வாழ்க்கைக்கு ஹைக்கூ 18
"எவ்வளவு குளிர்ச்சி!
மணியை விட்டு
விலகிச் செல்லும் அந்த ஓசை..."
- யோசா பூசன்
இந்தக் கவிதை ஒரு காற்றில் அசையும் மணியிலிருந்து (Wind chime) எழும் ஓசையை விவரிக்கிறது.
காற்றால் மணி ஆடும்போது சத்தம் வருகிறது. ஆனால், அந்தச் சத்தம் மணிக்குள்ளேயே இருந்தால் அது யாருக்கும் கேட்காது. அந்தச் சத்தம் மணியை விட்டுப் பிரிந்து, காற்றில் கலந்து, வெளியே வரும்போதுதான் அது இனிய ஒலியாக மாறுகிறது.
இங்கே "குளிர்ச்சி" என்ற சொல் "மன அமைதி" மற்றும் "பாரமற்ற மனநிலை"யைக் குறிக்கிறது.
இந்த ஹைக்கூவின் மூலம் பூசன் "ஒன்றைப் பற்றிக்கொண்டே இருப்பதை விட, அதை விடுவிப்பதில்தான் அழகும் பயனும் இருக்கிறது." என்கிறார். ஓசை மணியை விட்டுப் பிரியும் அந்த நொடிதான் ஆனந்தத்தைத் தருகிறது.
"ஒரு தாய் தன் பிள்ளையை வளர்ப்பதை" நினைத்துப் பாருங்கள். ஒரு தாய் தன் குழந்தையைப் பொத்திப் பொத்தி வளர்க்கிறாள் (மணி). ஆனால், அந்தக் குழந்தை வளர்ந்து, வீட்டை விட்டு வெளியே சென்று, தன் சொந்தக்காலில் நின்று சாதிக்கும்போதுதான் (ஓசை பிரியும்போது), அந்தத் தாய்க்கு உண்மையான பெருமையும், மனநிறைவும் கிடைக்கிறது.
"என் பிள்ளை என்னுடனேயே இருக்க வேண்டும்" என்று நினைத்தால் (ஓசை மணிக்குள்ளேயே இருந்தால்), அங்கே வளர்ச்சி இல்லை; மகிழ்ச்சி இல்லை. பிள்ளையை உலகத்திற்குப் பறக்க விடும்போதுதான் வாழ்க்கை முழுமையடைகிறது.
அதே போல, ஒரு பூ, தன் நறுமணத்தைத் தனக்குள்ளேயே வைத்துக்கொண்டால் அதற்குப் பயன் இல்லை. அது காற்றோடு கலந்து, பூவை விட்டு விலகிச் செல்லும்போது தான் பயன் ஏற்படுகிறது.
நாம் பல நேரங்களில் கடந்த காலக் கசப்புகளையோ, கோபத்தையோ அல்லது நமது பதவியையோ, நமக்குப் பிடித்தவர்களையோ இறுக்கமாகப் பற்றிக்கொண்டு இருக்கிறோம்.
மணி எப்படி ஓசையைத் தக்க வைத்துக்கொள்ளாமல் காற்றில் பறக்க விடுகிறதோ, அதுபோல உங்கள் கவலைகளையும், எதிர்பார்ப்புகளையும் மனதை விட்டு வெளியேற்றும் போது தான் மனம் "குளிர்ச்சியாக" அமைதியாக இருக்கும்.
கீதையில் சொல்வது போல, "கடமையைச் செய், பலனை எதிர்பாராதே." என்ற தத்துவம் மனநிறைவுக்கு முக்கியம்.
நாம் ஒரு நல்ல செயலைச் செய்தவுடன் (ஓசை எழுப்பியவுடன்), அதை மறந்துவிடுவது நல்லது. "நான் செய்தேன், எனக்குப் பாராட்டு வேண்டும்" என்று அந்தச் செயலையே பிடித்துக்கொண்டு இருக்க வேண்டியதில்லை. அந்தச் செயல் உலகத்தைச் சென்றடையட்டும்; நாம் அதிலிருந்து விலகி நிற்கலாம்.
நம்மிடம் இருக்கும் அறிவு, செல்வம் அல்லது அன்பு ஆகியவை நமக்குள்ளேயே இருந்தால் யாருக்கும் பயனில்லை.
அது மணியை விட்டு வரும் ஓசை போல, உங்களை விட்டுப் பிறருக்குச் செல்லும்போதுதான் உண்மையான மதிப்பைப் பெறுகிறது.
Attachment leads pain; Detachment leads peace!
No comments:
Post a Comment