Monday, 14 September 2026

book-62


இரண்டு உலகங்கள்
-வண்ணநிலவன் சிறுகதைகள்
தொகுத்தவர்-கே.என் செந்தில்

எழுபதுகளின் துவக்கத்தில் வண்ணநிலவன் எழுத ஆரம்பித்தார். அந்த காலக்கட்டத்தில் இருந்த வாழ்வினையும் தம் கதைகளின் வாயிலாக வரித்துக் கொண்டார்.

வாழ்க்கையின் விளிம்பில் நிற்கும் எளிய மனிதர்களின் துயரத்தையும், அவர்களுக்குள் எஞ்சியிருக்கும் அன்பையும் மனிதநேயத்தையும் கண்டடையும் சிறுகதைகளின் தொகுப்பே ‘இரண்டு உலகங்கள்’.”

வெளி உலகம் ஒன்றே, உள்ளுலகம் இன்னொன்று..அந்த இரண்டின் இடையே மனிதன் வாழ்கிறான்.
ஆரவாரமில்லாத, இயல்பான கதைமொழி.சாதாரண மனிதர்களையே கதையின் மையமாக்கி..மனிதர்களின் அக உணர்வுகளை நுட்பமாகச் சித்தரித்தல்.வறுமை, சமூகச் சூழல் போன்றவற்றால் ஏற்படும் வாழ்க்கைச் சிக்கல்களைப் பதிவு செய்தல்.
மிகக் குறைவாகச் சொல்லி வாசகனுக்குள் அதிகமான சிந்தனைகளை உருவாக்குதல்.

மனிதர்களின் இயல்புகள்  அவ்வளவு ஒன்றும் பிரகாசமானவை அல்ல. இருள் படிந்தவைதாம். ஆனால் இந்த இருளை மட்டுமே காட்டுவதல்ல; அதை மட்டுமே காட்டுவதல்ல. அதை  மீறும் வெளிச்சத்தைப் பற்றிப் பேசுவதே அவர் எழுத்து என்று பார்க்கிறேன் என்கிறார் சுகுமாரன்

இந்த தொகுப்பில் முன்னுரை எழுதிய கே.என் செந்திலின் அறிமுகம் இன்னும் புத்தகத்தை நுட்பமாக வாசிக்க தூண்டுகிறது. இத்தொகுப்பில்  தேர்ந்தெடுக்கப்பட்ட 34 கதைகள் உள்ளன.

வறுமையின் கொடுமையில் பிள்ளைக்கு பால் வாங்க கூடாத நிலையில் இருக்கும் சந்திரா தன் கணவனின் இயலாமையை நினைத்தும் கடந்த காலத்தில் தவறவிட்ட வாழ்க்கையை சிறையாக உணர்ந்தும் நினைத்தும் பீறிடுகிறாள் அயொத்தி கதையில்..இக்கட்டான சூழலில் சாரதாவுக்கு உதவும் இன்னொரு பெண் கடவுளாக தெரிகிறாள். பலாப்பழ வாடை சம்பள வாங்காத சீனிவாசனின் குடும்ப இயல்பை நம்மை கனக்க வைக்கிறது.

காலையில் அப்பாவை எழுப்புவது கூட கவித்துவமாக எழுதியிருப்பார்

/அவர் எழுந்துருக்க வெகுநேரம் வரை கூப்பிட வேண்டும்.அது சலனம்தான். அவர்களுக்கு நம்பிக்கை தரும் சலனம். நான்கைந்து அழைப்புகளில் அவர் எழுந்திருக்க வேண்டியதற்கான சிறு ஆயத்தம் மூச்சாக வெளிவரும். வேற்று ஆள் அறிந்து கொள்ள முடியாத நுட்பமான சிறு சீறல். அப்போது அவர் அவர்களுக்கு மெச்சத் தகுந்தவர்.அந்தச் சீறல் அடையாளம் அந்த நிகழ்ச்சியில் ரொம்பவும் முக்கியமானது. மீண்டும் அயர்ந்துபோகாமல், அவரை அழைக்க நல்ல தருணம் அப்போதுதான் ஆரம்பமாகும். ஒவ்வொருவரும் காய்ந்துபோன உதடுகளில் மலர்ச்சியைத் தருவித்துப் பார்த்துக் கொள்வார்கள். எல்லாம் தினமும் செய்யும் காரியம்/

‘எஸ்தர்’ என்பது ஒரு பெண்ணின் கதையாக மட்டும் இல்லாமல், வறுமையோடும் பற்றாக்குறையோடும் போராடும் ஒரு குடும்பத்தின் வாழ்க்கைச் சித்திரம். எதையும் பெரிதுபடுத்தாமல், சாதாரண மனிதர்களின் சாதாரண வாழ்க்கைக்குள் இருக்கும் பெரும் வலியை வண்ணநிலவன் மிக நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார்.

வாழ்ந்து கெட்ட குடும்பங்களுக்கு இணையானது வாய்ப்பு கைவிட்டுப் போன நடிகர்கள். பாபு வும் அப்படித்தான். ஓஹோனு நடித்த நடிகன் வாய்ப்பின்றி குடிப்பழக்கத்திற்கு அடிமையான வாழ்வை தத்ரூபமாக வெள்ளித்திரையில் சொல்லியிருப்ப்பார்.கரையும் உருவங்கள் கதை அக்காவுக்கும் வேலை இல்லா தம்பிக்கான உணர்வு பூர்வ உரையாடல்.அதற்கு இணையான கதை தம்பியின் அக்கா பாசத்தை சரஸ்வதி கதையில் கொண்டு வந்திருப்பார்

*பொதுவாகவே வாழ்வு, கடந்தகால நினைவுகளிலும் நிகழ்கால சம்பவங்களிலும் அல்லாடிக் கொண்டிருக்கிறது.நினைவிலும் நிஜத்திலும் நாட்கள் கழிகின்றன. நிஜம் நினைவுச் சருகாகி மனத்தை நிறைக்கிறது. இது மனத்தின் அவஸ்தையா, வாழ்வின் அவஸ்தையா என்பதே புரிவதில்லை. சம்பவங்களின் தொகுப்பு நாளாவட்டத்தில் நினைவுகளாய்ச் செமித்து, நிகழ்காலத்தில் மனம் ஒன்றவிடாமல் சஞ்சலப்படுத்துகின்றன. இச்சலனமே இல்லாமல் காலமும் சம்பவங்களும் உறைந்து போகக் கூடாதா என்று மனம் ஏங்கிற்று. நிகழ்காலமும் நடப்புலகும் உறைந்து, உலகு பனிச்சிற்பம் போல் ஆகிவிடக் கூடாதா? மனச்சிற்பங்கள் கதையில் வார்த்தைகளை சிற்பியைப் போல் செதுக்கியிருப்பார்.

/யாருடைய மனத்தில் எப்போது அன்பு சுரக்கும் என்று எப்படிச் சொல்ல முடியும்/உயர்வைப்போலவே தாழ்வும்
வெகு வேகமாகத்தான் வருகிறது/மெஹருன்னிசாவின் கதையுடன் வரும் வாசகம் காட்சியோடு ஒன்ற வைக்கிறது.

பெரும்பாலான கதை மாந்தர்கள் வறுமையில் உழல்பவர்களாக, தந்தை இல்லாதவராக,மனித மனங்களின் நம்பகமற்ற தன்மையை விளக்குவதாக இருக்கிறது. வண்ணநிலவனின் கதைகளில் உயர்ந்த சமூகப் பின்னணியைக் கொண்டவர்களைவிட சாதாரண மக்கள் முக்கிய இடம் பெறுகின்றனர்.

வறுமையை வெறும் சமூகப் பிரச்சினையாக மட்டும் காட்டாமல், அது மனிதர்களின் உறவுகளையும் மனநிலையையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை சித்தரிக்கிறார்.
எளிமைக்குள் ஆழமும், சாதாரண வாழ்க்கைக்குள் அசாதாரணமான மனித உணர்வுகளையும் காட்டுவதே வண்ணநிலவனின் சிறுகதைகளின் தனிச்சிறப்பு.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment