Tuesday, 15 September 2026

book-63


Book-63

அறிவியல் அடுத்தது என்ன?
ஆயிஷா இரா நடராசன்

கற்கால மனிதன் சக்கரம் கண்டுபிடித்தது தான் முதல் அறிவியல் கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது.

அறிவியல் கண்டுபிடிப்புகளை தொழில் துறையோடு இணைக்கும் அமைப்பு மட்டுமே எதிர்காலத்தில் வளர்ச்சி பாதையில் இயங்கும் என விஞ்ஞானி சாந்தி ஸ்வரூப் பட்நாகரின் பொன்மொழியோடு ஏழு அத்தியாங்களில் புத்தகம் விரிகிறது.

இந்திய அறிவியல் வரலாறு, நவீனத் தொழில்நுட்பங்களின் எதிர்காலம், மறக்கப்பட்ட இந்திய விஞ்ஞானிகளின் சாதனைகள், சர்வதேசக் காப்புரிமைச் சூழல் மற்றும் தமிழ் மொழியில் அறிவியல் வளர்ச்சி என 7 முக்கியத் தலைப்புகளில் விரிவாகப் பேசுகிறது. சமுதாயத்தில் அறிவியல் விழிப்புணர்வையும் மூடநம்பிக்கைகளற்ற சிந்தனையையும் வளர்ப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்நூல் இயற்றப்பட்டுள்ளது

நூலின் முதல் அத்தியாயம், இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தின் (CSIR) பங்களிப்பை விரிவாக விவரிக்கிறது. 1942-இல் பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் சாந்தி ஸ்வரூப் பட்னாகர் மற்றும் ஆற்காடு ராமசாமி முதலியார் ஆகியோரின் முயற்சியால் தொடங்கப்பட்ட சி.எஸ்.ஐ.ஆர், விடுதலைக்குப் பின் நாட்டின் சுயசார்புக்கு பெரும் பங்காற்றியது.

தேசிய இயற்பியல் ஆய்வகம் (NPL), தேசிய எரிபொருள் ஆய்வகம் உட்பட 38 ஆய்வகங்களை நிறுவி, 7,000 இளம் விஞ்ஞானிகளை ஒருங்கிணைத்து சி.எஸ்.ஐ.ஆர் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது.

1952 பொதுத்தேர்தலுக்காக 'வாக்களிக்கும் அழியா மை' (Silver Nitrate) கண்டுபிடிப்பு, 1955-இல் இந்திய தேசிய நாட்காட்டி உருவாக்கம், சென்னையில் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CLRI) மூலம் தோல் தொழிலில் உலகளவில் 4-வது இடம் பெற்றது, பசுமைப் புரட்சிக்கான வேளாண் கருவிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பு, எருமைப் பாலில் இருந்து பால் பவுடர் தயாரிக்கும் 'அமுல்' (Amul) கூட்டுறவுத் தொழில்நுட்பம்,கருப்பு வெள்ளை தொலைக்காட்சி மற்றும் கோவிட்-19 காலத்தில் 'கோவாக்சின்' தடுப்பூசி தயாரிப்பு எனப் பல அரிய சாதனைகளை இந்நூல் பட்டியலிடுகிறது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நமது அன்றாட வாழ்வின் அங்கமாக மாறிய அகச்சிவப்பு வெப்பமானி (Infrared Temperature Gun) இயங்கும் அறிவியல் தத்துவத்தை நூல் விரிவாக விளக்குகிறது. 1800-இல் வில்லியம் ஹெர்ஷல் அகச்சிவப்பு கதிர்களைக் கண்டுபிடித்ததில் தொடங்கி, 1912 டைட்டானிக் கப்பல் விபத்திற்குப் பின் எல். பெல்லிங்ஹாம் உருவாக்கிய கப்பல் வெப்பமானியே இன்றைய கைக் துப்பாக்கி வடிவ வெப்பமானிக்கு முன்னோடியாகும் என்பதை நூல் பதிவு செய்கிறது.
தொழில் துறை வெப்பமானிக்கும் மருத்துவ அகச்சிவப்பு வெப்பமானிக்கும் உள்ள வேறுபாடுகளை பட்டியலிட்டு காட்டியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு & ரோபோக்கள்..எங்கும் நீக்கமற நிறையவிருப்பது தொழில்நுட்பம் தான். சுவிட்சர்லாந்தின் சுவிஸ் பெடரல் இன்ஸ்டிடியூட் உருவாக்கிய மூளை-வாசிப்பு ரோபோக்கள் (Brain-Reading Robots) மற்றும் வீட்டு உபயோக ரோபோக்கள்.எம்.ஆர்.ஐ பாடி ஸ்கேனிங் மூலம் மனித உடலின் டிஜிட்டல் அவதாரத்தை (Digital Twin) உருவாக்குதல், 3D முறையில் எலும்புகளை அச்சிடுதல் (3D Bone Production), மற்றும் நானோ தகனம்.

சுற்றுச்சூழல் மற்றும் கட்டுமானத் தொழில்நுட்பத்தில் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி ஆக்சிஜனாக மாற்றும் 'டைரக்ட் ஏர் கேப்சர்' (Direct Air Capture) தொழில்நுட்பம், சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் 'திறன்-செங்கல்கள்' (Smart Bricks), மற்றும் விரிசல்களைத் தானே குணப்படுத்தும் 'பயோ-காங்கிரீட்' (Self-Healing Concrete).

போக்குவரத்தில் மணிக்கு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் 'ஹைப்பர் லூப்' ரயில்கள், ஹைட்ரஜன் எரிபொருள் மற்றும் வைஃபைக்குப் பதிலாக ஒளியின் வேகத்தில் தகவல் கடத்தும் 'லைஃபை' (LiFi) தொழில்நுட்பம்.
ஸ்மார்ட் போனுக்கு பதில் மெட்டா என நான்காம் தொழில் நுட்ப புரட்சி ஏற்படவுள்ளது.

இந்திய விஞ்ஞானிகள் பகுதியில் நாம் அறிய வேண்டிய
இந்தியாவின் முதல் பெண் தாவரவியல் முனைவரான இடவல்லத் கக்காடு ஜானகியம்மாள் அவர்களை அறிமுகம் செய்துள்ளார், கோவையின் இம்பீரியல் கரும்பு ஆய்வகத்தில் 18 வகை கரும்பு மாதிரிகளை ஆய்வு செய்து அதிக இனிப்புத் தரும் 3 புதிய கலப்பினக் கரும்புகளை உருவாக்கி இந்தியாவில் 'இனிப்புப் புரட்சிக்கு' வித்திட்டார். லண்டனில் இவரது பெயரில் 'மக்னாலியா காபுஸ் ஜானகி அம்மாள்' என்ற மலர் பெயரிடப்பட்டுள்ளது. மேலும், அமைதிப் பள்ளத்தாக்கு (Silent Valley) காடுகளைப் பாதுகாக்கப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் திகழ்ந்தார்.அவரது வழிகாட்டுதலில் இந்தியாவில் 12, தேசிய தாவரவியல் பூங்காக்கள் நிறுவப்பட்டன.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் பற்றிய 'ராக்கெட்ட்ரி' 
பார்த்திருப்போம்.அதன் பின் உள்ள திரவ எரிபொருள் தொழில்நுட்பம், வைக்கிங் ராக்கெட் என்ஜின் விகாஷ் (Vikas) இன்ஜின்,பி.எஸ்.எல்.வி உருவாக்கம்,திரவ எரிபொருள் உருவாக்கத்தில் சதீஷ் தவாண், ஏ.இ. முத்துநாயகம் போன்ற கூட்டு குழுவின் சாதனைகளை விடுத்து தனிநபர் வழிபாடாகவும் அறிவியல் பிழைகளுடனும் ராக்கெட்ரி படம் சித்தரிக்கப்பட்டதை விமர்சிக்கிறது.

சர்வதேச கண்டுபிடிப்பாளர் இண்டெக்ச்ஸ்  (GII) இந்தியா 81-வது இடத்தில் இருந்து 40-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.புதியது கண்டுபிடிப்பு invention, புதுமை புகுத்தல் innovation,improving முன்னேறுதல் என் மூன்று பகுதியை உள்ளடக்கியது ஆகும். அதே வேளையில், இந்தியாவில் காப்புரிமை (Patents) பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும்  நூல் தோலுரிக்கிறது. இந்தியாவில் காப்புரிமை கோரி விண்ணப்பிப்பவர்களில் வெறும் 4.2% பேருக்கு மட்டுமே காப்புரிமை கிடைக்கிறது என்ற அதிர்ச்சி தரும் புள்ளிவிவரத்தையும், கல்வி நிறுவனங்களில் பதவி உயர்வுக்காக மட்டுமே விண்ணப்பிக்கும் போக்கையும் விமர்சிக்கிறது.

சங்க இலக்கியப் பாடல்கள் (பட்டினப்பாலை), கணக்கதிகாரம் போன்றவற்றிலேயே அறிவியல் செய்திகள் பின்னிப் பிணைந்து இருந்தன.1870-இல் வந்த 'ஜன விநோதினி', 1903-இல் 'விவேக பானு', 1917-இல் 'கல்பதரு' போன்ற இதழ்களும், மகாகவி பாரதியாரின் 'பால பாரதி', 'விஜயா' இதழ்களும் தமிழ் அறிவியல் எழுத்துக்கு வித்திட்டன.

ம. சிங்காரவேலர் எளிய தமிழில் மூன்றே பத்திகளில் டார்வினின் கொள்கைகள் உட்பட 600-க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை ஒரு பைசா தமிழன், விடுதலை இதழ்களில் எழுதினார். பெ.நா. அப்புசாமி, கல்கி கோபாலகிருஷ்ணன், சுஜாதா (ரங்கராஜன்) ,ஏ.என் சிவராமன், தனிநாயகம் அடிகள் ஆகியோர் வெகுஜன மக்களிடம் அறிவியலைக் கொண்டு சேர்த்தனர்.

1981-இல் தொடங்கப்பட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 'துளிர்' இதழ், மனவை முஸ்தபாவின் அறிவியல் கலைச்சொல்லாக்க அகராதிகள், மற்றும் விஞ்ஞான் பிரச்சார் அமைப்பின் 'அறிவியல் பலகை' இணைய இதழ் ஆகியவை தமிழ் அறிவியல் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றன.
தற்காலத்தில் அறிவியல் கருத்துக்களை கட்டுரைகளை வெளியிடும் அனைத்து இதழ்களையும் குறிப்பிட்டுள்ளார்.

அறிவியல் என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய் அன்று; அது மானுட வாழ்வை மேம்படுத்தும் சக்தி என்பதைப் பறைசாற்றுகிறது. கடந்த கால இந்திய அறிவியல் சாதனைகளைப் பெருமையுடன் நினைவுகூர்வதோடு நிறுத்திவிடாமல், எதிர்காலத் தொழிற்புரட்சிக்கு இந்தியச் சமூகம் எவ்வாறு ஆயத்தமாக வேண்டும் என்பதையும், தமிழில் அறிவியல் கலைச்சொற்களும் இலக்கியங்களும் பெருக வேண்டியதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தும் ஒரு வழிகாட்டி நூலாக இது திகழ்கிறது.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment