Sunday 30 June 2024

கென் ய வீரர்


கென்ய ஓட்ட பந்தய வீரர் Abel Mutai, எல்லைக் கோட்டை அடைய சில மீட்டர் தூரம்தான் இருந்தது. 

ஆனால் குறியீடுகளைப் பார்த்துக் குழம்பிப் போய், இலக்கை அடைந்து விட்டதாக நினைத்து நின்று விட்டார்.

 பின்னால் வந்த ஸ்பெயின் நாட்டின் Ivan Fernandez,  அதைச் சுதாரித்துக் கொண்டு, Abel ஐ தொடர்ந்து ஓடச் சொல்லி சத்தமிட்டார்.

 Abel க்கு ஸ்பானிஷ் மொழி தெரியாததால், அவர் சொன்னது புரியவில்லை.

அதைப் புரிந்து கொண்ட Ivan Fernandez, Mutai ஐ இலக்குக்கு நேராய் உந்தித் தள்ளினார்.

"ஏன் இப்படிச் செய்தீர்கள்?" என்று பத்திரிக்கையாளர்கள் Ivan இடம் கேட்டபோது, "என்றாவது ஒரு நாள் நாம் ஒருவரை ஒருவர் வெற்றிக்கு நேராய் உந்தித் தள்ளுகிற ஒரு சமுதாயமாக மாறுவோம் என்பதுதான் என் கனவு" என்றார்...!

"ஏன் அந்தக் கென்னியரை ஜெயிக்க  விட்டீர்கள்?" என்று பத்திரிகையாளர் மறுபடியும் கேட்ட போது, "நான் அவரை ஜெயிக்க விடவில்லை, அவரே வெற்றிக்கு அருகில் வந்து விட்டார். இந்தப் பந்தயம் அவருடையது" என்றார்....

"நீங்கள் ஜெயித்திருக்கலாம்.." என்று பத்திரிகையாளர் மறுபடியும் கேட்ட போது,
அதற்கு Ivan, "அந்த வெற்றியின் சிறப்பு என்னவாக இருக்கும்? இந்தப் பதக்கத்திற்கு என்ன மரியாதை இருக்கும்?
என் தாய் .. எனது குடும்பம் என்ன நினைப்பார்கள்?"
என்றாராம்.

நற்பண்புகள், ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. 

நாம் நம் குழந்தைகளுக்கு எப்படிப் பட்ட பண்புகளை கற்றுக் கொடுக்கிறோம்?

எந்த அளவுக்கு மற்றவர்களை, நற்பண்புகளால் ஈர்க்கிறோம்? 

நம்மில் பலரும், மற்றவர்களின் பலவீனத்தில் உதவி செய்வதை விட, அதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வே எண்ணுகிறோம்.

சுயநலமாய் இருப்பதை விட்டு,ஒருவரை ஒருவர் வெற்றிக்கு நேராய் உந்தித் தள்ளுவோம்.

 நாம் எல்லாருமே வெற்றிக்குத் தகுதி ஆனவர்கள்தான்...!

மினிமலிசம்


செஸ்டெர்பீல்டு பிரபு 17ம் நூற்றாண்டில் ப்ரிட்டனில் வாழ்ந்தவர். தன் மகனுக்கு இவர் எழுதிய கடிதங்கள் மிக பிரபலமானவை.

அதில் ஒரு கடிதத்தில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்

"எல்லாருக்கும் ஆசைகள் உண்டு. அவை நிறைவேறாமல் போனால் நாம் ஏமாற்றமடைவோம். உன் வயதில் விளையாட்டுதனமாக இருக்கும் நிறைய சிறுவர்கள் உண்டு. அவர்களின் ஆசை என்ன என கேட்டால் நல்ல வசதியான வீடு, ஆடம்பரமான துணிகள், கேளிக்கைகளில் வீணடிக்க காசு..இவை வேண்டும் என்பதாக இருக்கும். ஆனால் இதில் அந்த சிறுவனுக்கு பெருமை எதுவும் வருவதில்லை. அவனை துணிக்கடை பொம்மை மாதிரி அலங்கரித்து, காசு கொடுக்கும் பெற்றோரின் முட்டாள்தனம் தான் இதில் தெரியவரும்.

ஆனால் நல்ல பண்புள்ள சிறுவன் அவன் வயதையொத்தவர்களை விட கூடுதலான அறிவும், பண்பாடும் மட்டுமே வேண்டும் என ஆசைபடுவான்.

சிறுவர்களுக்கு மட்டுமல்ல, வளர்ந்த பெரியவர்களிடம் கேட்டால் கூட வீடு, சாரட்டு வண்டி, துணிமணிகள் என பணத்தால் வாங்கக்கூடிய பொருட்களின் மேலேயே ஆசைகொள்வதாக சொல்வார்கள். 

ஆனால் பணத்தால் வாங்கமுடியாத நல்ல இதயம், சிந்திக்கும் மூளை இவற்றால் மட்டுமே அடையகூடிய கேரக்டர், அறிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றை மட்டுமே மேலானவர்கள் விரும்புவார்கள். 

பண்டைய கிரேக்கம், ரோமில் அப்படி நினைத்ததால் தான் அங்கே இருந்து ஆழ்ந்த சிந்தனையாளர்கள் உருவானார்கள். சமூகம் வலிமையானதாக இருந்தது. அதுபோலவே நீயும் ஆவாய் என நான் விரும்புகிறேன்..."

இந்த கடிதத்தை எழுதுகையில் அவரது மகனின் வயது ஒன்பது மட்டுமே...

Thursday 27 June 2024

கற்பது குறித்த விளக்கம்தெரியாத அறியாமையில் இருந்து தெரிந்த அறியாமைக்கு போவதுதான் அதன் முதல்படி.பிறகு தெரிந்த அறியாமையில் இருந்து தெரிந்த அறிதலுக்கு செல்ல வேண்டும்.அதற்கு பின்னர்,தெரிந்த அறிதலில் இருந்து தெரியாத அறிதலுக்கு மறுபடியும் பயணிக்க வேண்டும்.தெரிந்ததைக்கூட இயல்பாக பிரயத்தனம் இல்லாமல் செய்கிற அளவிற்கு கற்று உயரும்போது தான் கல்வி முற்றுப் பெறுகிறது.-டெனின்

பகதூர் ஷா


1775ம் ஆண்டு முதல் டெல்லி முகலாய சுல்தான்கள் ப்ரிட்டிஷ் ஆட்சிக்கு கீழ் வந்து விட்டார்கள். ஆண்டுக்கு ரூ 95,000 பென்ஷன் வழங்கபட்டது. அது அப்போது பெரும் தொகை. ரூ. 2500 இருந்தால் ஒரு யானையை வாங்கிவிடலாம்

படைகள், கோட்டையை மெய்ண்டெய்ன் செய்ய அந்த தொகை வழங்கப்பட்டது. வயதான கடைசி சுல்தான் பகதூர் ஷா பெயரளவுக்கு ஆட்சியில் இருந்தார். 

1857ம் ஆண்டு சிப்பாய் கலகம் மூண்டது. சிப்பாய்கள் படை டெல்லிக்கு வந்தது. பகதூர்ஷா அனைத்து மதங்களையும் அரவணைப்பவர் என்பதால் அவரை மன்னராக ஏற்பதாக சொன்னார்கள். அவரும்
ஒப்புக்கொண்டார்

அதன்பின் டெல்லியில் இருந்த ஐரோப்பியர் அனைவரும் பிடிக்கபட்டார்கள். சிப்பாய்கள் நீட்டிய இடத்தில் மன்னர் கையெழுத்து போட்டார். பிடிப்பட்ட ஐரோப்பியர் அனைவரும் படுகொலை செய்யப்பட, அதற்கான ஆவணங்கள்
அனைத்திலும் பகதூர்ஷா கையெழுத்து இருந்தது

கொலைவெறியுடன் டெல்லியை முற்றுகையிட்டு பிடித்தார்கள் ப்ரிட்டிஷார். தன் முன்னோரான ஹுமாயூன் கல்லறையில் அடைக்கலம் புகுந்தார் பகதூர்ஷா. அவருக்கு மரணதண்டனை விதிக்கமாட்டோம் என உறுதிமொழி கொடுத்து சரணடைய வைத்தார் மேஜர் ஹட்சன்

ஆனால் ஐரோப்பியர் கொல்லபட்டதற்கு பழி வாங்க மன்னரின் மூன்று மகன்களும், பேரன்களையும் சுட்டு கொன்றார் ஹட்சன். எந்த விசாரணையும்
இல்லை.  பிடிபட்ட இந்திய வீரர்களை விசாரிக்க செல்கையில், ஒரு வீரன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஹட்சனை சுட்டு கொன்றுவிட்டார்

அதன்பின் பர்மாவுக்கு மாட்டு வண்டியில் ஏற்றி பல்லாயிரம் மைல்கள் கைதியாக கொண்டு செல்லபட்டார் மன்னர். 250 ஆண்டுகளுக்கு முன்பு மகோன்னதமாக துவங்கிய முகலாய சாம்ராஜ்ஜியம் இப்படியாக முடிவுக்கு வந்தது

பர்மாவிலே ஏழு ஆண்டுகளில் நோய் வாய்ப்பட்டு மரணமும் அடைந்தார். இறக்கும் முன் அவரது புகைப்படம் எடுக்கபட்டது.  புகைப்படம் எடுக்கபட்ட முதல் முகலாய மன்னரும் அவர்தான். 

அவரது கல்லறை இன்றும் பர்மாவில் உள்ளது.

தாஜ்மகால் கட்டப்பட்ட நாள் முதல் மும்தாஜுக்கும், அதன்பின் மன்னர் ஷாஜகானுக்கும் தாஜ்மகாலில் உர் (Urs) எனும் நினைவஞ்சலி செலுத்தப்படும். அதற்கு மட்டும் இன்றும் வாரிசுகள் என்ற முறையில் இவரது வாரிசுகள் அழைக்கபடுவார்கள். 

இந்தியாவின் பழைய மன்னர் வம்சாவளிகள் பலருக்கும் இப்படி இன்னுமொ ஒரு சிறு கௌரவம் வழங்கபடுவது அவர்கள் கட்டிய கோயில்கள் மற்றும் வரலாற்று சின்னங்க்ளில் தானே ஒழிய அவர்கள் படை எடுத்து பிடித்த பகுதிளிலோ, நடத்திய போர்களிலோ அவர்களுக்கு எந்த பலனும் இல்லை. 

வரலாறு ஈவு, இரக்கம் அற்றது

#history_is_his_story

- நியாண்டர் செல்வன்

மருந்தென வேண்டலாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்."முந்தைய சாப்பாடு முழுமையாய் சீரணித்தபிறகு,அடுத்த உணவுக்கு இலையை விரித்தால், மருத்துவமனையில் படுக்கையை விரிக்க வேண்டியதில்லை-கு.சிவராமன்

Tuesday 25 June 2024

பெட் ரெஸ்ட் நோயாளி?


வீடு திரும்பிய நோயாளி சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?
-பாக்கியம் ராமசாமி

#முதலாவது பெட் அடுத்தது - ரெஸ்ட்.

முதலில், நமது பெட் வீட்டுக்கு உள்ளே, கர்ப்பக் கிரகத் தில் இருப்பதுபோல் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்துகொண்டு இருக்கக் கூடாது. அதற்காக ஒரேயடியாக வராந்தாவிலும் இருக்கலாகாது. ரேழிக்கு இழுத்துப் போட்டுவிட்டார்கள் என்று யாரும் தப்பாக எண்ணிவிடக் கூடாதே! ரொம்ப உள்ளே இருந்தாலும், 'ஏதோ பயங்கரமான வியாதி போலிருக் கிறது.அதான் மூடி மறைத்து உள்ளே வைத்திருக்கிறார்கள்' என்று நினைத்துவிடுவார்கள். நடு ரூம்தான் சிறந்தது. போகிற, வருகிறவர்களுக்கு இடைஞ்சலாக இருந்தாலும் நமக்குச் சௌகரியமான இடம் அதுதான்.

2. பெட் ரெஸ்ட்டில் இருக்கும்போது நம்மைப் பார்க்க வருகிறவர்கள் நிறையப் பேசி நம்மை அறுத்துத் தள்ளிவிடு வார்கள். அதற்கு இடம் தராமல், நாமே பெரும்பாலான நேரம் பேசிவிடுவது நல்லது.

3. நாம் வீடு திரும்பிவிட்டதை நமக்கு வேண்டிய சகல பேர்களுக்கும் செல்போன் மூலம் தெரியப்படுத்துவது ஒரு 'மஸ்ட்: 'அடடா! உடம்பு தேவலையாகிவிட்டதா?' என்று வருத்தப்படாமலிருக்க இது உதவும். லேட்டாகச் சிலர் வந்து வருத்தப்படாமலிருக்க உதவும்.

3. வீட்டுக்கு வரும் விசிட்டர்கள் முன் அவ்வப்போது இருமிக் காட்ட, கைவசம் இருமல் கொஞ்சம் ஸ்டாக் இருக்க வேண்டும்.சிலருக்கு இருமல் பூராவும் தீர்ந்திருக்கும். அவர்களுக்கு ஒரு உபாயம்.. வெறுமே கைவும் அடிக்கடி நீவிக் கொள்ளுங்கள். இல்லையெனில் என்னவோ செய்யறது, நெஞ்சில் இருக்கு, வரமாட்டேன்கிறது என்பது போன்ற வார்த்தைகளைச் சொல்லலாம்."

5. சிலர் பெட் ரெஸ்ட் சட்டை அணிந்து காட்சி தரு வார்கள். மகா தப்பு ! உங்களுக்கு அவர்கள் என்ன, பெண் கொடுக்கவா வருகிறார்கள்? ஆகவே, தாடி மீசையுடன் (முள்ளு தாடி விசேஷம்) இருப்பது அவசியம். சட்டையில் பட்டன்களை ஏற இறங்கத் தப்பாகப் போட்டுக்கொண் டிருப்பது அதி அவசியம்.

6.படுக்கை ரொம்ப நீட்டாக இருக்க வேண்டும் என்று ஹாண்ட்லூமுக்கோ, பாம்பே டையிங்குக்கோ போய் இரண்டு செட் புது விரிப்பு, தலையணை உறைகள் வாங்கி வருகிற அபிஷ்டுகள் உண்டு. நோயாளிகளின் படுக்கைக்குச் சில பல கசங்கல்களும், கோணாமாணாக்களும் அவசியம். அப்படி இல்லாமல் நீட்டாக இருந்தால், வருகிற விசிட்டர்களுக்கு அனுதாபத்துக்குப் பதில் பொறாமையே ஏற்படும்.

7. கட்டிலுக்குப் பக்கத்தில் ஒரு டீபாய் கட்டாயம் வேண்டும். டீபாய் என்றால், அது டீ வைக்கவோ காபி வைக்கவோ மாத்திரம் அல்ல. மருந்து, மாத்திரை, காபி டம்ளர், பேனா, டெலிபோன் டைரக்டரி, தமிழ் - ஆங்கிலப் பத்திரிகைகள், டி.வி-யின் ரிமோட், செல்போன், லாண்ட் லைன், நெயில் கட்டர்,  ஒரு கண்ணாடிக் கிண்ணம், ஸ்பூன், சர்க்கரை, ஹார்லிக்ஸ் டப்பாக்கள்,  இரண்டு சாத்துக்குடி, ஆரஞ்சுப் பழத் தோலிகள்,  இது மாதிரி அநேக பொருள்கள் இடம்பெற் றிருக்க வேண்டும்.

8. விசிட்டர் வரும்போது நோயாளி படுத்திருப்பது ரொம்ப முக்கியம். சமையலறைக்குப் போய் ஜாலியாகப் பெண்டாட்டியுடன் சரசமாடிக் கொண்டு இருந்தால் போச்சு! சிலர் வாசலில், கேட்டைப் பிடித்துக்கொண்டு தெருவைப் பராக்குப் பார்த்தபடி நிற்பார்கள். விசிட்டர் தூரத்தில் வருவதைப் பார்த்துவிட்டு, அவசரம் அவசர மாக உள்ளே ஓடிப் படுக்கையில் படுத்துக் கொள்வார்கள். தேவையே இல்லை விசிட்டரைத் தூரத்தில் பார்த்ததும், மெதுவாக நடக்கத் தொடங்க வேண்டும்.

"என்ன சார், நடக்க ஆரம்பிச் சுட்டீங்களா?" என்று விசிட்டர் மனசுக்குள், 'வாங்கி வந்த பழம் வேஸ்ட்!' என்று நினைத்துப் பதறும் போது,'சாந்தி... சாந்தி' என்று புத்தர் பெருமான் போல சைகை செய்ய வேண்டும். கம்மிய குரலில் 'மூணு நிமிஷம் நடக்கணுமாம்... ஹும்... ஹா...' என்று முக்கி முனகி ஒரு பெருமூச்சை விட்டால் போதுமானது.

9. விசிட்டர் வரும்போது டி.வி. சீரியல் பார்த்துக்
கொண்டு இருப்பது கூடவே கூடாது. பெட் ரெஸ்ட்காரர்
தன் நோயைத் தவிர, உலகில் வேறு எதையும் ரசிக்கக் கூடாது
என்பது மரபு.

10. நொறுக்குத் தீனி தின்ன பெட் ரெஸ்ட்காரருக்கு வாய் ஊறும். மனைவியைக் காக்கா பிடித்து பகாசருக்கு பக்கோடா போட வைத்து, வீடு பூரா வெங்காய பக்கோடா வாசனை 'கமகம'த்துக்கொண்டு இருந்தால், வருகிற விசிட் டருக்கு இரக்கம் ஊறுவதற்குப் பதில், நாக்கில் எச்சில்தான் ஊறும். ஆகவே, வாசனை எழுப்பாத இட்லி, இடியாப்பம் போன்றவையே (சாம்பார் வேண்டாம்) உசிதமானது.

11. போன் அடித்தால், எக்காரணம் கொண்டும் பெட் ரெஸ்ட் பேர்வழி எடுத்துப் பேசலாகாது. அரை மணி கதறி னாலும், அதை மனைவியோ வேறு யாரோவோதான் வந்து எடுக்க வேண்டும். அப்படியே எடுத்தாலும், 'இப்பதான் நாயர் கடை வரைக்கும் போயிருக்கார், பிளேடு வாங்கிண்டு வர என்றெல்லாம் அசட்டுப் பிசட்டென்று உண்மையை உளறி வைக்கக் கூடாது. ‘அவர் தூங்கிண்டிருக்கார்' என்றுதான் சொல்ல வேண்டும்.

குறிப்பு: பெட் ரெஸ்ட் நோயாளி ஆக வேண்டாம்.அதனால்.கிட்டும் புகழ்மிக அற்பமானது.உங்களைபார்க்க பத்து பேர் வந்தால்..நீங்கள் பதில் மரியாதைக்கு நூறு பேரை பார்க்க வேண்டி இருக்கும்.

" சமரசங்கள் செய்து கொள்வதால் கிடைக்கும் பலன்களை விடவும் போராடுவதால் கிடைக்கும் நஷ்டங்களை நான் மதிக்கிறேன். "- இன்குலாப்

Thursday 20 June 2024

ராமானுஜம்


லாஜிக் Vs மேஜிக்
Logical thinking Vs Magical thinking

பலருக்கு லாஜிக்காகப் பேசுவது பிடிக்காது. மேஜிக்தான் பிடிக்கும். ஏனென்றால் லாஜிக் உண்மையைச் சொல்கிறது. பின்பற்றக் கடினமானது.
மேஜிக் எளிமையானது. நோகாமல் நொங்கு தின்பது.
லாஜிக்கலாகப் பார்த்தால் நாம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்
மேஜிக்கலாக யோசித்தால் பொறுப்பை இன்னொருவர் மீது போடலாம்

1. வெற்றி பெற வேண்டுமா- கடினமாக கவனமாக உழைக்க வேண்டும். - இது லாஜிக். ஆனால் எதாவது குறுக்குவழியில் ஒரு கடவுளோ, சடங்கோ, வழிபாடோ, அல்லது ஆழ்மன ஆற்றல், பிரபஞ்ச அலை போன்ற போலி அறிவியல் விஷயங்கள் மூலம் வெற்றி பெற நினைப்பது மேஜிக் ( இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ, பார்சி, சீக்கிய எல்லா மதக் கடவுள்களையும்தான் சொல்கிறேன். கமெண்டில் பொங்க வேண்டாம்)

2. பணக்காரன் ஆகவேண்டுமா ? செலவுகளைக் குறைத்து நீண்ட காலம் பொறுமையாக முதலீடு செய்ய வேண்டும் .இதுதான் லாஜிக். மல்டி லெவல் மார்க்கெட்டிங், 36%, 72% வளர்ச்சி தருவதாக விளம்பரப்படுத்தும் திட்டங்கள், சூதாட்டம் போன்ற விஷயங்களில் ஈடுபடுவது மேஜிக்.

3. உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? முறையான டயட் , எக்ஸர்ஸைஸ் விடாமல் தீவிரமாகக் கடைப் பிடிக்க வேண்டும் . இது லாஜிக். வெறும் வயிற்றில் வெந்தயம், வெள்ளைப்பூண்டு, வெண்டைக்காய் இவற்றைச் சாப்பிட்டால் ஒரு வாரத்தில் எடை குறையும் என்றால் அது மேஜிக்.

4. இந்த மருந்து 50% குணப்படுத்தும். இதில் இன்னின்ன பக்க விளைவுகள் இருக்கின்றன என்பது லாஜிக். இது 100% குணப்படுத்தக்கூடியது . 0% பக்கவிளைவுகள் என்பதெல்லாம் மேஜிக்.

5. தேர்வில் வெற்றி அடையக் கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டும். இது லாஜிக். வினாத்தாள் கிடைக்குமா எனப் பார்ப்பது மேஜிக்.

6. நம் மனதின் சிக்கல்களுக்கு நாம் பொறுப்பெடுத்துக் கொண்டு நம்மை மாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும் . இது லாஜிக். (அதற்கான வழிமுறைகளைச் சொல்வது மட்டுமே மன நல சிகிச்சை அளிப்பவர் பணி).
நாம் முயற்சிக்கவே செய்யாமல் ஹிப்னாடிசம் அல்லது ஒரு மாயாஜால மாத்திரை மூலம் வேறு யாரோ நம்மைக் குணப்படுத்த வேண்டும் என நினைப்பது மேஜிக்.
மற்ற மருத்துவ சிகிச்சைகளிலும் அப்படித்தான்.

டாக்டர் ஜி ராமானுஜம்

Wednesday 19 June 2024

gokul prasad



“நம்முடைய இளமைக் காலத்தில் கச்சிதம் குறித்த மாயை மீது காதலுறுகிறோம். எதிலும் கச்சிதத்தை எதிர்பார்க்கிறோம். வயதாக ஆக, அந்த மாயை விலகுகிறது. எது ஒருவனை மனிதன் ஆக்குகிறதோ அதன்மீதே பிரியம் கொள்கிறோம். இன்னல்களையும் தடைகளையும் மன வலிமையுடன் கடந்த நெகிழ்ச்சிக் கதைகள், மூப்படைவதனால் ஏற்படக்கூடிய பலகீனங்கள், கர்ம வினைகளைத் துணிவுடன் சந்தித்த தனிமனிதரின் போராட்டங்கள், சூழலுக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக்கொண்டு சமரசத்துக்கு இணங்கிய பிழைப்பின் பாடுகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்கிறோம். 

நமது ஆற்றல் வடிந்து, வலிமை குன்றி, வாழ்க்கை தரும் படிப்பினைகளின் முன் நிராயுதபாணியாக நிற்கப் பழகுகிறோம். அந்தக் கையறு நிலையிலேயே ஒருவரையொருவர் கண்டடைகிறோம். நேசக் கரம் நீட்டுகிறோம். அப்போது நாம் காயங்களைக் கண்டு அஞ்சுவதில்லை, அருவருத்து முகம் விலக்குவதில்லை. ஒருகாலத்தில் அசிங்கமான வடுக்கள் எனத் தோன்றியவை நாம் முழுமையாக வாழ்ந்ததற்கான சாட்சியங்களாக மாறுகின்றன.”

- ஜெஃப் பிரவுன்.

Tuesday 18 June 2024

கைதவறிவிட்டது இன்னொரு தேநீர் சொன்னேன் இரண்டு தேநீருக்கான தொகையைச் செலுத்தினேன் ஒன்றுக்கானதை எடுத்துக்கொண்டான் 'இரண்டு' அழுத்திச் சொன்னேன் 'ஒன்றுதான்' என்று சிரித்துக்கொண்டான்மனம் உவந்தே அளித்தேன்மனம் உவந்தே மறுத்தான் கை தவறிக் கிட்டிய மனம் உவந்த நாள் இன்று..!- இசை

ராமானுஜம்


நல்ல பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுமென்றால் அதை நினைவூட்டக் கூடிய விஷயங்கள் கண்ணில் படும்படி இருக்க வேண்டும். இதை ஜேம்ஸ்க்ளியர் முதல் விதியாகச் சொல்கிறார் (Cue- Make it obvious)  . அதுவும் நாம் தினமும் அல்லது அடிக்கடி எதிர்கொள்ளும் சூழலாக இருக்க வேண்டும். ஒவ்வொரு இரண்டாம் சனிக்கிழமையும் வாக்கிங்க் போவேன் என்று வைத்துக் கொண்டால் மாதம் ஒரு முறைதான் போவோம்.  அதே நேரம் கெட்ட பழக்கங்களிலிருந்து விலகவும் இதே விதியை மாற்றி அமைப்பது உதவும்.  அரிதாக நடக்கும் ஓர் நிகழ்வோடு தேவையில்லாத பழக்கத்தைக் கண்டிஷனிங்க் பண்ணி வைத்துக் கொண்டால் அதை அடிக்கடிச் செய்ய மாட்டோம்.  RCB (ஆண்கள்) அணி ஐ பி எல் கோப்பையை வெற்றி பெற்றால் மட்டுமே மது அருந்துவேன் என்று வைத்துக் கொண்டால் குடிப்பழக்கத்தில் இருந்து எளிதில் விடை பெறலாம்.

-ராமானுஜம்

Sunday 16 June 2024

மனிதனின் தனித்தன்மை அவனது நம்பிக்கை (trust, faith, hope). இறை, பக்தி போன்ற அருவமான விஷயங்கள் மீதான நம்பிக்கையைப் பற்றிச் சொல்லவில்லை. சக மனிதர்கள் மீதும் உறவுகள் மீதும் அவன் வைத்திருக்கும் பற்று. எத்தனை ஆயிரம் முறை நொறுக்கப்பட்டாலும் புதிய உறவுக்கும் ஆளுக்கும் அவன் மனத்தில் எப்போதும் இடமிருக்கிறது. ஓர் உறவால், பிரிவால், துரோகத்தால் மனம் கசந்து ஒட்டுமொத்த மானுட குலத்தையே வெறுப்பதாகப் பாவனை செய்தாலும் தனித்து ஒடுங்கிச் சுருண்டாலும் கழிவிரக்கம் கொண்டாலும் மறுபடியும் ஓர் உறவு தழைப்பதற்கான வெளியை (space) மனம் பொத்திப் பாதுகாக்கிறது. ‘அப்படியில்லை’ என நம்ப விரும்புவது சுய ஏமாற்று மட்டுமே. மனிதனின் விசேஷ குணம் இது. அந்த மனவெளி பிரபஞ்சம் அளவுக்கே விசாலமானது. மனிதனை மனிதனாக்குவது.-கோகுல் பிரசாத்

Friday 14 June 2024

great wall of india


சீன பெருஞ்சுவர் தெரியும், இந்திய பெருஞ்சுவர் (Great wall of India) தெரியுமா?

ராஜஸ்தானில் 15ம் நூற்றாண்டில் ராணா கும்பாவால் உதய்பூர் அருகே கட்டபட்டது தான் கும்பல்கர் (Kumbhalgarh) எனும் இந்த கோட்டைப் பெருஞ்சுவர். சுமார் 33 கிமி நீளமான சுவர் என்பதால் உலகின் நீண்ட சுவர்களில் ஒன்றாக கருதபடுகிறது. யுனெஸ்கோ பாதுகாக்கபட்ட கலாசார குறீடாகவும் அறிவிக்கபட்டுள்ளது. இந்த கோட்டையில் பிறந்தவர் தான் மகாராணா பிரதாப் சிங். அதனால் ராஜஸ்தான் வரலாற்றில் முக்கிய இடம் பிடிக்கிறது இந்த கோட்டை.

இதன் அகலம் 15 மீட்டர். எட்டு குதிரைகள் அருகருகே நடக்கமுடியும்.

கிபி 1535ல் சித்தூர் முற்றுகையிடபட்டபோது,. அதன் இளவரசன் உதய் இங்கே தான் கொண்டுவரபட்டார். சுமார் ஐம்பது ஆண்டுகள் இந்த கோட்டை மேல் பல தாக்குதல்கள் நடந்தும், இதை வீழத்தவே முடியவில்லை.

ஆனால் கிபி 1578ம் ஆண்டு, கோட்டைக்கு நீர் வரும் பகுதி அக்பரின் தளபதி ஷபாச்கானால் கண்டுபிடிக்கபட்டு, நீர் வரத்து அடைக்கபட்டு கோட்டை வீழ்ந்தது. ஆனால் சில ஆண்டுகளிலேயே ராணா பிரதாப் சிங் இதை மீன்டும் மீட்டுவிட்டார். அதன்பின் பெரியதாக இங்கே போர்கள் நடைபெறவில்லை. இந்த கோட்டையை பிடிக்க முடியாது என கருதியே விட்டு இருக்கலாம்.

ப்ரிட்டிஷார் ஆட்சியில் 1818ல் சில சாதுக்கள் கோட்டையை பிடித்து புரட்சி செய்தார்கள். ஆனால் ப்ரிட்டிஷார் பேசி அவ்ர்களை சரணடைய செய்துவிட்டார்கள்.

Thursday 13 June 2024

நியாண்டர் செல்வன்.ஏசி

வாயை அகலமாக திறந்து வைத்துக்கொள்ளவும். கையை வாயின் மிக அருகே வைத்துக்கொண்டு ஊதவும். வெப்பமான காற்று வருதா? குட்

இப்ப வாயை குறுகலாக கிஸ் செய்வது மாதிரி வைத்துக்கொள்ளவும், ஊதவும். இப்ப குளிர்ந்த காற்று வருதா?

அறிவியலில் இதன் பெயர் ஜூல்ஸ் - தாம்சன்  விளைவு (Joule Thomson effect). காற்றை குறுகலான பகுதியில் விட்டு, அது வெளியே வந்தால் அதன் வெப்பநிலை குளிர்ந்துவிடும். 

இது மனிதர்களுக்கு வேண்டுமானால் புதிய விசயமாக இருக்கலாம். ஆனால் கரையான் புற்றுகள் எல்லாமே ஜூல்ஸ் தாம்சன் விளைவை பயன்படுத்தி கட்டபடுபவையே. கரையான் புற்றில் பல லட்சக்கணக்கில் சிறு துளைகள் இருக்கும். வெளிக்காற்று அதனுள் புகுந்து கரையான் புற்றுக்குள் வருகையில் ஏசி போட்டது போல புற்றுக்குள் ஜில் என இருக்கும்.

வங்கதேசத்தில் ஜூல்ஸ் தாம்சன் விளைவை பயன்படுத்தி வீடுகளை குளிர்விக்கும் எளிய ஏசிமுறை பயன்பாட்டுக்கு வந்தது.

வங்கதேசத்தில் 70% மக்கள் மெட்டல் கூரைகளின் கீழ் வசிக்கிறார்கள். வெயில் சமயம் வெப்பம் தாளித்து எடுத்துவிடும்.

ஈகோ கூலர் எனும் கம்பனி அந்த எளிய தொழில்நுட்பத்தை கொண்டுவந்தது. ஒரு கனமான அட்டையில் நிறைய துளைகளை போட்டார்கள். பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களின் அடிப்பாகத்தை வெட்டினார்கள். அதை அந்த துளைகளுல் சொருகினார்கள். பாட்டில்களின் முடிகள் அகற்றபட்டன

அந்த அட்டை அதன்பின் வீட்டு ஜன்னல்களில் மாட்டப்பட்டது. 

ஒவ்வொரு ஜன்னலுக்கும் ஒவ்வொரு அட்டை. வீட்டின் வெளிப்புறம் இருந்து காற்று அந்த பாட்டிலின் அடிப்பாகத்தில் புகுந்து கழுத்து குறுகிய பாகம் வழியே  வீட்டினுள் வரும். இப்படி காற்றை குறுகிய வழியினுள் அனுப்புவதால், அது பாட்டிலை விட்டு வெளியேறுகையில் குளிர்ச்சி அடைந்துவிடும். 

இதன் விளைவாக சராசரியாக வீட்டுக்குள் ஐந்து டிகிரி வரை வெப்பம் குறைகிறதாம். ஜன்னல் அருகே படுத்தால் நல்லா ஜிலு, ஜிலுன்னு காற்று வந்து மக்கள் மகிழ்ச்சியாக தூங்குகிறார்கள்.

எளிய டெக்னாலஜி என்பதால் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இதை காப்பி அடித்து பல வீடுகளில் இயற்கை ஏசி போட்டுக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

வீடு கட்டுகையில் கூட இம்மாதிரி தொழில்நுட்பம் மூலம் சாளரங்களை அமைத்தால் ஏசி செலவு நிறைய மிச்சமாகும். 

#பூமியும்_வானமும் 

~ நியாண்டர் செல்வன்

Wednesday 12 June 2024

வெற்றுப்படகு

வெற்றுப் படகு..... (empty boat)

ஜென் துறவி "லீன்ஸீ" படகில் பயணம் செய்வதில் மிகுந்த நாட்டம் உடையவர்!! அவரிடம் சீடர்களால் வழங்கப்பட்ட ஒரு படகு இருந்தது. மடத்திற்கு அருகில் இருந்த ஏரிக்குச் சென்று அந்தப் படகில் மணிக்கணக்கில் பயணம் செய்வார்!!சில வேளைகளில் தியானம் செய்வது கூட, அந்த படகில் இருந்தபடிதான்!!

ஒரு நாள் அவர் படகில் தியானம் செய்து கொண்டு இருந்தபோது காலியான வேறொரு படகு காற்றின் போக்கில் மிதந்து வந்து அவரது படகை இடித்தது.

தியானத்தில் இருந்த அவருக்கு அதிர்ச்சியினால் சற்று கோபம் ஏற்பட்டது. யாரோ அலட்சியமாக படகை ஓட்டிக் கொண்டு வந்து தன் படகில் மோதி தனது தியானதிற்கு இடையூறு செய்துவிட்டதாக எண்ணி, கண்களைத் திறந்து திட்டுவதற்கு முற்பட்டார்.

என்ன ஆச்சர்யம்!! அங்கு பார்த்தால் காலிப் படகு ஒன்றுதான்[ அவர் படகின் அருகில் மிதந்து நின்று கொண்டிருந்தது "என் கோபத்தை அந்த காலிப்படகின் மீது காட்டிப் பயன் இல்லை.....

மௌனமாகத்தான் நான் ஞானம் பெற்றேன்!! அந்த வெற்றுப் படகு (empty boat) எனக்கு குருவாக இருந்தது!! இப்போதெல்லாம் யாராவது வந்து என்னை அவமானப்படுத்தவோ, மனதைப் புண்படுத்தவோ முற்பட்டால் புன்னகையுடன், இந்தப் படகும் காலியாகத்தான் இருக்கிறது!! என்று எனக்குள் கூறிக்கொண்டு அமைதியாக நகர்வது எனக்குச் சுலபமாகி விட்டது".... என்று அவர் பிற்காலத்தில் எப்போதும் கூறுவார்.

அனைத்தும் அதனதன் சுயத்திலிருந்தே இயங்குகின்றன!! ஆழமாகப் பார்த்தால் யாரும் யாருக்கும் எதிரிகள் அல்ல!!

