Reading_Marathon2024
#24RM050
Book No:16/100+
Pages:265
2601
வெளிநாட்டு வேலைக்காரனின் அனுபவங்கள்
-கதிரவன் மகாலிங்கம்
அறிமுகம் இல்லாத மனிதர்கள் தான் சற்றும் அறிமுகம் இல்லாத அனுபவங்களை எளிதில் விதைத்து விடுகிறார்கள்-நாவலில் இருந்து
வெளிநாட்டு வேலை க்குச் செல்லும் இளைஞனின் பார்வையில் கிட்டத்தட்ட டைரி குறிப்பு போல.. தான் சந்தித்த நிகழ்வுகளையும் சந்தித்த மனிதர்களையும் மிகைப்படுத்தல் இன்றி இயல்பாக, நம் அருகில் அமர்ந்து கதை சொல்வது போல இந்த புத்தகங்களில் உள்ள ஒவ்வொரு வரியும் மிக இயல்பான நடையில் சரளமான மொழியில் நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை தந்தது.
2601 இந்த எண் தான் வெளிநாட்டில் பணிபுரியும் நம் எழுத்தாளரின் அடையாளம் எண் ஆகும். தனக்கு விசா வந்து விமானத்திற்கு சென்ற நொடியில் இருந்து,திரும்பி ஊருக்கு வரும்வரை நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் வரிசை கிரகமாக அடுக்கி அடுக்கி சொல்லும் போது நமக்கு மிக எளிமையாக புரிகிறது.
வெளிநாட்டுப் பணியில் இவ்வளவு கஷ்டங்கள் உள்ளதா என்பதை படங்கள் வழியே நாவல்கள் வழியே நாம் படித்திருந்தாலும் இந்த புத்தகத்தில் வரும் மனிதர்களின் உண்மை கதைகள் நமக்கு நெஞ்சத்துக்கு நெருக்கமாக இருக்கின்றன. ஒவ்வொரு மனிதர்களும் என்ன என்ன தேவைக்கு பணி செய்ய வருகிறார்கள் என்பது படிக்கும் போது அந்த வாழ்வை நமக்கும் கடத்தி இருப்பார்.
ஆரம்பத்தில் பணிக்கு செல்லும் ஒவ்வொருவரையும்,ஒவ்வொரு கட்டிடத்திற்கும் இருவரை இறக்கி விட்டுச் செல்லும் போது நமக்கும் அந்த பதற்றம் தொற்றிக் கொள்கிறது. அதிகாலை நாலு முப்பது மணிக்கு துவங்கும் பணி காலை கடன்களில் முடிக்க ஆரம்பித்து நண் பகலில் ஒவ்வொரு நிமிடமும் ஓய்வை எதிர்பார்க்கும் மனதை துல்லியமாக விவரித்து இருப்பார். அகிலனின் காதல் கதையை கேட்டு நமக்கும் கொஞ்சம் கண்ணீர் சொரிந்தது. அன்பை அடையாக்கும் அற்புதமான ஆண் பறவையாய் அகிலன் தெரிந்தார்.
வேலை வாங்கும் சூப்பர்வைசராக வரும் சீனா காரர் மீது நமக்கும் கொஞ்சம் பயம் ஏற்படுகிறது. பறவைகளுக்கு சோறிடும் மனிதர்,
தாகத்திற்கு கூட தண்ணீர் வேண்டி தவிக்கும் நிலை, தங்களுடைய கைச்செலவுக்கு அரசாங்கம் தந்த 200 திராம் கைய று நிலையில் உள்ள மனிதருக்கு உதவி செய்யும்போது மனிதத்தை பார்க்க முடிந்த நிகழ்வு,
சூடானில் இருந்து வந்த நண்பரின் கதையை கேட்கும் போது அந்த நாட்டின் வரலாற்றையும் அறிந்து கொள்ளும் ஒரு தருணமாய் அந்த இடம் அமைந்தது. பங்களாதேஷ் மக்களின் அவல நிலையும் அங்குள்ள தொழிலாளர்கள் நிலையும் நினைத்துப் பார்த்தால் கடினமாக இருந்தது.
