Friday, 20 September 2024
‘ஆறு செகண்டுகள்’ என்கிற ஒரு கட்டுரையை பாலா ஸ்டீட் என்பவர் எழுதியிருக்கிறார். 1982-ல் பான் அமெரிக்கன் விமானம் ஒன்று நியூஆர்லினன்ஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உடனே மரத்தின் மேல் மோதி, ஆறு செகண்டுகள் பைலட் அதைச் சமாளிக்கத் தடுமாறிய பின், தரையில் விழுந்து மோதித் தீப்பற்றிக்கொண்டு 152 பேர் இறந்துபோனார்களாம். அதில் பயணம் செய்த இரு பயணிகளின் ஆறு செகண்டு மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக, அவர்களின் பிள்ளைகளுக்குத் தலா இரண்டு லட்சம் டாலர் நஷ்ட ஈடு கொடுக்கும்படி உத்தரவிடப்பட்டதாம்.இதைத் தொடர்ந்து கட்டுரையாளர், சாவின் கடைசி தினங்களை மனிதன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதைப் பற்றிச் சிந்திக்கிறார். முன்பெல்லாம் சாவின் நிழலில், மனிதன் மன்னிக்கும் மனநிலையிலோ அல்லது மன்னிப்புக் கேட்கும் நிலையிலோ இருப்பான். சினிமா கடைசி காட்சியில், வில்லன் சாகும் தறுவாயில், ‘செண்பகம், என்னை மன்னிச்சிடு!’ என்றோ, ‘தங்கப்பனைக் கொன்னது நான்தான்’ என்றோ சொல்வது ஒரு கிளிஷே காட்சி என்றாலும், பொதுவாகப் பலருக்கு அந்தக் கணத்தில் ‘படைத்தவனைச் சந்திக்கப்போகிறோம்’ என்ற பயம் வருவதாலோ என்னவோ, பாவ மன்னிப்பும் குற்ற ஒப்புதலும் கேட்கும் மனநிலை ஏற்படுவது சகஜம் என்கிறார் பாலா ஸ்டீட். ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட், ‘சாப்பிட்டுவிட்டு மத்தியானத் தூக்கத்தில் இருக்கும் உன் தகப்பனை ஏன்டா கொன்றாய்?’ என்று தன் நண்பனுடன் கோபித்துக்கொள்ளும்போது, ‘சாவு நெருங்குவதை மனிதன் உணரவேண்டும்’ என்பதே கருத்து.-சுஜாதா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment