💥ஒரு கிராமத்துப்பள்ளி
ஆசிரியையாக இருப்பதென்பது.
💥மூன்றாம் வகுப்பு
பச்சையப்பனின் அரைஞாண்
கயிற்றிலாடும்
வீட்டுச்சாவியை
அவனின் அம்மா தவிர
யாரும் தொடாமல்
கவனிக்க வேண்டியிருக்கிறது.
💥அடிக்கடி வலிப்பு வருகிற
முனியப்பனின் வாயைத்துடைத்து
அவன் பெற்றோர் வரும் வரை
தவிக்க வேண்டியிருக்கிறது.
💥தத்தித்தத்தி நடந்து வந்த
ஸ்வேதாவை லீடராக்கி
அவளையும் வகுப்பிலொருத்தியாய்
மாற்றிக்காட்ட வேண்டியிருக்கிறது.
💥பேசுவதறியா வார்த்தைகளையெல்லாம்
மறக்க வைத்து
நல்லதை சொல்லப் பழக்கவேண்டியிருக்கிறது.
💥இரவுச்சண்டையில்
வாங்கின அடியில்
ஊருக்குப்போக டி.ஸி கேட்கிற
சர்மிளா அம்மாவை
தடுக்க வேண்டியிருக்கிறது.
💥அரசின் சலுகையைப்பெறுவதற்காக
கார்த்திகாவிற்கு வங்கிக்கணக்கு
தொடங்க வேண்டியிருக்கிறது.
💥படிக்க ,எழுத
கற்பிக்கும் போதில்
கடிந்ததை மறந்து,
குல்மொஹர் மரத்தடி
வகுப்பறையருகே
காத்திருக்கும்
இவர்களுக்காக
தவிர்க்க இயலா காரணம்
தவிர வேறெப்போதும்
விடுப்பெடுக்க யோசிக்க
வேண்டியிருக்கிறது.
- சரஸ்வதி காயத்ரி.
No comments:
Post a Comment