#Reading_Marathon2026
#25RM009
Book No:8/150+
Pages:-127
தண்டகாரண்யத்தில் சீதை
-இமையம்
தமிழ் இலக்கியத்தில் சமூகத்தின் ஓரங்களில் வாழும் மனிதர்களின் மௌன வலிகளையும் மறைக்கப்பட்ட குரல்களையும் தீவிரமாக பதிவு செய்து வருபவர்.சிறுகதையோ, நாவலோ தனித்து ஒலிக்கும் குரலாக கதைமாந்தர்களின் தன்மை வெளிப்படும். சாதாரண ஒரு புள்ளியில் கதையின் மையசரடை சொற்களாலேயே அதனை வாசகனுக்கு தெரியப்படுத்துவார்.கிராமிய வாழ்வியலோ,
தமிழ்ச் சிறுகதை உலகில் தனித்த குரலாக விளங்குபவர். கிராமிய வாழ்வியல், ஒடுக்கப்பட்ட மக்களின் வலி, பெண்களின் மனநிலை, உறவுகளின் மெல்லியச் சிக்கல்கள் ஆகியவை அவரது சிறுகதைகளின் மையம். சாதாரணமான எழுத்துக்கள் தான் ஆனால் ஆழமான கதை சொல்லின் வழியாக நம்மை எப்போதும் கவர்ந்து இழுப்பவர் இமையம் அவர்கள். சமூக கருத்துக்கள் அவருடைய கதைகளில் அர்த்தமுள்ளதாய் பதிவு செய்திருப்பார். வாசிக்கும் ஒவ்வொருவரையும் ஒரு கதைகளின் வாயிலாக அல்லது ஒரு கதாபாத்திரத்தின் வாயிலாக தன்னை உணர வைத்து, எது சமூக நீதி? என்பது போல் சிந்திக்க வைப்பார்.அந்த அறக்கருத்துக்களை வாசிக்கும் நம்மிடம் கடத்துவார் ,அதுவே அவரின் சிறுகதையின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டில் கொம்பன் என்னும் மாட்டினை ஆசையாக வளர்க்கிறார் மருது. வாடி வாசலில் அவிழ்க்கப்பட்ட மாடு வருவது தான் கதையின் ஆரம்ப வரியாக இருக்கிறது.அதற்கு அடுத்தாற் போல் மாடு பிடிபடுகிறது.அது மருதுவுக்கு அவ்வளவு அவமானத்தை தருகிறது.. அந்த அவமானம் அவரின் ஆணவமாய் மாறி என்னவெல்லாம் செய்கிறார்,நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அவரின் குணம் மாறுகிறது. இப்படி எல்லாம் ஒருவர் இருப்பாரா என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொண்டு மருதினை பின்தொடர்ந்து இந்த கதைகளின் வழியே சென்றால் இறுதியில் மனம் கணக்க வைக்கும் முடிவு ஒன்று வருகிறது.
ஆசிரியர் கதை ஒன்று அல்லது பள்ளியில் நடைபெறும் கதை ஒன்று அவருடைய தொகுப்புகளில் தவறாமல் இடம்பெற்று விடும். அதன் வழியே அவர் காட்டும் வெளிச்சம் நாம் பார்க்காத கோணத்தில் இருக்கும் அப்படித்தான் பொட்டச்சி மனசு கதைகளிலும் சுமதிக்கும் சந்திரனுக்கும் இடையே நடைபெறும் மனப்போராட்டம் ஜாதி ரீதியான கண்ணோட்டத்தில் ஆழமாக அந்தக் கதை இருக்கும்.
உங்களுக்கு தீங்கிழைக்காத எந்த ஒரு ஆதிவாசியையும் கேடு விளைவிக்காத எந்த ஒரு விலங்கையும் வதம் செய்யாதீர்கள். மீறி செய்தால் அதர்மமான காரியங்களை ராமன் செய்தான் என பெயர் வந்துவிடும். வழக்கமாக ராமாயணத்தில் ராமனை பழித்துறைக்க வேண்டுமானால் அவர் வானரங்களிடம் மனிதனைப் போல் வாழ வேண்டும் என்று கற்பித்தல் அறம் ஆகாது என்று சொல்வதாக பல வழக்காடு மன்றங்கள் நடப்பதுண்டு. இங்கே ராமனுக்கு புத்தி புகட்டும் சீதை என்ன வழியை கையாண்டால் என்பதுதான் தண்டகாரியத்தில் சீதை எனும் கதை.
"மனம் ஆசைகளால் நிரம்பி இருக்கும் போது, சுயநலத்தின் பிடியில் மனம் சிக்கி இருக்கும் போது,
மரணத்தை கண்டு மனம் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும்போது, தர்மத்துக்கும் அதர்மத்திற்கும் வேறுபாட்டை உணராத போது, தவம் யாகம் செய்து பெறுவது ஞானமா ? என்ற கேள்வி ராமனை நோக்கி சீதை கேட்பாள். இந்த கேள்வி படிக்கும் நம்மையும் ஒரு நிமிடம் உலுக்க வைப்பது போல் இருக்கும். எந்த தவறு செய்தாலும் நாம் ஒரு பரிகாரம் செய்தால் அந்த தவறுகள் நீங்கிவிடும் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டும் விதமாக அல்லது பின் நடக்க இருப்பதை ராமனுக்கு சீதை முன்பே சொல்லும் விதமாக இந்த கதை மனதுக்கு நெருக்கமாக இடம் பெற்றிருக்கும். "ஆயுதம் தான் அதிகாரத்தை கொண்டு வருகிறது" என்பது நடைமுறை நாட்களில் கூட நாடுகளைப் பற்றி நாம் நினைத்துப் பார்க்க வைக்கிறது.
சாவித்திரி என்பவள் தன் அழகின் மீது கர்வம் கொண்டவள். தன்னை நாடிவரும் ஆண்களை ரசித்து விட்டு தூக்கி எறிபவள். அப்படி செய்யும் போது ஒரு கட்டத்தில் சாவித்திரியே தூக்கி எறிகிறான் ஒருவன் .அப்போது உண்மையான முகம் யாருக்கு என்பதை அருள்மணி கதாபாத்திரத்தின் வாயிலாக இந்த முகம் கதையை சொல்லி இருப்பார். "கரும்பு கட்டு தூக்குறவளுக்கு கரும்பு வெட்டுறவன் தான் பிரிசனா வருவான்" என்ற வார்த்தை எப்படி அவள் மனதை மாற்றியது என்பதை இக்கதை
அடங்காத அழுகை கதை ஆனந்த விகடனில் வந்த போது வாசித்தேன். அப்போதே இக்கதை மிக நெருக்கமாக மனதிற்குப் பட்டது.. ஆசிரியர் மாணவியை பார்த்து நீ எந்த ஊர் ?என்று கேட்கிறார் அதற்கு அவள் பதில் சொல்ல வேண்டும் இதுதான் கதை .இந்த ஒரு வரி கதையை படிக்கும் அனைவரையும் இழுக்கும் விதமாக அந்த கதை செல்கிறது. இந்த ஒரு வரியை அவர் 5 பக்கங்களில் சுவாரசியம் குன்றாமல் என்னதான் சொல்ல வருகிறார் என்பதை அந்த ஆசிரியரைப் போலவே நாமும் அந்த மாணவியின் வாயிலிருந்து வரும் பெயரைக் கேட்க ஆவலாய் உள்ளது போல் அடங்காத அழுகை கதை இருக்கும்.
கூடுன்னாலும் குருவிக்கு அதுதான் அரண்மனை என்ற மகன் ராமனிடம் வயதான கிராமத்தில் வாழும் துளசியம்மாள் சொல்கிறாள். மகனும் மருமகளிடம் ஒரு கட்டத்துக்கு மேல் வரக்கூடாது என்று சுயமரியாதையுடன் வாழும் பெரியவர்களை காலம் சில சூழ்நிலைகளில் மகனிடமோ அல்லது மருமகளிடமோ வந்து தங்க வைத்து விடுகிறது.இந்த மனப்போராட்டம் பல பெரியவர்களிடம் இருக்கிறது. விரிசல்களை தவிர்த்து வாழ நினைக்கும் போது அவர்களின் சுயமரியாதை எவ்வாறெல்லாம் சுரண்டப்படுகிறது அல்லது உண்மையான கோர முகங்களை பார்க்கும் நுட்பமும் சொந்த வீடு என்ற இந்த கதையில் விளக்கி இருப்பார்.
90களில் கிராமங்களில் மகளிர்க்கு தான் மலைவாழை அல்லவோ கல்வி எனும் வாசகம் முற்றிலும் பொருந்தும். ஏனெனில் பெண்கள் வயதுக்கு வந்தால் பலர் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். குறிப்பிட்ட பருவம் எய்திய உடன் திருமணம் செய்து முடித்து விடுவார்கள். இன்று அப்படி இல்லை என்றாலும் சில கிராமங்களில் இன்றும் பெண்கள் கல்வி தொடர்வதற்கு வயது ஒரு காரணமாக இருக்கிறது. அதனை மையப்படுத்தி ஆசைகள் என்ற கதையை இமையம் அவர்கள் எழுதி இருப்பார்கள். பெண்கள் வயது மூப்பு அடைவதை பற்றி ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் பட்டாசு தொழிற்சாலைக்கு அழைத்துச் செல்லும் ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
கந்தர்வன் இரண்டாவது ஷிப்ட் என்ற கதை எழுதி இருப்பார் அந்த கதையை நினைவுபடுத்தும் விதமாக அதே நேரத்தில் காலை நிகழ்வை மட்டும் மையப்படுத்தி இந்த இயந்திரங்கள் கதை எழுதப்பட்டுள்ளது. வழக்கமாக இருவரும் பணிக்குச் செல்லும் போது பெண்கள் தான் அதிக வேலைகளை செய்ய வேண்டி இருக்கும். அப்போது ஏற்படும் கோபம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப செய்யும் காரியங்கள் என ஒவ்வொன்றிணையும் மிக அழகாக வார்த்தைகளால் கோர்த்து இந்த கதை அமைந்திருக்கும் ஒவ்வொரு சண்டைகளும் பெண்கள் ஆண்கள் வீட்டு ஆட்களை திட்டுவதும் பதிலுக்கு அவர்கள் இவர்களை பேசுவதுமாக எல்லோர் வீட்டில் நடக்கும் சம்பவங்களைத் தான் இந்த கதை நமக்கு கண்ணாடி வழியே காட்டுவது போல் இருக்கிறது.
இந்த கதைகள் எல்லாம் கட்டுரைகள் போல் முன்னுரை பொருளுரை முடிவுரை என்று வழக்கமான டெம்ப்ளேட்டுகள் வடிவில் கதைகள் இல்லாமல் இமையத்தின் பெரும்பலமே சம்பவங்களை சுவாரசியமாக்கி, வார்த்தைகளில் வடித்துக் கொடுப்பதுதான். அவர்களுடைய கதைகளில் உரையாடல் மிகப்பெரிய பங்கினை பெற்றிருக்கும். அந்த உரையாடலின் வழியாகத்தான் கதைகள் நகரும். அவை சாதாரண உரையாடல்கள் போலவே தோன்றும் ஆனால் அவை கதைகளுக்கு எவ்வளவு ஆழமான அர்த்தமுடையவை என்பதை அந்த கதை முடியும் போது நம்மை உணர வைத்திருப்பார்.
கதைகளின் பரிணாமங்கள் இப்படித்தான் நிகழும் என்பதை நாம் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. காரணம் கதைகள் ஒரே நேர்கோட்டில் இல்லாமல்
ஆற்று நீரோட்டம் போல வளைந்து வளைந்து செல்லும் போது என்னதான் நடக்கிறது என்பதனை நாம் மெல்ல கவனித்துக் கொண்டே இருக்க வேண்டி உள்ளது. இலக்கிய மேற்கோள்களோ அல்லது வாழ்வியல் தத்துவங்களோ இவருடைய கதைகளின் நிறைந்திருக்காது. ஆனால் வாழ்வியல் சம்பந்தமான அர்த்தமுள்ள உரையாடல்கள், அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி இவருடைய கதைகள் விவரிக்கப்பட்டிருக்கும். ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தை இவருடைய கதைகள் எப்போதும் தரும் அந்த வகையில் இந்த சிறுகதை தொகுப்பும் நிச்சயம் படிப்பவர்களுக்கு ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தை உள்வாங்கும் நோக்கில் இருக்கும்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment