும்புகிறேன். நீண்ட பயணங்கள் என் உருவத்தை சற்று மாற்றியிருக்கலாம். ஆனாலும் அது நான்தான். என்னை ஏற்றுக்கொள்.!" என்று எழுதியிருந்தது.

சிறுமி மறுநாளுக்காக மகிழ்ச்சியுடன் பொம்மையின் வருகை எதிர்பார்த்து காத்திருந்தாள். மறுநாள் வந்த அவர் சிறுமியிடம் கேட்டு அறிந்த அடையாளங்களை ஒத்த ஒரு பொம்மையை வாங்கியிருந்தார். என்றாலும்  அதையறியாத அந்தச் சிறுமி, வித்தியாசங்கள் தெரிந்தாலும் அவள் அந்த பொம்மையை ஏற்று கட்டிக் கொண்டாள்.

வளர்ந்த பிறகு அவளுக்கு அந்த மனிதர் சொன்னது அனைத்தும் தன்னைத் தேற்ற சொன்ன பொய்கள் என்று அறிந்திருந்தாள். ஆனாலும், அழுது கொண்டிருந்த முகம் தெரியா ஒரு சிறுமியை மற்றவர்கள் போல கடந்து செல்லாமல், அவளைத் தேற்றுவதற்காக அவர் எடுத்துக் கொண்ட கருணை.. அவள் மனதில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ஒரு பெரும் அன்பை விதைத்திருந்தது. அவளும் யாரையும் ஊதாசீனம் செய்யாத, அடுத்தவர் மீது அக்கறை கொண்ட நல்ல ஒரு பெண்ணாக வளர ஆரம்பித்தாள்.

நாட்கள் செல்லச் செல்ல இந்த நிகழ்வுகள் எல்லாம் மறந்து போன ஒருநாளில், செய்தித் தாளில் வந்திருந்த அந்த இறப்புச் செய்தியைப் பார்த்த போதுதான், அன்று தன்னைத் தேற்றியவர் பிரபல எழுத்தாளர் ஃபிரான்ஸ் காஃப்கா என்று தெரிந்தது அவளுக்கு. ஓடிச் சென்று அந்த பொம்மையை எடுத்து கட்டிக்கொண்டாள்.

அப்போதுதான் அந்த பொம்மைக்குள் மறைந்திருந்த காஃப்காவின் இறுதிக் கடிதத்தைக் கண்டுபிடித்தாள். அதில், "பெண்ணே... நாம் விரும்பும் அனைத்தும் தொலைந்து போகலாம். திரும்பக் கிடைக்காமலேகூட போகலாம். ஆனால் நம்பு... அன்பு வேறொரு வடிவில் நம்மைத் தேடி நிச்சயம் வரும்.!" என்று எழுதியிருந்தது.

மாற்றம் தவிர்க்க முடியாதது. என்றாலும், அது எதிர்பாராத பரிசுகளையும் புதிய தொடக்கங்களையும் நமக்குக் கொண்டு வரும் என்பதை நம்பியவர் காஃப்கா. அதுதான் அந்தச் சிறுமிக்கு நடந்தது. நாம் விரும்புவதை சிலசமயம் இழந்தாலும் ஆச்சரியமான மற்றும் அர்த்தமுள்ள வழிகளில் அவை நமக்குத் திரும்பக் கிடைக்கும் என்பதை அறிந்து, வாழ்க்கை தரும் மாற்றங்களையும் ஏமாற்றங்களையும் நாமும் ஏற்கப் பழகுவோமாக.!

- மொழியாக்கம் 
#MinimeensStories

Saturday 27 July 2024

சுஜாதா

பொருளாதாரம் :- 

சுஜாதா குமுதத்தில்  எழுதி அதிகமாகப் பிரபலமாகாத ஒரு கட்டுரை: 

பணம் !

பணம் என்பது எனக்கு வெவ்வேறு பிராயத்தில் வெவ் வேறு அர்த்தங்கள் கொண்டிருந்தது. பள்ளியில் படிக்கும்போது மத்தியானம் சாப்பிட வீடு திரும்பிவிடுவதால், பாட்டி கண்ணில் காசைக் காட்டமாட்டாள். 

எப்போதாவது இரண்டணா கொடுத்து ‘பப்பரமுட்டு’ வாங்கிச் சாப்பிடு’ என்று தருவாள். இரண்டணா ஒரு இரண்டுங்கெட்டான் நாணயம். ரங்கராஜா கொட்டகையில் சினிமா தரை டிக்கெட் வாங்கலாம். ப்ரச்சனை, வெளியே வரும்போது சட்டையெல்லாம் பீடி நாற்றம் அடிக்கும். பாட்டி கண்டு பிடித்துவிடுவாள். 

பாட்டிக்கு ஜனோ பகார நிதி என்று ஒரு வங்கியில் கொஞ்சம் குத்தகைப் பணம் இருந்தது. அதிலிருந்து எப்போதாவது எடுத்து வரச் சொல்வாள். 25 ரூபாய். நடுங்கும் விரல்களில் இருபத்தைந்து தடவை யாவது எண்ணித்தான் தருவார்கள். பாங்கையே கொள்ளையடிக்க வந்தவனைப்போல என்னைப் பார்ப்பார்கள்.

திருச்சி செயிண்ட் ஜோசப் காலேஜில் படித்தபோது, ஸ்ரீரங்கத்தி லிருந்து திருச்சி டவுனுக்கு மூணு மாசத்துக்கு மஞ்சள் பாஸ் ஒன்று வாங்கித் தந்துவிடுவாள். லால்குடி பாசஞ்சரில் பயணம் செய்து கல்லூரிக்குப் போவேன். மத்யானம் ஓட்டலில் சாப்பிட இரண்டணா கொடுப்பாள். பெனின்சுலர் ஓட்டலில் ஒரு தோசை இரண்டணா. சில நாள் தோசையத் துறந்து விட்டு இந்தியா காப்பி ஹவுசில் ஒரு காப்பி சாப்பிடுவேன். ஐஸ்க்ரீம் எல்லாம் கனவில்தான்.

எம்.ஐ.டி படிக்கும் போது அப்பா ஆஸ்டல் மெஸ் பில் கட்டிவிட்டு என் சோப்பு சீப்பு செலவுக்கு 25 ரூபாய் அனுப்புவார். பங்க் ஐயர் கடையிலும் க்ரோம்பேட்டை ஸ்டேஷன் கடையிலும் எப்போதும் கடன்தான். எப்போது அதைத் தீர்த்தேன் என்று ஞாபகமில்ல.

இன்ஜினீயரிங் படிப்பு முடிந்து ஆல் இண்டியா ரேடியோவில் ட்ரெய்னிங்கின்போது ஸ்டைப்பெண்டாக ரூ.150 கிடைத்தது. ஆகா கனவு போல உணர்ந்தேன். அத்தனை பணத்தை அதுவரை பார்த்ததே இல்லை. சவுத் இண்டியா போர்டிங் அவுசில் சாப்பாட்டுச் செலவு ரூ.75. பாக்கி 75_ஐ என்ன செய்வது என்று திணறினேன். உல்லன் ஸ்வெட்டர், ஏகப் பட்ட புத்தகங்கள் என்று வாங்கித் தள்ளினோம். மாசக் கடைசியில் ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் மிச்சமிருந்தது.

அதன்பின் வேலை கிடைத்தது. 1959_ல் சென்ட்ரல் கவர்மெண்டில் ரூ.275 சம்பளம். அப்பாவுக்கு ஒரு டிரான் சிஸ்டர் வாங்கிக் கொடுத்தேன். அம்மா எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டாள். ஒரு மாண்டலின் வாங்கி ராப்பகலாக சாதகம் பண்ணினேன். வீட்டுக்குள் ஆம்பிளிஃபயர், ரிகார்ட் ப்ளேயர் எல்லாம் வைத்து அலற வைத்தேன். எல்லாவற்றையும் அம்மா சகித்துக் கொண்டிருந்தாள்.

“பி.எஸ்சி., பரீட்சை எழுதி டில்லிக்கு டெக்னிக்கல் ஆபீசராக வந்துவிட்டேன். சம்பளம்? மயங்கிவிடாதீர்கள் ரூ.400! முதன்முதலாக ஐ.ஓ.பி.யில் என் பெயரில் ஒரு அக்கவுண்ட், சகட்டு மேனிக்கு புத்தகங்கள், வெஸ்பா ஸ்கூட்டர் அலாட்மெண்ட் ஆன போது உலகத்தின் உச்சியைத் தொட்டமாதிரி இருந்தது. அடுத்தபடி பாரத் எலக்ட்ரானிக்ஸில் டெபுட்டி மேனேஜராகச் சேர்ந்தபோது சம்பளம் முதல் முதலாக நான்கு இலக்கத்தைத் தொட்டது. பங்களூருக்கு இடமாற்றம். செகண்ட் ஹாண்டில் கருப்பு அம்பாஸடர் கார்; திருமணம்.

என்னிடம் ஒரு பழக்கம் தொடர்ந்து இருந்து வந்தது. ஒரு அளவுக்கு மேல் பணம் சேர்க்க மாட்டேன், சேராது. எப்போதும், தேவைக்குச் சற்றே சற்று குறைவாகவே பணம் இருக்கும். இதில் ஒரு பரவசம் இருக்கிறது. யாராவது வந்து பெரிசாக எதிர்பார்த்து கடன் கேட்டால் வேஷ்டியை அவிழ்த்து ஸாரி, பாங்க் புத்தகத்தைத் திறந்து காட்டிவிடலாம். 

ஒரு சிறிய அறிவுரை, அதிகப் பணம் சேர்க்காதீர்கள். இம்சை, தொந்தரவு... இன்று பலபேருக்கு என்னிடம் சந்தேகம். சினிமாவுக்கு எல்லாம் கதை எழுதி வருகிறாய், அவர்கள் இரண்டு கைகளிலும் தாராளமாய் பணம் கொடுப்பார்கள். புத்தகங்களிலிருந்தும் பத்திரிகைகளிலிருந்தும் ராயல்டி வரும். இத்தனை பணத்தை வைத்துக் கொண்டு என்னதான் செய்கிறாய்?

என் அனுப வத்தில் ஓரளவுக்கு மேல் பணம் சேர்ந்து விட்டால், ஒரு பெரிய செலவு வந்தே தீரும். இது இயற்கை நியதி. அந்தச் செலவு வைத் தியச் செலவாக இருக்கும் அல்லது வீடு, கார் ஏதாவது வாங்கினதுக்கு வங்கிக்கடனாக இருக்கும்¢. இதிலிருந்து முக்கியமாக நான் கண்டுகொண்டது, செலவு செய்தால்தான் மேற்கொண்டு பணம் வருகிறது என்பதே.

இன்று பலருக்கு என் பண மதிப்பைப் பற்றிய மிகையான எண் ணங்கள் இருக்கலாம். உண்மை நிலை இதுதான். இன்றைய தேதிக்கு கடன் எதுவும் இல்லை. என்னிடம் இருக் கும் பணத்தில் குற்றநிழல் எதுவும் கிடையாது. ராத்திரி படுத்தால் பத்து நிமிஷத்தில் தூக்கம் வந்து விடுகிறது.

எகனாமிஸ்ட்டுகள் என்ன என்னவோ கணக்குகள் போட்டு ஜிஎன்பி, ஜிடிபி என்றெல்லாம் புள்ளிவிவரம் தரலாம். நான் தரும் எளிய புள்ளி விவரம் இது. ஒரு ரூபாய், அதன் வாங்கும் மதிப்பு கவனித்தால் உங்களுக்கு இந்தியப் பொருளாதாரம் சட்டென்று புரிந்துவிடும். இந்த வாங்கும் மதிப்பு காலப்போக்கில் குறைந்து கொண்டே வந்திருக்கிறது. முன்பெல்லாம் ஒரு ரூபாய் ஒரு வாரம் வரை தங்கியது. இன்று ஒரு மணிநேரம்கூட, சிலசமயம் ஒரு நிமிஷம் கூட தங்குவதில்லை.

யோசித்துப் பாருங்கள். 

-சுஜாதா

கடல்களும், நதிகளும் மட்டுமல்ல;, ,ஒவ்வொரு துளி நீரும் தன்னளவில் முழுமையானது.-ஜெயகாந்தன்

என்னுடைய பரிசோதனைகள் மூலம் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், ஒருவன் கனவு காண வேண்டும், அந்தக் கனவை நனவாக்க முயற்சி செய்ய வேண்டும். அந்தக் கனவு ஒருநாள் அவனையும் அறியாமல் நனவாக வந்து அடையும்'-தோரோ எழுதிய 'வால்டன்'. புத்தகத்தில்(அப்துல்கலாமை கவர்ந்த வரிகள்)

Thursday 25 July 2024

சிறிய விசயங்களில் உண்மையாக இருங்கள், ஏனென்றால் உங்கள் பலம் அவற்றில் உள்ளது. -அன்னை தெரசா

1950இரண்டாம் உலகபோர் முடிந்து ஜப்பான் மறுசீரமைக்கபட்டது. பொருளாதாரம் முன்னேறி வந்தது. நெஸ்லே கம்பனி ஜப்பானில் காபி விற்பனை செய்யலாம் என முனைந்தது. ஆனால் ஒரு சின்ன பிரச்சனை. ஜப்பானியர்கள் க்ரீன் டீ பிரியர்கள். நாள் முழுக்க ஏராளமான க்ரீன் டீ குடிப்பார்களே ஒழிய காபி குடிக்க மாட்டார்கள்.ஜப்பானியர்களுக்கு காபி குடிக்க கொடுத்து சோதனை செய்தார்கள். காபி குடித்த ஜப்பானியர்கள் "ஆகா, அருமை, அற்புதம்" என்றார்கள். அதன்பின் நெஸ்கபே ஜப்பானில் ஆரவாரமாக அறிமுகம் செய்யப்பட்டது. ஏராளமான பொருள்செலவில் விளம்பரம், கடைகளில் ஸ்டாக் எல்லாம் செய்தும் விற்பனை சுத்தமாக இல்லை.காபியை குடிக்க சொல்லி கொடுத்தால் நல்லா இருக்கு என்கிறார்கள். ஆனால் அதன்பின் பழைய வழக்கமான க்ரீன் டீக்கு போய்விடுகிறார்கள். காபியை குடிப்பது இல்லை. இவர்களை என்ன செய்வது?பிரபல மனிதவியல் நிபுனர், மனநல நிபுணர் க்லோடேர் ராபில்லியை (Clotaire Rapaille) அழைத்து வந்து ஐடியா கேட்டார்கள்."இப்ப அமெரிக்காவில் எல்லாரும் காபி குடிக்கிறீர்கள். திடீர்னு க்ரீன் டீக்கு மாற சொன்னால் மாறுவீர்களா?""அது எப்படி மாறுவோம்?""அந்த மாதிரிதான். க்ரீன் டீக்கு வாழ்நாள் முழுக்க பழகியவர்களை மாற்ற முடியாது. ஆனால் அடுத்த தலைமுறையை குறிவைத்தால், அவர்களை காபிக்கு பழக்கபடுத்தலாம். அதற்கு ஒரு பத்து ஆண்டுகளாவது ஆகும். காத்திருக்க தயாரா?""தயார். என்ன செய்யவேண்டும்""குழந்தைகளுக்கு காபி மிட்டாய்களை அறிமுகபடுத்துங்கள். தினமும் அவர்கள் காபிக்கு பழக்கபடுத்தினால், திரவமாக அதை பின்னாளில் சந்தைப்படுத்துவது எளிது"நெஸ்கபே அதன்பின் காபி மிட்டாய்களை அறிமுகபடுத்தி, குழந்தைகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பத்து ஆண்டுகள் பொறுத்திருந்து இன்ஸ்டன்ட் காபியை அறிமுகபடுத்த, இளைய தலைமுறையிடம் பெரிய ஹிட் ஆனதுகாபிக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து, கொகோகோலா கம்பனி, கேன் வடிவில் ஜார்ஜியா ஐஸ் காபி எனும் பானத்தை அறிமுகபடுத்தியது. கேன்களில் கிடைத்த குளிர்ந்த ஐஸ் காப்பியை இளைஞர்கள் வாங்கி குடித்தார்கள். இன்று கொகோகோலாவை விட அதிகமாக விற்கும் பானமாக ஜார்ஜியா ஐஸ் காபி மாறியதுபன்னாட்டு #பிசினஸ்_பிஸ்தாக்கள் நீண்டகால ஆட்டத்தை ஆடுவதில் கைதேர்ந்தவர்கள். ஆயிரமாயிரம் ஆண்டு வழக்கத்தை ஒரே தலைமுறையில் மாற்றுவது என்றால் சும்மாவா என்ன?பொறுத்தார் பூமி ஆள்வார்~ நியாண்டர் செல்வன்

பல தருணங்களில் எதிர்கொள்வோரிடம் எதுவும் பேசத் தோன்றாது. மெல்லிய தலையசைப்பு மற்றும் புன்னகையோடு கடந்துவிடுதல் எளிதாக இருக்கும். அதுவே இருவருக்கும் போதுமானதாகவும் இருக்கும். அந்தத் தருணத்தில் அதுவே சரியானதாகவும் இருக்கும். மேலே சொன்ன மூன்று 'இருக்கும்’களும் சில நேரங்களில்தான் உண்மை. பல நேரங்களில் நாமாக அப்படி நினைத்து பழகிவிட்டோம்.சில தருணங்களில் அந்த 'இருக்கும்’களை புறந்தள்ளி, இருவருக்கும் பொதுவான மிகச் சில சொற்களை சட்டெனத் திரட்டி புன்னகையோடு மலர்ச்சியாக ஏதாவது சொல்லிச் செல்தல் சாத்தியப்படும். ஒரு புன்னகை போதுமென்ற தருணத்தில், வந்து உரசும் அந்தச் சொற்கள் அவர்களுக்கு மிகப் பெரியதொரு உற்சாகம் கொடுக்கும். சட்டென மலர்ச்சி பூக்கும். கண்கள் ஒளிர்வதைக் காண முடியும். அந்த உற்சாகம், மலர்ச்சி மற்றும் ஒளிர்தல் அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களிடமிருந்து நமக்கும் பரவும்.~ ஈரோடு கதிர்

மினிமீன்ஸ்

"பெரியாரை ஏன் பெரும்பான்மை தமிழகம் கொண்டாடுகிறது தெரியுமா.?" என்று கேட்ட அந்தப் பேச்சாளர் தொடர்ந்து சொன்னார், "அதற்கு முன்னால் நீங்கள் ஒரு வரலாற்று நிகழ்வைத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.!" என்றபடி தனது பேச்சைத் தொடர்ந்தார்.

"ஆப்பிரிக்கா ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் கீழே சென்றதற்கு காரணமே மதம்தான் என்பதை ஜோமோ என்ற முன்னாள் கென்யா நாட்டதிபர் இப்படிச் சொன்னார், '-வெள்ளைக்காரர்கள் ஆப்பிரிக்காவுக்கு வந்த போது எங்கள் கையில் தேசம் இருந்தது. அவர்கள் கையில் பைபிள் இருந்தது. கண்களை மூடி ஜெபம் செய்ய அவர்கள் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். கற்றுக் கொண்டோம். பிறகு கண்ணைத் திறந்து நாங்கள் பார்த்த போது எங்கள் கையில் பைபிள் இருந்தது. அவர்கள் கையில் தேசம் இருந்தது.!' -என்றார்."

"அப்படித்தான் மதமும் அரசியலும் ஒன்று கலக்கும் போது மனிதன் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறான். உணர்ச்சி வசப்பட்டவனை ஏமாற்றுவது சுலபம். யோசித்துப் பாருங்கள். அஹிம்சையைப் போதித்த புத்த மதத்தை பின்பற்றுபவர்களை வைத்தே இலங்கையில் அத்தனை மக்களை அரசியல்வாதிகளால் கொல்ல முடிந்ததென்றால், மற்ற மதங்களைப் பின்பற்றுபவர்களை எவ்வளவு சுலபமாய் கையாள முடியும். அதனால்தான் அவர் ஒரு மதத்திற்கு மாற்றாக, அது எவ்வளவு நல்லதாக இருந்தாலும் மற்றொரு மதத்தை சொல்லவில்லை. அதனால்தான் தமிழர்களில் பெரும்பான்மையினர் அவரைக் கொண்டாடுகின்றனர்.

