தோழி எப்போதும் தோழிதான் அவளைக் காதலிக்க முடியவே முடியாது. முடியும் என்றால் காதலை அடைய நட்பை ஒரு வழியாகப் பயன்படுத்துகின்றிர்கள். அல்லது உங்களுக்குள் இருந்த ஈர்ப்பை நட்பென்று அடையாளப்படுத்துகின்றிர்கள்.
கண்டதும் காதல் போல் கண்டதும் நட்பு சாத்தியமே இல்லை.
பட்டும் படாத பழக்கத்தில் துவங்கி அதிக முக்கியத்துவம் வழங்கப்படாமல் இருவரும் இருவரைப் பற்றியும் அதிகமாகக் கருத்தில் கொள்ளாமல் அதன்போக்கில் அதுவாகவே நிகழும் ஒன்று.
நட்பு தன்னை பிரகடனப்படுத்தவே செய்யாது.
கண்டறியவும் முடியாது. தேவையும்இல்லை.
காலம் தந்த பிணைப்பிற்குள் வேறுபட்ட கருத்துகளோடு ஒருமித்துக் கிடக்கும் போது, உங்கள் best friend யாரென்று கேட்டால். முதலில் நினைவுக்கு வந்த இந்த நாய எதுக்கு சொல்லிக்கிட்டு வேற யாரையாவது சொல்லலாம் என்று மனம் யோசிக்கும். அந்த நாய்க்கும் நமக்கும் இருக்கக்கூடியதுதான் நட்பு. முக்கியத்துவம் வழங்காத எதிர்பார்க்காத நிர்பந்திக்காத சுதந்திரம் கிடைக்கும் இடம். அந்த நாயிடம் மட்டும்தான்.
ஓரமா போ சனியனே என்று அவனும்
இடிக்காம வாடா எரும என்று அவளும்
சாலையில் விளையாடி
கடைசியில் கைகள் கோர்த்து தோள்சேர
நட்பினைக் கொண்டாடிச் செல்வார்கள்.
தூரமாய் இருந்து பார்க்கும் கண்களுக்குத்தான் குழப்பம் எல்லாம். அவர்கள் இருவரையும் புரிவதற்கு நட்பிற்குள் இருந்தாலொழிய பிறவழிகளில்லை.
காலஓட்டத்தில் வாழ்க்கைப் பாதை மாறி இவர்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்தித்தாலும் பரஸ்பர நல விசாரிப்புகளுக்கு முன் அவர்களிடம் ஒரு கேள்வி இருக்கும்,
''நீ இன்னும் சாவலியா?''
அவ்ளோதான் சார் நட்பு
-யாத்திரி
No comments:
Post a Comment