ஈழத்தின் இனப்படுகொலைகளுக்கு எதிரான போராட்டங்களில் அது குறித்த எண்ணமும, செயலும் இல்லாத பலரது நிலை கண்டு கவிக்கோ அப்துல் ரகுமான் வடித்துள்ள கவிதை.
**********************************
ரத்தம் வெவ்வேறு நிறம்
அங்கே
பிணங்கள் விழுந்துகொண்டிருக்கின்றன
நாம்
‘எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன? என்று
விசாரித்துக்கொண்டிருக்கின்றோம்.
அங்கே
குண்டுகள் வெடித்துக்கொண்டிருக்கின்றன
நாம்
பட்டாசு வெடித்துப்
பரவசப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.
அவர்கள்
வேட்டையாடப்பட்டுக்
கதறிக்கொண்டிருக்கின்றார்கள்
நாம்
வெள்ளித் திரைகளுக்கு முன்
விசிலடித்துக்கொண்டிருக்கின்றோம்.
அவர்கள்
கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்
நாம்
‘கற்பில் சிறந்தவள் கண்ணகியா? சீதையா?” என்று
பட்டிமண்டபம் நடத்திக்கொண்டிருக்கின்றோம்.
அவர்கள்
வெளிச்சத்தின் விளைச்சலுக்கு
ரத்தம் சொரிந்துகொண்டிருக்கின்றார்கள்
நாம்
இருட்டுக்காடுகளுக்கு
வேர்வை வார்த்துக்கொண்டிருக்கின்றோம்
அவர்கள்
சயனைட் அருந்திக்கொண்டிருக்கின்றார்கள்
நாம்
அதர பானம் பருகிக்கொண்டிருக்கின்றோம்
இதில் வியப்பேதும் இல்லை.
அவர்கள் கவிரிமான்கள்
நாம் கவரிகள்.
இதோ
தேவவேடம் போட்ட சாத்தான்கள்
வேதம் ஓதுகின்றனர்.
இதோ
ரத்தப் பற்களை மறைத்த ஓநாய்கள்
நீரைக் கலக்கிய பழியை
ஆடுகளின்மீது சுமத்திக்கொண்டிருக்கின்றன.
இதோ
சித்தாந்த வித்துவான்கள்
ஒப்பாரியில்
ராகப் பிழை கண்டுபிடித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
இதோ
வெள்ளைக்கொடி வியாபாரிகள்
விதவைகளின் புடவைகளை
உருவிக்கொண்டிருக்கிறார்கள்.
அன்று
அசோகன் அனுப்பிய
போதிமரக் கன்று
ஆயுதங்கள் பூக்கின்றது.
இன்று
ஆசோகச் சக்கரத்தின்
குருட்டு ஓட்டத்தில்
கன்றுகளின் ரத்தம்
பெருகிக்கொண்டிருக்கின்றது.
தாய்ப் பசுவோ
கவர்ச்சியான சுவரொட்டிகளைத் தின்று
அசைபோட்டுக்கொண்டிருக்கின்றது!
வேடிக்கை பார்த்த பேரரசுகளுக்கு மத்தியில்
வெகுண்டெழுந்த கவிஞனை கற்போம்.
கவிக்கோ நினைவேந்தல்
இடம் : மதுரை இலக்கிய மன்றம், அரசரடி
நேரம் : இன்று மாலை 5 மணி
*காலம் வென்ற கவிஞனை கொண்டாடுவோம்*
வாரீர்..
No comments:
Post a Comment