குரு லீன்ஸீ கூறியது போல் இங்கு அனைவருமே "வெற்றுப் படகுகள்தான்"!!
ஒருவகையில் அறியாமையும் இன்பம்தான்!! அங்குதான் கடந்து செல்வதற்கு பாதை மிச்சம் இருக்கும்!!படகு கரையில் நிற்பது பாதுகாப்பானது!! ஆனால் படகுகள் அதற்காக உருவாக்கப் படுவதில்லை!! படகின் இருப்பு பயணம் செய்வதற்காகத்தான்....

தொடர்ந்து பயணம் செய்யுங்கள்.... எப்பொழுது வேண்டுமானாலும் "வெற்றுப் படகுகள்" நம் படகின் மீது இடிக்கலாம் என்கிற எண்ணத்துடனேயே!!

~~ஓஷோ

கண்களை அகல திறந்து உனக்கு முன் இருக்கிற நிஜத்தைப் பார்த்து முடிவெடு. எதுக்கெடுத்தாலும் காகிதத்தைப் பார்த்து முடிவெடுக்காதே. அதெல்லாம் உன் முன்னோர்கள் எழுதியது. அவர்களும் உன்னைப்போன்றவர்கள் தான்.-கரமகடே

Tuesday 11 June 2024

டைட்டானிக் கப்பல்


நியூயார்க் கிளம்பிய டைட்டானிக் கப்பலில் ஐஸிடார் ஸ்ட்ராஸ் (Isidor Straus) எனும் மிகப்பெரும் கோடிசுவரர் ஏறினார். அமெரிக்காவின் புகழ்பெற்ற மேசிஸ் எனும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஓனர். உடன் வந்தது அவரது மனைவி ஐடா (Ida) மற்றும் பணிப்பெண் எல்லன். அவர் நினைத்தால் டைட்டானிக் மாதிரி 30 கப்பல்களை விலைக்கு வாங்க முடியும் எனும் அளவு கோடிசுவரர்

ஆனால் விதி வலியது. கப்பல் விபத்துக்குளாகிறது. உயிர்காக்கும் படகுகள் போதுமானதாக இல்லை. அந்த சூழலிலும், ஒரு படகில் ஒரு இடத்தை ஐஸிடாருக்கு ஒதுக்கினார்கள்.

"கப்பலில் இருக்கும் பெண்கள், குழந்தைகளுக்கு அந்த இடத்தை கொடுங்கள்" என சொல்லி போக மறுத்தார் ஐஸிடோர். கப்பலில் நிறைய பெண்கள் இருந்தார்கள். அதனால் அடுத்து அவரது மனைவி ஐடாவை படகில் ஏற சொன்னார்கள்.

"என் கணவர் எங்கே இருக்கிறாரோ, அங்கே தான் நானும் இருப்பேன்" என சொல்லி படகில் ஏற மறுத்தார் ஐடா. தமக்கான அந்த ஒரு இடத்தை பணிப்பெண் எல்லனுக்கு கொடுத்தார்கள்.

படகில் ஏற முனைந்தார் எல்லன்.

"நில்" என சொன்னபடி வந்தார் ஐடா. தனது விலை உயர்ந்த மிங் கோட்டை கழற்றினார். "படகில் குளிரும். இதை அனிந்துகொள்"

ஐடாவும், ஐஸிடோரும் கைகோர்த்து கப்பலின் முகப்பில் நிற்க, படகில் ஏறி அவர்களை பார்த்தபடி சென்றார் எல்லன். கப்பல் மூழ்கியது

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்



~ நியாண்டர் செல்வன்

Monday 10 June 2024

ஒருவரை விரும்புவதற்கும், நேசிப்பதற்கும் இருக்கும் வித்தியாசமென்ன என்று புத்தரிடம் கேட்டபோது அவர் இப்படி சொல்கிறார்:ஒரு செடியில் இருக்கும் மலரை விரும்புபவர் அந்த மலரை செடியில் இருந்து பறித்துக்கொள்வார். ஆனால் அந்த மலரை நேசிப்பவர், செடியில் இருக்கும் மலரை கண்டு இன்பமடைவதால் அந்தச் செடிக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பாதுகாப்பார்.விரும்புதல் சுயநலத்தால் வருவது. நேசித்தல் பேரன்பினால் நிகழ்வது. 🌸

ஆன்லைன் சூது


ஆன்லைன் சூதில் வெல்வது மிகமிகக் கடினம். அதன் RNG (Random Number Generator) அல்காரிதம் அதிநுணுக்கமாக உருவாக்கப்பட்டது. நியாயமாக இதன் வேலை ரேண்டமாக எண்களை உருவாக்கி அனுப்புவதுதான் என்றாலும், நீங்கள் தோல்வி அடைந்ததும் எவ்வளவு துரிதமாக மற்றுமொரு ஆட்டத்தை ஆரம்பிக்கிறீர்கள், பண இருப்பு கரைந்ததும் எவ்வளவு வேகமாக மீண்டும் ரீசார்ஜ் செய்கிறீர்கள் என்பதையெல்லாம் வைத்து நீங்கள் அடிமையாகி விட்டீர்களா, இல்லையா என்பதையும் RNG கண்டுகொள்ளும்.

 அடிமை என்று தெரிந்தால் அதன் அரக்கமுகம் வெளிவரும். மிகமிகக் கடினமாகத்தான் கார்டுகளை (எண்களை) வழங்கும். மூன்று அல்லது நான்கு தோல்விகளுக்கு இடையே ஒரு சொற்ப வெற்றியைக் கொடுக்கும். 'இது நியாயமாகத்தான் செயல்படுகிறது, என்னுடைய கெட்ட நேரம்' என்று உங்களை நம்ப வைக்கும் உத்திதான் இது. 

ஆனால், உண்மையில் நீங்கள் எத்தனை முறை தோல்வி அடைந்தாலும் மீண்டும் வருவீர்கள் என்பதை அது நன்கு அறியும். ஒருவேளை
நீங்கள் அன்இன்ஸ்டால் செய்து தப்பித்தாலும், சரியாக மூன்று நாள் கழித்து, 'போனஸ் பணத்தை க்ரெடிட் செய்திருக்கிறேன், வா' என வலை விரிக்கும். ஆகவே அல்காரிதத்தை வென்று பணக்காரனாவது என்பதற்கு வாய்ப்பே இல்லை.

இதிலிருந்து மீள வேண்டும் என நினைப்பவர்கள், முறையான மனநல சிகிச்சை இன்றி இந்த மயக்கத்திலிருந்து தப்புவது கடினம். மனதின் ஓரத்தில் இதன் மீதான ஆசை இருந்துகொண்டே இருக்கும்.!

-ஹரிஹர சுதன் தங்கவேலு

Friday 7 June 2024

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்வாளது உணர்வார்ப் பெறின்நாள் என்பது, ஒன்றைப்போலவே அடுத்தடுத்துப் பல நாட்களாக வந்து, சிறுகச் சிறுக உயிரை அறுத்துவிடுகிற வாள் என்பதை நாம் உணர வேண்டும்.அதாசது நாட்கள் நைஸா ஓடுவதே தெரியாமல் சீக்கிரத்தில் வயசாகிவிடுவோம்

புத்தகம்-14


Reading_Marathon2024
#24RM050

Book No:14/100+
Pages:366

செந்தமிழ்ப் பூம்பொழில்
-வைகோவின் இலக்கியச் சொற்பொழிவுகள்
-அருணகிரி

திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்ற வரி மிகப் பிரபலம். அதேபோலத்தான் வைகோவின் இலக்கிய சொற்பொழிவு. அரசியல் ரீதியாக பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் அவர் ஒரு தேர்ந்த படிப்பாளர் ,இலக்கியச் சொற்பொழிவாளர். திருவாசகம் வெளியீட்டு விழாவில் அவருடைய உரையை முதன்முறையாக கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. இளையராஜாவே பாராட்டி விட்டார் அந்த சமயத்தில். அவ்வளவு அந்த பேச்சின் ஆழம் அழுத்தம் ஈர்ப்பு எல்லாமே நம்மையும் கட்டி போட்டது என்றால் அது மிகையில்லை. இந்த தொகுப்பில் 16 சொற்பொழிவுகள் உள்ளன.

பேச்சாளர்களுக்கே உரிய சிறப்பு என்பது நிறைய படித்தவர்களாக இருக்க வேண்டும். ஒரு பேச்சின் தொடக்கமும் முடிவும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பல்வேறு மேற்கோள்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. திருக்குறள், வாழ்வியல் கதைகள், இலக்கியத்திலிருந்து மேற்கோள்கள் சொந்த அனுபவங்கள் இவற்றை குலைத்து தரும் போது அந்த பேச்சில் பார்வையாளன் தன்னை பொருத்திப் பார்த்து தானாகவே ரசிக்கவோ கைதட்டவோ ஆரம்பிக்கிறான். அந்த வகையில் விவிலியத்தில் இருந்து
 சொன்ன கதைகளும் நபிகள் நாயகத்தின் கதையும்,வாழ்வியல் கதைகளும் வெகு சிறப்பாக இருக்கிறது.

லாங்ஃபெல்லோ எழுதிய கவிதையும் அப்படித்தான். உயர்ந்த சிகரங்களை எட்டியவர்கள். ஒரே நாளில், ஒரு பொழுதில் அந்த இடத்திற்குத் திடீரென்று வந்து விடவில்லை; தன் சகாக்கள் உறங்கிக் கொண்டு இருந்த வேளைகளிலும் கண் விழித்து உழைத்துக் கொண்டு இருந்தார்கள் என்று அவர் பாடிய கவிதையை என் நோட்டுப் புத்தகத்தில் முதல் பக்கத்தில் எழுதி வைத்து இருந்தேன் என்கிறார்.

"The heights by great men reached and kept were not attained by sudden flight, but they, while their companions slept, were toiling upward in the night."

Henry Wadsworth Longfellow

#கவிக்கு அப்துல் ரகுமான் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவரின் ஒவ்வொரு கவிதையையும் பாடல்களையும் வெகுவாக ரசித்து புகழ்ந்திருப்பார். அதற்கு மேற்கோளாக பல்வேறு கவிதைகளையும் அதில் சுட்டி இருப்பார். வரலாற்று நிகழ்வுகளையும் அனுபவங்களையும் என பல்வேறு வரிகள் இதில் காண கிடைத்தன.

இருள் மேல் எழுதும் நிலவைப் போல நீ என் மேல் ஏதோ எழுதி விட்டாய் பொருள் மேல் அமர்ந்த சொல்லானேன் 
ஒரு புதிரானேன் எனக்கு எதிரானேன் 

என புது காப்பியம் சூட்டும் வகையில் அவர் கவிதையை புத்துயிர் அளித்ததை சிலாகித்திருப்பார்.

#ராமாயண ரகசியம் நூல் வெளியீட்டு விழாவில் தமிழருவி மணியன் அவர்களின் எழுத்து ஆற்றலை குறிப்பிடும் போது ஒரு இடத்தில் பொது மகளிர் என்று அழைக்காமல் விலை மகளிர் என்று சொல்லாமல், அவர்களை வரைவின் மகளிர் என்று தான் வள்ளுவர் குறிப்பிடுகிறார். அதேபோல ஆசிரியரும் வரைவு என்பது திருமணம் செய்து கொள்ளாத பெண்டிர் தான் வரைவின் மகளிர் என்று விளக்கம் தருகின்றார். யார் நட்பு கூடாது என்று சொல்லும் போது வரைவின் மகளிர் நட்பு கூடாது என்கிறார் வள்ளுவர்.

காடெறச் சொன்ன கைகேயின் மீது கோபத்தில் உள்ள லக்குவனை ஆற்றுப்படுத்தும் விதமாக ராமன் கூறிய பாடல்

"நதியின் பிழை அன்று 
நறும் புனல் இன்மை; அன்றே பதியின் பிழை அன்று; 
பயந்து நமைப் புரந்தாள் 
மதியின் பிழை அன்று; 
மகன் பிழை அன்று; மைந்த! விதியின் பிழை; நீ இதற்கு 
என்னை வெகுண்டது? என்றான்.'

நதியில் தண்ணீர் இல்லாதது நதியின் குற்றம் அல்லவே? நம் தந்தையின் பிழையும் அல்ல; நம்மைக் கானகம் ஏகச் சொன்ன தாய் கைகேயி பிழையும் அல்ல; இது விதியின் பிழை அப்பா. என்கிறார் நல்ல உவமையுடன்.

நான் படித்த சிறப்பு தமிழ் பாடத்தில் வந்த ஒரு மனப்பாடப் பாடல் இந்த புத்தகத்தில் மேற்கோளாக சொல்லி இருப்பார் அதனை படித்தவுடன் அன்றைய பள்ளி நினைவு எனக்கு நினைவுக்கு வருகிறது சூர்ப்பனகை வருவதை கம்பர் சொற்களால் வர்ணிப்பார் 

பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க 
செஞ்செவிய கஞ்சம்நிகர் சீறடியள் ஆகி 
அம்சொல் இளமஞ்ஞை என அன்னம் என மின்னும் 
நஞ்சம் என வஞ்சமகள் வந்தாள்''

இப்படி சொற்களை பயன்படுத்த முடியுமா? என வியக்கும் வண்ணம் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது.

#ஒருமுறை சட்டக் கல்லூரியில் Ends justify the means என்ற தலைப்பு கொடுத்தார்கள். முடிவுகள் வழிகளை நியாயப்படுத்துகின்றன. இந்த கருத்தை பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் எழுந்தது. பாரிஸ் நகரத்தில் ஒலித்தது .அதை தந்தவர் மாக்கியவல்லி .பஞ்சமா பாதகம் செய்யலாம் நீ போரில் வெற்றி பெறுவதற்கு உதவியாக இருக்குமானால் என்பது அதன் கருத்து. இதனை குறித்து யார் யாரெல்லாம் இது போன்ற வழிகளை பின்பற்றினார்கள் என்று தக்க மேற்கோள்களுடன் இதில் பேசி இருப்பார்.

#ரசித்தவை

*மண் என்றால் சேர்ந்து இருப்பது அது அல்லாமல் தனித்தனியாக இருப்பது மணல்

*உன்னுடைய இறைவன் நீ உருட்டுகின்ற மணிமாலையில் இல்லை. அதோ சம்மட்டி ஏந்தி பாறை உடைக்கின்றானே அவனது மேனியில் இருந்து சிந்துகின்ற வியர்வைத் துளியில் இருக்கிறான் இறைவன் என்றார் தாகூர்

*சோழ மன்னர்கள் அமாவாசை நாளில் தான் போருக்கு புறப்பட்டு செல்கின்றனர் அது ஒரு நம்பிக்கை

*ராமன் லக்குவணன் சூர்ப்பனகை வரும் காட்சிகளில் வால்மீகி எப்படி வைத்திருப்பார்.. கம்பனதை எப்படி காட்சிப்படுத்தி இருப்பார் என்பதை வேறுபாடுகளை மிக இயல்பாக இதில் குறிப்பிட்டிருப்பார்.

*திருவாசகத்தை ஜி.யு போப் அவர்கள் படித்து வியந்ததை பார்த்த பெஞ்சமின் இந்த புத்தகம் உன் மனதை ஈர்த்தது என்றால் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடலாமே என்கிறார். என் உடல் நலிந்துவிட்டது நான் மூப்படைந்து விட்டேன் என்று சொல்கிறார் .அதற்கு அவர் ஒரு புகழ்மிக்க பணியை செய்கின்றபோது அதை செய்து முடிக்கின்ற வரையிலும் உன் வாழ்நாள் நீடிக்கும். எனவே நீ தொடர்ந்து என்று சொன்னவுடன் தான் ஜி யு போப் மொழிபெயர்க்கத் தொடங்கினாராம்.

ஒவ்வொரு பக்கத்திலும் புதிய தகவல்கள் சிந்தனைகள் நாம் படிக்க இருக்க வேண்டிய புத்தகத்தின் சாரம்சத்தை சங்க இலக்கியத்தினை திருக்குறளினை சாறு பிழிந்தது போல் நமக்கு ஒவ்வொரு இடத்திலும் தந்து கொண்டிருந்தது. புத்தகத்தை வேகமாகவும் அதே சமயம் நிதானத்துடனும் படிக்கத் தூண்டியது. இது போன்ற புத்தகங்கள் நாமும் பல்வேறு இடங்களில் மேற்கோள் சொல்வதற்கு பயன்படும் வகையில் குறிப்புகள் எடுத்துக் கொள்ளும் வகையிலும் உள்ளது .

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

Thursday 6 June 2024

ஒரு ஆதிவாசியாக இருப்பது என்றால் என்ன? “ஒருமுறை பார்தி பழங்குடிப் பெண் ஒருவரை எங்கள் நிகழ்ச்சிக்காக மும்பையிலிருந்து வரவேற்றிருந்தோம். பயணச் சீட்டோடு கொஞ்சம் பணமும் அவருக்கு அனுப்பியிருந்தோம். அவர் ஒரு புதிய புடவை வாங்கி அணிந்துகொண்டு ரயில் ஏறியிருக்கிறார். சில மணி நேரங்களில் மும்பைக் காவலர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டுவிட்டனர். ‘உனக்கு எப்படிப் புதிய புடவை கிடைத்தது? திருடினாயா? எங்கிருந்து?’ என்று அவரைத் துன்புறுத்தியிருக்கிறார்கள். தன் புதிய சேலையையும் தன்மானத்தையும் அவர் இழக்க நேர்ந்தது. திரௌபதி ஒரு புராணப் பாத்திரம் என்று யார் சொன்னது?” --- மருதன் , ” இந்து தமிழ் திசை ”

கடப்பவர் நினைவில் கொள்ளும்அழகான வழிப்போக்கராகஇருந்துவிடுங்கள்!-நாடன் சூர்யா

புகழும் செல்வமும் வந்த பிறகு தன் தகுதியின்மையை சொல்லிக்கொண்டால் அதைப் பொதுமக்கள் பொருட்படுத்த மாட்டார்கள். எவ்வளவு அடக்கம், என்று பூரிப் பார்கள்.-பாக்கியம் ராமசாமி

உற்று பேச வேண்டும்

உற்றுக் கவனிக்க வேண்டும் – சுந்தர ராமசாமி


சுந்தர ராமசாமி எழுதிய ‘ஜே ஜே சில குறிப்புகள்’ நாவலில் இருந்து சிறு பகுதி:

“உற்றுக் கவனிக்க வேண்டும். உற்றுப் பார்க்க வேண்டும். உற்றுக்கேட்க வேண்டும். இது இயற்கையான காரியமாக மனத்தில் ஒழுகிக் கொண்டு இருக்க வேண்டும்.

கரையோர மரங்களைத் தன்னில் பிரதிபலிக்க நதி என்ன ஆயாசம் கொள்கிறது? அதன் தன்மை அது. ஆயாசம் எதுவுமில்லை. இதே போல் நம் கவனங்கள் நம் தன்மையாக மாற வேண்டும்.

இதில் தான் நான் அமிழ விரும்புகிறேன். என் பேச்சு இப்போது என்னை அறியாமலேயே  மட்டுப்பட்டு வருகிறது. அர்த்தம் ஊடுருவும்போது அளவு குறைந்துவிடுகிறது  போலும்.

*மனிதக்குரல் ஏற்படுத்தும் பரவசத்திற்கு மாற்றாக புத்தகங்கள் இருக்க முடியாது. ஏசு எழுப்பிய குரல் அவர் முன் நின்றிருந்த ஜனங்கள் மனத்தில் எவ்வளவு பரவசத்தை ஏற்படுத்தியிருக்கும்?

அதனால் தான்  எவ்வளவோ படித்த பின்பும், எவ்வளவோ தெரிந்த பின்பும் மற்றொரு பெரிய குரலைத் தேடிப் போகிறான். குரல் தன்னுடன் பேசுவது போல் அச்சு பேசாது என்பது வாசிப்பின் ஒரு நிலையில் அவனுக்குத் தெரிகிறது.”

-மண் (தாய் வார இதழ்)

Wednesday 5 June 2024

பாலூட்டி திமிங்கலம்


திமிங்கிலங்கள் பாலூட்டிகள் என்பது நமக்கு தெரியும் . ஆனால், குட்டி திமிங்கிலங்கள் எப்படி அதைக் குடிக்கும் என்பது பலருக்குத் தெரியாது. 

நிலத்தில் வாழும் பாலூட்டிகள் வாய் வைத்து பால் குடிப்பதைப் போல இல்லை. பெண் திமிங்கிலங்கள் தங்கள் குட்டிகள் அருகில் இருக்கும்போது தண்ணீரில் தங்கள் பாலை பீய்ச்சி அடிக்கின்றன. இந்த பால் மிகவும் கெட்டியாகவும், பசை போல, 50% கொழுப்புச் சத்துடன் இருப்பதால், தண்ணீரில் கரைவதில்லை. இது குட்டி திமிங்கிலம் எளிதாக அதை உறிஞ்சிக் குடிக்கும். விண்வெளியில் மிதக்கும் நீர் உருண்டைகளை விண்வெளிப் பயணிகள் குடிப்பது போல!

இயற்கைதான் எவ்வளவு வினோதங்களை தன்னகத்தே கொண்டுள்ளது! 

Photo by Mike Korostelev / UPY 2021.

மனிதர்களின் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பது மிகப்பெரிய வித்தை என நான் நினைக்கிறேன் .இதுவரையில் நான் என் வாழ்வில் தோற்றுப் போனதாக நினைக்கும் ஒரே விஷயம் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே தான் .ஏனெனில் அவர்கள் அன்பாக பேசும் சமயம் நான் அதை அப்படியே நம்பி விடுகிறேன் . அந்த சுவிகிரிக்கப்பட்ட அன்பிற்கு பின்பான வன்மம் என்னை வந்து அடைவதே இல்லை .அதை திடீரென நான் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் நேரம் என் வாழ்வின் மிகத் துயரமான ஒரு பொழுதை நான் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது .இதனாலையே மனிதர்களை விட்டு எட்டி இருப்பதை சாலச் சிறந்ததோ என்று தோன்றுகிறது .ஆனால் வாழ்வென்பது மனிதர்களை மறுதலிப்பது அல்ல-தமயந்தி

Tuesday 4 June 2024

புத்தகம் -13


Reading_Marathon2024
#24RM050

Book No:13/100+
Pages:536

மானாவாரிப் பூ
-மேலாண்மை பொன்னுச்சாமி 

பள்ளி நாட்களில் தமிழ் சிறுகதை கொத்துக்களில் இவரின் கதையை முதன் முதலில் படித்தேன். பெயரின் முன்னால உள்ள மேலாண்மை என்பது இவர் தொழில் சார்ந்து இயங்கும் வழிகாட்டுனராக இருக்கலாம் என எண்ணத் தோன்றியது. ஆனால் இவரின் எழுத்துக்களை படித்த பிறகு தெரிந்து கொண்டது மேலாண் மறைநாடு என்பதைத்தான் சுருக்கி மேலாண்மை என்று வந்தது தெரிய வந்தது. அதன் பிறகு இவருடைய எழுத்துக்களில் தொடர்ந்து வாசித்து வந்தாலும் இந்த புத்தகம் அவருடைய சிறுகதைகளை இன்னும் அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பினை தந்தது. இயல்பான கிராமத்தின் நடையில் தங்கு தடை இன்றி ஆதி முதல் அந்தம் வரை ஒரே நேர்கோட்டில் கதையை கூறுவதில் வல்லவர். கிராமத்து சொலவடைகளோடு வாழ்வியல் உண்மைகளையும் இவருடைய கதைகளில் நாம் காணலாம்.

இந்தத் தொகுப்பில் 34 கதைகள் உள்ளன. ஒவ்வொரு கதைகளும் வெகுஜன இதழில் வந்தவைகளாகவும் பரிசு பெற்ற கதைகளாகவும் உள்ளதால் படித்தவுடன் ஒவ்வொரு கதைகளும் மாஸ்டர் பீஸ் ஆக இருப்பதில் ஐயமில்லை.

ராசாத்தி மகன் பாண்டியன் செத்துப் போனான் என்ற அதிர்ச்சி தீப்பிடித்த மாதிரி ஊரெல்லாம் சட்டுன்னு பரவியது என்று ஆரம்பிக்கும் கதையின் ஓட்டத்தில் பல்வேறு திருப்பங்களை கடந்து இறுதியில் முழிக்க கூடாத முகங்களில் ஒன்று கையில், ஒன்று தோளில் என்று கூறி துக்கத்தினை நமக்கும் கடத்தி இருப்பார்.

அரும்பு என்ற கதையை தமிழ்ச்செல்வன் அவர்கள் கூறி கேட்டிருக்கிறேன். தீப்பெட்டி ஆபிசுக்கு வயது வந்த பெண்களை மட்டுமே எடுக்கும் சூழலில் வயதுக்கு வராத பெண் முத்துலட்சுமி தாவணி கட்டிக்கொண்டு கடைசியில்   தீப்பெட்டி ஆபிசுக்கு செல்வது போல் கதை முடிந்திருக்கும் .இழவு வீட்டு சங்காக அலறுகிறது தீப்பெட்டி ஆபீஸ் பஸ்ஸின் ஹாரன்.. ஒரு பிரேதத்தை போல்.. அடங்கிப்போன சலனங்களுடன் நடந்தது. அந்த அரும்பு என்று முடித்திருப்பார்.

வயக்காட்டில் கூலி வேலை செய்யும் தாய்க்கும் மகனுக்கும் உண்டான பந்தங்கள் ஒரு நகர்வுக்கு கதையிலும், பழைய சோறு சாப்பிடுபவர்கள் இட்லி சாப்பிடுவதற்கு உரிய ஆதங்கத்தை ஊர்ச்சோறு  கதையிலும், பிரசவ வேதனையில் துடிக்கும் இராமாயியை தொலைதூர டவுன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து போனதை கொலை என்ற கதையில் சொல்லி நல்ல சாலைகள் இல்லாததால் தான் ஒரு கொலை செய்யப்பட்டதாக சமுதாயத்தின் மீது குற்றம் சாட்டியிருப்பார்.

வீட்டில் உள்ள வறுமைக்கு மகனுக்கு சோறு பொங்க கூட காசு இல்லாமல் முதலாளிடம் கடன் கேட்கும் ஒரு தாயின் மனதை சுயம் என்ற கதையில் சொல்லி இருப்பார்.

உள் மனிதன் கதை உண்மையிலேயே படிக்க படிக்க மிகவும் சுவாரஸ்யமானது. ஊரே காத்துக் கிடக்கும் பேருந்துக்கு பிரசவ வலியுடன் ஏறும் ஒரு தம்பதி வண்டி எடுக்க தாமதமானதால் டிரைவருடன் சண்டை, கண்டக்டருடன் வாக்குவாதம் என்று போகும் கதையில் பேருந்து சென்று கொண்டிருக்கும் போதே பிரசவ வலி வந்து விடுகிறது.
 இதனை அறிந்த ஓட்டுநர் சற்றும் தாமதியாமல் வண்டியை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார். பிரசவம் நடைபெறுகிறது. இப்போது சண்டையிட்ட மனிதன் ஓட்டுனரின் முகத்தை பார்க்க கூசுகிறான் என உள் மனிதன் கதையில் ஒவ்வொரு மனிதர்களின் உளவியல் சிந்தனைகளையும் நமக்கு சொல்லி இருப்பார்

எப்போதும் விளையாட்டு மனதுடன் இருக்கும் பேச்சிக்கு மைதானத்தில் விளையாடியபடி இருப்பாள். ஆனால் ஆபீஸ் வேலைக்குச் செல்லும் போது இந்த விளையாட்டுத்தனத்தை சமூகமே கண்டிக்கிறது எனும் கதையில் பேருந்தின் ஜன்னலில் வேலைக்குச் செல்லும்போது மைதானம் அவளை விட்டு பிரிந்து தூரம் தூரமாக போய்க்கொண்டிருந்தது என்று முடித்து இருப்பார்.

அடுத்தடுத்த பெண் குழந்தைகள் பிறந்திருக்கும் முப்பிடாதிக்கு அது நான்காவது பிரசவம். அப்போதும் பெண் குழந்தைகளை பெற்றதால் கள்ளிப்பால் ஊற்றி கொன்று விடுகிறார்கள். மயக்கம் தெளந்த முப்பிடாதி வெடித்து அழுகிறாள். அவள் ஜாக்கெட்டில் சீந்துவார் இல்லாமல் பரவி நனைந்து சொட்டடடிக்கிறது அமிர்தப்பால் வாழ்க்கை போல எனும் கதை தாய்மதியில்.

நாள்பட்ட சீக்கு - க்ஷயரோகம். இளைப்பும், தகையுமாக சருமம் விம்மி விம்மித் தணியும். நெஞ்சுக் கூட்டுக்குள் சலங்கை குலுங்குகிற மாதிரி 'கொல கொல'வென்று இரைச்சல் போடுகிற சளி. இருமல் வந்தால், சூறாவளி மாதிரி தான். வாடிப்போன சோளப்பயிரைச் சுழற்றியாட்டுகிற மாதிரி ஓர் உலுக்கு உலுக்கியெடுத்துவிடும் அய்யாவை.

கட்டிலைச் சுற்றி ரொம்ப நாளாக ஒருவீச்சம். துப்பிய சளியின் துர்நாற்றம். நிரந்தர ஈர மொய்ப்பு. மணல் நிறைந்த சிரட்டை பூராவும் சளியின் கருமை.

எலும்புக்கூட்டு மேலே நனைந்த காகிதம் போல படிந் திருந்தது, வெளுத்த சருமம். நிறைய நரைத்த ரோமங்களும், சுருக்கங்களும், அதில்.

குத்துக்கால் வைத்து உட்கார்ந்தால்... முழங்கால் உயரத் திற்குள் மொத்த உடலே முடங்கிக்கிடக்கும். தசையில் அசையும்போதுதான் உயிர் இருப்பதே தெரியும்.

ஒரு சிறுகதையின் ஆரம்பித்திலிருந்து இறுதி வரை இப்பிடி வார்த்தைகளில் காட்சிப்படுத்தும் கரிசல் காட்டு எழுத்து அரக்கர்

இது போல் முத்தாய்ப்பான ஒவ்வொரு கதைகளும் வார்த்தைகளின் விவரிப்பும் அவருக்கே வந்த கலை. சிறுகதை எழுத நினைப்பவர்கள் முதலில் படிக்க வேண்டிய எழுத்தாளர்களில் மேலாண்மை பொன்னுசாமியும் ஒருவர் .

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

Sunday 2 June 2024

நியாண்டர்


ஒரு மொழியில் அந்த மக்களின் வரலாறும் ஒளிந்துள்ளது

ஆங்கிலத்தில் Handicapped என்ற வார்த்தை உண்டு

அதன்பொருள் "கையில் தொப்பி" என்பதாகும். முன்பு உடல் ஊனமுற்றவர்கள் தொப்பியை பிச்சைபாத்திரமாக பயன்படுத்தி தெருக்களில் நின்று பிச்சை எடுத்தார்கள். அதனால் அவர்கள் பெயரே Handicpaped என வந்துவிட்டது. இன்றும் மேலைநாடுகளில் தொப்பியை பிச்சைபாத்திரமாக பயன்படுத்தும் வழக்கம் உண்டு. 

 Piss Poor என்ற சொல்லும் அதுபோல் தான். முன்பு மிக கொடிய வறுமையில் இருந்தவர்கள் தினமும் நிறைய தன்ணீரைக் குடித்து, சிறுநீர் கழித்து, அதை பாத்திரத்தில் பிடித்துக்கொன்டு போய், தோல் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு விற்பார்கள். சிறுநீரில் அம்மோனியா உன்டு. தோலை பதபடுத்த பயனாகும். அதனால் piss poor என்ற சொல் வழக்கில் வந்தது.

அதேபோல இங்கிலாந்தில் பேய்மழை கொட்டுகையில், பூனைகள், நாய்கள் எல்லாம் பயந்துபோய் வீட்டு கூரை மேல் ஏறி ஒளிந்துகொள்ளும், கூரையே தகரும் வண்ணம் மழை பெய்தால், அவை வீட்டுக்குள் விழும். அதனால் பெருமழைக்கு வந்த பெயர் "It rains cats and dogs"

சாத்துக்குடி பழத்தின் பெயர்காரணம் சாத்தான்குடி வணிகர்கள் அறிமுகபடுத்தியதால் சாத்துக்குடி என கூறப்படுகிறது

சீனாவில் இருந்து இறக்குமதி ஆன வெண்சர்க்கரை சீனி சக்கரை

பெட்ரோமாக்ஸ் என்பது ஜெர்மானிய கம்பனி பெயர். அந்த கம்பனி நிறுவனர் கண்டுபிடித்த விளக்கின் பெயர் ஆங்கிலத்தில் Paraffin lamp

Parrafin lamp என 60ஸ், 70ஸ் கிட்ஸ் எல்லாம் புத்தகங்களில் படித்திருப்பார்கள். மின்சாரம் எல்லாம் பரவாத காலகட்டத்தில் இரவில் மக்கள் பெட்ரோமாக்ஸ் விளக்குகளை ஏந்திகொன்டு ஊர்வலம், சவ அடக்கம், கல்யானம் மாதிரி விசயங்களுக்கு போவார்கள்.

வழக்கில் இருந்து மறைந்திருக்கவேண்டிய இந்த பெயர் வைதேகி காத்திருந்தாள் படத்தில் கவுண்டமணி "பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா" என கேட்ட டயலாக்கால் பிரபலமாகி, அது அகராதியிலும் ஏறிவிட்டது. பெட்ரோமாக்ஸ் விளக்கை வாழ்நாளில் பார்த்திராத தலைமுறைகள் இன்று அதன் பொருள் தெரியாமல் "பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா? பேரழகே டார்ச்சுலைட்டு கசக்குமா" என பாட்டுபாடுகிறார்கள். அந்த பெயரில் திரைப்படங்கள் வருகின்றன

வடிவேலு புண்ணியத்திலும் இப்படி அக்ராதியில் ஏறிய சொற்கள் ஏராளம்

பெட்ரோமாக்ஸ் கம்பனி பல கை மாறி, இன்று அந்த பிராண்டின் உரிமையாளர் நோக்கியா

வரலாறு விசித்திரமானது. அதனால் தான் #history_is_his_story

~ நியாண்டர் செல்வன்

மேலாண்மை பொன்னுசாமி


நாள்பட்ட சீக்கு - க்ஷயரோகம். இளைப்பும், தகையுமாக சருமம் விம்மி விம்மித் தணியும். நெஞ்சுக் கூட்டுக்குள் சலங்கை குலுங்குகிற மாதிரி 'கொல கொல'வென்று இரைச்சல் போடுகிற சளி. இருமல் வந்தால், சூறாவளி மாதிரி தான். வாடிப்போன சோளப்பயிரைச் சுழற்றியாட்டுகிற மாதிரி ஓர் உலுக்கு உலுக்கியெடுத்துவிடும் அய்யாவை.

கட்டிலைச் சுற்றி ரொம்ப நாளாக ஒருவீச்சம். துப்பிய சளியின் துர்நாற்றம். நிரந்தர ஈர மொய்ப்பு. மணல் நிறைந்த சிரட்டை பூராவும் சளியின் கருமை.

எலும்புக்கூட்டு மேலே நனைந்த காகிதம் போல படிந் திருந்தது, வெளுத்த சருமம். நிறைய நரைத்த ரோமங்களும், சுருக்கங்களும், அதில்.

குத்துக்கால் வைத்து உட்கார்ந்தால்... முழங்கால் உயரத் திற்குள் மொத்த உடலே முடங்கிக்கிடக்கும். தசையில் அசையும்போதுதான் உயிர் இருப்பதே தெரியும்.

-மேலாண்மை பொன்னுசாமி

ஒரு சிறுகதையின் ஆரம்பித்திலிருந்து இறுதி வரை இப்பிடி வார்த்தைகளில் காட்சிப்படுத்தும் கரிசல் காட்டு எழுத்து அரக்கர்