அட்லாண்டிக் கடலின் மேலே 30000 அடி உயரத்தில் 800 கிமீ வேகத்தில் பயணிகளை சுமந்து செல்லும் அந்த ஏர்பஸ் விமானம் பறந்து கொண்டிருந்த போது, அந்த யூரோ ஃபைட்டர் ஜெட் வகையைச் சேர்ந்த அந்த ஜெட் விமானம் அதனருகே தோன்றியது.
ஜெட் விமானத்தின் விமானி வேகத்தைக் குறைத்து, ஏர்பஸ்ஸுடன் சேர்ந்து பறக்க, பயணிகள் விமானத்தின் விமானி அவரிடம் வயர்லெஸ்ஸில், "வெல்கம்..." என்றார்.
இளைஞரான ஜெட் விமானியும் வயர்லெஸ்ஸில், "அங்கிள்... எப்படி இந்த மாதிரி பேசஞ்சர் ஃப்ளைட்லாம் ஓட்டறீங்க.? ரொம்ப போரடிக்கற வேலையாச்சே இது. இதே என் ஃப்ளைட்டா இருந்தா என்ன எல்லாம் செய்யலாம் பாருங்க.. .!" என்றபடி தனது ஜெட் பிளேனை அப்படியே ஒரு உருட்டு உருட்டி, செங்குத்தாக விர்ரென்று மேலே விண் வரை சென்று, பிறகு ஒரு கல்லடி பட்ட பறவை போல கரகரவென்று கடல் மட்டம் வரை விழுந்து, மீண்டும் சுற்றிச் சுழன்றபடியே பழைய இடத்துக்கு வந்தவர்... இப்போது பழைய இடத்தில் மிதந்தபடி, "இது எப்படி இருக்கு.?" எனக் கேட்டார்.
புன்னகைத்த ஏர்பஸ் விமானி, "உண்மையிலேயே மிகவும் சுவாரசியமாக இருந்தது, ஆனால் இதைப் பாருங்கள்!" என்றபடி விமானத்தை மெல்ல முன்னே நகர்த்தினார்.
ஜெட் விமானி இப்போது அந்த பயணிகள் விமானத்தை கவனித்தார். ஆனால் அடுத்த 15 நிமிடங்கள் எதுவுமே வித்தியாசமாய் தெரியவில்லை. ஏர்பஸ் ஒரே வேகத்தில், ஒரே திசையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், ஒரே மாதிரித்தான் பறந்து கொண்டு இருந்தது. சரியாய் 20 நிமிடங்கள் கழித்து வயர்லெஸ்ஸில் வந்த அந்த ஏர்பஸ் விமானி, "சரி, இது எப்படி இருந்தது.?"
குழப்பமடைந்த ஜெட் விமானி இப்போது இவரிடம், "இப்போது என்ன நடந்துவிட்டது.? என்ன செய்தீர்கள் என்றே தெரியவில்லையே.?" என்றார்.
ஏர்பஸ் விமானி சிரித்துக்கொண்டே சொன்னார், "இந்தப் 15 நிமிடத்தில் நான் எழுந்து, என் கால் கைகளை நீட்டி சோம்பல் முறித்து, ஒரு நடை விமானத்தின் பின்னால் போய் ஒரு பர்கரும் காபியும் சாப்பிட்டுவிட்டு, டாய்லெட் போய் வந்து அமர்ந்திருக்கிறேன். இது உன்னால் செய்யமுடியுமா.?" என்று சிரித்தார்.
நிஜம்தான். நீங்கள் இளமையாக இருக்கும்போது, இளமையும் வேகமும் நன்றாக இருக்கும். ஆனால் நீங்கள் வயதாகி, புத்திசாலியாகும் போதுதான், நிதானமும் அமைதியும் மிக முக்கியம் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்கிறீர்கள்.
ஆமாம் நண்பர்களே.. வயது அதிகரிக்கத் துவங்கும்போது இளையவர்களுடன் போட்டி போடாதீர்கள். வேகத்தைக் குறைத்து பயணத்தை அனுபவிக்க ஆரம்பியுங்கள். நிஜம்தான் வேகத்தைக் காட்டிலும் முக்கியம் விவேகம்.
- மொழியாக்கம்
#MinimeensStories
No comments:
Post a Comment