20.04.2018
நூல்வழிச்சாலை
மைல்கல் -22
வாடிவாசல் -4
வாடிபுரம் காளை வாடிவாசலை நெருங்கும்போது சில விநாடிகளில், முண்டியடித்து எக்கி நின்ற கூட்டம் போன இடம் தெரியவில்லை. காரி கொம்புக்கு எட்டாதபடி எப்படி தப்பிப்பது என்று அவனவன் அங்குமிங்கும் ஓடி பதுங்கப் பார்த்தார்கள்.
காரிக்காளை அவிழ்க்கப்பட்டவுடன் ஒரு பயலும் அங்கே இருக்க மாட்டான். ஜமீன்தார் ஆசனத்தில் சாய்ந்து உட்கார்ந்த தோரணையில் இருந்து சற்று முன்பக்கம் சாய்ந்து குறுக்கு கம்பியின் மீது கைகளை பிடித்து ஆர்வமாக பார்த்தார்.
*ஆட்டம் ஆரம்பம்*
கதாநாயகன் பிச்சி அவசர கும்பிடு போட்டு திரும்பி பார்க்க, "ஹூம்..பிடி" என்று சொல்வது போல் தலையாட்டி விட்டார்.
அடைப்புக்குள் காரிகாளையின் மூக்கணாங்கயிற்றை ஒரு மாட்டுக்கார சிறுவன் அவிழ்த்துக் கொண்டிருந்தான். சிறுவயது முதல் கைமேய்ச்சலாக வளர்த்தவன் அவன்தான். அவன் பேச்சுக்குத்தான் காளை கட்டுப்படும். எங்கிருந்து கூப்பிட்டாலும் பசுக்கணக்காக வந்து போகும்.
ஆம்! இதே போலத்தான் பல ஜல்லிக்கட்டு காளைகள் வீட்டுப் பெண்மணிகளின் பேச்சுக்கு அமைதியாக அடங்கி நடந்து கொள்ளும்.
திட்டிவாசல் விளிம்புக்கு வந்து சிறுவன் மாட்டை விட்டு பளிச்சென்று விலகி பாதையில் ஓடி விட்டான்.
ஜமீன்தார் அதி ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தார்.
ராஜாளி மாதிரி வந்து நின்றது காரிகாளை!
"நின்னு குத்தி காளைன்னா இதான்"
"இதையா, கிளக்கத்தான் பிடிக்கப்போறான்?"
அங்கங்கே கூக்குரல் கேட்க, ஏதோ ஒரு நிழலசைவில் "டுர்ரீ" என்ற சப்தம் கேட்டு காளை அந்தப்பக்கம் பார்த்து திரும்பி முறைத்தது.
கூட்டம் அசைவு காட்டக் கூட பயந்து சவம் போல நின்றது. சிறு அசைவு சமிக்ஞை போதும் . காளை அந்த திசையில் பாய்ந்து விடும். கணநேரத்தில் பல சவம் கீழே விழும்.
யார்ரா டுர்ரீ காட்டினவன் என்று கிழவன் பார்க்க முருகு செஞ்ச வேலை, பிச்சியின் மேல் உள்ள பொறாமையில்!
*நேருக்கு நேர்*
மாடும், மனுசனும் நேர்எதிரே ஒருவரையொருவர் முறைத்து நிற்பதையும், முகம் திரும்பாத காளைக்கு எப்படி பாராக்கு காட்டி திரும்பச் செய்வதென பிச்சி மூளையை குடைந்து கொள்வதையும் கூட்டம் அசையாமல் பார்த்துக் கொண்டு நின்றது.
சும்மா நிற்பவர்களை வெறி பிடித்து தாக்கும் காளை அல்ல அது! அதை நோக்கி வந்தவனைத் தான் அது மதிக்கும். காரியும் நகரவில்லை! பிச்சியும் நகரவில்லை.
பிச்சி, மச்சான் மருதனுக்கு ஒரு சமிக்ஞை செய்தான். அடுத்த விநாடி இருவரும் கூட்ட வரிசைவளைவின் நேர்எதிர் திசைகளில் பாய்ந்தார்கள்.! காளை எந்தப்பக்கம் திரும்புவது என்று குழம்பி, பிச்சி சுழலும் திசை பக்கமாக ஒரு எட்டு வைக்க பிச்சி அசையாமல் நின்று விட்டான். காரியும் அவனை முறைத்தபடி நின்று நிலை எடுத்துக் கொண்டது.
"மாடா அது, மனுசனா இல்ல வேலை காட்டுது!"
அந்த காரியின் குணத்தை அந்த வட்டாரமே நேரில் பார்த்தது. மனிதனுக்கு சரியாக அது அறிவோடு நடந்து கொண்டது, பிரமிக்கத்தக்கதாக இருந்தது.
பிச்சியை பார்த்துக் கொண்டே தன் குளம்புகளால் தரையை பிறாண்டி மண்ணை கிளறி விட்டது. காளைக்கு சூடு ஏறியதை கூட்டம் உணர்ந்து இதோடு முடிந்தால் தேவலை என்று நினைக்கும் போது, காரியோ தன் சவாலுக்கு முடிவு தெரியாமல் இம்மியும் நகர மாட்டேன் என்று உறுதி காட்டியபடி மூச்சு உதறுவதும், காலடிப்பதும், கொம்பலைப்பதுமாக நின்றது.
பிச்சி காளையின் கொம்புக்கு நேராகவும், மருதன் அதன் வால் பக்கமாகவும் இருந்த நேரமது. பிச்சி சைகை காண்பித்தவுடன் மருதன் "டுர்ரீ"
என சத்தமிட்டவாறு காளையின் வாலை தொட்டு விட்டு பின்னகர்ந்தான். காளை சடக்கென்று வாலை தொட்டது யார் என சிறு கோண அளவு திரும்பிய கணம் சில்வண்டு மாதிரி பாய்ந்து காரிக்காளையின் திமிலைப் பிடித்துக் கொண்டான் பிச்சி!
திமிலில் இடது கையைப் போட்டு, நெஞ்சோடு நெருக்கி அணைத்து கழுத்தோடு தன் உடலை ஒட்டிக் கொண்டு வலக்கொம்பில் கை போட்டான் பிச்சி.
எடுத்த எடுப்பில் காளைக்கு பாதகமாக போக அதன் மிருக குணம் வெளிப்பட ஆரம்பித்தது. முழு வேகத்தில் தன் கொம்பால் பிச்சியை குத்தப்பார்த்தது. கொம்பின் பிடி பிச்சியின் கையிலிருக்க காளையின் தலை எப்படி திரும்பினாலும் தன் மீது கொம்பு குத்தி விடாதபடி முழங்கால்களை மடித்து
தனது தலையை அழுத்தி சேர்த்து பிடித்துக் கொண்டான்.
காளை தன் உத்தியை மாற்றி தன் நாண்கு கால்களையும் உயரே தூக்கி தவ்வியது.
மருதன் "பிடியை விடாதே, பிச்சி" என்று கத்தினான்.
ஆள் உயரத்துக்கு தவ்விய காளை பிச்சியை கீழே தள்ள முயற்சித்தும் ஒன்று, இரண்டு, மூன்று முறை காளையோடு அந்தரத்தில் பறந்து, பறந்து தரைக்கு வந்தான் பிச்சி! பிடி மட்டும் விடவேயில்லை!
மூன்று தவ்வுக்கு அவன் நின்று விட்டதால் அவன் காளையை அடக்கி விட்டான் என்றுதான் அர்த்தம். ஆனால், காளையின் நெற்றியில் தொங்கும் தங்கமெடல் பாக்கி.
இரண்டு கைகளாலும் திமிலைப் பிடித்திருந்த பிச்சி வலதுகையை திமிலிலிருந்து எடுத்து கொம்பை பிடிக்க, காளையால் தலையை அதற்கு மேல் திரும்ப முடியாமல் அதே இடத்தில் கால்களை சுழற்றி முழு உடலையும் வளைத்து சக்கரமாக சுழன்றது. பிச்சி விடவேயில்லை.
இனி முடியாது என்று நினைத்த மாதிரி காளை உயரே பார்த்து மூச்சு உதறியது!
