Tuesday, 27 June 2017

கால்பந்து *மணிகண்டபிரபு

கால்பந்து
*மணி

சுந்தர ராமசாமியின் நாடார் சார் கதையை படித்துக்கொண்டிருக்கும் போதே கால்பந்து விளையாடிய அனுபவத்தை எழுத ஆசை பிறந்தது.1995ல் திருப்பூர் பிஷப் பள்ளியில் (ஆடவர் பள்ளிதான்) ஆறாம் வகுப்பு  பயிலும் போதுதான் முதல் முதலில் கால்பந்தை கையில் தொட்டுப்பார்த்தது அப்போதுதான்.ஆறாம் வகுப்பு E பிரிவில் 110பேர் இருந்தனர்.செவ்வாய்,வியாழனில் பி.டி வகுப்பு.அப்போது பந்து பற்றாக்குறையாய் இருந்ததால் யாராவது ஒரு மாணவன் பந்து கொண்டுவந்தால் அவர்களை விளையாட சொல்லிடுவாங்க..

*நான்கு அணிகளாக பிரித்து இரண்டு அணிகள் சேர்த்து விளையாடும் படி அறிவுறுத்தப்பட்டது.

*பந்திற்கு காற்றடிப்பது என்பது கலை.அதை திறம்பட செய்து,அதிக காற்றடித்ததால் ஆரஞ்சு நிற ப்ளாடர் வெளியே தெரிந்தது.

*விளையாட்டு தொடங்கியது..சங்கிலியை பறிச்சிட்டு ஓடுற திருடனை விரட்டுற மாதிரி,ஒரு பந்தின் பின்னால் 110பேர் ஓடினோம்

*பந்தை அடித்தால் வெளியே வராது.கால்களின் இடிபாட்டில் சிக்கி அய்யோ என்னை விட்டிறுங்கடா என பந்து கதறியது.

*சுதந்திரமாய் பந்து ஓடியதே குறைவுதான்..ஏற்கனவே விளையாடிக்கொண்டிருக்கும் அண்ணன் கள் உதைக்க,பாத்ரூம் போகும் சிலர் உதைப்பதும்,வேடிக்கை பார்ப்பவன் எத்துவதும் தொடர்ந்தது

*இதற்கிடையில் சீரியல் விளம்பரம் மாதிரி அடிக்கடி கைபட்டு ஹேண்ட்ஸ் ஆயிடும்."அவே" போயிடும்.அதை தூக்கி வீச வியூகம் பார்ப்பாங்க.என்னவோ ரொனால்டோ மாதிரி

*இதுக்கிடையில் பந்துக்கு சொந்தக்காரன் பந்தை கையிலெடுத்து பரிவோடு தடவிக்கொடுத்து பிஞ்சிருக்கானு பார்ப்பான்.மெதுவாய் உதைங்கடா,இல்லனா எடுத்திட்டு போயிடுவேனு மிரட்டுவான்.அவனுக்கு கோலி சாட் குடுத்து உற்சாகப்படுத்துவோம்

*கோல் கீப்பர் னு ஒருத்தன் இருப்பான். பாலே வராது.சும்மாவே தேமேனு இருப்பான்.நூறுபேர் காலில் சுத்திய கருநாகம் போல் பால் கிரவுண்டிலேயே இருக்கும்.அவன் உட்கார்ந்து மண்ணில் விளையாடிட்டு இருப்பான்

*பிரேமா ஸ்கூலில் இருந்து வந்த நரேஷ் தான் முதலில் ஸ்போர்ட்ஸ் ஷீ அணிந்து வந்திருந்தான்.அதிசயமா இருக்கும்.போய் தொட்டுப்பார்ப்போம்.
அவன் ஓடுவதையே பார்த்து ஷீ அழகை ரசிப்போம்

*சிலர் கடைசிவரை கால்பந்தை ஒருதடவையாவது உதச்சிடனும்கிற வைராக்கியத்தில் முக்கால்மணி நேரம் பந்து பின்னாடியே ஓடுவாங்க

*பந்து கிடைக்காத விரக்தியில் சாமியாராய் போற மாதிரி,மைதானத்தில் உலாத்திட்டு இருப்பானுக,தென்னமட்டை எடுத்திட்டு  கிரிக்கெட் விளையாடுவாங்க, கோல் கீப்பரை மாற்றிவிட்டு சமயத்து கோலி னு புது டெக்னிக் அறிமுகமாகும்.யாரு வேணா பந்து பிடிக்கலாம்

*கடைசியில் விளையாட்டு முடியும்போது,கொஞ்சம் பிய்ந்திருந்த ப்ளாடர் முழுதாய் வாய்திறந்து பந்து வெடித்து கிழிந்தது.அந்த பந்தின் சொந்தக்காரன் எல்லாரையும் திட்டி மண்ணை வாரி தூற்றி அழுதிட்டே வகுப்புக்கு போனான்

*பல்லுக்கு மெதுவாய் பணியாரமாய் கொடுப்பது போல,காலுக்கு இதமான கால்பந்து சிறுவயதில் கிடைக்கல அந்தக்கால பள்ளிகளில்

*எந்தப் பொறுப்பும் இல்லாமல் சுதந்திரமாக விளையாடிய நிலாக்காலம்

*விளையாட்டாகவே கழிந்த விளையாட்டு பாடவேளை அது

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment