வீடு திரும்பிய நோயாளி சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?
-பாக்கியம் ராமசாமி
#முதலாவது பெட் அடுத்தது - ரெஸ்ட்.
முதலில், நமது பெட் வீட்டுக்கு உள்ளே, கர்ப்பக் கிரகத் தில் இருப்பதுபோல் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்துகொண்டு இருக்கக் கூடாது. அதற்காக ஒரேயடியாக வராந்தாவிலும் இருக்கலாகாது. ரேழிக்கு இழுத்துப் போட்டுவிட்டார்கள் என்று யாரும் தப்பாக எண்ணிவிடக் கூடாதே! ரொம்ப உள்ளே இருந்தாலும், 'ஏதோ பயங்கரமான வியாதி போலிருக் கிறது.அதான் மூடி மறைத்து உள்ளே வைத்திருக்கிறார்கள்' என்று நினைத்துவிடுவார்கள். நடு ரூம்தான் சிறந்தது. போகிற, வருகிறவர்களுக்கு இடைஞ்சலாக இருந்தாலும் நமக்குச் சௌகரியமான இடம் அதுதான்.
2. பெட் ரெஸ்ட்டில் இருக்கும்போது நம்மைப் பார்க்க வருகிறவர்கள் நிறையப் பேசி நம்மை அறுத்துத் தள்ளிவிடு வார்கள். அதற்கு இடம் தராமல், நாமே பெரும்பாலான நேரம் பேசிவிடுவது நல்லது.
3. நாம் வீடு திரும்பிவிட்டதை நமக்கு வேண்டிய சகல பேர்களுக்கும் செல்போன் மூலம் தெரியப்படுத்துவது ஒரு 'மஸ்ட்: 'அடடா! உடம்பு தேவலையாகிவிட்டதா?' என்று வருத்தப்படாமலிருக்க இது உதவும். லேட்டாகச் சிலர் வந்து வருத்தப்படாமலிருக்க உதவும்.
3. வீட்டுக்கு வரும் விசிட்டர்கள் முன் அவ்வப்போது இருமிக் காட்ட, கைவசம் இருமல் கொஞ்சம் ஸ்டாக் இருக்க வேண்டும்.சிலருக்கு இருமல் பூராவும் தீர்ந்திருக்கும். அவர்களுக்கு ஒரு உபாயம்.. வெறுமே கைவும் அடிக்கடி நீவிக் கொள்ளுங்கள். இல்லையெனில் என்னவோ செய்யறது, நெஞ்சில் இருக்கு, வரமாட்டேன்கிறது என்பது போன்ற வார்த்தைகளைச் சொல்லலாம்."
5. சிலர் பெட் ரெஸ்ட் சட்டை அணிந்து காட்சி தரு வார்கள். மகா தப்பு ! உங்களுக்கு அவர்கள் என்ன, பெண் கொடுக்கவா வருகிறார்கள்? ஆகவே, தாடி மீசையுடன் (முள்ளு தாடி விசேஷம்) இருப்பது அவசியம். சட்டையில் பட்டன்களை ஏற இறங்கத் தப்பாகப் போட்டுக்கொண் டிருப்பது அதி அவசியம்.
6.படுக்கை ரொம்ப நீட்டாக இருக்க வேண்டும் என்று ஹாண்ட்லூமுக்கோ, பாம்பே டையிங்குக்கோ போய் இரண்டு செட் புது விரிப்பு, தலையணை உறைகள் வாங்கி வருகிற அபிஷ்டுகள் உண்டு. நோயாளிகளின் படுக்கைக்குச் சில பல கசங்கல்களும், கோணாமாணாக்களும் அவசியம். அப்படி இல்லாமல் நீட்டாக இருந்தால், வருகிற விசிட்டர்களுக்கு அனுதாபத்துக்குப் பதில் பொறாமையே ஏற்படும்.
7. கட்டிலுக்குப் பக்கத்தில் ஒரு டீபாய் கட்டாயம் வேண்டும். டீபாய் என்றால், அது டீ வைக்கவோ காபி வைக்கவோ மாத்திரம் அல்ல. மருந்து, மாத்திரை, காபி டம்ளர், பேனா, டெலிபோன் டைரக்டரி, தமிழ் - ஆங்கிலப் பத்திரிகைகள், டி.வி-யின் ரிமோட், செல்போன், லாண்ட் லைன், நெயில் கட்டர், ஒரு கண்ணாடிக் கிண்ணம், ஸ்பூன், சர்க்கரை, ஹார்லிக்ஸ் டப்பாக்கள், இரண்டு சாத்துக்குடி, ஆரஞ்சுப் பழத் தோலிகள், இது மாதிரி அநேக பொருள்கள் இடம்பெற் றிருக்க வேண்டும்.
8. விசிட்டர் வரும்போது நோயாளி படுத்திருப்பது ரொம்ப முக்கியம். சமையலறைக்குப் போய் ஜாலியாகப் பெண்டாட்டியுடன் சரசமாடிக் கொண்டு இருந்தால் போச்சு! சிலர் வாசலில், கேட்டைப் பிடித்துக்கொண்டு தெருவைப் பராக்குப் பார்த்தபடி நிற்பார்கள். விசிட்டர் தூரத்தில் வருவதைப் பார்த்துவிட்டு, அவசரம் அவசர மாக உள்ளே ஓடிப் படுக்கையில் படுத்துக் கொள்வார்கள். தேவையே இல்லை விசிட்டரைத் தூரத்தில் பார்த்ததும், மெதுவாக நடக்கத் தொடங்க வேண்டும்.
"என்ன சார், நடக்க ஆரம்பிச் சுட்டீங்களா?" என்று விசிட்டர் மனசுக்குள், 'வாங்கி வந்த பழம் வேஸ்ட்!' என்று நினைத்துப் பதறும் போது,'சாந்தி... சாந்தி' என்று புத்தர் பெருமான் போல சைகை செய்ய வேண்டும். கம்மிய குரலில் 'மூணு நிமிஷம் நடக்கணுமாம்... ஹும்... ஹா...' என்று முக்கி முனகி ஒரு பெருமூச்சை விட்டால் போதுமானது.
9. விசிட்டர் வரும்போது டி.வி. சீரியல் பார்த்துக்
கொண்டு இருப்பது கூடவே கூடாது. பெட் ரெஸ்ட்காரர்
தன் நோயைத் தவிர, உலகில் வேறு எதையும் ரசிக்கக் கூடாது
என்பது மரபு.
10. நொறுக்குத் தீனி தின்ன பெட் ரெஸ்ட்காரருக்கு வாய் ஊறும். மனைவியைக் காக்கா பிடித்து பகாசருக்கு பக்கோடா போட வைத்து, வீடு பூரா வெங்காய பக்கோடா வாசனை 'கமகம'த்துக்கொண்டு இருந்தால், வருகிற விசிட் டருக்கு இரக்கம் ஊறுவதற்குப் பதில், நாக்கில் எச்சில்தான் ஊறும். ஆகவே, வாசனை எழுப்பாத இட்லி, இடியாப்பம் போன்றவையே (சாம்பார் வேண்டாம்) உசிதமானது.
11. போன் அடித்தால், எக்காரணம் கொண்டும் பெட் ரெஸ்ட் பேர்வழி எடுத்துப் பேசலாகாது. அரை மணி கதறி னாலும், அதை மனைவியோ வேறு யாரோவோதான் வந்து எடுக்க வேண்டும். அப்படியே எடுத்தாலும், 'இப்பதான் நாயர் கடை வரைக்கும் போயிருக்கார், பிளேடு வாங்கிண்டு வர என்றெல்லாம் அசட்டுப் பிசட்டென்று உண்மையை உளறி வைக்கக் கூடாது. ‘அவர் தூங்கிண்டிருக்கார்' என்றுதான் சொல்ல வேண்டும்.
குறிப்பு: பெட் ரெஸ்ட் நோயாளி ஆக வேண்டாம்.அதனால்.கிட்டும் புகழ்மிக அற்பமானது.உங்களைபார்க்க பத்து பேர் வந்தால்..நீங்கள் பதில் மரியாதைக்கு நூறு பேரை பார்க்க வேண்டி இருக்கும்.
No comments:
Post a Comment