16.04.2018
நூல்வழிச்சாலை
மைல்கல் -20
வாடிவாசல் -2
மதுரையை அடுத்த அலங்காநல்லூருக்கு திண்டுக்கல் தாண்டி வரும் வாடிப்பட்டி வழியே ஓரிரு முறை சென்றிருக்கிறேன். அது ஒரு சிறிய மலைப்பாதை! சில மைல் தூரம் ஆளரவம் இன்றி அமைதியாக காட்சி தரும் சாலை. பின்னர், மதுரையிலிருந்து நேராக அலங்காநல்லூர் செல்லும் சாலையில் இந்த சாலை இணைந்து விடும். நல்ல பசுமையான மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில் ஒரு அருவி இருப்பதாக சொன்னார் என்னுடன் வந்த நண்பர்.
அலங்காநல்லூர் ஊருக்கு வந்தவுடன் டிபிக்கல் மதுரை கிராமம், "அலங்காநல்லூர்".
காளைகள் வெளிவரும் வாடிவாசலும், பிடிபடாத மாடுகள் துள்ளி குதித்து ஓடும் பரந்த மைதானமும் சிறு புல்வெளிகளுடன் பார்க்க பரவசமூட்டியது. நம் நண்பர் ஜல்லிக்கட்டு எப்படியெல்லாம் நடக்கும் என்பதையும், ஊரே திருவிழாக் கோலம் பூண்டு அனைவருமே உற்சாகத்தின் உச்சத்தில் இருப்பார்கள் என்றும் அவர் விவரித்துக் கூற எனக்குள்ளே உற்சாக வைகை கரை புரண்டு ஓடியது. நான் போனது திருவிழா நடக்காத வேறொரு சமயமாக இருந்ததால், ஜல்லிக்கட்டு நடக்கும் போது அவசியம் வரவேண்டும் என்ற ஆசை, காளையின் பெருமூச்சு போல எனக்குள்ளே பொங்கிக் கொண்டே இருக்கிறது.
வரும் பொங்கல் திருவிழாவில் நேரில் பார்த்துடுவோம்ல!....
*சி.சு.செ வின் கதை*
செல்லாயி சாட்டு எனப்படும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. பல ஊர்களிலிருந்தும் மிகச்சிறந்த காளைகளும் மாடுபிடி வீரர்களும், அந்த திருவிழாவைக் காண ஏராளமான சனங்களும் வந்தவண்ணம் உள்ளனர். ஜில்லாவின் தெற்கு மற்றும்
கிழக்கு பக்கத்திலிருந்தும் ஆட்கள் வந்து மொய்க்கிறார்கள்!
*பிச்சியும் மருதனும்*
பிச்சி மற்றும் அவன் மச்சான் மருதன் இருவரும் கிழக்கிலிருந்து செல்லாயி ஜல்லிக்கட்டு வாடிவாசலுக்கு வந்து காளைகளை பிடிக்க வியூகங்களை வகுக்க பார்த்தபடி தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க, அருகில் உள்ள ஒரு கிழவன், ஜல்லிக்கட்டின் சகல நுணுக்கங்களையும் தெரிந்தவன் நட்பு கூடுகிறது.
பேசும்போது, பிச்சி, மருதனின் ஊரான கிழக்கே உள்ள உசிலனூர் என்று தெரியும்போது அந்தக் கிழவன் அந்த ஊரிலிருந்த அம்புலி என்ற ஏறுதழுபவனைப் பற்றி மிகப் பெருமையாக சிலாகிக்கிறார்.
பெரியபட்டி மொக்கையத்தேவர் காளை "காரி" யை அடக்கும் போது காரி, அம்புலியை குத்தி அதனால் அம்புலி இறந்து போனதையும் நினைவு கூறுகிறார்.
பிச்சி அமைதியாக அவரை பார்த்தபடி இருக்க, அவன் மச்சான் மருதன், "பெருசு, அந்த அம்புலியோட மகன்தான் இந்த பிச்சி" என்கிறான்.
அந்தக் கிழவருக்கு பிச்சியின் மேல் பெருமதிப்பு கூட ஜல்லிக்கட்டின் பல நுணுக்கங்களை, அந்த சல்லியில் கலந்து கொள்ள வரும் பல காளைகளின் பெயர், விபரம், வளர்ப்போர் விபரம் அந்தக்காளைகளின் பலம் மற்றும் பலவீனங்களை இவர்களோடு பகிர்ந்து கொள்ள அது பிச்சிக்கு மிக உபயோகமாக இருக்கிறது.
குறிப்பாக, பெரியபட்டி ஜமீனின் காளை "காரி" இந்த சல்லிக்கு வருமா என்ற கேள்விக்கு அது வராமலா? என்று பதிலளித்து அவன் கேள்வியின் பின்புறமுள்ள அர்த்தம் அவருக்கு புரிய, அந்த கிழவர் இப்படி சொல்கிறார்!
"அப்பன் செய்ய விட்டதை, மகன் நீ செஞ்சுரலாம்னு வந்தியா, தம்பி" என்கிறார்.
உசிலனூர் சல்லி நடந்தது பிச்சிக்கு ஞாபகம் வருகிறது!
"அப்பன் அம்புலியை "காரி" காளை கொத்தி எறிந்தது கண்முன் நிழலாடியது.
சற்று தள்ளி "பிச்சி" நின்று கொண்டிருந்தான். அப்போது அப்பா அம்புலி சொன்னது இதுதான்!
"என்ன ஆனாலும், நீ குறுக்கே விழுந்திராதே! அப்பன் ஆணைடா. எனக்கப்றம் இந்த வாடியெல்லாம் உன் ராஜ்யம்தான். பொறுத்துக்கோ. காரி இப்போ உனக்கு இல்ல" என்று எச்சரித்து "பையனை விட்றாதீங்க, வாடி வாசல்ல, என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்தவர்களிடம் சிறைப்படுத்திவிட்டு காரி மேல் பாய்ந்தான் அப்பா அம்புலி!
அப்பன் குடல் வெளியே வந்து ஊற்றாகப் பெருகி, வழிந்த ரத்த வாசனை இன்னமும் அருகிலே வீசுவது போல் மூக்கில் நெடி ஏற அந்த காரியை, அம்புலி மகன் பிச்சி அடக்க வந்த சல்லி இது!
மகன் அடங்கா காளை, தோல்வியே கண்டிராத, எவராலும் அடக்க முடியாத காரி காளையை "பிச்சி" அடக்கினானா? என்பதே இந்த வாடிவாசல் கதை!
*பரபரப்பான வாசிப்பு*
இந்த நூலை எடுத்து வாசிக்க ஆரம்பித்து ஒரே மூச்சில் படித்து கீழே வைத்தேன்.
இரண்டு நாட்கள் கழித்து மீண்டுமொருமுறை முழுவதுமாக ஆழ்ந்து ரசித்து படித்தேன். ஒவ்வொரு முறையும், ரத்தம் சூடேறி கையும், காலும் பரபரக்க ஒரு வெற்றி வெறி சூடாக உடல் முழுவதும் பரவியது.
மதுரை வட்டார பாஷையில் ஒரு மாடுபிடி வீரராகவே உடனிருந்து எழுதிய கதை போல சி.சு. செல்லப்பாவின் கதை நடை அதி அற்புதம்.
வீரம், வெறி, சாமர்த்தியம், உடல்பலம், நுணுக்கம், சட்டதிட்டம், ஆட்களின் சைக்காலஜி, அதிகார ஜமீன்களின் எண்ணம், மாடு பிடிக்கும் விவரனை என சும்மா புகுந்து சல்லியாடியிருக்கிறார், சி.சு.செல்லப்பா!
தமிழ் சினிமாவின் எந்த ஒரு க்ளைமாக்ஸ் காட்சியும் இந்த கதையின் இறுதிக்காட்சியின் விவரனைக்கு பக்கத்தில் கூட வரமுடியாது.
அப்படியொரு பிரமாதமான "விஷுவலை" படிக்கும் போது நம் கண்முன்னே நிறுத்தும் எழுத்து சாமர்த்தியம் இந்த ஆசிரியருக்கு! தலைகுனிந்து வணக்கம் செலுத்த வேண்டும் இவர் எழுத்துக்கு!
இந்த சல்லிக்கட்டு விளையாட்டில் மனிதன் எப்போது வெல்கிறான், காளை எப்படி வீரத்தின் சின்னமாக ஏற்கப்படுகிறது என்ற விவரங்களும் ஒரு மாடுபிடி நுணுக்கமும் அடுத்த பதிவில் கற்போம்!
காரியை பிச்சி அடக்கினானா?
தெரிந்து கொள்ள புதன் வரை காத்திருக்கவும்!
அன்புடன்
நாகா
16.04.2018
No comments:
Post a Comment