Friday, 20 April 2018

நூலேணி-நாகா

13.04.2018
நூல்வழிச்சாலை

மைல்கல் -19

வாடிவாசல்

தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு! முக்கால் நூற்றாண்டுக்கு முன்பு மிகப் பரவலாக தமிழ்நாட்டின் பல இடங்களிலும், குறிப்பாக மதுரை, ராமநாதபுர மாவட்டங்களில் திருவிழா போல கொண்டாடப்பட்ட ஒரு விளையாட்டு ஜல்லிக்கட்டு. பல நூற்றாண்டுகளாக இது பழக்கத்தில் இருந்த வந்த விளையாட்டு என்பதற்கு பல சான்றுகள் உள்ளன!
இன்றைய தலைமுறைக்கு, வெகு சிறப்பாக போராடி இந்த விளையாட்டை மிருகவதை என்ற ஒப்பீட்டில் தடை செய்திருந்ததை மீட்டுக் கொண்டு வந்ததில் பெரும் பங்குண்டு!  எவரேனும் 2017 மெரினா புரட்சியை மறக்க முடியுமா?

முதலில் மனிதன்-மிருகம், பிறகு மனிதன்- மனிதன் என்ற அளவில் திசை மாறிப் போய்விட்ட வரலாறு இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு!

மீசையை முறுக்கிய திமிருடன் ஆண்மகனும், திமில் திமிர நின்று விளையாடும் காளையும் சரிக்கு சரி சமானம். இதில் எவரோ ஒருவருக்குத் தான் வெற்றி!

என்னை அடக்கு பார்க்கலாம் என்று சீறும் காளைகளின் கால்கள் மண்ணைத் தோண்டி வெளித்தள்ள, வலு கொண்ட புஜங்களை உன்னை அடக்கத்தான் வளர்த்திருக்கிறேன் என்று மார்தட்டி மனிதக்காளைகள் களம் இறங்க, காளைகள் துள்ளிக் குதித்து வெளியே வரும் நுழைவாயில்தான் "வாடி வாசல்".

இந்த வருட பொங்கல் சமயத்தில் அலங்காநல்லூர் சென்று ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் காண மிகுந்த ஆவலாக இருந்தும் சில பல "அரசியல்" நிகழ்வுகளில் சிக்கி அறுந்த நூலாக நொந்து போனேன். நேரில்தான் பார்க்க முடியவில்லை, நூலிலாவது வாசிப்போம் என கண்ணில் பட்டவுடன் வாங்கிய புத்தகம்
சி.சு. செல்லப்பாவின் "வாடி வாசல்".

மொத்தம் 87 பக்கங்களுடன் உள்ள சிறிய அளவு புத்தகமேயாயினும், மீசையை முறுக்கி, வேட்டியை (இப்போதெல்லாம் மாடுபிடி
வீரர்கள் டவுசர்தான் போடுகிறார்கள்) மடித்துக் கட்டி வாடி வாசல் முன்னே போய் நின்று வாடி.... என்று குரல் கொடுக்க பெரும் ஆர்வம் கிளப்பிய அட்டகாசமான குறுநாவல் இந்த "வாடி வாசல்".
வரும் வருட பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நிகழ்வில் காளைகளை சந்திக்க விரும்பும் காளைகள் என்னிடம் பெயர் கொடுக்கலாம்.

சொல்லிப்புட்டமில்ல...
வெரச வாரும்ல....

*புத்தகக் கரு*

ஜல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். விளையாட்டும் கூட! வலு, தொழில் நுட்பம், சாமர்த்தியம் எல்லாம் அதற்கு வேண்டும். தான் போராடுவது மனிதனுடன் அல்ல, ரோஷமூட்டப்பட்ட ஒரு மிருகத்துடன் என்ற ஞாபகத்துடன் வாடி வாசலில்
நிற்க வேண்டும் மாடு அணைபவன். ஆம் ஏறு தழுவுபவன் என்றும் கூறலாம்!
ஏறு எனும் காளையை அடக்கி அணைத்து கன்னியின் கை பிடிக்க விரும்பும் ஆண் காளைகளின் வீர விளையாட்டு இது!
ஆனால், காளைகளுக்கு தன்னோடு மனுஷன் விளையாடுகிறான் என்றெல்லாம் தெரியாது. விளையாட்டு என்பதிலும்
அதற்கு அக்கறையில்லை.

"இப்படி இந்த விளையாட்டை மையமாக வைத்து புனையப்பட்ட இந்தக் கதையில் ஜல்லிக்கட்டு பற்றிய வர்னணை மிகவும் தத்ரூபமாக
சித்தரிக்கப்பட்டுள்ளது என்ற Tag எனும் செய்திக்குறிப்பை பின்புற அட்டையில் வாசித்தவாறு வாடிவாசல் நுழைவோம்!"

இதுவரை 18 பதிப்புகளை கண்ட காலச்சுவடு பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட 1959ல் எழுதப்பெற்ற இந்நூல் மிகத் தனித்தன்மை வாய்ந்தது. ஆசிரியர் சி.சு. செல்லப்பா தமிழ் மறுமலர்ச்சி காலத்தின் படைப்பாளி. பின்னால் மிகச்சிறந்த விமர்சகராக மாறியவர். சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம், குறுநாவல் என பல வடிவங்களில் எழுத்தை வடித்தவர். புத்தகங்களை பைகளில் போட்டு சுமந்து கொண்டு ஒவ்வொரு கல்லூரி வாசலிலும் நின்று புத்தகங்களை விற்று தமிழ்த்தொண்டு புரிந்த சீலர்!

*முன்னுரை*

புகழ்பெற்ற எழுத்தாளர் "பெருமாள் முருகன்" எழுதிய முன்னுரை சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. சங்க இலக்கியமான "கலித்தொகையில்" ஏறு தழுவதலைப் பற்றிய குறிப்பு இருக்கிறதாம்.

*எழுந்தது துகள்;
ஏற்றனர் மார்பு;
கவிழ்ந்தன மறுப்பு;
கலங்கினர் பலர்*
என முல்லை நிலத்தில் காணும் ஜல்லிக்கட்டு நிகழ்வு இடம் பெற்றிருக்கிறது.
காளையின் கொம்புகளை கண்டு அஞ்சுபவனை மறுபிறப்பிலும் ஆயர் மகளிர் விரும்ப மாட்டார்களாம்.

*கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்* என்கிறதாம் கலித்தொகை!
கலித்தொகையை ஒரு முறை முழுமையாக படிக்க வேண்டும் என்னவெல்லாம் இன்னமும் சொல்லி இருக்கிறதென்று!

கலித்தொகையை அடுத்து இரு இடங்களில் ஜல்லிக்கட்டு பற்றிய குறிப்புகள் இருக்கிறதாம்.

*நாவலில் ஜல்லிக்கட்டு*

ஒன்று ராஜமய்யர் எழுதிய "கமலாம்பாள் சரித்திரம்" என்ற நாவல்.

இன்னொன்று கு.ப.ராஜகோபாலன் எழுதிய "வீரம்மாளின் காளை" என்ற சிறுகதை!

ஒரு ஜமீன்தாரின் காளையை ஒருவன் அடக்கி விட, தோற்றுப்போன ஜமீன்தார் தனது காளையின் தோலை உரித்து விட ஆணையிடுகிறாராம், உயிரோடு!
அதிகாரத்தின் அடையாளமாக காளை உருமாற்றம் அடைந்த வரலாறு.

அடுத்து வீரம்மாளின் கதை மிகவும் சுவாரசியமான ஒன்று!
வீரம்மாள் வளர்த்த காளையை அவளுடைய 'அயித்தான்' காத்தான் பிடிக்க முயல்கிறான். வீரம்மாளின் தந்தைக்கும் காத்தானுக்கும் நடந்த பேச்சு வீராப்பாக மாறியதே இதற்கு காரணம். காளையின் கொம்பில் கட்டப்பட்ட துண்டை அவிழ்த்து எடுத்து விட்டாலும், கிட்டத்தட்ட வெற்றி என்ற நிலையில் அதன் பின் நடந்த எதிர்பாராத ஒரு நிகழ்வில் காளையின் கொம்பு குத்தி காத்தான் இறந்து விடுகிறான்.
இந்த ஜல்லிக்கட்டு நிகழ்வால் மிகவும் பாதிக்கப்பட்டவளாக வீரம்மாள் வருத்தத்தோடு இருக்க, காத்தான் இறந்து போனதுதான் காரணம் என்று அனைவரும் நினைக்க, கதையின் முடிவில் ஒரு திருப்பம் (twist).
வீரம்மாள் வேல் கம்பை எடுத்து காளையின் மேல் பாய்ச்சுகிறாள். அவள் வருத்தம் காளை ஒரு ஆண்மகனிடம் பிடிபட்டு விட்டதே என்ற துயரம் என்று புரிகிறது. தான் வளர்த்த காளையை இன்னொருவன் அடக்குவதா? என்ற துயரமே மேலோங்கி நிற்கிறதாம்! வீரப் பெண்மணி! வீரத் தமிழச்சி!!
இது எப்படி இருக்கு?

ம். சரி. சி.சு. செல்லப்பா எழுதிய இந்த வாடிவாசலில்
என்ன கதை விவரிக்கிறார் என்பதை அடுத்த பதிவில் தொடர்ந்து வாசிப்போமா?

தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் இந்த வேளையில் தமிழரின் வீர விளையாட்டுப் பற்றிய நூலை வாசிப்பதில் அனைவருக்கும் மகிழ்ச்சிதானே மிஞ்சும்!
அன்புடன்,
நாகா
13.04.2018

No comments:

Post a Comment