Friday, 7 June 2024

புத்தகம்-14


Reading_Marathon2024
#24RM050

Book No:14/100+
Pages:366

செந்தமிழ்ப் பூம்பொழில்
-வைகோவின் இலக்கியச் சொற்பொழிவுகள்
-அருணகிரி

திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்ற வரி மிகப் பிரபலம். அதேபோலத்தான் வைகோவின் இலக்கிய சொற்பொழிவு. அரசியல் ரீதியாக பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் அவர் ஒரு தேர்ந்த படிப்பாளர் ,இலக்கியச் சொற்பொழிவாளர். திருவாசகம் வெளியீட்டு விழாவில் அவருடைய உரையை முதன்முறையாக கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. இளையராஜாவே பாராட்டி விட்டார் அந்த சமயத்தில். அவ்வளவு அந்த பேச்சின் ஆழம் அழுத்தம் ஈர்ப்பு எல்லாமே நம்மையும் கட்டி போட்டது என்றால் அது மிகையில்லை. இந்த தொகுப்பில் 16 சொற்பொழிவுகள் உள்ளன.

பேச்சாளர்களுக்கே உரிய சிறப்பு என்பது நிறைய படித்தவர்களாக இருக்க வேண்டும். ஒரு பேச்சின் தொடக்கமும் முடிவும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பல்வேறு மேற்கோள்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. திருக்குறள், வாழ்வியல் கதைகள், இலக்கியத்திலிருந்து மேற்கோள்கள் சொந்த அனுபவங்கள் இவற்றை குலைத்து தரும் போது அந்த பேச்சில் பார்வையாளன் தன்னை பொருத்திப் பார்த்து தானாகவே ரசிக்கவோ கைதட்டவோ ஆரம்பிக்கிறான். அந்த வகையில் விவிலியத்தில் இருந்து
 சொன்ன கதைகளும் நபிகள் நாயகத்தின் கதையும்,வாழ்வியல் கதைகளும் வெகு சிறப்பாக இருக்கிறது.

லாங்ஃபெல்லோ எழுதிய கவிதையும் அப்படித்தான். உயர்ந்த சிகரங்களை எட்டியவர்கள். ஒரே நாளில், ஒரு பொழுதில் அந்த இடத்திற்குத் திடீரென்று வந்து விடவில்லை; தன் சகாக்கள் உறங்கிக் கொண்டு இருந்த வேளைகளிலும் கண் விழித்து உழைத்துக் கொண்டு இருந்தார்கள் என்று அவர் பாடிய கவிதையை என் நோட்டுப் புத்தகத்தில் முதல் பக்கத்தில் எழுதி வைத்து இருந்தேன் என்கிறார்.

"The heights by great men reached and kept were not attained by sudden flight, but they, while their companions slept, were toiling upward in the night."

Henry Wadsworth Longfellow

#கவிக்கு அப்துல் ரகுமான் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவரின் ஒவ்வொரு கவிதையையும் பாடல்களையும் வெகுவாக ரசித்து புகழ்ந்திருப்பார். அதற்கு மேற்கோளாக பல்வேறு கவிதைகளையும் அதில் சுட்டி இருப்பார். வரலாற்று நிகழ்வுகளையும் அனுபவங்களையும் என பல்வேறு வரிகள் இதில் காண கிடைத்தன.

இருள் மேல் எழுதும் நிலவைப் போல நீ என் மேல் ஏதோ எழுதி விட்டாய் பொருள் மேல் அமர்ந்த சொல்லானேன் 
ஒரு புதிரானேன் எனக்கு எதிரானேன் 

என புது காப்பியம் சூட்டும் வகையில் அவர் கவிதையை புத்துயிர் அளித்ததை சிலாகித்திருப்பார்.

#ராமாயண ரகசியம் நூல் வெளியீட்டு விழாவில் தமிழருவி மணியன் அவர்களின் எழுத்து ஆற்றலை குறிப்பிடும் போது ஒரு இடத்தில் பொது மகளிர் என்று அழைக்காமல் விலை மகளிர் என்று சொல்லாமல், அவர்களை வரைவின் மகளிர் என்று தான் வள்ளுவர் குறிப்பிடுகிறார். அதேபோல ஆசிரியரும் வரைவு என்பது திருமணம் செய்து கொள்ளாத பெண்டிர் தான் வரைவின் மகளிர் என்று விளக்கம் தருகின்றார். யார் நட்பு கூடாது என்று சொல்லும் போது வரைவின் மகளிர் நட்பு கூடாது என்கிறார் வள்ளுவர்.

காடெறச் சொன்ன கைகேயின் மீது கோபத்தில் உள்ள லக்குவனை ஆற்றுப்படுத்தும் விதமாக ராமன் கூறிய பாடல்

"நதியின் பிழை அன்று 
நறும் புனல் இன்மை; அன்றே பதியின் பிழை அன்று; 
பயந்து நமைப் புரந்தாள் 
மதியின் பிழை அன்று; 
மகன் பிழை அன்று; மைந்த! விதியின் பிழை; நீ இதற்கு 
என்னை வெகுண்டது? என்றான்.'

நதியில் தண்ணீர் இல்லாதது நதியின் குற்றம் அல்லவே? நம் தந்தையின் பிழையும் அல்ல; நம்மைக் கானகம் ஏகச் சொன்ன தாய் கைகேயி பிழையும் அல்ல; இது விதியின் பிழை அப்பா. என்கிறார் நல்ல உவமையுடன்.

நான் படித்த சிறப்பு தமிழ் பாடத்தில் வந்த ஒரு மனப்பாடப் பாடல் இந்த புத்தகத்தில் மேற்கோளாக சொல்லி இருப்பார் அதனை படித்தவுடன் அன்றைய பள்ளி நினைவு எனக்கு நினைவுக்கு வருகிறது சூர்ப்பனகை வருவதை கம்பர் சொற்களால் வர்ணிப்பார் 

பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க 
செஞ்செவிய கஞ்சம்நிகர் சீறடியள் ஆகி 
அம்சொல் இளமஞ்ஞை என அன்னம் என மின்னும் 
நஞ்சம் என வஞ்சமகள் வந்தாள்''

இப்படி சொற்களை பயன்படுத்த முடியுமா? என வியக்கும் வண்ணம் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது.

#ஒருமுறை சட்டக் கல்லூரியில் Ends justify the means என்ற தலைப்பு கொடுத்தார்கள். முடிவுகள் வழிகளை நியாயப்படுத்துகின்றன. இந்த கருத்தை பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் எழுந்தது. பாரிஸ் நகரத்தில் ஒலித்தது .அதை தந்தவர் மாக்கியவல்லி .பஞ்சமா பாதகம் செய்யலாம் நீ போரில் வெற்றி பெறுவதற்கு உதவியாக இருக்குமானால் என்பது அதன் கருத்து. இதனை குறித்து யார் யாரெல்லாம் இது போன்ற வழிகளை பின்பற்றினார்கள் என்று தக்க மேற்கோள்களுடன் இதில் பேசி இருப்பார்.

#ரசித்தவை

*மண் என்றால் சேர்ந்து இருப்பது அது அல்லாமல் தனித்தனியாக இருப்பது மணல்

*உன்னுடைய இறைவன் நீ உருட்டுகின்ற மணிமாலையில் இல்லை. அதோ சம்மட்டி ஏந்தி பாறை உடைக்கின்றானே அவனது மேனியில் இருந்து சிந்துகின்ற வியர்வைத் துளியில் இருக்கிறான் இறைவன் என்றார் தாகூர்

*சோழ மன்னர்கள் அமாவாசை நாளில் தான் போருக்கு புறப்பட்டு செல்கின்றனர் அது ஒரு நம்பிக்கை

*ராமன் லக்குவணன் சூர்ப்பனகை வரும் காட்சிகளில் வால்மீகி எப்படி வைத்திருப்பார்.. கம்பனதை எப்படி காட்சிப்படுத்தி இருப்பார் என்பதை வேறுபாடுகளை மிக இயல்பாக இதில் குறிப்பிட்டிருப்பார்.

*திருவாசகத்தை ஜி.யு போப் அவர்கள் படித்து வியந்ததை பார்த்த பெஞ்சமின் இந்த புத்தகம் உன் மனதை ஈர்த்தது என்றால் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடலாமே என்கிறார். என் உடல் நலிந்துவிட்டது நான் மூப்படைந்து விட்டேன் என்று சொல்கிறார் .அதற்கு அவர் ஒரு புகழ்மிக்க பணியை செய்கின்றபோது அதை செய்து முடிக்கின்ற வரையிலும் உன் வாழ்நாள் நீடிக்கும். எனவே நீ தொடர்ந்து என்று சொன்னவுடன் தான் ஜி யு போப் மொழிபெயர்க்கத் தொடங்கினாராம்.

ஒவ்வொரு பக்கத்திலும் புதிய தகவல்கள் சிந்தனைகள் நாம் படிக்க இருக்க வேண்டிய புத்தகத்தின் சாரம்சத்தை சங்க இலக்கியத்தினை திருக்குறளினை சாறு பிழிந்தது போல் நமக்கு ஒவ்வொரு இடத்திலும் தந்து கொண்டிருந்தது. புத்தகத்தை வேகமாகவும் அதே சமயம் நிதானத்துடனும் படிக்கத் தூண்டியது. இது போன்ற புத்தகங்கள் நாமும் பல்வேறு இடங்களில் மேற்கோள் சொல்வதற்கு பயன்படும் வகையில் குறிப்புகள் எடுத்துக் கொள்ளும் வகையிலும் உள்ளது .

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment