கி.மு வில் சோமு
-சிம்புதேவன்
இயக்குநர் மற்றும் சித்திரக்கதை ஓவியரான சிம்புதேவன் (சிம்பு) படைத்த ‘கி.மு.வில் சோமு’ என்பது அறிவியல் கற்பனையும் நகைச்சுவையும் இணைந்த ஒரு சுவாரசியமான சித்திரக் கதையாகும். இக்கதை ஒரு கால இயந்திரத்தைக் (Time Machine) கண்டுபிடித்து, அதன் மூலம் கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பயணம் செய்யும் கதாநாயகனின் சாகசங்களை அடிப்படையாகக் கொண்டு தொடங்குகிறது.
கதையின் தொடக்கத்தில், கதாநாயகன் சோமுவின் தாத்தா தனது விவசாய நிலத்தில் கிணறு தோண்டும்போது கிடைத்த ஒரு விசித்திரமான பழங்காலப் பலகையைக் கண்டெடுக்கிறார். அப்பலகையில் உள்ள குறியீடுகளின் அர்த்தத்தை அறிய அவர் 12 ஆண்டுகள் தீவிர ஆராய்ச்சி மேற்கொள்கிறார். ஆனால், ஒரு நாள் இரவில் அவரது ஆய்வகத்தில் ஏற்பட்ட எதிர்பாராத வெடிவிபத்தில் அவர் உயிரிழக்கிறார். இறப்பதற்கு முன் அவர் விட்டுச் சென்ற குறிப்புகளையும் சூத்திரத் தாளையும் சோமு பத்திரமாக எடுத்து வைத்துக்கொள்கிறான். பின்னர் சோமு படிப்பிற்காக மெட்ராஸுக்கு அனுப்பி வைக்கப்படுகிறான்
பதினெட்டு ஆண்டுகள் கடக்கின்றன. சோமு வளர்ந்து ஒரு திறமையான அறிவியலாளராக மாறுகிறான். அவனுடைய பால்ய நண்பனான வெங்கி ஒரு பட்டறையில் மெக்கானிக்காகப் பணியாற்றுகிறான். சோமு தன் தாத்தா விட்டுச்சென்ற பாதியில் நின்ற அதிசயக் குறிப்புகளைக் கொண்டு, தன் ஆராய்ச்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து யுரேகா’ என்று மகிழ்ச்சியடைகிறான்
காக்ஸ்
ஆறு மாதங்களாகச் சிறப்பு மருந்து கொடுத்து வளர்க்கப்பட்ட காகங்களின் உடலிலிருந்து கிடைக்கும் பறக்கும் சக்தியும், தலையில் அணியும் ‘காக்ஸ் தொப்பி’யின் செயல்பாடும் சேர்ந்து இந்த இயந்திரத்தை இயக்குகின்றன
இதன் மூலம் கி.மு., கி.பி. என எந்தவொரு வரலாற்று காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் எளிதாகப் பறந்து செல்ல முடியும்
சோமு இந்த இரகசியக் கண்டுபிடிப்பைத் தன் நண்பன் வெங்கியிடம் விவரிக்கும்போது, சோமுவின் மாமா மகளான சிறுமி ருக்கு அதை மறைந்திருந்து கேட்டுவிடுகிறாள். அவளும் பயணத்தில் கலந்துகொள்ள வற்புறுத்தவே, சோமு, வெங்கி, ருக்கு ஆகிய மூவரும் ‘காக்ஸ்’ இயந்திரத்தில் ஏறி முதன்முதலாக கி.பி. 1450-ஆம் ஆண்டை நோக்கித் தங்கள் காலப் பயணத்தைத் தொடங்குகிறார்கள்
தாத்தாவின் கனவை நனவாக்கி, காகங்களின் ஆற்றலால் இயங்கும் ‘காக்ஸ்’ கால இயந்திரத்தின் மூலம் சோமுவும் அவனது நண்பர்களும் மேற்கொள்ளும் இந்த பயணத்தின் அறிமுகமே, கதையின் சுவாரசியமான அடுத்தடுத்த சாகசங்களுக்கு வித்திடுகிறது..இறுதியில் அவர்கள் செய்த சாகசம் என்ன? கால இயந்திரம் இருந்தால் என்னென்ன நடக்கும்? என்பதை திரில்லுடன் நகைச்சுவையுடன் சொல்லப்பட்டுள்ளது.
கதைகளின் ஜீவனே டைமிங் காமெடிதான்
*சோமுவின் ஆய்வகத்திற்குள் நுழையும் வில்லன் பிச்சு, தான் "பி.எஸ்.ஸி. இயற்பியல் படிச்சு 14 பேப்பர் அரியர்ஸ் வச்சிருக்கேன்" என்று பெருமையாகக் கூறிக்கொண்டே கால இயந்திரத்தின் நுட்பங்களைப் புரிந்து கொள்ள முயற்சிப்பான்
*ரோமாபுரியில் பிடிபடும் வில்லன் கபாலியை ஜூலியஸ் சீசர் மைதானத்தில் கொடூரக் காளையுடன் மோத விடுவார். ஆனால், தான் "அலங்காநல்லூர்காரன்" என்ற கெத்துடன் கபாலி ஜல்லிக்கட்டு பாணியில் அந்த மாட்டை அடக்கி அரசரையே வியப்பில் ஆழ்த்துவான்
தலைப்புகளே அனைத்துமே நகைச்சுவை பாணியில் இருக்கும். ஜூராசிக்கில் சுப்புணி,பிச்சுப் பயலின் பித்தலாட்டம்,காட்டிலே லூட்டி,
வலையில் சிக்கிய வெங்கி, கணவாய் பகுதியில் கபாலி,கேமரூன் கிளைமேக்ஸ்,கில்லாடி கிளியோபாட்ரா என படிக்க சுவாரஸ்யத்தைத் தூண்டும்.
*பணம் மற்றும் புகழ் மீதான பேராசை கண்ணை மறைத்ததால், தவறான வழியில் சென்று கால இயந்திரத்தைக் கைப்பற்ற முயன்றதாக சோமுவின் மாமா ஒப்புக்கொண்டு மனமாற்றம் அடைகிறார். பேராசையும் சுயநலமும் மனிதனைத் தவறான பாதைக்குக் கொண்டு செல்லும் என்பது இதன் மூலம் உணர்த்தப்படுகிறது
எதிர்காலச் சென்னையில் (கி.பி. 2090) தப்பிக்கும் முயற்சியில் பறக்கும் கம்பளம் தீப்பற்றி எரிகிறது. அப்போது ருக்குவை நோக்கிப் பாயும் துப்பாக்கிக் குண்டுக்கு இடையே, குட்டி டினோசரான சுப்புணி' குறுக்கே பாய்ந்து தன் உயிரைக் கொடுத்து ருக்குவைக் காப்பாற்றுகிறது
கபாலி ருக்குவை மீட்டெடுத்து வர, அனைவரும் 'காக்ஸ்' இயந்திரத்தில் ஏறி மீண்டும் நிகழ்காலத்திற்கு (1999 மார்ச் 30) திரும்புகிறார்கள். ஆனால்
ஒரு விபத்து நடந்து எதிர்பாராத இழப்ப்ய் ஏற்படுகிறது
மறுநாள் ருக்குவின் பிறந்தநாள். தன்னைக் காப்பாற்ற உயிர்நீத்த சுப்புணியை நினைத்து அழுதுகொண்டே உறங்கும் ருக்குவின் கனவில், அவர்கள் காலப் பயணத்தில் சந்தித்த அசோகர், ஜூலியஸ் சீசர், கிளியோபாட்ரா, கொலம்பஸ் ஆகிய வரலாற்றுத் தலைவர்களும் சுப்புணியும் ஒன்றுகூடி ருக்குவிற்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிப்பதுடன் கதை இனிதே நிறைவடைகிறது
நல்லதொரு கார்டூன் சித்திர நாவல்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment