#Reading_Marathon2026
#26RM009
Book No:41/150+
Pages:-525
நெடுங்குருதி
-எஸ் ராமகிருஷ்ணன்
இந்த நாவல் வேம்பலை என்ற புனைவில் உருவான ஒரு கிராமத்தை மையமாகக் கொண்டது..இது ஆசிரியரின் பால்ய கால நினைவுகளில் இருந்த கிராமங்களின் வெயிலும் மூர்க்கமும் கலந்த ஒரு மறுவடிவம் என அவரே குறிப்பிடுகிறார்
வேம்பலை வரைபடத்தில் இல்லாததொரு ஊர்" என்று குறிப்பிடப்பட்டாலும், அது ராமநாதபுரம் மாவட்டத்து கிராமங்களின் நுட்பங்களையும், அங்குள்ள மனிதர்களின் வாழ்வியலையும் பிரதிபலிக்கிறது.
கத்தியை யாரோ சாணை பிடிப்பது போல தெருவை வெயில் தீட்டிக் கொண்டிருந்தது எனும் வரி வெக்கையான உலகை நமக்கு காட்டுகிறது.
சண்டையிட்டு பிரிந்த தந்தையின்றி தாயின் அரவணைப்பில் வளரும் நாகு என்ற சிறுவனின் வாழ்விலிருந்து தொடங்கி, அவனது குடும்பம் மற்றும் வேம்பலை கிராமத்து மனிதர்களின் தலைமுறை கதையை விவரிக்கிறது.வேணியும் நீலாவும் நாகுவுடன் பிறந்தவர்கள்.எதிர்பாராத விதமாக நீலா இறந்துவிட, வேணிக்கு மட்டும் திருமணம் நடக்கிறது.
நாகுவின் மணவாழ்க்கை, விரும்பிய பெண் பற்றிய பகுதிகள் வருகிறது.
ஆதிலட்சுமி எனும் மாற்றுத்திறனாளி சிறுமி பகல் கனவு காண்பவள், அனைத்தி விஷ்யங்களையும் அறிந்து கொளபவள்,மரண படுக்கையில் இருக்கும் சென்னம்மா இறக்கும் சடங்கு வாழ்ந்த பகுதியை காண்பிப்பது கதையின் குறியீடு போல் உள்ளது. சொந்த வீடு ஊர் எல்லாருக்கும் நெருக்காமானது. சின்னு, மல்லிகா, வேணி போன்ற கதாபாத்திரங்கள் மூலம் மனிதர்களின் ஆசாபாசங்கள், ஏக்கங்கள் மற்றும் வாதைகளை ஆசிரியர் வெளிப்படுத்துகிறார்.
வழிப்பறிக் கொள்ளைக்குப் பெயர் பெற்ற வேம்பர்கள் கொற்கைப் பாண்டியனின் வீரர்களுக்குப் பயந்து தப்பி ஓடி, வேப்ப மரங்கள் தங்களை உள்வாங்கிக் காப்பாற்றியதாக நம்பப்படும் ஒரு நிலப்பரப்பில் குடியேறியவர்கள்.வெல்சி துரை வேம்பர்களை அடக்க முயன்றது. ஒரு மோதலில் வேம்பன் ஒருவன் வெல்சி துரையின் குரல்வளையை அறுத்துவிடுகிறான்.இதற்குப் பழிவாங்கத் துடித்த வெல்சி துரை, வேம்பலை கிராமத்தைச் சூழ்ந்து கொண்டு, ஒரு கிணற்றுக்குள் ஒளிந்திருந்த 42 வேம்பர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.
வேறு ஊருக்கு மக்கள் செல்லக் கூடாது என குதிங்கால் நரம்பு மற்றும் குரல் நரம்பு அறுக்கப்பட்ட வரலாற்றுத் துயரமும் இதில் விரிவாகப் பேசப்படுகிறது.இச் சமூகத்தின் வீரமும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளும்,தெரிய வருகிறது.
வேம்பலையின் மீது படர்ந்திருக்கும் தீர்க்க முடியாத சாபத்தின் துர்கனவாகவும், வசியக் குரலால் மனிதர்களைத் தன்பால் ஈர்க்கும் ஒரு நிலப்பரப்பாகவும் வேம்பலை காட்டப்படுகிறது.
