Monday, 5 June 2017

சொரூபா

காதல் காதல் காதல் மட்டும்

அப்போது நீ கடவுளின் தேசத்தில் குடியிருந்தாய். ஒரு மணி நேர இனிய இன்மைகளுக்குப் பிறகு ”அப்புறம்” என்றதும் “ ஐ லவ் யூ” என்றாய். மிகச்சரியாய் அவ்வாக்கியத்தின் இடை உயிர்ச்சொல் கேட்காமல் போக நான் ”மறுபடி சொல்லுங்க ” என்றதற்கு ” விளையாடாத அம்மு” என்றாயே.. அதன்பின் ஓராயிரம் முறை சொல்லியிருப்போம் லவ் யூ வும் பத்தாயிரம் முறை மிஸ் யூவும். ஆயினும் தவற விட்ட அத் தேவகணத்தின் மீது அத்தனை வருத்தமெனக்கு.

பொங்கல் சீராய் மாமன் கண்ணாடி வளையல் வாங்கித்தர வேண்டுமெனச் சொன்னதும் நீ குவித்தது பால்பச்சையில் ஒரு டஜனும் சிவப்பில் ஜிகினா தூவி இரண்டு டஜனும். தங்க வளையல் கேட்டிருக்கலாம் போல என்றதற்கு “ அது அப்புறம். இது மொத மொதலா மாமான்னு சொன்னதுக்கு “ என்றாயே.. நினைவிலுண்டா?

பேருந்து நிலையத்தில் வைத்து மொத்த பேர் முன் முத்தம் என்றொரு பந்தயத்தோடு நமக்குள் நடந்த போட்டியில் எப்போதும் போல் நீ தோற்றுப்போனாய். அடுத்த சந்திப்பில் நான் கண் சிமிட்டிக்கேட்க ” சும்மாருக்க மாட்ட” என்ற உன் அதட்டலில் அவ்வளவு வெட்கம்.

காதலென்ன கல்யாணமென்ன.. காமத்துக்கான பயணம் தான் அத்தனையும் என்பது பொதுமொழி. என் சிறுவயது பட்டுப்பாவாடை புகைப்படம் பார்த்து கண்களில் ஒற்றி நெகிழ்ந்தாயே.. அதற்கு உயிரையே தரலாம் எனும் போது.. காமமென்ன.. கழுதை.

எதற்கு கோபப்படுவேன்.. எதையெல்லாம் சிரித்துக்கடப்பேன் என்பது மட்டும் உனக்கு விளங்கவே இல்லை. இரண்டையும் மாற்றி மாற்றிக் கணித்து.. காரணங்கள் சொல்லிச்சொல்லிச் சலித்து.. கடைசியாய் நீ கண்டுபிடித்தது தான்.. சமாதானம் என்றொரு மொழி. அதன் பேச்சுரு காதல். அது உச்சரிக்கப்படும்போது நான் தேவி. நீ உபாசகன்.

மழைபெய்த சாலையில் கைகள் பின்னி நடக்கையில் தென்றல் வந்து தீண்டும் போது பாடச்சொல்லி நீ கேட்டதும் நான் பாடினதும் நாம் மனமாரச் சிரித்த தருணங்கள். உன் குரலும் அழகுடி என்று நீ சொன்னதில் இரண்டு பொய்கள். இடைப்பட்ட பிள்ளையாரிடம் இருவரும் வேண்டிக்கொண்டது அச்சாலை தீராதிருக்கட்டும் என்பதன்றி வேறென்ன?

உன் அண்ணன் திருமணத்தில் மூன்று நாள் பேச பொழுதின்றி.. நான்காம் நாள் நீ அழைக்கையில் “ யார் நீங்க… எனக்கெதுக்கு கால் பண்றீங்க”.. என்று அழுதுகொண்டே கேட்டதை பலமுறை சொல்லிச்சிரித்தாய். அதன்பின் என்னை அழவே விடவில்லை நீ.

’ வனக்குயிலே குயில் தரும் கவியே கவி தரும் இசையே ’உனக்கு பிடித்த பாடல். எனக்கு கொஞ்சமும் பிடிக்காதவைகளை உனக்காகப் பொறுத்துக்கொண்டதன் வரிசையில் இதுதான் முதல். சிவப்பில் புடவைகள் சேர்க்கத் தொடங்கியது அடுத்து.

இரண்டுநாள் இரயிலில் பயணித்து வீடு வந்தபின் அடுத்த அரை நாள் இரயிலில் போகும் உணர்வோடு காற்றில் பயணிப்போமே… அப்படித்தானிருக்கும் உன்னை சந்தித்துபின் வீடு வந்தும் சிரிப்பும் வெட்கமுமாய்.

மருதாணி வைத்த விரல்களெனில் அவ்வளவு பிரியமுனக்கு. தனித்தனி விரலாய் இரசித்து… உள்ளங்கை வடிவம் பார்த்து.. ரேகைகளோடு உரையாடி.. கடைசியாய் உன் கைகளுக்குள் புதைத்துக்கொள்வாயே,, அதற்கென்றே அதைத் தேடித்தேடி இட்டுக்கொள்வது.

இருவரில் ஒருவர் அவ்வப்போது முட்டாளாவது காதலுக்கு நல்லது. நம் விஷயத்தில் அது என் இயல்பாக இருந்ததில் உனக்கு அவ்வளவு நிம்மதி. அதனாலேயே என் தவறுகளுக்கு நான் உன்னை மன்னித்ததை நீ பொருட்படுத்தவில்லை.

காதல் சொன்னது காதில் விழாமல் போன முதல் தவறிலிருந்து போன வாரம் உன்னிடம் கோபித்துக்கொண்டது வரையிலான இடைப்பட்ட நானூற்றுச் சொச்சம் தவறுகளை சரி செய்யும் உத்தேசம்.

முதலிலிருந்து மறுபடி காதலிப்போம் வா.

 
-சொரூபா

No comments:

Post a Comment