Monday, 5 June 2017

மினிமீன்ஸ்

ஷம்ஸ் -இ- தப்ரிஷி எனும் இரானிய சூஃபி ஒரு முறை தன்னைப் பற்றிச் சொல்லும்போது சொன்னது இது.

பிறந்ததிலிருந்தே நான் ஒரு உதவாக்கரையாகத்தான் கருதப்பட்டேன். யாருமே என்னைப் புரிந்து கொள்ளவே இல்லை என்பதுதான் உண்மை.

ஒருமுறை என் தந்தை என்னைப் பார்த்து இவ்வாறு சொன்னார்.
"பைத்தியக்கார விடுதியில் சேர்க்கும் அளவு பைத்தியமும் இல்லை. ஏதாவது பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடும் அளவு அறிவும் இல்லை. இவனை என்ன செய்வதென்றே புரியவில்லையே இறைவனே.!"

நான் சொன்னேன்.
"ஒருமுறை ஒரு கோழி அடைகாக்கும் போது அதன் இடையே ஒரு வாத்து முட்டையையும் வைத்துவிட்டார்கள். குஞ்சு பொறித்த பிறகு அந்த வாத்தும் மற்ற குஞ்சுகளுடன் சேர்ந்து கோழியையே தனது தாய் என்று எண்ணி வந்தது. ஒருமுறை கோழியுடன் குளக்கரைக்கு மேய வந்த அந்த வாத்துக்குஞ்சு நேராய் நீருக்குள் இறங்கியதுதான், பின்னர் திரும்பவேயில்லை.  அன்று குளத்தங்கரையில் இருந்த அந்தக் கோழி தன் குஞ்சை திரும்பக் கத்தி கத்தி அழைத்துப் பார்த்து ஓய்ந்தே போனது. அப்பா நீங்களும் அப்படித்தான்... என் இறைவனின் கருணை எனும் பெருங்கடலில் இறங்கிக் கொண்டிருக்கும் என்னைக் குடும்ப வாழ்க்கைக் கரையில் இருக்கும் உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதால் திட்டாதீர்கள்.!"

No comments:

Post a Comment