ஞாயிறின் கீழ் பணிபுரிவது...!
ஞாயிறின் கீழ்
பணிபுரிவதென்பது
மனைவியை மீண்டும்
முருங்கை மரத்திற்கே
ஏற்றிவிடுவது
காலிப்
பணப்பையிற்கே
உரிய
கெஞ்சுமொழியில்
பேசி
அழும் குழந்தைகளை
ஆற்றுப்படுத்துவது
கூட்டத்தைக்கூட்டி
நிற்கும்
மாமிசக்கடைகளைக்
கண்கொத்தாமல்
பார்த்தபடி
இரைப்பைக்குள்
கடந்தேகுவது
பின்னும்
கணினி இயக்கும்
சகதிநிறை
குளத்திற்குள்
முக்குளித்து
கொடிய நீர்வாழ்
சர்ப்பமென
உருவேற்றித்
தலைதூக்குவது
சமனற்றக்
காலத்தை
ஒரு தராசில் இருத்தி
மற்றொன்றில்
ஏறியமர்ந்து
தாழப்போய்த்
துயருறுவது
இறுதியாக
ஒற்றையடிப் பாதையென
வகுந்தோடி
கொடிநிழல் படர்த்தும்
கனவுகள்
இருள இருள
வீடு திரும்புவது..!
-சுஜய் ரகு-
No comments:
Post a Comment