Sunday, 7 July 2024

book -17


Reading_Marathon2024
#24RM050

Book No:17/100+
Pages:720

பாக்கியம் ராமசாமியின் 100 சுவையான கதைகள்

பாக்கியம் ராமசாமி என்னும் ஜ.ரா சுந்தரேசன் அவர்களின் கதைகள் பள்ளி வயதிலிருந்து படித்து வருகிறேன். நகைச்சுவை என்பது ஒவ்வொரு கதைகளிலும் மிக இயல்பாய் மிளிரும் . தனக்கு அமைந்த சூழ்நிலையை தன்னுடைய நகைச்சுவையின் லாவகத்தால் நகைச்சுவை பண்பினால் மாற்றி விடும்போது எத்தகைய சூழ்நிலையிலும் மனிதன் நிதானத்தை இழக்காமல் நகைச்சுவையோடு ஒவ்வொரு விஷயத்தையும் பார்க்கும் போது, நாம்  கவனிக்க மறந்த விஷயங்களும் நாம் எங்கெல்லாம் நகைச்சுவை உணர்வை தொலைத்து இருக்கிறோம் என்பதை நினைவூட்டும் வகையிலும் ஒவ்வொரு கதைகளும் அனுபவங்களும் இந்த புத்தகத்தில் சுவைபட நிரம்பி இருக்கின்றன.

செகண்ட் ஹேண்ட் கார் வாங்குவதில் உள்ள அசவகரியங்களும் அது கொடுக்கும் தொல்லைகளும் முதல் கதையிலேயே நிதர்சனத்தை உணர்த்தி இருப்பார். செலவுவைக்கும் கார்கள் கார்கள் அல்ல பு'கார் என்று குறிப்பிட்டிருப்பார்.துக்கத்துக்குச் செல்லும் போது மனிதர்கள் செய்யும் கோமாளித்தனங்களும் ஒவ்வொரு நிகழ்வையும் துக்கம் ஏற்படுத்தி தன்னை அனுதாபிக்க வைக்கும் மனிதர்களின் பாசாங்குகளும் பல இடங்களில் சொல்லி இருப்பார்.

ஒவ்வொரு பீரோவுக்கு பின்னாலும் ஒரு முக்கியமான ஒரு பொருள் மறைந்திருக்கும். ஸ்கிப்பிங் ரோப், காலனிப்பை, தேவையில்லாத பொருட்கள், மின்விசிறி வாங்கிய அட்டைப் பெட்டி என மனிதர்கள் ஒவ்வொன்றையும் மறைத்து வைக்கும் அந்த நுட்பத்தை எப்படியோ கண்டுபிடித்து சிரிக்க வைத்திருப்பார். எங்க வீட்டு பீரோவையும் பின்னால் பார்த்தேன் அவர் சொன்னது அத்தனையும் உண்மை.

ஒவ்வொரு பொருளின் தன் வரலாற்றை பற்றி சொல்லும் போது வாஷிங் மெஷின் பற்றி விவரிக்கும் போது விருந்தாளியுடன் நாம் பேசிக் கொண்டிருக்கும்போது தானும் ஏதோ விஷயம் தெரிந்தது போல காட்டிக் கொள்ள வேண்டும் என்று அடிக்கடி அலறும், பிரமாதமாக சத்தம் போட்டவாறு பாத்ரூமில் இருந்து கிளம்பி ஹாலுக்கே வந்துவிடும், யாரோ அதனை அடித்துக் கொல்வது போல கத்தி கூவும். அருள் வந்த பூசாரி மாதிரி உடம்பை ஆட்டும். என்று வாஷிங் மெஷின் வாழ்வியலை சொல்லி இருப்பார்

இன்றைய youtubeபர்களுக்கு கண்டென்ட் கொடுப்பது போல ..அன்றைக்கே சில குறிப்புகளை சொல்லி இருப்பார். அதாவது 500 குறிப்புகள் எல்லாமே இயல்பானது ஆனால் குறிப்பு என்ற பெயர்களில் கொடுக்கும் சாமர்த்தியசாலிகளை போல தானும் அதில் சொல்லி இருப்பார். படுக்கப் போகும்போது தலையணை வைத்துக் கொள்வது, கிராப் வாரி கொள்ளும் போது சிறிது எண்ணெய் தடவி வாரி கொள்வது, பல் தேய்க்கும் போது பிரஸ்ஸில் பேஸ்ட் போட்டுக் கொள்வது என்று இயல்பாய் நடக்கும் விஷயங்களை கிண்டல் அடித்திருப்பார்

மூக்கு என்று இருந்தால் ஜலதோஷம் பிடிக்க தனே செய்யும் .ஆனால் கணவரின் மூக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர் மனைவி மட்டுமே. தேங்காய் உடைத்தவுடன் மனைவிக்கு அழுகல் என்று சந்தேகம் வந்தால் நாமே மோர்ந்து பார்க்க வேண்டும். சில சமயம் குழந்தைகள் பெட்டில் வெட்டிங் போனால் அதனை முகர்ந்து பார்த்து உச்சா என்று சொல்ல வேண்டும். பால் கெட்டு விட்டால், பிரிட்ஜ் சமாச்சாரம், கேஸ் லீக் ஆவது போன்ற பல்வேறு விஷயங்களில் கணவனின் மூக்கினையே மனைவி பெரிதும் நம்பி இருக்கிறார் 

புதிதாகச் செல்லும் வீட்டிற்கு என்ன வாங்கி செல்வது என்று ஏற்படும் குழப்பத்திற்கு எல்லையே இல்லை. ராமசாமிக்கும் இந்த குழப்பம் வந்ததால் அவர் தயக்கமே இல்லாமல் எல்லா வீட்டிற்கும் வாழைப்பழங்களை வாங்கி செல்வார். ஆனால் அங்கு சென்ற பின்பு அவர்களும் இதே போன்ற யுத்தியை கண்டார்கள். அதாவது கல்யாண சமையல் சாதம் போடுவதற்கு பதிலாக சேமியா உப்புமாவை போட்டு விருந்தினர்களை உபசரிப்பதில் இவர்களை விட வல்லவர்கள் அந்த வீட்டில் இருந்தது தெரிந்தது.

பட்டுப் புடவை பாட்டி என்றால் சகலருக்கும் தெரியும் பட்டுப்புடவை கட்டாமல் அல்லது புது புடவை கட்டாமல் அந்த பாட்டி வெளியே வர மாட்டாள். நாள் 360 புடவை சேர்த்து விட்டாள் .ஒரு நாள் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் படுக்கையில் கிடந்தார். உயிர் பிரிய மறுத்து கொண்டு இருந்தது. பேத்தியை பார்த்தால் உயிர் சென்று விடும் என்றால் அதுவும் இல்லை. பேத்திக்கு ஒரு யோசனை தோன்றியது. அந்த புடவைகளை கிழித்து சல்வார் தைத்துக்கொண்டு அவர் முன்னே வந்த பிறகுதான் அந்த பாட்டியின் ஆன்மா சாந்தி அடைந்தது. இது தற்செயலாக நிகழ்ந்ததா அல்லது பாட்டிக்கு புடவை கத்தரித்ததின் கோபமா என்பதை பட்டிமன்ற தலைப்புக்கு விட்டு விட்டார்

வீடு திரும்பிய நோயாளி சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?
பெட் ரெஸ்ட்டில் இருக்கும்போது நம்மைப் பார்க்க வருகிறவர்கள் நிறையப் பேசி நம்மை அறுத்துத் தள்ளிவிடு வார்கள். அதற்கு இடம் தராமல், நாமே பெரும்பாலான நேரம் பேசிவிடுவது நல்லது.

நாம் வீடு திரும்பிவிட்டதை நமக்கு வேண்டிய சகல பேர்களுக்கும் செல்போன் மூலம் தெரியப்படுத்துவது ஒரு 'மஸ்ட்: 

வீட்டுக்கு வரும் விசிட்டர்கள் முன் அவ்வப்போது இருமிக் காட்ட, கைவசம் இருமல் கொஞ்சம் ஸ்டாக் இருக்க வேண்டும்.சிலருக்கு இருமல் பூராவும் தீர்ந்திருக்கும். அவர்களுக்கு ஒரு உபாயம்.. வெறுமே கைவும் அடிக்கடி நீவிக் கொள்ளுங்கள். 

சிலர் பெட் ரெஸ்ட் சட்டை அணிந்து காட்சி தரு வார்கள். மகா தப்பு ! உங்களுக்கு அவர்கள் என்ன, பெண் கொடுக்கவா வருகிறார்கள்? ஆகவே, தாடி மீசையுடன் (முள்ளு தாடி விசேஷம்) இருப்பது அவசியம். சட்டையில் பட்டன்களை ஏற இறங்கத் தப்பாகப் போட்டுக்கொண் டிருப்பது அதி அவசியம்.

விசிட்டர் வரும்போது நோயாளி படுத்திருப்பது ரொம்ப முக்கியம். .

"என்ன சார், நடக்க ஆரம்பிச் சுட்டீங்களா?" என்று விசிட்டர் மனசுக்குள், 'வாங்கி வந்த பழம் வேஸ்ட்!' என்று நினைத்துப் பதறும் போது,'சாந்தி... சாந்தி' என்று புத்தர் பெருமான் போல சைகை செய்ய வேண்டும். கம்மிய குரலில் 'மூணு நிமிஷம் நடக்கணுமாம்... ஹும்... ஹா...' என்று முக்கி முனகி ஒரு பெருமூச்சை விட்டால் போதுமானது.

போன் அடித்தால், எக்காரணம் கொண்டும் பெட் ரெஸ்ட் பேர்வழி எடுத்துப் பேசலாகாது. அரை மணி கதறி னாலும், அதை மனைவியோ வேறு யாரோவோதான் வந்து எடுக்க வேண்டும். 

பிளஸ் டூ படிக்கும் பிள்ளைகள் வீட்டில் இருந்து விட்டால் அந்த பெற்றோர்கள் எவ்வாறெல்லாம் செய்வார்கள் என்பதை இதில் சொல்லி இருப்பார். பையன் பிளஸ் டூ படிக்கிறதால வெண்ணை காய்ச்சுவதில்லை.. ஏனெனில் அந்த வாசம் வந்து பையன் படிப்பு கெட்டிடும். வீட்டில் எந்தவித சிறிய வேலையும் நடக்காது. ஏனெனில் அந்த சத்தத்தினால் அவன் படிப்பு பாதிக்கபடும். காலையில் வாக்கிங் போகும்போது கதவை தொப்பு என்று சாத்தினால் குழந்தையின் படிப்பு கெட்டுடும் என்பதால் பலர் வாக்கிங்கை தியாகம் செய்திருப்பார்கள்.
 சில தந்தைகள் தாடி வளர்ப்பார்கள் ,அலகு குத்த வேண்டியிருப்பார்கள் .விருந்தினர்கள் எவராய் இருந்தாலும் எத்தனை லட்சம் கொண்டு வந்தாலும் சரி பிளஸ் டூ வீட்டில் நுழைந்து விடக்கூடாது விருந்தாளி விரட்ட வீட்டில் நாங்கள் சமைக்கிறதே இல்லை என்று அநியாயத்துக்கு பொய் சொல்வார்கள் அரசாங்கம் பிளஸ் டூ தியாகிகளுக்கு மானியமோ கேடமோ பாராட்டு பத்திரமா தந்து கௌரவிக்க வேண்டும் என்பதை இறுதியில் முடித்திருப்பார்.

பொதுக்கூட்டத்தில் தலைமை தாங்கும் அரசியல்வாதியிடம் பெயர் வைக்கும் சுவாரஸ்யம் இனிமையாக இருக்கும். மாலை போட மறந்து விட்டார்கள் அதனால் அந்த குழந்தைக்கு பூ மாலை என்று பெயர் வைத்தார். தலைமை உரை நிகழ்த்தும்போது தட்டு தடுமாறிய பிறகு குழந்தை கைக்கு வந்ததால் அவனுக்கு தடுமாறன்ர என்று பெயர் வைத்தார்

#ரசித்தது

*காக்க காக்க கம்ப்யூட்டர் காக்க ,அடியேன் சிஸ்டம் அழகுவேல் காக்க ..என கந்தர் 'சிஸ்ட்'கவசம் பாடியிருப்பார்

*புதிதாக டெலிபோன் வந்த பொழுதில் ஏற்படும் ரணகளங்களை குதூகலங்களாக சொல்லி இருப்பார் தாலிபன் நாட்டில் இருந்து வரும் போன் அழைப்பு அதற்குப் பின் உண்டானதெல்லாம் காமெடி ரகம்.

*வீட்டில் ஏற்படும் சின்ன வேலைக்கு ஏதேனும் ஒரு ஆட்களை பிடித்துக் கொள்ளும் போது தான் இந்தியா வல்லரசானது தெரியும். ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் கட்டணம் நமத மாதச் சம்பளத்தையே தாண்டி விடுகிறது.

*துயில் எழுப்புவது என்பதை ஒரு கலையைப் போல் அழகாக செய்ய வேண்டும் இனிமையான வார்த்தைகளால் அன்பாய் சொல்ல வேண்டும் யோவ் யோவ் என்று எழுதுவது விரும்பத்தகாதது 

*கொசு கடிக்கு பயந்து ஆயில்மெண்ட் பெரிய சைஸ் வாங்க வேண்டும். கொசுக்களிலே பெரிய கொசு சின்ன கொசு என இரண்டு ரகம் இருக்கும் பெரிய வெங்காயம் சின்ன வெங்காயம் போல .காதில் வந்து வீணை வாசிக்கும் கந்தர்வர்கள் தனி ரகம்.

*ஆணியன் ரவாவும் மெனு தர்ம சாஸ்திரத்தின் படியும் ஆனியன் ரவா தயாரிக்கும் உத்தி.. கான்கிரீட் வேலை தொடங்கி ஜல்லி காய்வதற்குள் கொட்டப்படுவது போல ஆனியன் ரவாவை ஆறும் சாப்பிட்டு விட வேண்டும்.

*புகழும் செல்வமும் வந்த பிறகு தன் தகுதியின்மையை சொல்லிக்கொண்டால் அதைப் பொதுமக்கள் பொருட்படுத்த மாட்டார்கள். எவ்வளவு அடக்கம், என்று பூரிப் பார்கள்.

*தியேட்டரில் இருந்து புறப்பட்ட பின கேட்டில் காரை ரிவரஸ் எடுப்பது எவ்வளவு கஷ்டமோ அவ்வளவு கஷ்டம் பபே கியூவில் ரிவர்ஸ் எடுப்பது

*கிஃப்ட் என்பது எதையாவது உள்ளே வைத்து அழகான பேப்பர்களால் சுற்றப்படுவது தவிர, உள்ளிருக்கும் பொருள் எதுவாகவும் எவ்வளவு மலிவானதாகவும் இருக்கலாம்

*சட்டென்று என் மூளையின் சகல செல்களுக்கும் ஏராளமான பொய்கள் பாய்ந்து ஒரு டிராபிக் ஜாம் ஏற்பட்டது

*எலியை பிடிப்பது அவ்வளவு எளிதல்ல 

நகைச்சுவை உணர்வு இருப்பது ஒரு வரம் எனில் நகைச்சுவையாய் எழுதுவது என்பது மேலும் ஒரு சிறப்பு வரம்.எழுதுவதை படிக்கிற வாசகர்கள் பல்வேறு மனநிலையில் படிக்கும் போது அவர்களை ஒன்றிணைத்து ,சிந்தனையை கைப்பிடித்து நகைச்சுவை உணர்வை ஊட்டுவது என்பது குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவதற்கு சமம். அதனை சாமர்த்தியமாய் செய்தவர்தான் பாக்கியம் ராமசாமி அவர்கள். அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் நமக்கும் ஏற்பட்டிருக்கலாம் .ஆனால் அவரின் பார்வை முற்றிலும் நகைச்சுவையான பார்வை. இதனை நம் வாழ்க்கையில் எடுத்துக் கொண்டால் நாமும் சிறந்த நகைச்சுவையாளர்களாக விளங்கலாம் அல்லது நகைச்சுவையை படிக்கும் போது வாய் விட்டு சிரிக்கலாம்

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment