Thursday, 25 July 2024

மினிமீன்ஸ்

"பெரியாரை ஏன் பெரும்பான்மை தமிழகம் கொண்டாடுகிறது தெரியுமா.?" என்று கேட்ட அந்தப் பேச்சாளர் தொடர்ந்து சொன்னார், "அதற்கு முன்னால் நீங்கள் ஒரு வரலாற்று நிகழ்வைத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.!" என்றபடி தனது பேச்சைத் தொடர்ந்தார்.

"ஆப்பிரிக்கா ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் கீழே சென்றதற்கு காரணமே மதம்தான் என்பதை ஜோமோ என்ற முன்னாள் கென்யா நாட்டதிபர் இப்படிச் சொன்னார், '-வெள்ளைக்காரர்கள் ஆப்பிரிக்காவுக்கு வந்த போது எங்கள் கையில் தேசம் இருந்தது. அவர்கள் கையில் பைபிள் இருந்தது. கண்களை மூடி ஜெபம் செய்ய அவர்கள் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். கற்றுக் கொண்டோம். பிறகு கண்ணைத் திறந்து நாங்கள் பார்த்த போது எங்கள் கையில் பைபிள் இருந்தது. அவர்கள் கையில் தேசம் இருந்தது.!' -என்றார்."

"அப்படித்தான் மதமும் அரசியலும் ஒன்று கலக்கும் போது மனிதன் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறான். உணர்ச்சி வசப்பட்டவனை ஏமாற்றுவது சுலபம். யோசித்துப் பாருங்கள். அஹிம்சையைப் போதித்த புத்த மதத்தை பின்பற்றுபவர்களை வைத்தே இலங்கையில் அத்தனை மக்களை அரசியல்வாதிகளால் கொல்ல முடிந்ததென்றால், மற்ற மதங்களைப் பின்பற்றுபவர்களை எவ்வளவு சுலபமாய் கையாள முடியும். அதனால்தான் அவர் ஒரு மதத்திற்கு மாற்றாக, அது எவ்வளவு நல்லதாக இருந்தாலும் மற்றொரு மதத்தை சொல்லவில்லை. அதனால்தான் தமிழர்களில் பெரும்பான்மையினர் அவரைக் கொண்டாடுகின்றனர்.

தேன் நமக்கு மருந்து. நெய்யும் நல்லது. ஆனா, அது இரண்டையும் கலந்து கொடுத்தால் விஷமாகி விடும். அதே போல்தான்‌.. மதமும் அரசியலும் தனித்தனியாக மனிதனுக்கு நல்லதுதான் என்றாலும், அது இரண்டும் ஒன்று சேர்ந்தால் மனிதனுக்கு  பைத்தியம் பிடித்துவிடும் என்பது தமிழர்களுக்குத் தெரியும்.

அதனால் தான், பெருமாளைக் கும்பிடும் தமிழர்கள், பெரியாரையும் கொண்டாடுகிறார்கள்.!" என்றார்.

- மொழியாக்கம் 
#MinimeensStories

No comments:

Post a Comment