தேன் நமக்கு மருந்து. நெய்யும் நல்லது. ஆனா, அது இரண்டையும் கலந்து கொடுத்தால் விஷமாகி விடும். அதே போல்தான்‌.. மதமும் அரசியலும் தனித்தனியாக மனிதனுக்கு நல்லதுதான் என்றாலும், அது இரண்டும் ஒன்று சேர்ந்தால் மனிதனுக்கு  பைத்தியம் பிடித்துவிடும் என்பது தமிழர்களுக்குத் தெரியும்.

அதனால் தான், பெருமாளைக் கும்பிடும் தமிழர்கள், பெரியாரையும் கொண்டாடுகிறார்கள்.!" என்றார்.

- மொழியாக்கம் 
#MinimeensStories

Tuesday 23 July 2024

புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளரான"ஆண்டன் செக்கோவ்"விடம் ஒரு முறை "தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?" என்று கேட்கப்பட்டது.அந்தக் கேள்விக்கு அவர் கீழ்வருமாறு பதிலளித்தார்."தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாக சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்திலிருப்பார்கள்.அவ்வாறே, சிந்தனையோடும் கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும். அங்கே பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே போஷிக்கப்பட்டிருக்கும்.எந்த சமூகத்தில் அற்பமான விஷயங்கள் பெரும் தலைப்புகளாக மாற்றப்பட்டு, நல்லுணர்ச்சி பெரும் வகையிலான சிந்தனைகளையெல்லாம் மிகைத்ததாக அவை இடம்பிடித்திருக்கின்றனவோ, எந்த சமூகத்தில் அதன் களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ, அதுவே தோல்வியடைந்த சமூகமாகும்."

நியாண்டர் செல்வன்


ஜெர்ரி சீன்பீல்டு (Jerry Seinfeld) மிகவும் புகழ்பெற்ற காமடியன். அவரது சீன்பீல்டு எனும் காமடி ஷோ 9 ஆண்டுகள் தொடர்ந்து தொலைகாட்சியில் ஓடி 200 கோடி டாலர்களை சம்பாதித்தது.

அவர் மிக பிசியாக இருந்த சமயம் , இரு ஷாட்டுகளுக்கு நடுவே இருக்கும் பிரேக்கில் அவரை ஒரு ரசிகர் வந்து சந்தித்தார்.

 "என் பெயர் பிராட் ஐசாக். உங்கள் ரசிகன்.எனக்கு ஆட்டொகிராப், போட்டோ எல்லாம் வேண்டாம். ஒரே ஒரு நிமிடம் மட்டும் ஒதுக்குங்கள். ஒரே கேள்விக்கு பதில் சொன்னால் போதும்" என்றார்.

"என்ன கேள்வி?"

"நான் எப்படி உங்களை மாதிரி புகழ் பெற்ற காமடி நடிகர் ஆவது?"

"நல்ல சிறப்பான ஜோக்குகளை தொடர்ந்து சொன்னால் நல்ல காமடியன் ஆகலாம். தினமும் ஒரே ஒரு நாள் கூட தவறாமல் ஜோக்குகளை தொடர்ந்து எழுதி, அவற்றை எப்படி மெருகேற்றுவது என தொடர்ந்து சிந்தித்து வா. இந்த ஜோக்குக்கு இந்த முடிவு தான் சரியா, இதை விட நல்ல முடிவு எதேனும் இருக்கிறதா என யோசி. சுவற்றில் ஒரு காலண்டரை வாங்கி மாட்டி, ஜோக்குகளை எழுதும் நாட்களில் எல்லாம் அந்த தேதியில் சிகப்பு ஸ்கெட்சால் ஒரு எக்ஸ் மார்க் போட்டுவிடு.

கொஞ்ச நாட்கள் இதை தொடர்ந்து செய்தால் சங்கிலித்தொடராக ஒரு புதிய பழக்கம் உருவாகும். 

காமடியன்கள் எல்லாம் ஆந் த - ஸ்பாட்டில் ஜோக்கை கண்டுபிடிப்பது கிடையாது. ஒரு ஓவியன் தன் ஓவியத்தை பற்றி சிந்தித்து மெருகேற்றுவதை போல ஜோக்க்குகள் நாம் தயாரிக்கும் பொருட்கள். அவற்றை தினமும் தொடர்ந்து சிந்தித்து, மெருகேற்றி வரவேண்டும். 

இப்படி உருவாக்கும் சங்கிலித்தொடர் வழக்கத்தை கைவிடாமல் இருந்தால் நீ பெரிய காமடியன் ஆகிவிடலாம்"

"ஷாட் ரெடி" என அழைப்புவர விடைபெற்றார் சீன்பீல்டு

பல ஆண்டுகள் கழித்து எம்மி அவார்டு வழங்கும் விழாவில் ஒரு புகழ் பெற்ற வளரும் காமடியனை சந்தித்தார் சீன்பீல்டு

"என்னை நினைவிருக்கிறதா?" என கேட்டார் அவர்

"இல்லையே. நீ யார்"

"என் பெயர் பிராட் ஐசாக்ஸ்"

#பிசினஸ்_பிஸ்தாக்கள்

~ நியாண்டர் செல்வன்

Sunday 21 July 2024

janakiraman


நம்ம கையில் ஒரு கப் காபியை வைத்திருக்கிறோம். அப்போது, யாரோ ஒருவர் வந்து நம் மீது மோதிவிடுகிறார், நம் கையில் இருந்த கோப்பை தடுமாறி, காபி நம்மைச் சுற்றி எல்லா இடங்களிலும் கொட்டிவிடுகிறது. அப்போது, யாராவது நம்மிடம், "ஏன் காபியைக் கொட்டினாய்?" என்று கேட்டால், நாம, "யாரோ நம் மீது மோதிவிட்டார்கள்" என்று சொல்லுவோம்.

இது உண்மையில் தவறான பதில்.

நமது கோப்பையில் காபி இருந்ததால் நாம காபியைக் கொட்டினோம். கோப்பையில் தேநீர் இருந்திருந்தால், நாம தேநீரைக் கொட்டியிருப்போம். அந்தக் கோப்பைக்குள் எது இருக்கிறதோ அதுவே வெளியே கொட்டும். எனவே, வாழ்க்கையில் எதாவது ஒரு தருணம் நம்மை உலுக்கும் போது, நமக்குள் உள்ளது தான் வெளியே வரும். நாம தடுமாறாத வரை அதை வெளிக்காட்டாமல் மறைத்துக்கொள்வது எளிது.

"என் கோப்பையில் என்ன இருக்கிறது?" என்று நாம் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். எனது வாழ்க்கை கடினமாக மாறும் போது, என்ன கொட்டுகிறது என்று கவனிக்க வேண்டும். அது, மகிழ்ச்சி, நன்றி, அமைதி மற்றும் பணிவு போன்றவையா அல்லது கோபம், கசப்பு, பாதிக்கப்பட்ட மனநிலை மற்றும் விரக்தி சோகமா?

காலமும் வாழ்க்கையும், நம்மிடம் ஒரு கோப்பையை மட்டுமே வழங்குகிறது, ஆனா, அந்தக் கோப்பையை எவற்றால் நிரப்புவது என்பதை நாம் தான் தேர்வு செய்கிறோம்.  

நமது கோப்பைகள் இரக்கம், அன்பு, நன்றியுணர்வு, மன்னிப்பு, மகிழ்ச்சி ஆகியவற்றால் நிரம்பியிருக்கட்டும். 🌸

-janakiraman

எல்லா சொற்களும் திரிந்து விடுவதில்லை.சில அமைப்புகள் திரிதலுக்கு வழிவகுக்கின்றன.ஒரு சொல்லின் முதல் இரு எழுத்துக்கள் குறிலென இருந்தால் அவையிரண்டும் இணைந்து நெடிலாகின்றன.உ.ம் பெயர்-பேர்முகர்ந்து-மோந்துஅகப்பட்டான்-ஆப்பட்டான்தொகுப்பு-தோப்புமிகுந்தது-மீந்தது-மகுடேசுவரன்

Friday 19 July 2024

நியாண்டர் செல்வன்


1970

சக்சஸ் எனும் பத்திரிக்கைக்கு வேலை தேடி சென்றார் ஜேக் கேன்பீல்டு (Jack Canfield) என்பவர். சக்சஸ் பத்திரிக்கையை நடத்தி வந்தவர் க்ளெமென்ட் ஸ்டோன். அப்போது அவரது சொத்து மதிப்பு $80 கோடி.

இண்டர்வியூ முடிந்தது...அந்த வேலை அவருக்கு கிடைக்காது என புரிந்துவிட்டது. அப்போது அந்த கடைசி கேள்வியை கேட்டார் க்ளெமென்ட் ஸ்டோன்

"நீ டிவி பார்ப்பாயா?"

"ஆமாம்"

"ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் பார்ப்பாய்?"

"தினமும் காலையில் குட்மார்னிங் அமெரிக்கா, மாலை நியூஸ், ஜானி கார்சன்..எப்படியும் ஒரு நாளைக்கு 3 மணிநேரம் இருக்கும்"

"அதில் இருந்து ஒரு மணிநேரத்தை கட் பண்ணு. டிவி பார்ப்பதுக்கு பதில் படி. கதைகளை தவிர வாழ்க்கைக்கு பலனுள்ளதை படி. உளவியல், நிர்வாகவியல், சந்தையியல், கணிதம்....இதை எல்லாம் செய்தால் நீ என்னை தாண்டி வாழ்க்கையில் முன்னேறுவாய்"

ஏன் சொன்னோம் என அவருக்கே தெரியாத ஒரு அறிவுரை. ஆனால் அதை உதாசீனபடுத்தாமல், வேலை கொடுக்காமல் அறிவுரை சொல்கிறாயா என கோபப்படாமால் அதை வேதவாக்காக எடுத்துக்கொண்டார் ஜேக் கேன்பீல்டு. 

தினம் ஒரு மணிநேரம் தொடர்ந்து படித்தார். ஒன்று அல்ல, இரண்டு அல்ல...23 ஆண்டுகள். அதன்பின் சிக்கன் சூப் ஃபார் தெ சோல் (Chicken Soup for the Soul) எனும் நூலை எழுதினார். அது 50 கோடி பிரதிகள் விற்று உலகின் மிக அதிகம் விற்ற பிரதி எனும் பெயரை பெற்றது

"அந்த அறிவுரையை அவர் சொல்லாமல் இருந்திருந்தால் தினமும் டிவி பார்த்துவிட்டு படுக்கைக்கு போயிருப்பேன். இந்த வெற்றி சாத்தியமாகி இருக்காது" என்கிறார் கேன்பீல்டு.

ஆக #பிசினஸ்_பிஸ்தாக்கள் இப்படித்தான் எந்த தோல்வியையும் வெற்றியாக மாற்றுவார்கள்

~  நியாண்டர் செல்வன்

அத்தனை தீவிரமாக ஒருவரை நேசிக்காதீர்கள்!அவரும் உங்களைஅதேயளவுக்கு விரும்புகிறார் என அறியாதவரையிலும்...எனென்றால்,இன்றைய உங்களது காதலின் ஆழம்நாளைய உங்களது காயத்தின் ஆழம்.- நிசார் கப்பானி

Thursday 18 July 2024

“அனைத்து உண்மைகளுமே புரிந்து கொள்வதற்கு எளிதானவைதான். அவை கண்டுபிடிக்கப்பட்டப் பிறகு! முதலில் அவற்றைக் கண்டுபிடிப்பதுதான் இங்கு முக்கியம். அதற்கு ஆய்வு அவசியமாகிறது,” -கலிலியோ

ஜப்பான்


இரண்டாம் உலகப் போரின் போது 1945-ல் அமெரிக்க புகைப்படக் கலைஞர், 
ஜோ ஓ டோனல் என்பவர் 
எடுத்த புகைப்படம்.

ஒரு ஜப்பானிய சிறுவன் ஒரு தகனம் / அடக்கம் செய்யும் இடத்தில், இறந்த தனது சிறிய சகோதரனை சுமந்து கொண்டு வரிசையில் நிற்கிறான்.

அழக்கூடாது என்ற வைராக்கியத்துடன் கண்ணீரைக் கட்டுப்படுத்த தனது உதடுகளைக் கடினமாகக் கடித்ததால் வழியும் இரத்தம் சிறுவனின் வாயின் ஓரத்தில் சொட்டுகிறது.

“நீ பையில் சுமக்கும் சுமையை என்னிடம் கொடு”என்று காவலர் கேட்டபோது,   
“சுமப்பதற்கு கடினமாக உணர இது சரக்கு அல்ல, என் சகோதரன்” என்று சிறுவன் பதில் அளித்ததாக புகைப்படம் எடுத்தவர் பதிவு செய்திருக்கிறார்.

இன்றைக்கும் ஜப்பானில்,
இந்த புகைப்படம் வலிமையின் அடையாளமாக பயன்படுத்தப்படுகிறதாம்.

ஆம், 
எதை சுமக்குறோம் என்பதல்ல;
அதை எவ்வாறு உணர்கிறோம் என்பது முக்கியம்.
😥😥

'சிலரோடு சிந்திப்பாய், பலரோடு பேசுவாய்'*பலரைக் கவனித்து அவர்கள் தகவல்களை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு.. முடிவுகளை எடுக்கும் போது முக்கியமானவர்களை அருகில் வைத்துக் கொண்டு முடிவெடுக்க வேண்டும்".-பல்தசார்

Tuesday 16 July 2024

horlicks


Horlicks

இது 1873 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பிறந்த இரண்டு பிரிட்டிஷ் சகோதரர்கள் வில்லியம் மற்றும் ஜேம்ஸ் ஹார்லிக் ஆகியோரால் உருவாக்கப்பட்டது மற்றும் 1918 ஆம் ஆண்டில் முதலாம் உலகப் போரில் பிரிட்டிஷ் வீரர்களுடன் இந்தியாவுக்கு வந்தது. 1940 கள் மற்றும் 1950 களின் முற்பகுதியில் இந்தியர்கள் ஹார்லிக்ஸ் ஒரு குடும்ப பானமாக குடித்தனர். இது முதன்முதலில் "ஹார்லிக் இன்ஃபின்ட் மற்றும் இன்வாலிட்ஸ் ஃபுட்" என்று விற்கப்பட்டது, விரைவில் "வயதான மற்றும் பயணிகளை" தங்கள் லேபிளில் சேர்த்தது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இது ஒரு தூள் உணவு மாற்று பானம் கலவையாக விற்கப்பட்டது.

பின்னர் இது ஒரு ஊட்டச்சத்து நிரப்பியாக சந்தைப்படுத்தப்பட்டு United Kingdom, Malaysia, Australia, New Zealand, Hong Kong, Bangladesh, India, Sri Lanka, and Jamaica வில் கிளாசோஸ்மித்க்லைன் (GlaxoSmithKline) தயாரித்தது. இது முன்னர் 2010 களில் கென்யாவில் இருந்தது, ஆனால் குறைந்த விற்பனை காரணமாக நிறுத்தப்பட்டது. இதை இப்போது ஆங்கிலோ-டச்சு நிறுவனமான யூனிலீவர் தனது இந்திய பிரிவு மூலம் தயாரிக்கிறது. இங்கிலாந்தில் உள்ள ஹார்லிக்ஸ் தற்போது அமியா ஃபுட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது.

3 டிசம்பர் 2018 அன்று, யூனிலீவர் ஹார்லிக்ஸ் இந்திய வணிகத்தை 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குவதாக அறிவித்தது. ஹார்லிக்ஸ் யுகே வணிகம் ஏற்கனவே 2017 ஆம் ஆண்டில் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட காட் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான எமியா ஃபுட்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது.

பிரிட்டனில், ஹார்லிக்ஸ் நீண்ட காலமாக Bedtime-டன் தொடர்புடையது, இருப்பினும், இது இந்தியாவில் காலை உணவு பானமாக விற்பனை செய்யப்படுகிறது.

-படித்தது

ராஜாஜியின் வாழ்வில் மரணம் தொடர் அலையாய் வீசிக் கொண்டிருந்தது.தனது மகளுக்கு 3வயதாய் இருக்கும் போது தன் மனைவி அலமேலு மங்காவை இழந்தார்.பின் தன் மகனை இழந்தார்.மூத்த மகள் நாமகிரி 26வயதில் தன் கணவரை இழந்தார். இளைய மகள் லட்சுமி 45வயதில் கணவர் தேவதாஸ் காந்தியை இழந்தார்.இத்தனைஇழப்புகளையும் மரணங்ககையும் எதிர்கொண்ட ராஜாஜி தனது சோகங்களை கண்ணனிடம் சமர்ப்பிப்பது போல் "குறையொன்றும் இல்லை" பாடலை எழுதி மன அமைதி அடைந்தார்.1967ல் கல்கியில் வந்த இப்பாடலை எம் எஸ் சுப்புலட்சுமி பாடி பிரபலமடைந்து..ஐ.நா சபையிலும் இப்பாடலை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது#info

புரிந்துகொள்ளும் நோக்கத்தோடு பிறர் பேசுவதைக் கவனியுங்கள்; பதில் சொல்லும் நோக்கத்தோடு அல்ல!-ஸ்டீஃபன் கோவே

Monday 15 July 2024

ஓஷோ


குளிர்ப் பிரதேசம் ஒன்றில்  ஒரு சிட்டுக்குருவி வாழ்ந்து வந்தது. இலையுதிர்கால இறுதிக் கட்டம் நெருங்கியபோது மற்ற குருவிகள் அனைத்தும் தென்திசையை நோக்கிப் பறக்க ஆயுத்தமாயின. ஆனால் இந்த சிட்டுக்குருவி மட்டும் அவைகளோடு செல்லக் கூடாதெனத் தீர்மானித்துவிட்டது.

குளிர்காலம் வந்தது . குளிரின் ஆக்ரோஷத்தில் அந்த சிட்டுக்குருவி கலங்கிவிட்டது. கடைசியில் அதுவும் தெற்கு நோக்கி பறக்க தீர்மானித்த போது, அந்த குளிரின் கடுமையில் பறந்தால் மரணம் நிச்சயம் என்பதை அறிந்து இருந்த இடத்திலேயே இருந்துவிட்டது. அதன் இறக்கைகளில் பனி படர்ந்து அதனை பறக்கவிடாமல் செய்ததோடு அது மரத்தினின்று கீழே ஒரு விவசாயின் வீட்டு முற்றத்தில் வீழ்த்திவிட்டது.

அந்த முற்றத்தில் சென்று கொண்டிருந்த பசு ஒன்று அந்த சிட்டுக்குருவி மீது சாணம் போட்டுவிட்டுச் சென்றுவிட்டது.

சிட்டு குருவிக்கு மூச்சு திணறினாலும் அந்த சாணத்தின் சூடு வெப்பம் அதற்கு இதமாக இருந்தது. சூட்டினாலும் , மூச்சுவிட முடிந்ததாலும் மகிழ்ச்சியுற்ற அந்த சிட்டுக்குருவி பாட ஆரம்பித்தது.

அந்தப் பக்கமாக வந்த பூனை பாட்டு வரும் திசையை கண்டது. சாணத்தை அகற்றிப் பார்த்தது. பறவையை பார்த்ததும் மகிழ்ச்சியோடு அதை விழுங்கிவிட்டது.

ஓஷோ சொல்கிறார்

இந்த கதையில் மூன்று கருத்துக்களை காணலாம்.

ஒன்று ; உன் மீது சாணம் போடுபவன் உன் எதிரியாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இரண்டு: உன்னை சாணத்திலிருந்து அகற்றுபவன் உன் நண்பனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை

மூன்று: நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய், சாணத்தின் இதமான சூட்டில் அடங்கி இருக்கிறாய் என்றால், உன் வாயை மூடிக் கொண்டிரு.

இந்த உலகை அறிந்துகொள்ளுதல்,பயன்படுத்துதல் எனஅறிவியலின் இரண்டு விளைவுகள் உள்ளன.அறிவு பயன்பாடாக ஆகிறது,பயன்பாடு மேலும் அறிந்துகொள்ள தூண்டுதலை அளிக்கிறது. அறிவை அறிவியல் என்றும் பயன்பாட்டை தொழில்நுட்பம் என்றும் அழைக்கிறோம். இவ்வாறு தொடர்ச்சியாக அறிவும் பயன்பாடும் வளர்ந்ததே இன்றை நவீன உலகை உருவாக்கியது என்கிறார் ரஸல்-ஜெமோ

Wednesday 10 July 2024

டேல்.கார்னகி


நேற்று என்னவெல்லாம் செய்தீர்கள் என்று ஒன்றுவிடாமல், உங்களால் பட்டியலிட முடியுமா? முடியாது. ஏனென்றால், அதில் இரண்டு, அல்லது மூன்று சதவீத வேலையைத்தான் நீங்கள் கவனத்தில் பதித்துச் செய்திருப்பீர்கள். 

மற்றச் செயல்கள் எல்லாம் கவனமின்றி, உங்கள் மனம் ஒருமுகப்படாமல் செய்யப்பட்டவை. நீங்கள் வேலை மும்முரத்தில் இருப்பதை விட குருட்டுச் சிந்தனையில் இருக்கும் நேரமே அதிகம். அப்புறம் எப்படி நேரம் போதுமானதாக இருக்க முடியும்? 

மனித மனம் மிகப் பெரும் சக்தி வாய்ந்தது. அதை முறையாகப் பயன்படுத்துவது எப்படி என்று அறிந்து கொண்டு விட்டீர்களென்றால், அற்புதமான பல செயல்களைப் புரிவீர்கள். நேரம் என்பது இரண்டாம் பட்சம்தான். இப்போது கிடைக்கும் நேரத்தின் பெரும்பகுதியில் என்ன செய்கிறோம் என்பதையே உணராமல் செய்து கொண்டிருப்பதால் சரியான பலனின்றிப் போகிறது.

ஆண்ட்ரூ கார்னகி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

அமெரிக்காவின் மிகப் பெரும் பணக்காரர்களுள் ஒருவராக இருந்தவர். அவர் மிகக் குறுகிய காலத்தில் பணக்காரரானது அமெரிக்க அரசுக்கு சந்தேகத்தை உண்டு பணணியது.புலன் விசாரணைகள் நடத்தியும் அவர்களால் குற்றங்கள் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரை நேரடியாகச் சந்தித்தனர். எப்படி இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பணம் சேர்த்தீர்கள்? என்று கேட்டனர்.
கார்னகி சொன்னார், என்னால் தொடர்ந்து ஐந்து நிமிடங்களுக்கு மனதை ஒருமுகப்படுத்தி வைத்திருக்க முடியும். உங்களால் முடியுமா என்றுபாருங்கள்!
அவர்கள் முயற்சி செய்தார்கள், தோற்றுப் போனார்கள்.
கார்னகி சொன்னார் ,உங்களால் ஐந்து நிமிடம் கூட மனதை ஒருமுகப்படுத்தி வைக்க முடியவில்லை. இப்படிப்பட்ட மனதுடன் நீங்கள் அமெரிக்காவை ஆள்வது எப்படி சரியாக இருக்கும்?நீங்கள் சொன்னதிலிருந்து தவறாமல், முழுமையாகச் செயல்பட உங்கள் மனதைத் தயார்ப்படுத்திவிட்டால், எந்தத் தொழிலையும் எந்த சிரமும் இல்லாமல், மிக எளிதாக செய்து முடிக்க இயலும்

-படித்தது

Monday 8 July 2024

எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ


எழுதிச் செல்லும் விதியின் கைகள்...

பாட்டா? இசையா? என்ற கேள்வி எழும்போதெல்லாம் நினைத்துக் கொள்வேன். இரண்டில் எது வலியதோ அது வெல்லும்.சில சமயம் இரண்டும் வெல்லும்.
அதற்கு இசையமைப்பாளரின் திறனுக்கு ஈடுகொடுக்கும் கவிஞர் அமைய வேண்டும்.

கவியரசர் கண்ணதாசனின் வரிகள் அப்படிப் பட்டவை. 
நிறம் மாறாத பூக்கள் திரைப்படத்தில் வரும் ஆயிரம் மலர்களே மலருங்கள் என்ற பாடல் அழகான மெட்டில் அமைந்தது. அதன் களம் சாதாரண காதல் காட்சி என்றாலும் அதன் வரிகளில் கண்ணதாசன் எப்படி எழுதியிருக்கிறார் பாருங்கள்

"கோடையில் மழை வரும் வசந்தக் காலம் மாறலாம்…
எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ…
காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்…
நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ…"

இதில் எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ என்ற வரிகள் அபாரமானவை. விதியை மாற்ற முடியாது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அர்த்தம் தொனிக்க எழுதியுள்ளார்.

எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதி எழுதி மேற்செல்லும் - என உமர் கய்யாம் எழுதிய வரிகள் இவை. கவியரசர் பல இடங்களில் கம்பனின் வரிகளை எளிமையாக்கித் தருவார் ( நதி வெள்ளம் காய்ந்திருந்தால் நதி செய்த குற்றம் இல்லை) . அது போல் இந்தப் பாடலில் உமர் கய்யாம் வரிகள். கண்ணதாசனின் பரந்த வாசிப்பு அனுபவத்தை உணரலாம்

Sunday 7 July 2024

book -17


Reading_Marathon2024
#24RM050

Book No:17/100+
Pages:720

பாக்கியம் ராமசாமியின் 100 சுவையான கதைகள்

பாக்கியம் ராமசாமி என்னும் ஜ.ரா சுந்தரேசன் அவர்களின் கதைகள் பள்ளி வயதிலிருந்து படித்து வருகிறேன். நகைச்சுவை என்பது ஒவ்வொரு கதைகளிலும் மிக இயல்பாய் மிளிரும் . தனக்கு அமைந்த சூழ்நிலையை தன்னுடைய நகைச்சுவையின் லாவகத்தால் நகைச்சுவை பண்பினால் மாற்றி விடும்போது எத்தகைய சூழ்நிலையிலும் மனிதன் நிதானத்தை இழக்காமல் நகைச்சுவையோடு ஒவ்வொரு விஷயத்தையும் பார்க்கும் போது, நாம்  கவனிக்க மறந்த விஷயங்களும் நாம் எங்கெல்லாம் நகைச்சுவை உணர்வை தொலைத்து இருக்கிறோம் என்பதை நினைவூட்டும் வகையிலும் ஒவ்வொரு கதைகளும் அனுபவங்களும் இந்த புத்தகத்தில் சுவைபட நிரம்பி இருக்கின்றன.

செகண்ட் ஹேண்ட் கார் வாங்குவதில் உள்ள அசவகரியங்களும் அது கொடுக்கும் தொல்லைகளும் முதல் கதையிலேயே நிதர்சனத்தை உணர்த்தி இருப்பார். செலவுவைக்கும் கார்கள் கார்கள் அல்ல பு'கார் என்று குறிப்பிட்டிருப்பார்.துக்கத்துக்குச் செல்லும் போது மனிதர்கள் செய்யும் கோமாளித்தனங்களும் ஒவ்வொரு நிகழ்வையும் துக்கம் ஏற்படுத்தி தன்னை அனுதாபிக்க வைக்கும் மனிதர்களின் பாசாங்குகளும் பல இடங்களில் சொல்லி இருப்பார்.

ஒவ்வொரு பீரோவுக்கு பின்னாலும் ஒரு முக்கியமான ஒரு பொருள் மறைந்திருக்கும். ஸ்கிப்பிங் ரோப், காலனிப்பை, தேவையில்லாத பொருட்கள், மின்விசிறி வாங்கிய அட்டைப் பெட்டி என மனிதர்கள் ஒவ்வொன்றையும் மறைத்து வைக்கும் அந்த நுட்பத்தை எப்படியோ கண்டுபிடித்து சிரிக்க வைத்திருப்பார். எங்க வீட்டு பீரோவையும் பின்னால் பார்த்தேன் அவர் சொன்னது அத்தனையும் உண்மை.

ஒவ்வொரு பொருளின் தன் வரலாற்றை பற்றி சொல்லும் போது வாஷிங் மெஷின் பற்றி விவரிக்கும் போது விருந்தாளியுடன் நாம் பேசிக் கொண்டிருக்கும்போது தானும் ஏதோ விஷயம் தெரிந்தது போல காட்டிக் கொள்ள வேண்டும் என்று அடிக்கடி அலறும், பிரமாதமாக சத்தம் போட்டவாறு பாத்ரூமில் இருந்து கிளம்பி ஹாலுக்கே வந்துவிடும், யாரோ அதனை அடித்துக் கொல்வது போல கத்தி கூவும். அருள் வந்த பூசாரி மாதிரி உடம்பை ஆட்டும். என்று வாஷிங் மெஷின் வாழ்வியலை சொல்லி இருப்பார்

இன்றைய youtubeபர்களுக்கு கண்டென்ட் கொடுப்பது போல ..அன்றைக்கே சில குறிப்புகளை சொல்லி இருப்பார். அதாவது 500 குறிப்புகள் எல்லாமே இயல்பானது ஆனால் குறிப்பு என்ற பெயர்களில் கொடுக்கும் சாமர்த்தியசாலிகளை போல தானும் அதில் சொல்லி இருப்பார். படுக்கப் போகும்போது தலையணை வைத்துக் கொள்வது, கிராப் வாரி கொள்ளும் போது சிறிது எண்ணெய் தடவி வாரி கொள்வது, பல் தேய்க்கும் போது பிரஸ்ஸில் பேஸ்ட் போட்டுக் கொள்வது என்று இயல்பாய் நடக்கும் விஷயங்களை கிண்டல் அடித்திருப்பார்

மூக்கு என்று இருந்தால் ஜலதோஷம் பிடிக்க தனே செய்யும் .ஆனால் கணவரின் மூக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர் மனைவி மட்டுமே. தேங்காய் உடைத்தவுடன் மனைவிக்கு அழுகல் என்று சந்தேகம் வந்தால் நாமே மோர்ந்து பார்க்க வேண்டும். சில சமயம் குழந்தைகள் பெட்டில் வெட்டிங் போனால் அதனை முகர்ந்து பார்த்து உச்சா என்று சொல்ல வேண்டும். பால் கெட்டு விட்டால், பிரிட்ஜ் சமாச்சாரம், கேஸ் லீக் ஆவது போன்ற பல்வேறு விஷயங்களில் கணவனின் மூக்கினையே மனைவி பெரிதும் நம்பி இருக்கிறார் 

புதிதாகச் செல்லும் வீட்டிற்கு என்ன வாங்கி செல்வது என்று ஏற்படும் குழப்பத்திற்கு எல்லையே இல்லை. ராமசாமிக்கும் இந்த குழப்பம் வந்ததால் அவர் தயக்கமே இல்லாமல் எல்லா வீட்டிற்கும் வாழைப்பழங்களை வாங்கி செல்வார். ஆனால் அங்கு சென்ற பின்பு அவர்களும் இதே போன்ற யுத்தியை கண்டார்கள். அதாவது கல்யாண சமையல் சாதம் போடுவதற்கு பதிலாக சேமியா உப்புமாவை போட்டு விருந்தினர்களை உபசரிப்பதில் இவர்களை விட வல்லவர்கள் அந்த வீட்டில் இருந்தது தெரிந்தது.

பட்டுப் புடவை பாட்டி என்றால் சகலருக்கும் தெரியும் பட்டுப்புடவை கட்டாமல் அல்லது புது புடவை கட்டாமல் அந்த பாட்டி வெளியே வர மாட்டாள். நாள் 360 புடவை சேர்த்து விட்டாள் .ஒரு நாள் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் படுக்கையில் கிடந்தார். உயிர் பிரிய மறுத்து கொண்டு இருந்தது. பேத்தியை பார்த்தால் உயிர் சென்று விடும் என்றால் அதுவும் இல்லை. பேத்திக்கு ஒரு யோசனை தோன்றியது. அந்த புடவைகளை கிழித்து சல்வார் தைத்துக்கொண்டு அவர் முன்னே வந்த பிறகுதான் அந்த பாட்டியின் ஆன்மா சாந்தி அடைந்தது. இது தற்செயலாக நிகழ்ந்ததா அல்லது பாட்டிக்கு புடவை கத்தரித்ததின் கோபமா என்பதை பட்டிமன்ற தலைப்புக்கு விட்டு விட்டார்

வீடு திரும்பிய நோயாளி சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?
பெட் ரெஸ்ட்டில் இருக்கும்போது நம்மைப் பார்க்க வருகிறவர்கள் நிறையப் பேசி நம்மை அறுத்துத் தள்ளிவிடு வார்கள். அதற்கு இடம் தராமல், நாமே பெரும்பாலான நேரம் பேசிவிடுவது நல்லது.

நாம் வீடு திரும்பிவிட்டதை நமக்கு வேண்டிய சகல பேர்களுக்கும் செல்போன் மூலம் தெரியப்படுத்துவது ஒரு 'மஸ்ட்: 

வீட்டுக்கு வரும் விசிட்டர்கள் முன் அவ்வப்போது இருமிக் காட்ட, கைவசம் இருமல் கொஞ்சம் ஸ்டாக் இருக்க வேண்டும்.சிலருக்கு இருமல் பூராவும் தீர்ந்திருக்கும். அவர்களுக்கு ஒரு உபாயம்.. வெறுமே கைவும் அடிக்கடி நீவிக் கொள்ளுங்கள். 

சிலர் பெட் ரெஸ்ட் சட்டை அணிந்து காட்சி தரு வார்கள். மகா தப்பு ! உங்களுக்கு அவர்கள் என்ன, பெண் கொடுக்கவா வருகிறார்கள்? ஆகவே, தாடி மீசையுடன் (முள்ளு தாடி விசேஷம்) இருப்பது அவசியம். சட்டையில் பட்டன்களை ஏற இறங்கத் தப்பாகப் போட்டுக்கொண் டிருப்பது அதி அவசியம்.

விசிட்டர் வரும்போது நோயாளி படுத்திருப்பது ரொம்ப முக்கியம். .

"என்ன சார், நடக்க ஆரம்பிச் சுட்டீங்களா?" என்று விசிட்டர் மனசுக்குள், 'வாங்கி வந்த பழம் வேஸ்ட்!' என்று நினைத்துப் பதறும் போது,'சாந்தி... சாந்தி' என்று புத்தர் பெருமான் போல சைகை செய்ய வேண்டும். கம்மிய குரலில் 'மூணு நிமிஷம் நடக்கணுமாம்... ஹும்... ஹா...' என்று முக்கி முனகி ஒரு பெருமூச்சை விட்டால் போதுமானது.

போன் அடித்தால், எக்காரணம் கொண்டும் பெட் ரெஸ்ட் பேர்வழி எடுத்துப் பேசலாகாது. அரை மணி கதறி னாலும், அதை மனைவியோ வேறு யாரோவோதான் வந்து எடுக்க வேண்டும். 

பிளஸ் டூ படிக்கும் பிள்ளைகள் வீட்டில் இருந்து விட்டால் அந்த பெற்றோர்கள் எவ்வாறெல்லாம் செய்வார்கள் என்பதை இதில் சொல்லி இருப்பார். பையன் பிளஸ் டூ படிக்கிறதால வெண்ணை காய்ச்சுவதில்லை.. ஏனெனில் அந்த வாசம் வந்து பையன் படிப்பு கெட்டிடும். வீட்டில் எந்தவித சிறிய வேலையும் நடக்காது. ஏனெனில் அந்த சத்தத்தினால் அவன் படிப்பு பாதிக்கபடும். காலையில் வாக்கிங் போகும்போது கதவை தொப்பு என்று சாத்தினால் குழந்தையின் படிப்பு கெட்டுடும் என்பதால் பலர் வாக்கிங்கை தியாகம் செய்திருப்பார்கள்.
 சில தந்தைகள் தாடி வளர்ப்பார்கள் ,அலகு குத்த வேண்டியிருப்பார்கள் .விருந்தினர்கள் எவராய் இருந்தாலும் எத்தனை லட்சம் கொண்டு வந்தாலும் சரி பிளஸ் டூ வீட்டில் நுழைந்து விடக்கூடாது விருந்தாளி விரட்ட வீட்டில் நாங்கள் சமைக்கிறதே இல்லை என்று அநியாயத்துக்கு பொய் சொல்வார்கள் அரசாங்கம் பிளஸ் டூ தியாகிகளுக்கு மானியமோ கேடமோ பாராட்டு பத்திரமா தந்து கௌரவிக்க வேண்டும் என்பதை இறுதியில் முடித்திருப்பார்.

பொதுக்கூட்டத்தில் தலைமை தாங்கும் அரசியல்வாதியிடம் பெயர் வைக்கும் சுவாரஸ்யம் இனிமையாக இருக்கும். மாலை போட மறந்து விட்டார்கள் அதனால் அந்த குழந்தைக்கு பூ மாலை என்று பெயர் வைத்தார். தலைமை உரை நிகழ்த்தும்போது தட்டு தடுமாறிய பிறகு குழந்தை கைக்கு வந்ததால் அவனுக்கு தடுமாறன்ர என்று பெயர் வைத்தார்

#ரசித்தது

*காக்க காக்க கம்ப்யூட்டர் காக்க ,அடியேன் சிஸ்டம் அழகுவேல் காக்க ..என கந்தர் 'சிஸ்ட்'கவசம் பாடியிருப்பார்

*புதிதாக டெலிபோன் வந்த பொழுதில் ஏற்படும் ரணகளங்களை குதூகலங்களாக சொல்லி இருப்பார் தாலிபன் நாட்டில் இருந்து வரும் போன் அழைப்பு அதற்குப் பின் உண்டானதெல்லாம் காமெடி ரகம்.

*வீட்டில் ஏற்படும் சின்ன வேலைக்கு ஏதேனும் ஒரு ஆட்களை பிடித்துக் கொள்ளும் போது தான் இந்தியா வல்லரசானது தெரியும். ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் கட்டணம் நமத மாதச் சம்பளத்தையே தாண்டி விடுகிறது.

*துயில் எழுப்புவது என்பதை ஒரு கலையைப் போல் அழகாக செய்ய வேண்டும் இனிமையான வார்த்தைகளால் அன்பாய் சொல்ல வேண்டும் யோவ் யோவ் என்று எழுதுவது விரும்பத்தகாதது 

*கொசு கடிக்கு பயந்து ஆயில்மெண்ட் பெரிய சைஸ் வாங்க வேண்டும். கொசுக்களிலே பெரிய கொசு சின்ன கொசு என இரண்டு ரகம் இருக்கும் பெரிய வெங்காயம் சின்ன வெங்காயம் போல .காதில் வந்து வீணை வாசிக்கும் கந்தர்வர்கள் தனி ரகம்.

*ஆணியன் ரவாவும் மெனு தர்ம சாஸ்திரத்தின் படியும் ஆனியன் ரவா தயாரிக்கும் உத்தி.. கான்கிரீட் வேலை தொடங்கி ஜல்லி காய்வதற்குள் கொட்டப்படுவது போல ஆனியன் ரவாவை ஆறும் சாப்பிட்டு விட வேண்டும்.

*புகழும் செல்வமும் வந்த பிறகு தன் தகுதியின்மையை சொல்லிக்கொண்டால் அதைப் பொதுமக்கள் பொருட்படுத்த மாட்டார்கள். எவ்வளவு அடக்கம், என்று பூரிப் பார்கள்.

*தியேட்டரில் இருந்து புறப்பட்ட பின கேட்டில் காரை ரிவரஸ் எடுப்பது எவ்வளவு கஷ்டமோ அவ்வளவு கஷ்டம் பபே கியூவில் ரிவர்ஸ் எடுப்பது

*கிஃப்ட் என்பது எதையாவது உள்ளே வைத்து அழகான பேப்பர்களால் சுற்றப்படுவது தவிர, உள்ளிருக்கும் பொருள் எதுவாகவும் எவ்வளவு மலிவானதாகவும் இருக்கலாம்

*சட்டென்று என் மூளையின் சகல செல்களுக்கும் ஏராளமான பொய்கள் பாய்ந்து ஒரு டிராபிக் ஜாம் ஏற்பட்டது

*எலியை பிடிப்பது அவ்வளவு எளிதல்ல 

நகைச்சுவை உணர்வு இருப்பது ஒரு வரம் எனில் நகைச்சுவையாய் எழுதுவது என்பது மேலும் ஒரு சிறப்பு வரம்.எழுதுவதை படிக்கிற வாசகர்கள் பல்வேறு மனநிலையில் படிக்கும் போது அவர்களை ஒன்றிணைத்து ,சிந்தனையை கைப்பிடித்து நகைச்சுவை உணர்வை ஊட்டுவது என்பது குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவதற்கு சமம். அதனை சாமர்த்தியமாய் செய்தவர்தான் பாக்கியம் ராமசாமி அவர்கள். அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் நமக்கும் ஏற்பட்டிருக்கலாம் .ஆனால் அவரின் பார்வை முற்றிலும் நகைச்சுவையான பார்வை. இதனை நம் வாழ்க்கையில் எடுத்துக் கொண்டால் நாமும் சிறந்த நகைச்சுவையாளர்களாக விளங்கலாம் அல்லது நகைச்சுவையை படிக்கும் போது வாய் விட்டு சிரிக்கலாம்

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

#infoஆங்கிலத்தில் ‘-dous’ என முடிவது நான்கு வார்த்தைகள் மட்டும் தான். அது tremendous, horrendous, stupendous, and hazardous..abcdef என்ற ஆறு எழுத்துக்களும் கொண்ட ஒரு குறுகிய வார்த்தை Feedback.ஏழு என்பது ராசி இல்லாத எண்ணாக கருதியதால் லத்தீன் நாட்டினர் அதை எழுதி பின் அடித்து விடுவர்

book-16


Reading_Marathon2024
#24RM050

Book No:16/100+
Pages:265

2601
வெளிநாட்டு வேலைக்காரனின் அனுபவங்கள்
-கதிரவன் மகாலிங்கம்

அறிமுகம் இல்லாத மனிதர்கள் தான் சற்றும் அறிமுகம் இல்லாத அனுபவங்களை எளிதில் விதைத்து விடுகிறார்கள்-நாவலில் இருந்து

வெளிநாட்டு வேலை க்குச் செல்லும் இளைஞனின் பார்வையில் கிட்டத்தட்ட டைரி குறிப்பு போல.. தான் சந்தித்த நிகழ்வுகளையும் சந்தித்த மனிதர்களையும் மிகைப்படுத்தல் இன்றி இயல்பாக, நம் அருகில் அமர்ந்து கதை சொல்வது போல இந்த புத்தகங்களில் உள்ள ஒவ்வொரு வரியும் மிக இயல்பான நடையில் சரளமான மொழியில் நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை தந்தது.

2601 இந்த எண் தான் வெளிநாட்டில் பணிபுரியும் நம் எழுத்தாளரின் அடையாளம் எண் ஆகும். தனக்கு விசா வந்து விமானத்திற்கு சென்ற நொடியில் இருந்து,திரும்பி ஊருக்கு வரும்வரை நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் வரிசை கிரகமாக அடுக்கி அடுக்கி சொல்லும் போது நமக்கு மிக எளிமையாக புரிகிறது.

 வெளிநாட்டுப் பணியில் இவ்வளவு கஷ்டங்கள் உள்ளதா என்பதை படங்கள் வழியே நாவல்கள் வழியே நாம் படித்திருந்தாலும் இந்த புத்தகத்தில் வரும் மனிதர்களின் உண்மை கதைகள் நமக்கு நெஞ்சத்துக்கு நெருக்கமாக இருக்கின்றன. ஒவ்வொரு மனிதர்களும் என்ன என்ன தேவைக்கு பணி செய்ய வருகிறார்கள் என்பது படிக்கும் போது அந்த வாழ்வை நமக்கும் கடத்தி இருப்பார். 

ஆரம்பத்தில் பணிக்கு செல்லும் ஒவ்வொருவரையும்,ஒவ்வொரு கட்டிடத்திற்கும் இருவரை இறக்கி விட்டுச் செல்லும் போது நமக்கும் அந்த பதற்றம் தொற்றிக் கொள்கிறது. அதிகாலை நாலு முப்பது மணிக்கு துவங்கும் பணி காலை கடன்களில் முடிக்க ஆரம்பித்து நண் பகலில் ஒவ்வொரு நிமிடமும் ஓய்வை எதிர்பார்க்கும் மனதை துல்லியமாக விவரித்து இருப்பார். அகிலனின் காதல் கதையை கேட்டு நமக்கும் கொஞ்சம் கண்ணீர் சொரிந்தது. அன்பை அடையாக்கும் அற்புதமான ஆண் பறவையாய் அகிலன் தெரிந்தார்.

வேலை வாங்கும் சூப்பர்வைசராக வரும் சீனா காரர் மீது நமக்கும் கொஞ்சம் பயம் ஏற்படுகிறது. பறவைகளுக்கு சோறிடும் மனிதர்,
தாகத்திற்கு கூட தண்ணீர் வேண்டி தவிக்கும் நிலை, தங்களுடைய கைச்செலவுக்கு அரசாங்கம் தந்த 200 திராம் கைய று நிலையில் உள்ள மனிதருக்கு உதவி செய்யும்போது மனிதத்தை பார்க்க முடிந்த நிகழ்வு,
சூடானில் இருந்து வந்த நண்பரின் கதையை கேட்கும் போது அந்த நாட்டின் வரலாற்றையும் அறிந்து கொள்ளும் ஒரு தருணமாய் அந்த இடம் அமைந்தது. பங்களாதேஷ் மக்களின் அவல நிலையும் அங்குள்ள தொழிலாளர்கள் நிலையும் நினைத்துப் பார்த்தால் கடினமாக இருந்தது.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்த நதானியல் எனும் இளைஞனின் சோக கதைகளை படிக்கும் போது நமக்கு மேற்படி படிக்க இயலாமல் புத்தகத்தை மூடி வைத்து விட்டேன்.
ஒவ்வொரு மனிதர்களின் அனுபவமே நமக்கு பெரிய பாடங்கள் ஆகின்றன. நிச்சயம் துபாய் என்பது இந்நாவலின் ஆசிரியருக்கு போதி மரமாக இருந்திருக்கும். ஏனெனில் எல்லா கதைகளுமே மனதை உருக்கும் விதத்தில் இருந்தது. அதனை முதன்முறையாக கேட்கும் போது அவரின் மன நிலை எவ்வாறு இருக்கும் என்பது ஊகிக்க முடிகிறது.

சாமி அண்ணனின் கதையை கேட்கும் போது நமக்கும் கொஞ்சம் மனது கனக்க வைத்தது. திருமணம் ஆகி இரண்டாம் நாள் துபாய் வந்த ஆணின் குடும்ப கதையை கேட்டபின் உண்டான மனநிலையை என்ன சொல்லி ஆற்றுப்படுத்துவது.நல்ல உணவு கிடைக்காமல் யாருக்கும் தெரியாமல் சமைத்து சாப்பிடும் அந்த நிகழ்வு சந்தோஷமாய் தெரிந்தாலும் உணவுக்காக ஏங்கும் ஒவ்வொரு தொழிலாளர்களின் அவல நிலையும் தெரிகிறது.

என்னோட பூர்வீக பூமியில இன்னும் எனக்கு இன்னும் ஒரு உரிமை மிச்சப்பட்டு இருக்குன்னா அது உறவுகள் மட்டும்தான். பலரின் வாழ்வியல் அனுபவங்கள் எல்லை மீறிய குடும்பத் துயரங்களும் கடன்களுமே கடல் கடந்து முகங்களை பார்க்காமல் ஒவ்வொரு ஆண்களையும் உழைக்க வைக்கிறது. துபாய் போக வேண்டும் என்று கடன் வாங்கி அந்த கடனை அடைத்து குடும்ப கடனை அடைத்து திரும்பவும் தன்னுடைய வாழ்வியலுக்கு தேவையான சொத்துக்களை சேர்த்து இப்படி ஒவ்வொரு காலகட்டமே அவர்களுக்கு அக்னி பரீட்சை தான் என்பதை உணர முடிகிறது.

திரும்பவும் ஊருக்கு வந்து சென்று பணமெல்லாம் கரைந்து மீதி உள்ள நம்பிக்கையில் மீண்டும் அங்கு சென்று வெயிலில் உழைத்து மீண்டும் இரு வருடங்கள் கழித்து திரும்பி வந்து வெள்ளிக்கிழமை போனில் மட்டும் பார்த்து வாழும் அல்லது பேசி வாழும் வாழ்க்கை. சமீபத்திய தொழில்நுட்ப உதவியால் வீடியோ காலிலும் பார்த்துவிட்டு உழைக்கும் போது
 ஏதோ ஒரு வாழ்வின் வெற்றிடத்தை அவர்கள் அன்றாடம் அனுபவிக்கிறார்கள் என்பதை மட்டும் இந்த நாள் உணர்த்துகிறது.

பயண கட்டுரைகளில் மட்டும் நாம் பார்த்து ரசிக்கின்ற அயல்நாட்டு வாழ்க்கையோ, நட்சத்திர கொண்டாட்டங்களில் கைதட்டி ரசிக்கும் முகங்களும்,துபாயின் கலாச்சாரமும், கிரிக்கெட் விளையாட்டின் போது பார்க்கும் சார்ஜா மைதானங்களுக்கு பின்னால் உழைத்துக் கொண்டிருக்கும் மக்களின் முகங்களையும் இந்த நூல் நமக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறது.

#ரசித்தது

*உடலில் வேர்வையோடு மன உறுதியும் வழிந்து கொண்டிருந்தது. ஓய்வை எதிர்பார்த்து ஒவ்வொரு நொடியும் கடந்து கொண்டிருந்தேன்.

*ஒவ்வொருவரும் தங்களுடைய குடும்பத்துக்காக மட்டுமே அங்கு வாழ்கிறார்கள்

*தீரா தாகம் கொண்ட பாலை மணல்களை அந்த மழையால் எதுவும் செய்ய முடியாமல் சரணடைந்து விட்டது.

*ஒரு பணியிடத்திலிருந்து இன்னொரு பணியிடத்துக்கு செல்வது நரகம் விட்டு நரகம் நகன்ற உணர்வு.

*புதிய சூழல் என்பது சில முறை வரமாகவும் பலமுறை சாபமாகவும் மாறி போயிருந்தது. 

*நிழல் கண்ட இடமெல்லாம் தாய்மடி உணர்ந்தேன், நிஜம் தந்த மனிதரில் தந்தையை உணர்ந்தேன் அகன்ற வானில் வாரி அணைக்கிறேன் பிடிக்கும் சிரிக்கிறது அளவற்ற உயிர்கள்.

*இரவுகள் வெறும் உறக்கத்திற்கானது என்பது அரபு தேச தொழிலாளர்களுக்கு சிறிதும் பொருந்தி வராது .ஏதாவது ஒரு நிகழ்வு அல்லது நினைவு உறக்கத்தை இறக்கமின்றி வேட்டையாடி விடும்.

*சிலரது கனவுகள் என்பது வாழ்க்கையோடு கலந்து போன பிறகு போராடி வாழ்வதில் பிழை இல்லை

*யாருக்காகவும் நின்று நகர்வதில்லை நாட்கள் .அது தன்னுடைய பாதையில் கைகோர்க்கும் எவரையும் நகர்த்திச் சென்று விடும்.

*சில கேள்விகளுக்கு பதில்கள் அவசியமற்றவை

ஆரம்பம் முதல் முடிவு வரை மொழியிலோ கருத்திலோ எந்தவித தங்கு தடையும் இன்றி நாவல் பயணிக்கிறது. நாமும் உடன் பயணிக்கிறோம். ஒவ்வொரு மனிதர்களின் கதையையும் நம்மை மனதை உலுக்குகிறது. குடும்பச் சூழல் காதல் கதைகள் கடன் தொல்லை போன்றவைகளை பிரதானமாக தெரிந்தாலும் ஆளும் வர்க்கம் எவ்வாறு நம்மை அடிமையாக வைத்திருக்கிறது என்பதையும், துபாய் ஏன் இந்த அளவுக்கு வளர்ந்து உள்ளது? காலணி ஆதிக்க நாடாக இருந்ததா? எந்த நாடு அவற்றை இயக்குகிறது அவற்றின் பொருளாதார பின்னணி என்ன என்பதையும் ஒரு கட்டுரையின் வழியே நமக்கு ஒவ்வொன்றையும் அலசி இருப்பார்.

நாவல் முன்பே வந்து விட்டாலும் சில பணியினால் வாசிக்கவில்லை அப்படியே வாசித்தாலும் ஒவ்வொரு பகுதிகளுக்கும் இடையே இடைவெளி எடுத்துக் கொண்டேன் அதனை கடக்க முடியாமல்.. 
நல்ல நாவல் நம்பிக்கையோடு வாசிக்கலாம் நண்பர் கதிரவனுக்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும். இதுபோன்ற பல  வாழ்வியல் தொடர்களை நாவல்களை எழுத வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

 தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

Saturday 6 July 2024

ஜாக்கிசான்


ஒரு சமயம் நிருபர் அவரிடம் நீங்கள் இந்த வாழ்க்கையில் எல்லாம் திருப்தியாக உள்ளதா என்று கேள்வி கேட்டபோது!

அதற்கு அவர் சொன்ன பதில் !

" ஒரு முறை இந்த பொன்மொழிகளை நான் கேட்டேன்!

நீங்கள் செய்யும் இந்த கடினமான வேலை, வேலை இல்லாத பலருக்கு கனவாகவே இருக்கிறது!

குழந்தைகளால் நிம்மதி இல்லாமல் இருக்கு என்று குறை சொல்லும் நீங்கள்! பல பெற்றோர்களுக்கு தங்களுக்கு குழந்தை என்பதே கனவாக இருக்கிறது!

உங்களுடைய சிறிய வீடு பல பேர் வீடு வாசல் இல்லாமல் ரோட்டில் உறங்குபவர்களின் கனவாக இருக்கிறது!

நீங்கள் வைத்திருக்கும் சிறு முதலீடு பல கடனாளிகளின் கனவாக உள்ளது!

உங்களுடைய சில உடல் உபாதைகள்! பலரது தீர்க்க முடியாத நோயுடன் வாழும் நபர்களின் பிராத்தனையாக உள்ளது!

உங்கள் மன அமைதி தான் உங்கள் நிம்மதியான தூக்கம், உங்களுக்கு கிடைக்கும் சாதாரண உணவுகள் தான் பல யுத்த நாடுகளின் மக்களுக்கு கனவாக உள்ளது!

உங்களிடம் உள்ளவற்றை வைத்து மகிழ்ச்சியாக இருங்கள்! நாளை என்ன கொண்டு வரும் என்று யாருக்கும் தெரியாது என்றார்!

1880ம் ஆண்டு நார்தம்டன் மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் பகுத்தறிவுவாதியான சார்லஸ் பிராட்லா.கடவுள் மீது ஆணையாக என உறுதிமொழி எடுக்காமல் 'உளமாற' உறுதியளிப்பதாக கூறியதால் அரசு ஏற்கவில்லை.பின் பல போராட்டங்களுக்கிடையில் 1886ல் திருத்தம் செய்து "உளமாற" எனும் சொல் ஏற்கப்பட்டது

Thursday 4 July 2024

"அந்தத் தேநீர்க் கடை அங்குதான் இருக்கிறது.அந்த பிஸ்கெட் பொட்டலங்களும் அங்குதான் காத்திருக்கின்றன.பசியென கேட்பவளும்பெரும்பாலும் அங்கேயேதான் இருக்கிறாள்.பத்து ரூபாய் கருணையைப் பாக்கெட்டில் சுமப்பவர்கள் வந்துசேர இன்னும் நேரமிருக்கிறது.”-சோ.விஜயகுமார்

ஜென்


மூன்று சீடர்கள் குரு கிட்ட பாடம் கத்துகிட்டு கிளம்புறாங்க. எப்பவும் பாடம் முடிச்சா ஏதாவது ஒரு டெஸ்ட் வைப்பாரேனு பார்த்தால், குரு எதுவுமே டெஸ்ட் வைக்கவே இல்லை அவர் அவங்கள கிளம்ப சொல்லிட்டாரு

இது பற்றி யோசிச்சுக்கிட்டே அவங்க கிளம்பி போயிட்டு இருந்தாங்க .போற வழியில பாதையில் நிறைய முட்கள் நிறைந்து இருந்தது. முதலில் போன மாணவன், என்ன பண்றான். அதை அப்படியே ஒரே ஒரு "ஜம்ப்" பண்ணி போயிட்டான் அடுத்து வந்த மாணவனாலே அப்படி போக முடியல.

 அதனால தன்னுடைய கால் எட்டக்கூடிய இடத்தில இருக்கிற முட்களை மட்டும் எடுத்துட்டு, கால வச்சு தாண்டி அந்த இடத்தை விட்டு நடந்து போனான். மூணாவதா வந்த மாணவன், அந்த இடத்தில் இருக்கிற முட்களையெல்லாம் பொறுமையா உக்காந்து அகற்றி விட்டு அங்கிருந்து கிளம்பி போனான். பின்னாடியே வந்து பார்த்துட்டு இருந்த குரு , மூணு பேரையும் நிறுத்தி வைத்து விட்டு "மூன்றாவது வந்த மாணவன் தான் என்னிடம் கல்வி கற்றதற்கான உரிய அறிவை பெற்று இருக்கிறான் அதனால அவனுக்கு பாடம் முடிஞ்சுது நீங்க இரண்டு பேரும் தொடர்ந்து படிக்கணும்"னு கூட்டிட்டு போனார்.

இதிலே என்ன தெரிஞ்சுக்கணும்னா, கல்வியினால் இல்லே அனுபவத்தினாலே, கத்துக்கிட்ட அறிவை மற்றவங்களுக்கு பிரயோஜனம் ஏற்படுவது போல, எந்த விதத்தில் பயன்படுத்தலாம் அப்படின்னு நினைச்சு அதை செய்றவங்க தான் உண்மையான அறிவுள்ளவங்க .

அதுபோன்ற ஆட்கள் எங்கேயுமே குறைவாக தான் இருப்பாங்க.. அந்தத் தேடல் இருக்கிற மாணவனுக்கு அதற்கான விடை எதிர்பார்த்து காத்திருக்கும் பொழுது எல்லாம் , அதற்கு விடை சொல்லக்கூடிய குரு அங்கே தோன்றுவார் என்பது தான் இயல்பு.

Tuesday 2 July 2024

ஓஷோ


சமுதாயம் உங்களுக்கு அளவுக்கு அதிகமான பேராசைகளைத் தருகிறது. ஆனால், அவற்றை நிறைவேற்றித் தர முடிவதில்லை.

அது பணத்தின் மீதும் அதிகாரத்தின் மீதும் அளவுக்கு அதிகமான ஆசையை உங்களுக்குத் தருகிறது. ஆனால் அதை நிறைவேற்ற முடிவதில்லை.

வெற்றி எனும் ஏணி மேல் உயர உயர ஏறிக்கொண்டே இருப்பது எப்படி என்பதை மட்டுமே அது உங்களுக்கு கற்பிக்கிறது. அதுவும் சீக்கிரமாக ஏற வேண்டும். ஏனெனில் இருப்பதோ சொற்ப வாழ்க்கை. செய்ய வேண்டியதோ ஏராளம் ஏராளம் என அது உங்களுக்கு சொல்லித் தருகிறது.

வாழ்வதற்கு நேரமில்லை
காதலிக்க நேரமில்லை
களிகூற நேரமில்லை
அர்த்தம் நிறைந்த ஒவ்வொன்றையும் மக்கள் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறார்கள்.

நாளைக்கு அவர்கள் மகிழ்வார்களாம். இன்றோ பணம் சேர்க்க வேண்டும். அதிகப் பணம், அதிக அதிகாரம், அதிக பொருள்களை.

நாளைக்கு அவர்கள் நேசிப்பார்களாம். இன்று அதற்கு அவகாசம் இல்லை. ஆயின், நாளை ஒரு போதும் வருவதில்லை.

ஒருநாள் அவர்கள் எல்லாவிதமான உபயோகச் சாதனங்களாலும் தாம் சுமை ஏறி இருக்கக் காண்கிறார்கள். பணத்தால் தான் கனத்திருக்கக் காண்கிறார்கள்.

ஏணியின் உச்சிக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள். இனி ஒரு ஏரியில் குதிப்பதை தவிர அவர்களுக்கு போக்கிடம் இல்லை.

 -  ஓஷோ