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்த நதானியல் எனும் இளைஞனின் சோக கதைகளை படிக்கும் போது நமக்கு மேற்படி படிக்க இயலாமல் புத்தகத்தை மூடி வைத்து விட்டேன்.
ஒவ்வொரு மனிதர்களின் அனுபவமே நமக்கு பெரிய பாடங்கள் ஆகின்றன. நிச்சயம் துபாய் என்பது இந்நாவலின் ஆசிரியருக்கு போதி மரமாக இருந்திருக்கும். ஏனெனில் எல்லா கதைகளுமே மனதை உருக்கும் விதத்தில் இருந்தது. அதனை முதன்முறையாக கேட்கும் போது அவரின் மன நிலை எவ்வாறு இருக்கும் என்பது ஊகிக்க முடிகிறது.
சாமி அண்ணனின் கதையை கேட்கும் போது நமக்கும் கொஞ்சம் மனது கனக்க வைத்தது. திருமணம் ஆகி இரண்டாம் நாள் துபாய் வந்த ஆணின் குடும்ப கதையை கேட்டபின் உண்டான மனநிலையை என்ன சொல்லி ஆற்றுப்படுத்துவது.நல்ல உணவு கிடைக்காமல் யாருக்கும் தெரியாமல் சமைத்து சாப்பிடும் அந்த நிகழ்வு சந்தோஷமாய் தெரிந்தாலும் உணவுக்காக ஏங்கும் ஒவ்வொரு தொழிலாளர்களின் அவல நிலையும் தெரிகிறது.
என்னோட பூர்வீக பூமியில இன்னும் எனக்கு இன்னும் ஒரு உரிமை மிச்சப்பட்டு இருக்குன்னா அது உறவுகள் மட்டும்தான். பலரின் வாழ்வியல் அனுபவங்கள் எல்லை மீறிய குடும்பத் துயரங்களும் கடன்களுமே கடல் கடந்து முகங்களை பார்க்காமல் ஒவ்வொரு ஆண்களையும் உழைக்க வைக்கிறது. துபாய் போக வேண்டும் என்று கடன் வாங்கி அந்த கடனை அடைத்து குடும்ப கடனை அடைத்து திரும்பவும் தன்னுடைய வாழ்வியலுக்கு தேவையான சொத்துக்களை சேர்த்து இப்படி ஒவ்வொரு காலகட்டமே அவர்களுக்கு அக்னி பரீட்சை தான் என்பதை உணர முடிகிறது.
திரும்பவும் ஊருக்கு வந்து சென்று பணமெல்லாம் கரைந்து மீதி உள்ள நம்பிக்கையில் மீண்டும் அங்கு சென்று வெயிலில் உழைத்து மீண்டும் இரு வருடங்கள் கழித்து திரும்பி வந்து வெள்ளிக்கிழமை போனில் மட்டும் பார்த்து வாழும் அல்லது பேசி வாழும் வாழ்க்கை. சமீபத்திய தொழில்நுட்ப உதவியால் வீடியோ காலிலும் பார்த்துவிட்டு உழைக்கும் போது
ஏதோ ஒரு வாழ்வின் வெற்றிடத்தை அவர்கள் அன்றாடம் அனுபவிக்கிறார்கள் என்பதை மட்டும் இந்த நாள் உணர்த்துகிறது.
பயண கட்டுரைகளில் மட்டும் நாம் பார்த்து ரசிக்கின்ற அயல்நாட்டு வாழ்க்கையோ, நட்சத்திர கொண்டாட்டங்களில் கைதட்டி ரசிக்கும் முகங்களும்,துபாயின் கலாச்சாரமும், கிரிக்கெட் விளையாட்டின் போது பார்க்கும் சார்ஜா மைதானங்களுக்கு பின்னால் உழைத்துக் கொண்டிருக்கும் மக்களின் முகங்களையும் இந்த நூல் நமக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறது.