வலது கொம்பை விட்டுவிட்டு தன் கையால் கொம்பிலிருந்த மெடல், பட்டுத்துணியை இழுக்க அவன் கையோடு வந்தது. தன் கால்களை தரையில் அமர்த்தி திமிலை சேர்த்து காளையை ஒரு தம் கொடுத்து எதிர்ப்பக்கமாக தள்ளிவிட்டு எகிறி பின்னால் பாய்ந்தான். பின்னோக்கிய பாய்ச்சல் சற்று அதிகமாக இருக்கவே கால் தடுமாறி மல்லாக்க விழுந்தான்.
பழியுடன் சீறி திரும்பிய காளை தரையோடு கிடந்த பிச்சியை குத்தப் பாய, கொம்புகள் அவன் குடலுக்கு நேரே வந்தன. பிச்சி முதுகால் அரைவட்டம் அடித்து கால்களால் காளையை ஒரு குத்து விட்டு கவட்டையாக கால்களை பரப்பி கீழே கிடந்தான். காளை அவன் மார்பை நோக்கி வர கைகளால் இரு கொம்புகளையும் பிடித்து தள்ள முற்பட்டான்.
பார்த்து கொண்டிருந்த ஜமீன்தார் "காளையை விரட்டு" என்று சப்தமிட்டார். மருதன் உதவிக்கு வந்து வாலை பிடித்து இழுக்க காளை கொம்பை மேலே தூக்க கைப்பிடியை தளர்த்திய பிச்சியின் தொடையில் காளையின் கொம்பு கிழித்தது.
வாலை பிடித்தபடி இருந்த மருதனும், காளையும் தட்டாமாலை போல ஐந்தாறு முறை பம்பரமாக சுற்றினார்கள்!
அந்த சமயத்தில் மற்ற ஆட்களால் பிச்சி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட மருதனும் வாலை விட்டு கூட்டத்தில் ஒண்டினான்.
*வெறியுடன் ஓடிய காளை*
காளை தன் இரண்டு இரைகளையும் பறிகொடுத்த வேதனை, வாலில் வலி இவற்றோடு திரும்பிய பக்கமெல்லாம் கொம்பை அலைத்து கூட்டத்துக்குள் புகுந்து பார்வையாளர்கள் பலரை சதக், சதக் என்று குத்தியபடி ஓடிக்கொண்டிருந்தது!
மருதன் பிச்சியிடம் "அப்பன் மானத்த காப்பாத்திட்ட!" என்றான்.
ஆமா! அப்பன் மனசு குளிர்ந்திருக்கும் என்றான் முனகியபடி பிச்சி!
"உன் ஆயுசுக்கு இது ஒண்ணு போதுமடா, தம்பி!"
"தலைமுறைக்கும் நிக்கும்னு சொல்லு"
இப்படி ஊரே புகழும் வார்த்தைகள் பிச்சியின் காதில் விழ, "பயலே! நீ புலிக்கு பிறந்த பய" என்று கூறியவாறு கிழவன் உருமா, பட்டுத்துணி, தங்கக்காசு இவற்றை எடுத்துக் கொண்டு வர,
அந்த இடத்தில் மேலும் ஒரு பரபரப்பு...
ஜமீன்தார் பிச்சியை பார்க்க அருகில் வந்தார்.
பிச்சியின் கால் தொடையில் ரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது!
ஜமீன்தார் பிச்சியை முழுக்க ஒருதரம் பார்த்தார்.
இதுவரை நாம் கண்டது "க்ளைமாக்ஸ்".
ஆன்டி க்ளைமாக்ஸ் என்று ஒன்று உண்டல்லவா?
மனம் பதைபதைக்க வைக்கும்
அதை அடுத்தவாரம் வாசிப்போம்!
சி.சு. செல்லப்பாவின் மதுரை தமிழ் நடை சும்மா காளையின் பாய்ச்சல் போல!
அதகளம்!!! படிக்க, படிக்க செம விறுவிறுப்பு!!
அடுத்த வாரம் திங்களன்று சந்திப்போம்!
மீசையை முறுக்கியபடி,
அன்புடன்,
நாகா
20.04.2018
No comments:
Post a Comment