Sunday, 18 January 2026

tea-6


#மனசுக்கு_ஒரு_தேநீர்_6

சுதர்சனின் பதிவு

புத்தகம் படிப்பது பற்றி இரண்டுவிதமான முறைப்பாடுகள் இருக்கிறது. ஒன்று, புத்தகம் படிக்க நேரமில்லை. இரண்டாவது, புத்தகங்களை வாங்கிவிட்டுப் படிக்கமுடியாமல் அடுக்கிவைத்தல்.
புத்தகம் படிக்க நேரமில்லை என்கிற குற்றச்சாட்டு நெடுங்காலமாகவே இருக்கிறது. நேரமென்பது நம் கண் பார்க்கும் நிறங்களைப் போல ஒருவித Illusion என்று சொல்வார்கள். 

நாம் தீர்மானித்துக்கொள்வதுதான். சினிமா, கிரிக்கெட், சிறுபேச்சுகள், பேஸ்புக் டைம்லைனை மேலும் கீழும் பார்த்தல் என்று அவர்கள் நேரம் முடிந்துவிடும். இதையெல்லாம் செய்வது தவறென்று சொல்லவரவில்லை. இவற்றைச் செய்பவர்கள், "நேரமில்லை" என்றொரு காரணம் சொல்வது ஏற்றுக்கொள்ளமுடியாதது. Warren buffet க்குகூட வாசிக்க நேரமிருகிறது.
தொடர்ந்து புத்தகங்கள் வாசிக்கிறவர்கள் சிலர், புத்தகங்களை வாங்கிவிட்டு அடுக்கி வைக்கிறோம் என்று ஒப்புக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். பலரும் புத்தகங்களை வாங்கிவிட்டுப் படிக்காமல் அடுக்கி வைக்கிறார்கள் என்று சொல்லும் பதிவுகளும் பார்த்திருக்கிறேன்.

உண்மையில் நாம் சும்மா இருந்து விட்டத்தைப் பார்த்துக்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி ஆவதுபோலவும் பிரபல நடிகையாவது போலவும் ஒரு மணிநேரம் கனவு காணும்போது நம்முடைய மூளை பதினொரு கலோரிகளைப் பயன்படுத்துகிறது. ஒருமணித்தியாலம் வாசிப்பில் ஈடுபடும்பொழுது 42 கலோரிகளை மூளை பயன்படுத்துகிறது. இதுபோக தகவல்களை ஒன்றோடொன்று தொடர்புபடுத்தல், நியூரோன்களின் உரையாடல் என்று அதற்கு மேலதிகமாக பல கலோரிகள் செலவாகிறது. உண்மையில் நேர முகாமைத்துவம் என்பது நேரத்தைப் பயன்படுத்துவது அல்ல. நேரத்தை திறம்படப் பயன்படுத்துவது.

நான் ஒரு புத்தகத்தை ஒரு அரச அலுவலகத்தில் காத்திருந்த நீண்ட நேரத்தில் படித்து முடிக்க முடிந்தது. ஆகவே புத்தகம் படிப்பதில் நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. நம்முடைய கவனத்தைத் திசைதிருப்பும் காரணிகள்தான் பிரச்சனை. நம்முடைய மூளை இரண்டு அல்லது மூன்று வேலைகளைச் செய்யும்போதே(task switching) அதன் சக்தியை இழந்துவிடுகிறது.
நம்முடைய மூளை ஒருவித புதுமையை(novelty) எப்போதும் எதிர்பார்க்கும். வாசிப்பிலும் ஒரு படத்தைப் பார்க்கும்போதும் பெரும்பாலான சொல்லப்படாத பகுதிகளை நம்முடைய மூளை ஊகித்துக்கொள்கிறது. ஆனால் வாசிப்பில் கற்பனைவளம் அதிகம் பெருகும். இவ்வளவு கடினப்பட்டு வாசிக்கவேண்டுமா?
வாசிப்பு உண்மையில் ஒருவித இன்பம். ஒரு நகைச்சுவையை ரசிக்கிறீர்கள். ஆனால் அந்த நகைச்சுவையில் சொல்லப்படாத பகுதிகளை மூளை கண்டுணர்ந்து ஒரு சிறுபுன்னகை தருகிறது. அந்த நகைச்சுவை தரும் இன்பம் போல அனைத்தையும் காட்சிப்படுத்தும் நகைச்சுவைகள் தந்துவிடுவதில்லை எனப்படுகிறது.

 உண்மையில் நம்முடைய மூளையில் நம்மால் படிப்படியாக ஆழ உணரப்படும் விடயங்கள் நன்றாகப் பதியுமென்று சொல்லப்படுகிறது.
கல்லூரிகளில் பாடப்புத்தகங்களை அப்படியே கற்பிக்கும் கல்விமுறையைவிட மாணவர்களாக அவர்களுக்குள்ளேயே உரையாடிக் கற்கும் கல்விமுறை (peer instruction) வெற்றிபெற்ற்றிருக்கிறது.
இவற்றைத்தான் நாமாக வெளியில் தேடிப்படிக்கும் புத்தகங்கள் நம்முள் நிகழ்த்திச் செல்கிறது.
ஆகவே புத்தகங்களைப் பார்த்துத் தெரிவுசெய்வது உங்கள் பொறுப்பு. வருடத்துக்கு இரண்டு என்றாலும் ஒழுங்கான வாசிப்பை நிகழ்த்தினால் போதும்

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment