கல்விக்கதைகள்
-ச தமிழ்ச்செல்வன்
‘கல்விக்கதைகள்’ கல்வியைப் பற்றிய வழக்கமான அறிவுரைகளைச் சொல்வதற்குப் பதிலாக, குழந்தைகள், பள்ளி, ஆசிரியர், வகுப்பறை, கல்விமுறை ஆகியவற்றை கதைகளின் வழியாகச் சிந்திக்க வைக்கும் ஒரு சிறப்பான சிறுகதைத் தொகுப்பு. 2023-ஆம் ஆண்டு எஸ்.ஆர்.வி. தமிழ்ப் பதிப்பகம் வெளியிட்ட இந்நூல் 311 பக்கங்களைக் கொண்டது.
ஒவ்வொரு கதையும் ஒரு திறப்புதான்.ஒவ்வொரு கதையும் அவ்வகையில் ஒரு சுரங்கம் தான். கல்வி குறித்த மாணவர் குறித்த பள்ளி வயது பாலியம் குறித்த 21 கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.
தமிழின் முக்கியமான படைப்பாளிகள் கல்வி மற்றும் குழந்தைகள் சார்ந்து எழுதிய கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன
‘கல்வி’ என்ற சொல்லைக் கேட்டவுடன் நமக்கு பள்ளி, ஆசிரியர், பாடப்புத்தகம், தேர்வு, மதிப்பெண் போன்றவைதான் முதலில் நினைவுக்கு வருகின்றன. ஆனால் கல்வி என்பது இவற்றைத் தாண்டி, ஒரு மனிதனைச் சிந்திக்கவும் கேள்வி கேட்கவும் சமூகத்தைப் புரிந்துகொள்ளவும் உருவாக்கும் ஒரு நீண்ட பயணம். இந்தப் பரந்த பார்வையை முன்வைக்கும் நூலாக ச. தமிழ்ச்செல்வன் தொகுத்த ‘கல்விக்கதைகள்’ அமைந்துள்ளது.
ஆரம்ப காலத்தில் படித்த நிகும்பலை கதை எனக்கு அப்போதே உந்துசக்தியாக இருந்தது. கல்லூரியில் பரிட்சைக்கு படிக்கும் மாணவர்களின் செயல்களும் தேர்வறைக்கு சென்று புறமுதுகிட்டு வரும் வீரர்களின் கதையை சுவாரஸ்யமாக சொல்லியிருப்பார். ஒரு அன்பளிப்பு குழந்தைகளின் வாழ்வில் எத்தகைய மாற்றமெல்லாம் தரும் என இக்கதை கூறுகிறது. அழகிரிசாமி எழுதிய இக்கதையை க்ளாசிக் என்றே சொல்லலாம். இன்றும் நான் குழந்தைகளுக்கு அன்பளிப்பு கொடுக்க காரணமாக இருந்தது இக்கதைதான்.
பள்ளிக்கூடமும் கல்வியும் இயற்கையாய் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிரிந்த ராமசாமிக்கு எவ்வளவு அழுத்தத்தை கொடுத்தது என கி.ரா வின் ஜெயில் கதை உணர்த்துகிறது.
புதிதாய் வந்த எலிசபெத். டீச்சருக்கும்
மண்டை ஓட்டை கழட்டி பாடங்களை உள்ளே வைத்து மூடி விடுவதில் சாமர்த்தியசாலி.சீனியரான பத்மாவதி டீச்சருக்கும்.இடையில் நடக்கும் தொழில்முனை போட்டியில் யார் வென்றார் என்பதே எங்கள் டீச்சர் கதை.மற்றொரு கதையான கால்பந்து விளையாட்டில் கோப்பை வாங்க வைத்த ஏகாம்பரம் சார் அன்று மாணவர்களுக்கு கடவுள். திறமைகளை வெளிக் கொண்டு வந்த அவருக்கு ஒரு சோதனை வருகிறது அது என்பதுதான் நாடார் சார் கதை.
மரி என்ற பெண்ணுக்கு ஏன் டி.சி கொடுக்க கூடாது என பேச்சை ஆரம்பிக்கும் தலைமையாசிரியரிடம் அவள் பற்றிய விபரங்கள் தெரிந்து கொள்ளும்.ஆசிரியர் அவள் வீட்டுக்கு செல்கிறார். அவளின் அணுகுமுறையில் ஆசிரியரின் குணத்தினால மாற்றமடைவதுதான் மரி என்ற ஆட்டுக்குட்டியின் கதை.சுதந்திர தினம் வருவதை ஒட்டி பள்ளியும் மாணவர்களும் கலெக்டர் வருகைக்கு காத்திருக்கிறார்கள். அவர் வந்து சென்ற பின் முத்தையாவும் பள்ளியும் புது பொலிவு பெறுகிறார்கள்.
