Monday, 12 January 2026

ஜா-16


வாழ்க்கைக்கு ஹைக்கூ 19

"சூரிய ஒளியைக் காணாமலே, 
அந்தக் குளிர்கால கமிலியா மலர் 
பூத்துக் குலுங்குகிறது."

- கோபயாஷி இஸ்ஸா

பொதுவாக மலர்கள் மலர்வதற்குச் சூரிய ஒளி மிக அவசியம். சூரியனைப் பார்த்தால் தான் பல பூக்கள் மலரும். ஆனால், இந்தக் கவிதையில் வரும் "குளிர்கால கமிலியா" (Winter Camellia) மலர், சூரிய வெளிச்சம் இல்லாத, இருண்ட மற்றும் குளிர்ந்த சூழலிலும் முழுமையாக மலர்கிறது.

இங்கு சூரிய ஒளி என்பது  சாதகமான சூழ்நிலை, பாராட்டு அல்லது நமக்கு மற்றவர்கள் தரும் ஆதரவைக் குறிக்கிறது. மலர்வது என்பது நம்முடைய செயல்பாடு அல்லது வெற்றியைக் குறிக்கிறது. இந்த ஹைக்கூவின் மூலம், இஸ்ஸா: "சிறப்பாகச் செயல்பட, சாதகமான சூழ்நிலையோ அல்லது பிறரின் ஆதரவோ அவசியம் இல்லை. மனதில் உறுதி இருந்தால், இருளில்கூட நம்மால் ஒளிர முடியும்." என்ற கருத்தை கூறுவதாக எடுத்துக்கொள்ளலாம்.

இதற்கு உதாரணமாக நம் காலத்தில் வாழ்ந்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களை எடுத்துக்கொள்ளலாம். அவர் பிறந்தது ராமேஸ்வரத்தில் ஒரு மிகச் சாதாரணமான குடும்பத்தில். மின்சார வசதியோ, பண பலமோ, பெரிய பின்புலமோ அவருக்குக் கிடையாது. தினசரி செய்தித்தாள் போட்டு தனது செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு வறுமை இருந்தது. இது "சூரிய ஒளி இல்லாத" நிலையைக் குறிக்கிறது. ஆனால், கலாம் அவர்கள், வசதிகள் இல்லை என்று அவர் முடங்கிவிடவில்லை. மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்தார். தோல்விகளைக் கண்டார் (விமானப்படை வேலை கிடைக்காதது). தன் விடாமுயற்சியால் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், அனைவரும் மதிக்கத்தக்க ஜனாதிபதியாகவும் உயர்ந்தார்.

பொதுவாக, "யாராவது என்னைப் பாராட்டினால் தான் நான் செய்வேன்," "சூழ்நிலை சரியாக அமைந்தால் தான் நான் தொடங்குவேன்" என்று நாம் பல நேரங்களில் காத்திருக்கிறோம். சூரியன் வரட்டும் என்று கமிலியா காத்திருப்பதில்லை. அதுபோல, பிறர் பாராட்டுவதற்கோ, உதவிகள் கிடைப்பதற்கோ காத்திருக்காமல், நமது கடமையைச் செய்து வரவேண்டும். நமது திறமை தானாகவே ஒருநாள் வெளிப்படும்.

வாழ்க்கையில் கஷ்டங்கள் (குளிர்காலம்) வரும்போது நாம் சோர்ந்து முடங்கி விடுகிறோம். கடினமான காலக்கட்டத்தில்தான் நம் உண்மையான வலிமை வெளிப்பட வேண்டும். இருள் சூழ்ந்திருந்தாலும், நம்மால் பிரகாசிக்க முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

"எனக்கு அந்த வசதி இல்லை, இந்த வசதி இல்லை" என்று குறை கூறிக்கொண்டே இருப்பதை விட, இருப்பதை வைத்துச் சிறப்பாகச் செயல்படுவதே அழகு. 

இதைத் தான் ரூமி, “இருள் நிறைந்த பாதையில் ஒளியில்லையே என்று தேடாதீர்கள். சற்று கவனித்துப் பாருங்கள், நீங்களே அந்த ஒளியைத் தரும் தீபமாக இருக்கக்கூடும்" என்கிறார்.

No comments:

Post a Comment