Wednesday, 25 April 2018

நாகா சார்

18.04.2018
நூல்வழிச்சாலை

மைல்கல் -21

வாடிவாசல் -3

மிருகத்தை ரோசப்படுத்தி பிறகு மனிதன் அதை அடக்கி வசப்படுத்தி வெற்றி காட்ட துணிந்து விளையாடுவதை ஒரு கலைநயத்தோடு கூறுவதே, ஜல்லிக்கட்டு என்கிற ஏறு தழுவுதல்.

*இலக்கணம்*

வீரர்கள் காளையின் திமிலில் கைபோட்டு அணைந்து, கொம்பு இரண்டையும் கையால் பிடித்து அழுத்தி அது எகிறிவிடாமல் சில விநாடி நாலு கால்களில் அசையாமல் நிற்கச் செய்து விட வேண்டும். கால்கள் துவள தடுமாறி முட்டியிலே மடித்து அது கீழே சரியச் செய்து விட வேண்டும்.
இல்லை, அவன் திறமை குறைவால் காளையிடம் அவன் வேலை பலிக்காமல் போய்க் கோட்டை விட்டுவிட்டு, தன் இயலாமையை ஒப்புக்கொள்ள வேண்டும்.
அல்லது, காலில்லாதவன் மாதிரி முகத்தைக் காட்டிக் கொண்டு, காளை கிட்டே நெருங்காமல் இருந்து விட வேண்டும், பயந்து கொண்டு!

சாய்கிற சூரியனின் பொழுதில் அந்த கோதாவுக்குள் ஒத்தைக்கு ஒத்தையாய் இறங்கும் மனுசனுக்கும், மாட்டுக்கும் நடக்கிற பலப்போட்டி இந்த இரண்டில் ஒரு முடிவு காணும்!
இதுதான், ஜல்லிக்கட்டுவின் இலக்கணம்!

*போட்டி ஆரம்பம்*

தொழுவத்திலிருந்து அழைத்து வரப்பட்ட செல்லாயி கோயில் காளை முதன்முதலாக வாடிவாசலில் விடப்பட அது துள்ளிக் குதித்து ஓடியது. கோயில் காளையை யாரும் பிடிக்க மாட்டார்கள்.
நம் நாயகன் பிச்சியும், மருதனும் தயாரானார்கள். அடுத்து வந்தது "ஆடுசா, குடிகாளை, பில்லைக்காளை".
இந்த சமயத்தில் பல ஜல்லிக்கட்டில் கலந்து பரிசுகள் பல வாங்கிய தெற்கத்தி ஊரைச்சார்ந்த முருகு என்கிற மாடுபிடி வீரன் இவர்களிடமும் தோஸ்தாகி விட்ட கிழவனிடமும் சீண்டியபடி பேசும் போது "கோதாவில் இறங்கி விட்டது பில்லைக்காளை".

கொம்புகளில் கட்டப்பட்ட ஜரிகை சல்லா பளபளக்க, இரண்டு கூர்மையான கொம்புகளை முன் நீட்டிக்கொண்டு வாடிவாசலில் தலை நீட்டியது பில்லைக்காளை!
முதலில் முருகு பாய்ந்து அணைமரத்தில் ஒரு கையும் இன்னொரு கையால் பில்லைக்காளையின் கொம்புக்கு பிடியைத் துளாவ, அவனுக்கு பிடிபடவில்லை, காளை.
பில்லைக்காளை கொம்பை மேலே தூக்காமல் கீழ்நோக்கியே முகத்தை தனித்து நின்றது. திட்டிவாசலுக்கு உள்ளேயிருந்து ஒரே பிடுங்காக மருண்டு பாய்ந்து போகிற ஜாதியில்லை அது!
எந்தப் பக்கத்திலிருந்தெல்லாம் கைகள் கொம்பை தேடுகின்றன என்பதை உஷாராக பார்த்து ஆராய்ந்து எப்படி தன்னை பாதுகாத்துக் கொள்வது என்று அங்குலம், அங்குலமாக கால்களை முன்னே நகர்த்தியது.
முருகுவால் அதன் கொம்பை பிடிக்க முடியவில்லை. இனி இதை யாருமே பிடிக்க முடியாது என்று கணித்தவனாக முருகு ஒதுங்க, அவன் கையை எடுத்த அதே க்ஷணம் கழுகு பாய்ந்து அடிக்கிற மாதிரி இரண்டு கைகள் விரித்துச் சீறி மாட்டின் கொம்பின் மீது விழுந்தன. சபக் என்ற சத்தம். "பிச்சி"மாட்டின் இரு கொம்புகளையும் சேர்த்து பிடித்து மாட்டின் முகத்தை கீழ்நோக்கி அமுக்கினான்.

*வீரன் பிச்சி*

காளை முழு வலுவுடன் உலுப்பி அலைத்துப் பார்த்தது. பிச்சியின் வலுவில் கொம்பலைப்பு வேகம் தளர்ந்து திணறியது.

கூட்டம் மலைத்துப் போய் நின்றது.
"பில்லைக்காளை பிடிபட்டுப் போச்சு" என்ற கரகோஷம் விண்ணைப்பிளக்க, காளையை விடுவித்தான் பிச்சி!திட்டிவாசலில் இருந்து ஒரு பெரிய உருமாத்துணி பிச்சியின் மேல் பறந்து வந்து விழுந்தது, பரிசாக!

மேடை மீதிருந்து ஜமீன்தார் ஒரு ஐந்து ரூபாய் நோட்டை அவன் மீது எறிந்தார். அந்தப் பாராட்டு அவனுக்கு பெரிதாகப் பட்டது. "சரி போ, மாடுகளை நல்லா பிடி" என்றார் ஜமீன்தார், பிச்சியிடம்.
பல மாடுகள் தொடர்ந்து வாடிவாசல் வழியே விடப்பட்டாலும் அடுத்ததாக பிச்சி தன் மச்சான் மருதாவுடன் மிகச்சிறந்த காளைகளில் ஒன்றான "பளையூர் காளை"
கொராலுவை பிடிக்க முன்வந்தார்கள்.

ஒரு சாமர்த்தியமான டெக்னிக்கை உபயோகப்படுத்தி கிழவன் சொன்ன "கொராலு பிசாசுவை" பிச்சி ஒரே மடக்காக காளையின் காலைக்கட்டிப் பிடித்து இழுக்க கால் சுண்டப்பட்ட வேகத்தில் நிலைக்க முடியாமல் பரு உடலுடன் முன்கால்கள் மடிய சரிந்தது. பிச்சி உடனே கொம்பைப் பிடித்து உருமால் சுருக்கை உருவினான்.
அவனை நோக்கி வந்த கூட்டம் தலை மேல் தூக்கி கொண்டாடியது!
ஜரிகை அங்கவஸ்திரத்தை அவன் மேல் மாலையாக போட்டார்கள்.
வெற்றி முகமாக இருந்த பிச்சியிடம் ஜமீன்தார் பத்து ரூபாய் நோட்டைத் திணித்தார். ஜமீன்தாரைப் பார்த்து கும்பிட்டான் பிச்சி!

*அடுத்த சவால்*

"டேய்! வாடிபுரம் காளைய புடுச்சிப் பார்க்கிறயா?" என்று ஜமீன்தார் பிச்சியைப் பார்த்து கேட்க, "உறுதியா சொல்ல முடியாதுங்க!"
என்று ஜமீன்தார் கண்களை நேரே சந்திக்காமல் தலைகுனிந்தவாறு பிச்சி இழுத்தான்.
ஜமீன்தார் முகம் சுணங்கியதையும் பிச்சி கவனித்தான்.
ஜமீன்தார் தன் வாடிபுரம் காளையை இந்த கிழக்கத்தி பிச்சி பிடித்து விடுவானா? என்ற சற்றே கலக்கத்திலும் இத்தனை வருடம் தன் காளையை ஒரு பயலும் தொடக்கூட முன்வராத சமயத்தில் ஒரு பயல் மேலே விழ தயாராவது கண்டு ஒரு துடிப்பு அவரிடம் ஏற்பட்டது!
வாடிபுரம் காரிக்காளையைப் பற்றி அவருக்கு நன்கு தெரியும்.
அவனை வாழைநார் மாதிரி கிழித்து எறிந்துவிடும்.
அதை அடக்கத் துடிக்கும் அந்த வாலிபன் பிச்சியை பார்க்க பார்க்க அவருக்கு படபடத்தது. அடுத்து....

"வாடிபுரம் காளை!"

"கருப்புப்புசாசு"!

"ராட்சசக் காரி!".

கூட்டம் கூவிய குரல்களில் ஒரு நடுக்கம் இருந்தது.

"கிளக்கத்தான் காரிய பிடிக்கப் போறான்"

"பய செத்தான்"

"பட்டு உருமாவுக்கு ஆசைப்பட்டு உசிரை இந்தானு கொடுக்கிறானே, பாவி!"

இப்படி கூட்டத்தின் கதறலுக்கு நடுவே பிச்சி தயாராகிறான்!

இந்தக் காரிக்காளை தான் பிச்சியின் அப்பனை குத்திக் கொன்ற நல்ல ஜாதிக்காளை!

பிச்சி, இந்த காரிக்காளையை அடக்கினானா?
இந்தக் காளைக்கு என்ன டெக்னிக் வைத்திருக்கிறான் பிச்சி!

வரும் வெள்ளி களமிறங்கியே தீருவோம்!

"க்ளைமாக்ஸ்"  வெள்ளியன்று வெள்ளித்திரையில் காண்பது போல் கண்டு (வாசித்து) மகிழலாம்!

அன்புடன்
நாகா
18.04.2018

No comments:

Post a Comment