ரேகை சட்டம் (Criminal Tribes Act)
இதன்படி, ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் காவல் நிலையத்தில் தங்கள் கைரேகையைப் பதிவு செய்ய வேண்டும் மற்றும் இரவில் அங்கேயே தங்க வேண்டும் என்பது விதியாக இருந்தது போன்ற அடக்குமுறைகளால் ஒரு சமூகம் எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதையும், அதன் விளைவாக அவர்கள் எதிர்கொண்ட வறுமையையும் மூர்க்கத்தையும் நாவல் பதிவு செய்கிறது.
இச்சட்டத்தினால் நாகுவிற்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இதற்கு நாகுவின் குடும்பம் பலியாகிறது, வேம்பலையின் இயல்பான முகம் மக்களை எவ்வாறு அலைக்கழிக்கிறது என்பதே மையம். இதில் பல்வேறு கதாபாத்திரங்கள் மனிதநேயத்தை பேசுகிறது
நாகுவின் மகள் வசந்தா எங்கு செல்வதென தெரியாமல் நிற்கும்போது தன் தந்தை வாழ்ந்து மறைந்த வேம்பலைக்கே திரும்புகிறாள்.சேதுவிற்கும் கிட்ணாவிற்கும் பிறந்த ஆண் குழந்தைக்கு, தனது தந்தையின் பெயரான 'நாகு' என்ற பெயரைச் சூட்ட வசந்தா சொல்கிறாள். நாவலின் இறுதியில், வசந்தா மற்றும் சேதுவின் சாமான்கள் ஏற்றிய வண்டி வேம்பலைக்குள் நுழையும்போது, அந்த ஊர் தன் சுபாவம் மாறாமல் அப்படியே இருக்கிறது. வானிலிருந்து கொக்குகள் நிசப்தமாக வேம்பலையில் இறங்குகின்றன.என்பது
திரைக்காட்சி போல் நம்முள் விரிகிறது
வேம்பலையை நோக்கி மனிதர்களை அழைத்துக் கொண்டே இருக்கின்றன. ஒரு பிரமாண்டமான கனவின் திரைமீது அறியப்படாத யதார்த்தம் எழுதுகிறது
#ரசித்தது
*வாழ்ந்து இறந்த பிறகுதான் ஊரின் மீதும் வீட்டின் மீதும் நேசம் அதிகமாகிவிடுகிறது.இறப்பிற்கு பிறகும் மனிதனுக்கு ஒரு பிடிமானம் தேவைப்படுகிறது.
வாழ்க்கை என்பது மனிதர்களைப் பொருட்படுத்தாத ஒரு சக்தி. மனிதர்கள் எவ்வளவோ போராடினாலும், வாழ்வு அதன் போக்கில் எவ்வித சலனமுமின்றி எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு சென்றுவிடுகிறது
*உலகம் மிக மர்மமானது. எண்ணிகையற்ற தெரியாதவைகளால் நிறைந்தது. நீயும், நானும் அருகாமையிலிருக்கும் இந்த நிமிஷம் என்றாவது ஒரு நாள் வியப்பாக உனக்கு தோன்றும்.அப்போது தான் இந்த நிமிஷத்தை நீ புரிந்துகொண்டிருக்கிறாய் என்று அர்த்தம்!"
*மனிதர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதும், பிரிந்து போவதும் தற்செயலானவை அல்ல; அவை உலகம் என்ற மர்மமான இயந்திரத்தின் ஒரு பகுதி. ஒவ்வொன்றும் ஒரு காரணத்துடனேயே நடக்கின்றன
*ஒரு மச்சத்தைப் போல பிறந்தது முதல் உடலோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது எனது ஊர்.
*உலகில் அன்பை விட மேலானது ஒன்றிருக்கிறது, அது பெயரிடப்படாதது,
கருணையை விடவும் நெகிழ்ச்சியானது, அன்பால் வேதனையை பகிர்ந்துகொள்ள மட்டுமே முடியும், எது வேதனைய இல்லாமல் செய்கிறதோ அது அன்பை விட மேலானது,
நாம் அன்பை விட மேலான ஒன்றிற்காக காத்துக்கொண்டிருக்கிறோம்.
*ஆயிரக்கணக்கான பறவைகள் கடந்து போனபோதும் வானில் அதன் சுவடேயில்லை.
*வாழ்வின் சந்தோஷங்களை நினைத்துப் பார்த்துக் கொள்கின்ற எவரும் கண்ணீர் சிந்திய நிமிஷங்களை நினைத்துப் பார்த்துக் கொள்வதில்லை."
மனிதனின் வேர்கள் நிலத்திலும், நினைவுகளிலும்,உள்ளன; அவற்றிலிருந்து விலகும்போது அவனது அடையாளமும் நீங்குகிறது" என்பதே இந் நாவல்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment