Wednesday, 25 April 2018

வண்ணதாசன்

வண்ணதாசன் எனும் இதயம் கொய்பவனின் எழுத்துக்கள் ....

____

என்னை உத்தேசித்து தானே
சாணை பிடித்தாய்.
அப்புறம் என்ன?
பாய்ச்சிவிட வேண்டியதுதானே
அடி வயிற்றில்.

***

அத்தனை நெருக்கமான தென்னந்தோப்பு.
உச்சியிலிருந்து கழன்று விழுகிறது
ஒரே ஒரு உலர்ந்த தோகை
தூரத்துத் தொடர்மலை ஒரு நொடி திடுக்கிட,
எதிர்த் தென்னையில் ஏறுகிறது அணில்.

***

அல்லிக் குளத்தைத் தாமரைக் குளம் என்று
யாரும் சொன்னால் தப்பே இல்லை.
அவர்களுக்குள்  இருக்கும்  தாமரைக் குளத்தை
நமக்கு அப்படித்தானே காட்ட முடியும்.

***

இங்கும் அங்கும் நகர்ந்து
படங்கள்   எடுக்கிறவர் புறங்கையில்
உதிர்ந்த புளிய இலை ஒன்று அப்புகிறது.
இதுவரை எடுத்த படங்களில் விடவும்
இனிமேல் படங்களில் அழகாய் இருப்பேன்.

***

சலவைக் கடையில் இருந்து
நடந்து வரும் வழி அது.
ரொம்பப் பக்கத்தில் தெரிந்தது.
நேற்று அல்லது நாளைக்கு
இடைப்பட்ட முழுநிலா.
வீட்டுக்குப் பதிலாக இப்போது
நிலாவிடம் போய்க்கொண்டிருக்கிறேன்.

****

அழகான சிறு கல் அது.
நழுவி விழுந்தது
பார்த்து ரசித்தபடி இருக்கையில்.
தேடிக் கையில் எடுத்ததும்
முதலில் பார்த்தது எந்தப் பக்கத்தை
என்று தெரியவில்லை.
தெரிந்தால் பார்த்துவிடுவேன்
கல்லின் எல்லாப் பக்கத்தையும்.

****

பித்த வெடிப்புப் பாதங்கள் உள்ளவரின் விரல்கள் பற்றி

எந்தக் களங்கமும் படியாத பிஞ்சுப் பாதங்கள்
நடந்துபோய்க்கொண்டு இருக்கிறது இந்தச் சனிக்கிழமை மேல்.

கண்ணுக்குத் தெரியாத அதன் தத்தக்காச் சுவடுகளில் நடக்கமுயலும் ஒருவனின்

எதிரில்தான் நீங்கள் வந்துகொண்டு இருக்கிறீர்கள்.

****

பார்க்காத போது பெய்த மழையில்
உடைந்த சிலேட் நிறத்தில் தண்டபாணி தெரு.
உலரும் ஈரத் தீற்றலுடன்  நகரும் ஏழு மணியின் பட்டைத் தூரிகை
விட்டுவைத்திருக்கும் வாதாம் இலையளவு மழைத் தேங்கல்.
இந்த நாளின் தலைகீழ் பிம்பத்தைப் பார்க்கக்குனிகிறவன்
மாநகரத்திற்கு வெளியே இருந்து வந்திருப்பவன்.
கூலிப்படை போல வெட்டிச் சாய்த்துவிட்டுப் போகும் ஆட்டோச் சக்கரங்களினடியில்
நசுங்கிக் கிடக்கிறது நேற்றெனும் மற்றொரு நாள்.

****

__ வண்ணதாசன்

No comments:

Post a Comment