Tuesday, 29 September 2026

book-70


Book-70

வணக்கம் வள்ளுவ
- ஈரோடு தமிழன்பன்

'வள்ளுவம்' இதழாசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க 'வள்ளுவத்துக்குக் கவிதை' வழங்கும் முயற்சியாக இத்தொடர் கவிதைகள் எழுதத் தொடங்கப்பட்டன

மரபுச் சிறப்புமிக்க திருக்குறளையும் திருவள்ளுவரையும் மையமாகக் கொண்டு, வள்ளுவரோடு உரையாடியும், விவாதித்தும், இன்றைய சமுதாயத்தைச் கூர்மையாக விமர்சிக்கும் நோக்கில் இக்கவிதைகள் படைக்கப்பட்டுள்ளன

இந்நூலில் மொத்தம் 22 புதுக்கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் 'வணக்கம் வள்ளுவ!', 'எட்டாவது சீர்...', 'எது வள்ளுவம்?', 'வள்ளுவர் வழங்கும் விடுதலை', 'வள்ளுவர் வீணை வாசிக்கிறார்', 'விலைமாதர்கள் வள்ளுவரிடம் கேட்ட வினாக்கள்' போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்

"கடவுளையே கோவில்களிலிருந்து விடுதலை செய்தவர்...

செம்பிலிருந்து கல்லிலிருந்தும் கடவுளை விடுதலை செய்தார் என வள்ளுவர் வழங்கும் விடுதலையில் குறிப்பிடுகிறார்.

" காலம் உன் கருத்துகளின் சந்திப்பில்
தனது கோடுகளை கரைத்து விட்டது" எனும் வரி காலத்தையும் சிந்தனையையும் இணைக்கிறது.

"தராசு முள்களை மழுங்கடித்த மனு தர்மத் தட்டுகளில் மனிதச் சதைகளை எடைபோடும் சந்தைக்குள் சந்தேகங்களின் எடை கனத்தது

வழிபாடுகளையும் வரிகளையும் வற்புறுத்திய தெய்வ பிம்பங்களிலிருந்து மன்னர்களை உரித்தெடுத்தாய்"

எனும் வரிகள் வள்ளுவரின் சிந்தனை பாமரனையும் மனுதர்மம், மன்னர்கள் குறித்து சிந்திக்க வைத்தது.

சிலி நாட்டு கவிஞர் பாப்லோ நெருடாவின் கவிதையாக்க நெறி ஆசிரியருக்கு ஒரு தூண்டுதலாக விளங்கியுள்ளது. சமுதாய விமர்சனம், மனிதநேயம், படிமங்கள் மற்றும் முரண்களைப் பயன்படுத்தி வள்ளுவத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை இக்கவிதைகள் தருகின்றன

ஏழாவது சுரம் கதவை மூடியதால் ஏமாந்த எட்டாவது சுரம், 'இங்கு இடமில்லை' எனத் தள்ளப்பட்ட எட்டாவது வண்ணம், வாரத்தின் ஏழு நாட்களுக்குப் பின் தோன்றத் துடித்துத் தீக்குளித்த எட்டாவது கிழமை போல, 'எட்டாவது சீர்' என்பதும் வள்ளுவரால் வாசலிலிருந்து விரட்டப்பட்டதா என உருவகமாகக் கேட்கப்படுகிறது

வள்ளுவனுக்கு எண்ணங்களே முக்கியம்; ஆனால் மனிதர்களுக்கோ எண்ணிக்கையே முக்கியம்" என்ற முரணைச் சுட்டிக்காட்டி, பொருளுக்காக அறத்தையும் இன்பத்தையும் அடகு வைக்கும் மனிதர்களின் போலித்தனமான வாழ்க்கையை இக்கவிதை விமர்சிக்கிறது

"பசித்தவன் வயிற்றில் பற்றி எரியும் நெருப்பிடம் படைத்தவன் முகவரியைக் கொடுத்துப் 'பாதகம் இல்லை தாக்கு என்று அனுப்புகிற வள்ளுவம்'"

என எது வள்ளுவம் கவிதை படைத்தவனை கேள்விக்கு உள்ளாக்குகிறார்

"அறிவது அறிவென
நாங்கள் அறிந்தாலும்
அறிவது எப்படியென்று அறிவித்தவன் நீ" 

என வள்ளுவனுக்கு புகழ் மாலை சூட்டுகிறார் 

கருத்துகள் வளர்வதைவிட
கருத்துக்களைப் பற்றிய
கருத்துக்கள்
வேர்கள் இல்லாமலேயே வேகமா
வளர்ந்துவிடுகின்றன

என நவீன கருத்தியவர்களை எளிமையாக சில சொற்களில் உணர்த்திவிடுகிறார்.

திருக்குறளின் தத்துவங்களையும் மனிதநேயத்தையும் இசையோடு உருவகித்து, இன்றைய சமுதாய அவலங்களைச் சுட்டிக்காட்டும் ஒரு மிகச்சிறந்த கவிதையாக வள்ளுவர் வீணை வாசிக்கிறார் கவிதை உள்ளது.

ஒரு மாலை நேரத்தில் வள்ளுவர் வீணை மீட்டும் போது, அந்த இசையின் வெள்ளம் உறங்கிக் கொண்டிருந்த நட்சத்திரங்களை எழுப்புகிறது; பூமியும், காற்றும், வானும் இன்பத்தில் திளைத்துச் சுழல்கின்றன.கடல் அலைகள் இசை அலைகளில் கரைந்து நிற்க, வானவில் வண்ணம் அள்ளுகிறது.
வீணையின் நரம்புகளில் இல்லறத்தின் இனிமை ஒலிக்கிறது. பல்லாயிரம் வீடுகளில் அமைதியும், கைக் குழந்தைகள் கிலுகிலுப்பை அசைக்கும்போதும், முதியவர்கள் வெற்றிலை இடிக்கும்போதும் பின்னணியில் வள்ளுவ இசை மயக்க வலைகளைப் பின்னுகிறது.

ரோமானிய மன்னன் நீரோ நகரம் எரியும்போது கவலையின்றி வீணை வாசித்தான் என்பார்கள்; ஆனால் வள்ளுவரோ மக்களின் துயரங்களையும் சமுதாயப் பிளவுகளையும் கண்டு நெஞ்சம் கொதித்து, அவற்றுக்கு மருந்தாக வீணை மீட்டித் தன் விரல்கள் கொப்பளித்துக் களைப்படைகிறார் 

நானும் உறங்க வேண்டும் வள்ளுவர் போல்..
வள்ளுவர் தூக்கத்திற்குள்
ஒரு கனவு போல் நுழைந்துவிட
நானும் உறங்க வேண்டும்

என தன் கற்பனையில் கூட கவித்துவ ஆசையைக் கூறுகிறார்.

வசப்படுவாயா வள்ளுவ கவிதையில்

ஆயிரம் சாவிகளால் திறக்கப்படும் அதிசயப்பூட்டு, உனது நூல்! திறப்புகளால் நிரப்பி வைத்திருக்கும் உன் பூட்டை உடைக்காத குறை..... ஆள் ஆளுக்கும் அள்ளி வருகிறார்கள் அர்த்தங்களை!

என ஒவ்வொருவருக்கும் அர்த்தங்களை அள்ளித்தெளிக்கும் அமுத சுரபி போல் உள்ள வள்ளுவ கருத்துக்களை கூறுகிறார்.

மனதில் 
கருத்தரிப்பார் வள்ளுவர்
ஏட்டில் 
ஈன்றெடுக்கும் எழுத்தாணி
இரு தாய்க்கும் பிறந்த 
ஒரு சேய் குறள் பனுவல் 

என அழகியலில் உவமையாக கூறுகிறார்.

ஈகை குணம் பற்றித கவிதையில்
மனிதனின் இதயத்தில் ஈரம் இருந்தால், அவனது விரல்களே கிளைகளாகவும், நகங்களே கனிகளாகவும் மாறும்; அவனது உள்ளங்கை ரேகைக் கொடியிலும் ஆயிரம் வாசப்பூக்கள் பூக்கும்.

உண்மையான ஈகையாளன் வெறும் தானம் மட்டும் கொடுப்பதில்லை; தன்னையே கொடுக்கிறான். அவன் "வான மழையின் வயிற்றில் பிறந்தவன்", "கடலின் மூத்த சகோதரன்" என்று உருவகிக்கப்படுகிறான்.வங்கிக் கணக்கை மட்டும் வளர்ப்பவன் வாழ்க்கைக் கணக்கில் விடைதெரியாமலே விடைபெறுகிறான்" என்று பொருளாசை பிடித்தவர்களை விமர்சிக்கிறார்.

உனது
வாய்மைப் பேரரசில்
வார்த்தைகள்
மானுடத்தைக் கொண்டாடுகின்றன....
எண்ணங்களைக்
கொண்டாடுகின்றன...
தங்களையும்
கொண்டாடிக் கொள்கின்றன.....

அர்த்தங்களை மாற்றிவைத்து வார்த்தையை, வாழ்க்கையை அழுக்காக்கி விடுகிறான் மனிதன் திசை மாற்றி வைப்பானோ மனிதன் என்று தினம் தினம் விடியல்கூடத் தடுமாறி விடுகிறது.

வள்ளுவரை போற்றி புகழ்வதோடு அவரின் கருத்துகளை நவீன் மனிதர்களின் சிந்தனைகளோடு ஒப்பிட்டு வள்குவரை உயர்த்தி பிடிப்பதுடன்.. சாமானியர்கள் சிந்தனை வளம் பெறவும் வள்ளுவத்தை நமக்கு எளிய மொழிகளில் போதிக்கிறார். ஒவ்வொரு அத்தியாத்திலும் துவங்கம் முன் ஒரு கவிதை சொல்வது அந்த அத்தியாத்தின் சுவைக்கு ஒரு பதம்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment