"வெளியே உள்ள உலகத்தை விட,
உள்ளே இருக்கும் உலகம் பெரியது."
ரூமியின் இந்த ஆழ்ந்த தத்துவ வரிகள், மனிதனின் அக உலகம் மற்றும் புற உலகத்திற்கு இடையே உள்ள வித்தியாசத்தையும், அக உலகத்தின் பிரம்மாண்டத்தையும் உணர்த்துகின்றன.
நாம் கண்களால் பார்க்கும் புற உலகம் முடிவற்றதாகத் தோன்றினாலும், அதை அறிவியல் மூலமும், பயணம் மூலமும் அளவிட முடியும். ஆனால், மனிதனின் அக உலகம் அதாவது நமது சிந்தனைகள், உணர்வுகள், கற்பனைகள், நினைவுகள் ஆகியவை எல்லைகளற்றது. அதை அளவிடவோ, எல்லை வகுக்கவோ முடியாது.
புற உலகிலுள்ள பொருட்கள் அனைத்தும், அக உலகிலிருந்து தான் உதிக்கின்றன. ஒரு சிற்பி ஒரு சிலையை வடிப்பதற்கு முன், அதைத் தனது மனதில் முதலில் உருவாக்குகிறான். எனவே, படைக்கும் திறன் கொண்ட அக உலகம், படைக்கப்பட்ட புற உலகை விடப் பெரியது.
புற உலகம் நமக்கு இன்பத்தையும், துன்பத்தையும், சவால்களையும் தரும். ஆனால், உண்மையான அமைதியும், ஞானமும், ஆன்மீக விடுதலையும் அக உலகிற்குள் பயணிப்பதன் மூலமே கிடைக்கும். தியானம், சுய-ஆய்வு போன்றவை இந்த அக உலகத்தைப் புரிந்துகொள்ள உதவும் கருவிகள்.
புற உலகத்தை விட அக உலகம் பிரம்மாண்டமானது. எடுத்துக்காட்டாக நாம் உறங்கும்போது, ஒரு சிறிய அறைக்குள் இருக்கிறோம். ஆனால், அதே நேரத்தில் கனவில் நாம் பிரம்மாண்டமான மலைகளில் பறக்கலாம், அறியாத நாடுகளுக்குச் செல்லலாம், அல்லது காலங்களைக் கடந்து பயணிக்கலாம். ஒரு சிறிய மூளைக்குள் இவ்வளவு பெரிய உலகத்தை நாம் உருவாக்க முடிகிறது.
அதே போல, நாம் நிகழ்காலத்தில் ஒரு இடத்தில் அமர்ந்திருக்கிலாம். ஆனால், நம் மனம் கடந்த காலத்தின் இனிமையான நினைவுகளை மீட்டிப் பார்க்க முடியும், அல்லது எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளைக் காண முடியும். நாம் விரும்பும் எவரையும், எந்த இடத்தையும் நொடிப் பொழுதில் நம் நினைவில் கொண்டு வர முடியும்.
புற உலகத்தில் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு அல்லது ஒரு துயரமான நிகழ்வு ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே நிகழ்கிறது. ஆனால், அந்த நிகழ்வு நம் மனதில் ஏற்படுத்தும் மகிழ்ச்சி அல்லது துயரம், பல ஆண்டுக்கணக்கில் நீடிக்கலாம். வெளியே நடக்கும் சிறிய தூண்டுதல், மனதுக்கள் ஒரு பெரிய உணர்ச்சிப் பெருக்கை ஏற்படுத்துகிறது.
ரூமியின் இந்த வரிகள், நம்மை நமக்குள் திரும்பிப் பார்க்கச் சொல்கின்றன. புற உலகைத் தேடி ஓடுவதை விட, நம் அக உலகைப் புரிந்துகொண்டு, அதை மேம்படுத்துவதே உண்மையான மகிழ்ச்சிக்கும், ஞானத்திற்கும் வழி என்பதை உணர்த்துகின்றன.
நம் அக உலகம் நமக்குள் இருக்கும் பெரிய பிரபஞ்சமாகும். அதை புரிந்து கொள்ளும் போது, நாம் யார் என்பதையும், நம் வாழ்வின் நோக்கம் என்ன என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
🌸
No comments:
Post a Comment