#ரசித்தது
*உடலில் வேர்வையோடு மன உறுதியும் வழிந்து கொண்டிருந்தது. ஓய்வை எதிர்பார்த்து ஒவ்வொரு நொடியும் கடந்து கொண்டிருந்தேன்.
*ஒவ்வொருவரும் தங்களுடைய குடும்பத்துக்காக மட்டுமே அங்கு வாழ்கிறார்கள்
*தீரா தாகம் கொண்ட பாலை மணல்களை அந்த மழையால் எதுவும் செய்ய முடியாமல் சரணடைந்து விட்டது.
*ஒரு பணியிடத்திலிருந்து இன்னொரு பணியிடத்துக்கு செல்வது நரகம் விட்டு நரகம் நகன்ற உணர்வு.
*புதிய சூழல் என்பது சில முறை வரமாகவும் பலமுறை சாபமாகவும் மாறி போயிருந்தது.
*நிழல் கண்ட இடமெல்லாம் தாய்மடி உணர்ந்தேன், நிஜம் தந்த மனிதரில் தந்தையை உணர்ந்தேன் அகன்ற வானில் வாரி அணைக்கிறேன் பிடிக்கும் சிரிக்கிறது அளவற்ற உயிர்கள்.
*இரவுகள் வெறும் உறக்கத்திற்கானது என்பது அரபு தேச தொழிலாளர்களுக்கு சிறிதும் பொருந்தி வராது .ஏதாவது ஒரு நிகழ்வு அல்லது நினைவு உறக்கத்தை இறக்கமின்றி வேட்டையாடி விடும்.
*சிலரது கனவுகள் என்பது வாழ்க்கையோடு கலந்து போன பிறகு போராடி வாழ்வதில் பிழை இல்லை
*யாருக்காகவும் நின்று நகர்வதில்லை நாட்கள் .அது தன்னுடைய பாதையில் கைகோர்க்கும் எவரையும் நகர்த்திச் சென்று விடும்.
*சில கேள்விகளுக்கு பதில்கள் அவசியமற்றவை
ஆரம்பம் முதல் முடிவு வரை மொழியிலோ கருத்திலோ எந்தவித தங்கு தடையும் இன்றி நாவல் பயணிக்கிறது. நாமும் உடன் பயணிக்கிறோம். ஒவ்வொரு மனிதர்களின் கதையையும் நம்மை மனதை உலுக்குகிறது. குடும்பச் சூழல் காதல் கதைகள் கடன் தொல்லை போன்றவைகளை பிரதானமாக தெரிந்தாலும் ஆளும் வர்க்கம் எவ்வாறு நம்மை அடிமையாக வைத்திருக்கிறது என்பதையும், துபாய் ஏன் இந்த அளவுக்கு வளர்ந்து உள்ளது? காலணி ஆதிக்க நாடாக இருந்ததா? எந்த நாடு அவற்றை இயக்குகிறது அவற்றின் பொருளாதார பின்னணி என்ன என்பதையும் ஒரு கட்டுரையின் வழியே நமக்கு ஒவ்வொன்றையும் அலசி இருப்பார்.
நாவல் முன்பே வந்து விட்டாலும் சில பணியினால் வாசிக்கவில்லை அப்படியே வாசித்தாலும் ஒவ்வொரு பகுதிகளுக்கும் இடையே இடைவெளி எடுத்துக் கொண்டேன் அதனை கடக்க முடியாமல்..
நல்ல நாவல் நம்பிக்கையோடு வாசிக்கலாம் நண்பர் கதிரவனுக்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும். இதுபோன்ற பல வாழ்வியல் தொடர்களை நாவல்களை எழுத வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment