எப்போதும் சேமித்துக்கொண்டே இருக்க வேண்டும், செலவு செய்வது தவறு என்ற மனநிலை எனக்கு மட்டும்தான் இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் FIRE (Financial Independence, Retire Early) சமூகத்தில் இதைப் பற்றி நிறைய பேசுகிறார்கள்.
FIRE பயணத்தில் இருப்பவர்களில் பலருக்கு "accumulation mindset" உருவாகிவிடுகிறது. தொடர்ந்து சேமிப்பார்கள். மிகவும் சிக்கனமாக வாழ்வார்கள். ஓய்வுபெற்ற பிறகும், போர்ட்ஃபோலியோ மதிப்பு குறைந்துவிடுமோ என்ற பயம் விடாமல் இருக்கும். அதனால், வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும், பழைய சிக்கன வாழ்க்கையே தொடர்கிறது.
"இன்னும் ஒரு வருடம் காத்திருக்கிறேன்..."
"இன்னும் இரண்டு வருடம்..."
"இன்னும் மூன்று வருடம்..."
₹50 லட்சம் ₹1 கோடியாகிறது. ₹1 கோடி ₹2 கோடியாகிறது. ₹2 கோடி ₹3 கோடியாகிறது.
ஆனால் அவர்கள் நிற்பதில்லை. அடுத்த வட்ட எண்ணை, அடுத்த மைல்கல்லை நோக்கி மீண்டும் காத்திருக்கிறார்கள்.
"இப்போதுதான் ₹1.56 கோடி இருக்கிறது. சிங்கப்பூர் சுற்றுலாவுக்கு ₹20 லட்சம் செலவு செய்தால் போர்ட்ஃபோலியோ குறைந்துவிடும். ₹2 கோடி ஆன பிறகு போகலாம்."
₹2 கோடி ஆகிறது.
"சரி, ₹20 லட்சம் செலவு செய்த பிறகும் ₹2 கோடி இருக்க வேண்டுமென்றால், முதலில் ₹2.2 கோடி ஆகட்டும்."
₹2.2 கோடி ஆனதும், "இன்னும் கொஞ்சம் காத்திருந்தால் ₹2.5 கோடி ஆகிவிடும்" என்ற புதிய இலக்கு தோன்றுகிறது.
இப்படியே வாழ்க்கை முழுவதும் இலக்குகள் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய நாள் மட்டும் வரவே வராது.
FIRE சமூகத்தின் ஆலோசனை வேறுபட்டது.
முழு போர்ட்ஃபோலியோவை ஒரே தொகையாகப் பார்த்துக்கொண்டே இருந்தால், அதிலிருந்து ஒரு ரூபாய்கூட செலவு செய்ய மனம் வராது.
அதற்கு பதிலாக, மாதந்தோறும் தானாக உங்கள் வங்கிக் கணக்கிற்கு ₹10,000 அல்லது உங்களுக்கு ஏற்ற தொகையை மாற்றும் முறையை அமைத்துக்கொள்ளுங்கள். அதை "Fun Bucket" அல்லது "Enjoyment Fund" என்று தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
மேலும், ஒரு ஆண்டில் சந்தை உங்கள் திட்டமிட்ட 4% வருமானத்தை விட அதிகமாக, உதாரணத்திற்கு 8% அல்லது 10% வளர்ந்தால், அந்த கூடுதல் லாபத்தில் இருந்து 3%–4% தொகையை வங்கிக் கணக்கிற்கு மாற்றிவிடுங்கள்.
அந்தப் பணத்தை குற்ற உணர்வு இல்லாமல் செலவு செய்யுங்கள். ஏனெனில், வாழ்க்கையின் நோக்கம் போர்ட்ஃபோலியோவை இறக்கும் வரை பெரிதாக்குவது அல்ல; அந்தப் போர்ட்ஃபோலியோ உங்களுக்காக உருவாக்க வேண்டிய நினைவுகளையும் அனுபவங்களையும் வாழ்வதே.
~ நியாண்டர் செல்வன்
No comments:
Post a Comment