உனக்கும் எனக்கும் இடையே
ஐநூறு மைல்களின் தூரம்
எப்போதும் இருக்கிறது
நான் உன்னுடன் எப்போதும்
அலைபேசி வழியாகப் பேசுகிறேன்
அல்லது இக்கவிதையின் வழியாக
நான் உனக்கும் எனக்கும் இடையே
ஐநூறு மைல்களின் தூரமுள்ள
வடக்கிலிருக்கும் நகரத்திலிருந்து
உன்னோடு அதே தூரமுள்ள
தெற்கிலிருக்கும் நகரத்திற்கு
தற்காலிகமாக இடம் பெயர்கிறேன்
'எப்போது உன் ஊருக்குத் திரும்புவாய்?'
என்று திரும்பத் திரும்பக் கேட்கிறாய்
உன் குரல் ஏமாற்றத்தில் ததும்புகிறது
நான் எப்போதும் அதே தொலைவில்தானே
இருக்கிறேன் என்றால்
உனக்கு சமாதானம் இல்லை
வெவ்வேறு இடங்களின்
அதே தூரங்கள்
அதே தூரங்கள் அல்ல
அப்போது நாம்
வெவ்வேறு மனங்களாக
திரிந்துபோகிறோம்
வெவ்வேறு குரல்களாக
வெவ்வேறு பிரியங்களாக
சில சமயம்
வெவ்வேறு நபர்களாக
மனுஷ்ய புத்திரன்
No comments:
Post a Comment