கணக்கில் எத்தனை பூஜ்யம் நான் சம்பாதித்திருக்கேன். பூஜ்யம் எனது நண்பர்கள்.என போகும் கதை.. கண்க்கு வாத்தியாருக்கும் மாணவனுக்கும்.நடக்கும்.கதை. பொதுவாக கணக்கு பலருக்கு வேப்பங்காய். அதை தேன் போல் மாற்றுவது ஆசிரியர் செயல்பாடுதான். அதுபோன்ற கதைதான் கிருஷ்ணன் நம்பி எழுதியிருப்பார்.
ஆசிரியருக்கு காசு கொடுக்க நினைக்கும் புவனுவின் குடும்ப சூழல் பயம் ஆகியவை இறுதியில் பனிபோல் விலகுகிறது ராசேந்திர சோழனின் கதையில்.இரு குழந்தைகளின் உலகத்தை சிலிர்ப்பு கதையில் காட்டியிருப்பார் தி.ஜா.
இன்பச் சுற்றுலா செல்வதற்கு தயாராய் இருந்த சோலை அதற்கு செல்லமுடியாத சூழல் அமைகிறது. அது அவனை மட்டும் பாதிக்கவில்லை படிக்கும் நம்மை உலுக்கிறது. அவன் தந்தையைப் போல தேற்றுவதற்கு நமக்கு வார்த்தைகளின்றி தவிக்கிறோம்.இன்பச்சுற்றுலா என்றவுடன் வண்ணதாசன் எழுதிய குற்றால அருவி கதையும் நினைவுக்கு வருகிறது.
இமையத்தின் அரசாங்க பள்ளிக்கூடம் கதை ஒரு மேல்நிலைப்பள்ளி தலைமயாசிரின் பணிகளை சொல்கிறது. பணிகள் என்றால் கோப்புகளை கவனிப்பதோ, வகுப்பறை மேற்பார்வையோ அல்ல. மாணவர் பிரச்சினை தீர்ப்பது, புள்ளி விபரங்களை கொடுப்பது என கழிகிறது அந்த நேரத்தில் மாணவி ஷாலினியின் பிரச்சனையை வகுப்பாசிரியர் தலைமை ஆசிரியரிடம் கொண்டு வருகிறார்.இப்பிரச்சினை என்ன என்பதை இயல்பான நடையில் யதார்த்த உண்மைகளை வெளிச்சமிட்டு காட்டுகிறார்.
சமகால நெருக்கடியையும் சமூகத்தின் முகத்தையும் சுட்டிக்காட்டுகிறது.
அ.வெண்ணிலா எழுதிய வெளியே கதை படிக்கும் போதே நெஞ்சம் கனக்கும். 90களில்.கழிவறை இல்லா காலங்களில். வீட்டிலும் பள்ளியிலும் கழிவறை இல்லாமல் காட்டிற்கு தான் செல்லவேண்டும். அப்படி செல்லும் சிறுமி யின் கதை தான். நாம் எப்படிப்பட்ட கஷ்டகாலத்தை கடந்து வந்திருக்கிறோம் என்பதை உணரமுடிந்தது.
இக்கதைகள் அனைத்தும் குழந்தைகளின் மன உலகையும், பள்ளிக்கூட அனுபவங்களையும் விவரிக்கிறது.இக்கதைகள் அனைத்தும் தனித்தன்மையானவை.
கல்வி என்பது தேர்வில் வெற்றி பெறுவதற்கான கருவி மட்டுமல்ல; அது மனிதனை மனிதனாக உருவாக்கும் செயல்முறை என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது. கிராமப்புற விளிம்பு நிலை மக்கள் கல்வியை அணுகும் விதம், கிராமிய சூழல், மனிதம், ஆசிரியர் மாணவர் உறவு ஆகியவை ஒவ்வொரு கதைகளின் அடி நாதமாக இருக்கிறது.இன்றைய பள்ளி மாணவ மாணவியர் இக்கதைகளை வாசித்தால் மனதில் பெரும் மாற்றம் வரும்.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment