Tuesday, 4 June 2024

புத்தகம் -13


Reading_Marathon2024
#24RM050

Book No:13/100+
Pages:536

மானாவாரிப் பூ
-மேலாண்மை பொன்னுச்சாமி 

பள்ளி நாட்களில் தமிழ் சிறுகதை கொத்துக்களில் இவரின் கதையை முதன் முதலில் படித்தேன். பெயரின் முன்னால உள்ள மேலாண்மை என்பது இவர் தொழில் சார்ந்து இயங்கும் வழிகாட்டுனராக இருக்கலாம் என எண்ணத் தோன்றியது. ஆனால் இவரின் எழுத்துக்களை படித்த பிறகு தெரிந்து கொண்டது மேலாண் மறைநாடு என்பதைத்தான் சுருக்கி மேலாண்மை என்று வந்தது தெரிய வந்தது. அதன் பிறகு இவருடைய எழுத்துக்களில் தொடர்ந்து வாசித்து வந்தாலும் இந்த புத்தகம் அவருடைய சிறுகதைகளை இன்னும் அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பினை தந்தது. இயல்பான கிராமத்தின் நடையில் தங்கு தடை இன்றி ஆதி முதல் அந்தம் வரை ஒரே நேர்கோட்டில் கதையை கூறுவதில் வல்லவர். கிராமத்து சொலவடைகளோடு வாழ்வியல் உண்மைகளையும் இவருடைய கதைகளில் நாம் காணலாம்.

இந்தத் தொகுப்பில் 34 கதைகள் உள்ளன. ஒவ்வொரு கதைகளும் வெகுஜன இதழில் வந்தவைகளாகவும் பரிசு பெற்ற கதைகளாகவும் உள்ளதால் படித்தவுடன் ஒவ்வொரு கதைகளும் மாஸ்டர் பீஸ் ஆக இருப்பதில் ஐயமில்லை.

ராசாத்தி மகன் பாண்டியன் செத்துப் போனான் என்ற அதிர்ச்சி தீப்பிடித்த மாதிரி ஊரெல்லாம் சட்டுன்னு பரவியது என்று ஆரம்பிக்கும் கதையின் ஓட்டத்தில் பல்வேறு திருப்பங்களை கடந்து இறுதியில் முழிக்க கூடாத முகங்களில் ஒன்று கையில், ஒன்று தோளில் என்று கூறி துக்கத்தினை நமக்கும் கடத்தி இருப்பார்.

அரும்பு என்ற கதையை தமிழ்ச்செல்வன் அவர்கள் கூறி கேட்டிருக்கிறேன். தீப்பெட்டி ஆபிசுக்கு வயது வந்த பெண்களை மட்டுமே எடுக்கும் சூழலில் வயதுக்கு வராத பெண் முத்துலட்சுமி தாவணி கட்டிக்கொண்டு கடைசியில்   தீப்பெட்டி ஆபிசுக்கு செல்வது போல் கதை முடிந்திருக்கும் .இழவு வீட்டு சங்காக அலறுகிறது தீப்பெட்டி ஆபீஸ் பஸ்ஸின் ஹாரன்.. ஒரு பிரேதத்தை போல்.. அடங்கிப்போன சலனங்களுடன் நடந்தது. அந்த அரும்பு என்று முடித்திருப்பார்.

வயக்காட்டில் கூலி வேலை செய்யும் தாய்க்கும் மகனுக்கும் உண்டான பந்தங்கள் ஒரு நகர்வுக்கு கதையிலும், பழைய சோறு சாப்பிடுபவர்கள் இட்லி சாப்பிடுவதற்கு உரிய ஆதங்கத்தை ஊர்ச்சோறு  கதையிலும், பிரசவ வேதனையில் துடிக்கும் இராமாயியை தொலைதூர டவுன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து போனதை கொலை என்ற கதையில் சொல்லி நல்ல சாலைகள் இல்லாததால் தான் ஒரு கொலை செய்யப்பட்டதாக சமுதாயத்தின் மீது குற்றம் சாட்டியிருப்பார்.

வீட்டில் உள்ள வறுமைக்கு மகனுக்கு சோறு பொங்க கூட காசு இல்லாமல் முதலாளிடம் கடன் கேட்கும் ஒரு தாயின் மனதை சுயம் என்ற கதையில் சொல்லி இருப்பார்.

உள் மனிதன் கதை உண்மையிலேயே படிக்க படிக்க மிகவும் சுவாரஸ்யமானது. ஊரே காத்துக் கிடக்கும் பேருந்துக்கு பிரசவ வலியுடன் ஏறும் ஒரு தம்பதி வண்டி எடுக்க தாமதமானதால் டிரைவருடன் சண்டை, கண்டக்டருடன் வாக்குவாதம் என்று போகும் கதையில் பேருந்து சென்று கொண்டிருக்கும் போதே பிரசவ வலி வந்து விடுகிறது.
 இதனை அறிந்த ஓட்டுநர் சற்றும் தாமதியாமல் வண்டியை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார். பிரசவம் நடைபெறுகிறது. இப்போது சண்டையிட்ட மனிதன் ஓட்டுனரின் முகத்தை பார்க்க கூசுகிறான் என உள் மனிதன் கதையில் ஒவ்வொரு மனிதர்களின் உளவியல் சிந்தனைகளையும் நமக்கு சொல்லி இருப்பார்

எப்போதும் விளையாட்டு மனதுடன் இருக்கும் பேச்சிக்கு மைதானத்தில் விளையாடியபடி இருப்பாள். ஆனால் ஆபீஸ் வேலைக்குச் செல்லும் போது இந்த விளையாட்டுத்தனத்தை சமூகமே கண்டிக்கிறது எனும் கதையில் பேருந்தின் ஜன்னலில் வேலைக்குச் செல்லும்போது மைதானம் அவளை விட்டு பிரிந்து தூரம் தூரமாக போய்க்கொண்டிருந்தது என்று முடித்து இருப்பார்.

அடுத்தடுத்த பெண் குழந்தைகள் பிறந்திருக்கும் முப்பிடாதிக்கு அது நான்காவது பிரசவம். அப்போதும் பெண் குழந்தைகளை பெற்றதால் கள்ளிப்பால் ஊற்றி கொன்று விடுகிறார்கள். மயக்கம் தெளந்த முப்பிடாதி வெடித்து அழுகிறாள். அவள் ஜாக்கெட்டில் சீந்துவார் இல்லாமல் பரவி நனைந்து சொட்டடடிக்கிறது அமிர்தப்பால் வாழ்க்கை போல எனும் கதை தாய்மதியில்.

நாள்பட்ட சீக்கு - க்ஷயரோகம். இளைப்பும், தகையுமாக சருமம் விம்மி விம்மித் தணியும். நெஞ்சுக் கூட்டுக்குள் சலங்கை குலுங்குகிற மாதிரி 'கொல கொல'வென்று இரைச்சல் போடுகிற சளி. இருமல் வந்தால், சூறாவளி மாதிரி தான். வாடிப்போன சோளப்பயிரைச் சுழற்றியாட்டுகிற மாதிரி ஓர் உலுக்கு உலுக்கியெடுத்துவிடும் அய்யாவை.

கட்டிலைச் சுற்றி ரொம்ப நாளாக ஒருவீச்சம். துப்பிய சளியின் துர்நாற்றம். நிரந்தர ஈர மொய்ப்பு. மணல் நிறைந்த சிரட்டை பூராவும் சளியின் கருமை.

எலும்புக்கூட்டு மேலே நனைந்த காகிதம் போல படிந் திருந்தது, வெளுத்த சருமம். நிறைய நரைத்த ரோமங்களும், சுருக்கங்களும், அதில்.

குத்துக்கால் வைத்து உட்கார்ந்தால்... முழங்கால் உயரத் திற்குள் மொத்த உடலே முடங்கிக்கிடக்கும். தசையில் அசையும்போதுதான் உயிர் இருப்பதே தெரியும்.

ஒரு சிறுகதையின் ஆரம்பித்திலிருந்து இறுதி வரை இப்பிடி வார்த்தைகளில் காட்சிப்படுத்தும் கரிசல் காட்டு எழுத்து அரக்கர்

இது போல் முத்தாய்ப்பான ஒவ்வொரு கதைகளும் வார்த்தைகளின் விவரிப்பும் அவருக்கே வந்த கலை. சிறுகதை எழுத நினைப்பவர்கள் முதலில் படிக்க வேண்டிய எழுத்தாளர்களில் மேலாண்மை பொன்னுசாமியும் ஒருவர் .

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment